About Me

2013/02/01

விஸ்வரூபம்


இனவாதக் களையொன்று கலையாகி
அலைகின்றது வரவேற்புக் கோஷங்களுடன்!

அரபெழுத்தணிச் சாயலுடன்
முகங் காட்டுதிந்த விஸ்வரூபம்!

தளிர்க்கரங்களின் சுமைகளாம்
அனல் பறக்கும் துப்பாக்கிகள்!

இறைகூடத் தளமிங்கே - பாவக்
கறை சுமக்கும் பள்ளிகளாம்!

சாந்தி மார்க்க போதனைகளிங்கே
உயிரறுக்கும் வேதனைகளாம்!

இறைவசன உயிர்ப்போடு  - உயிர்
பறிக்குமாம் சன்னங்கள் வீரியமாய்!

கொலைக்களமாம் எம் மறைவேதம்
கல கலக்கின்றது கலைக்கூடம் கைக்கூலியாய்!

திருமறையின் அருள் மொழிகள்
இறை நிராகரிப்போரால் அரிதாரம் பூசப்படுகின்றது
அழகாய்!

தீனுல் இஸ்லாம்.........
தீவிரவாதமெனும் பிரச்சாரமாய்
தீ கக்குகின்றதிந்த விஸ்வரூபம்!

விலைக்காய் கலை சேர்க்கும் கமல்.....
வீரியமாய் விட்டுச் செல்கின்றார் இனவாதத்தை!

ரவைகளின் ஏடென இஸ்லாம் பரப்பி
புரட்சி செய்கின்ற கமலின் சாகஸம்..........
சரிதமாகி விட்டுச் செல்கின்றது பாவக் கறையை!

விஸ்வரூபம் வில்லத்தனம்........நம்மை
வில்லங்கத்துடன் கடந்து செல்லும் மூர்க்கத்தனம்!

2013/01/19

புது யுகம்

அப்பாவின் மரணம்
அம்மாவுக்கு விடுதலை!
ஹிருதயத்தை இம்சித்தவர்
ஹிருதயம் அறுந்து கிடக்கின்றார்!

வெள்ளைச் சீலை............
விதவையின் அடையாளமல்ல இங்கே!
போராட்ட வாழ்விற்கு கிடைத்த
சமாதானம்!

வாழ்வின் துன்பச் சரித்திரங்கள்........
இனி சாபத்தில் வீழாது!
எழுச்சி தூசு தட்டும்
அழுகைப் புழுதிகளை!

தரித்து நிற்கும் சத்திரங்களெல்லாம்
அழுகின்றன..............
அவலத்தாலல்ல - இது
ஆனந்தக் கண்ணீர்!

இனி..........
வீட்டுக்குள் ஒருபோதும்
இடியுமில்லை மழையுமில்லை!
வெறுமைக்குள் சிறு உலகம்
நிம்மதிக்குள் வீழும்!

அடிக்கடி
கடிந்த இதயமின்று
துடிப்பை மறக்கையில்............
வலிக்கவேயில்லை விழிகள்!
அழிந்துபோன உணர்வுகளால்!

ஆட்குருவிகள் கீழ் திசையில்
ஆரவாரிக்கின்றன.............
பட்டுப் போன மரங்களெல்லாம்
வெட்கித்து தளிர்க்கின்றன!

விசம் கக்கிய விதியொன்று
வேரறுந்த கிடக்கின்றது பாரினிலே.......
உறவறுந்து போனதில்
ஊமைவலி ஏதுமில்லை!

அப்பாக்களின் தேசங்கள் என்னை
அரக்கி என்றே கதறட்டும்!
இரக்கமற்ற இதயங்கள் இனி
மரணித்தே போகட்டும்!

மன்னித்து விடென்னை



தேவதை என்றாய் - எனைத்
தீண்டும் தேள்வதை யறியாது!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் என் விம்பம்
அறியாது!

சிரிக்கின்ற கன்னங்களில்
உதிரும் புன்னகை அழகென்றாய்...
ரணங்களின் ஆழம் காணாது!

என் கனவு நீ என்றாய்
மரணத்துக்காய் காத்திருக்கும்
பலி யாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - என்னுள்
அலையும் நிம்மதியில்லாத
ஆத்மா அறியாது!

மன்னித்து விடென்னை..
விண்ணப்பித்து விட்டேன் மரணத்திற்கு.......
என் விடுதலைக்காய்


வசியமாகின்றேன் உன்னில்!


விழுந்தன மயிலிறகுகள்- உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!

மொழியிழந்த நானோ ..........உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!

இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்...........
வேவு பார்க்கின்றன நம் கனவை!

இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போ தடிக்கடி...................
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!

உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!..

சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்.............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!

காற்றிலேயுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களின் தொடுகையால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன உன்னிடம் சரணடைந்தே!

காதலா............அன்பா.........நட்பா
ஏதோவொன்று ...........
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!