2013/03/09
அவலத்தில் உறையும் மலர்
விடியலை நிரப்பி
பொழுதொன்று கரைகின்றது மெல்ல
அவளின் கனவுகளை மறைத்தபடி!
கன்னக் கூட்டில்
சிரிப்பை சிறைப்படுத்தி
மெல்ல வருகின்ற அன்னமிவள்!
இருந்தும்
தெருவோர வேட்கைகளின் பீதியில்
மிரட்சியை விதைத்தபடி
விரைகின்றாள் - தன்
ஒட்டியுலர்ந்த மனைக்குள்!
வறுமை பட்டை தீட்டியதில்
சுருண்டு போன உதரக்குழி
வரண்டு அலறியது பசி மயக்கத்தில்!
மெல்லன காற்றில் விரியும்
இந்தப் பட்டாம் பூச்சி
எட்டாம் வகுப்பில் தொட்டு நிற்கும்
சிட்டுக்குருவி!
பிய்ந்து போன காலணியும்
தேய்ந்து போன சீருடையும்
அழுக்கை விதைத்தபடி
போராடிக் கொண்டிருந்தன வாழ்க்கையுடன்!
சோகம் வரலாறாகி
தொட்டுச் சென்றதில்
விட்டுப் போயின பள்ளிப் பாடங்கள்
திட்டுக்கள் நிறைந்தன ஞாபக மேட்டினில்!
அம்மா!
அவள் அம்மா!!
தினமும்
சின்ன விழிக்குள் குளித்தாள்
கண்ணீரை ஏலம் விட்டபடி!
பத்துப் பாத்திரம் தோய்த்து
தேய்ந்து போன அவள் விரல்கள்
பிஞ்சு மகளின் ஸ்பரிசத்தில் - பல
நாழிகள் சிலிர்த்தே கிடந்தன!
நெஞ்ச வரப்பில் ஏக்கம் விதைத்து
நெருஞ்சிக்குள் நிழல் தேடுமிந்தக்
குழவியவள்
தன் தாயவள் நினைவுகளால்
மெல்ல உதிர்கின்றாள்
கருஞ் சாலையோரம்
தன் மேனியுணர்ச்சி துறந்து!
வீதியின் பரபரப்பில்
தெருநாய்கள் கூட அவளை மறக்க
வறுமையின் கிழிசல்களாய்
நொருங்கிக் கிடக்கின்றாளிந்த உயிர்ப்பூ
தன் சுயம் மறந்தவளாய்!
- Jancy Caffoor-
09.03.2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!