About Me

2013/03/10

மகளிர் தினம்

பெண்.................!

சுற்றிச் சுழலும் பூகோளத்தின்
அச்சாணி!

உயிரணுவுக்குள் உரு கொடுத்து
காத்திடும் தாய்மை!

அத்தகைய பெண்மைக்காக உலக நாட்காட்டியில் ஒதுக்கப்பட்ட தினமே இந்நாள்!

அன்று............

பெண்ணடிமைத்தன வீச்சங்களால் கறைபட்ட காலங்கள் அடக்குமுறைகளும் அவஸ்தைகளும் பெண்ணவள் பிரதிபலிப்புக்களாக உருமாற்றப்பட்ட காலங்கள்!

அத்தகைய சூழ்நிலைகளின் போது.....

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்த பாரிஸ் பெண்கள் 
 
வேலைக்கேற்ற ஊதியம், 
எட்டு மணிநேர வேலை, 
பெண்களுக்கு வாக்குரிமை, 
பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும்

என்று பாரிஸ் தெருக்களில் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் பிரான்ஸ் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! 

இவர் போராட்டம் கண்டு அஞ்சாத அரசன், 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டத்தினர் தம் மீது அடக்குமுறை விதிக்கும் அரசனின் மெய்க் காப்பாளர்கள் இருவரை கொன்று விடவே, அரசன் சற்று அதிர்ந்து பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் பரவ, போராட்டமானது இன்னும் பலமடைந்து, கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவியது.

இத்தாலியிலும் பெண்களும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு போராட்டக்களத்தில் இறங்கினர். 

இவ்வாறான முறுகல் நிலைகளின் போது,

பிரான்ஸ், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. 

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இதுவென்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றாக இன்னும் அறுத்தெறியப்படவில்லை.

2013/03/09

அவள்தான்


இருள் அஹிம்சையில்
இதமாய் மொழி பேசினாள்!

கண் சிமிட்டிச் சிமிட்டியே - நம்
நினைவுகளில் குறும்பைக் கலந்தாள்!

தன் புன்னகையால் - நம்
சோகங்களை ஒற்றினாள் ரம்மியமாய்!

வைரங்களை அள்ளித் தெறித்து - நம்
வறுமை நீக்க உறுதியும் கொண்டாள்!

மழலை முகமதில் மலர்ச்சி தூவி
அழைத்திட்டாள் தன் கரம் நீட்டி!

விடிந்ததும் மறைந்தே போனாள்
அவள்தான் நட்சத்திரம்!

- Jancy Caffoor-
     03.09.2013

அவலத்தில் உறையும் மலர்


விடியலை நிரப்பி
பொழுதொன்று கரைகின்றது மெல்ல
அவளின் கனவுகளை மறைத்தபடி!

கன்னக் கூட்டில்
சிரிப்பை சிறைப்படுத்தி
மெல்ல வருகின்ற அன்னமிவள்!

இருந்தும்
தெருவோர வேட்கைகளின் பீதியில்
மிரட்சியை விதைத்தபடி
விரைகின்றாள் - தன்
ஒட்டியுலர்ந்த மனைக்குள்!

வறுமை பட்டை தீட்டியதில்
சுருண்டு போன உதரக்குழி
வரண்டு அலறியது பசி மயக்கத்தில்!

மெல்லன காற்றில் விரியும்
இந்தப் பட்டாம் பூச்சி
எட்டாம் வகுப்பில் தொட்டு நிற்கும்
சிட்டுக்குருவி!

பிய்ந்து போன காலணியும்
தேய்ந்து போன சீருடையும்
அழுக்கை விதைத்தபடி
போராடிக் கொண்டிருந்தன வாழ்க்கையுடன்!

சோகம் வரலாறாகி
தொட்டுச் சென்றதில்
விட்டுப் போயின பள்ளிப் பாடங்கள்
திட்டுக்கள் நிறைந்தன ஞாபக மேட்டினில்!

அம்மா!

அவள் அம்மா!!

தினமும்
சின்ன விழிக்குள் குளித்தாள்
கண்ணீரை ஏலம் விட்டபடி!

பத்துப் பாத்திரம் தோய்த்து
தேய்ந்து போன அவள் விரல்கள்
பிஞ்சு மகளின் ஸ்பரிசத்தில் - பல
நாழிகள் சிலிர்த்தே கிடந்தன!

நெஞ்ச வரப்பில் ஏக்கம் விதைத்து
நெருஞ்சிக்குள் நிழல் தேடுமிந்தக்
குழவியவள்

தன் தாயவள் நினைவுகளால்
மெல்ல உதிர்கின்றாள்
கருஞ் சாலையோரம்
தன் மேனியுணர்ச்சி துறந்து!

வீதியின் பரபரப்பில்
தெருநாய்கள் கூட அவளை மறக்க
வறுமையின் கிழிசல்களாய்
நொருங்கிக் கிடக்கின்றாளிந்த  உயிர்ப்பூ
 தன் சுயம் மறந்தவளாய்!

- Jancy Caffoor-
    09.03.2013


தாயே


தாயே.........

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை
உங்கள் கண்ணீரை மறைத்தபடி!

ரோசாவின் வாசத்தால்
சுவாசம் நிறைக்கின்றேன்
உங்கள் முட்களை மறந்தபடி!

பாசவேலியிடப்பட்டுள்ள உங்கள்
கருவறையை
கல்லறையாக்குவோரோடு
உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்
உறவுகளைச் சிதைக்காமல்!

நீங்கள் சிரித்திருப்பீர்களா
ஒரு துளியேனும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் ஞாபகங்களைக் குலைத்தபடி!

தாயே
காலக் கலண்டரில் நாள் குறித்து
தரணியே புகழ் பாடுகின்றது
நீங்கள்
அறையப்பட்டிருக்கும் சிலுவைகளை
அகற்றாமலே!

- Jancy Caffoor-
    09.03.2013
















2013/03/08

ஞாபகம் வருதே

என் ஞாபகச் சிறையிலிருந்து
விடுதலை பெறாத தோழா
உன் சரிதத்தின் சில துளிகள்!

துள்ளி நனைந்த வுன் பள்ளிக் குறும்புகள்
இன்னும் இளமையாய்
கண்சிமிட்டுகின்றன அழகாய்!

கற்றல் காலமெல்லாம்
சொற் தேடி நீ அலையாமல்
வெட்டியாய் மதிலேறி - உன்
காலம் கழித்த வில்லத்தனம்
இன்னும் பசுமையாய்!

உன் குறும்பும்
அடுத்தாரைச் சீண்டும் புனைப் பெயரும்
ஆசானின் பிரம்படிச் சோகமும்
விடலைப் பருவ காதல் ஏக்கங்களும்

இன்னும்..இன்னும் நீளமாய்
ஞாபகப் பெட்டகத்தை நிரப்புகின்றன
ரசித்தபடி!

தோல்விக்குள் நீ வீழ்கையில்
கண்ணீர் தொட்ட சோகங்களும்
ஏழ்மையிலும் எழில் குன்றா புன்னகையும்
உன் சொத்தாகி
இன்னும் இன்னும் மனதை ஆள்கின்றது
அழகாய்!

பல பொழுதுகளில் தலைநீட்டும்
பனிப்போர்கள்
பாச நெகிழ்வில் முகம் கண்டு விலக

அடடா
ஒவ்வொரு பௌர்ணமியும்
எழுதிச் செல்கின்றது நம் நட்பை
ரம்மியத்துடன்!

பிரியா வரமென்றே
பெருமிதத்துடன் நானிருக்க
ப்ரியமே!
பிரிந்தே சென்றாய்
விதியின் கோட்டைக்குள்!


- Jancy Caffoor-
    08.03.2013