About Me

2013/03/08

வசியமாகின்றேன்


விழுந்தன மயிலிறகுகள் - உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!

மொழியிழந்த நானோ - உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!

இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்
வேவு பார்க்கின்றன நம் கனவை!

இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போதடிக்கடி
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!

உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!

சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்..............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!

காற்றிலே யுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன சரனடைந்தே!

காதலா.........
அன்பா............
நட்பா...........
ஏதோவொன்று
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!

Jancy Caffoor

தாவணி

வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக்கொடி!

மலை முகடுகளை மறைத்தோடும்
நீர்வீழ்ச்சி!

இளமை ரகஸியங்களை
காற்றிலுதிர்க்கும் உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அங்கீகரிக்கும்
ஒப்பந்தக் காகிதம்!

Jancy Caffoor

அறிவாயோ



தேவதை என்றாய் - என்
வாழ்வின் தேள்வதை யறியாமல்!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் விம்ப மறியாது!

உதிரும் புன்னகை அழகென்றாய்
என் ரணங்களின் ஆழ மறியாது!

உன் கனவுகள் நானென்றாய்
வெட்டப்படும் பலியாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - நிதம்
நிம்மதி தேடும் ஆத்மா நானென்பதை யறியாது!

எரியூற்றப்படும் எனக்காய்
ஏக்கங்கள் வளர்க்கு முனக்காய்

அனுதாப அலைகள் அனுப்பி விட்டே ன்
 மன்னித்து விடென்னை  மானசீகமாய்......

விடுதலை வேட்கைக்காய் விண்ணப்பித்த
மரணக் கைதியிவள்!

Jancy Caffoor

அன்பின் புன்னகை


அன்பின் புன்னகையில்
அடங்கிக் கிடக்கின்ற தென்னுலகம்!

அறியாமைத் தீ யனல்கள்
அணைந்து போகத் துடிக்கின்றன!

இதயவெளிச் சுவரெங்கும் வருடி
முகாமிட்டு கொள்கின்றது காற்றும் தென்றலாய்!

ஈடேற்றத்தின் தலை வருடலால் வாழ்வொன்றும்
கண் முன்னால் விரிகின்றது விசாலமாய்!

உறவின் நறுமணங் கண்டு உருவாகும் மொழியொன்று
 உதடு குவிகின்றது 'அம்மா' வென்றே!

ஊரின் திருஷ்டிக் கஞ்சி முகத்தை யன்னை கரம்
முந்தானைத்  திரையிட்டு மறைத்துக் கொள்கின்றது!

எட்டுத் திக்கெங்கும் என் பெயரொளி வீச
ஏக்கம் சுமந்த உணர்வொன்று தாய்மையாய்
வருடுகின்ற திங்கே!

ஐயமகற்றும் கற்றலின் நிழலாய் கண் முன்
விரிகின்றது தாயின் அறிவகம் ஆழமாய்!

சூரிய தேசத்தின் வெம்மைக் குடை யெல்லாம் சரிந்து
திரையிட்டு கொள்கின்றன பசுமையைப் பூட்ட!

சிப்பிக்குள்ளிருந்த வெண்முத்தும் புன்னகைத்தே
முத்தமிட்டு கொள்கின்றது அன்னை விரல் பற்றி!

காற்றசைக்கா கருங்கல் மெல்ல
இளகிக் கிடக்கின்றன யவர் கருணைப் பார்வை கண்டு!

சுவர்க்கமொன்று சுரங்கம் தந்தே வழிவிடுகின்றது
சுகந்தம் மணக்கும் தாயின் பூவடிக்காய்!

இத்தனைக்கும்............
என் தாய்க்கீடேது இத் தரணியில்!

Jancy Caffoor