About Me

2013/04/10

அறிவியலில் நாம்


அண்டவெளியின் அணுப் பிழம்புகளில்
அதிசயமாய் உலா வரும் முகிற்கூட்டங்களில்
ஒட்டிக் கிடக்கின்றதுன் மென்மனசு !

காற்றின் தள்ளுகையில் சுரம் கோர்த்து
மனசோரம் இசை நெய்து
மானசீகமாய் உன்னுள் வீழ்த்தும் சங்கீதமாய்
சரித்திரமாகின்றது நம் நட்பு!

உன் கண் பந்துகள் உருட்டும்
நேச விசைகளின் ஈர்ப்பில் கட்டுண்டு
உன்னைப் பற்றிச் சுற்றும் பம்பரமாய்
எனை அருட்டுகின்றதுன் அன்பு!

உன்னில் கரைந்து கிடக்கும்
பாசத் துகள்களால் - என்
வெந்நீர் மனமும் கூட வெருண்டெழாது
சந்திரக் கீற்றுக்களை முகத்திலேந்தி
சிந்தி நிற்கின்றதுன் நினைவுகளை!

கருமை சூழ்ந்த கொன்றல்களின் நடுவே
விருட்டென்று தரையில் வேர் நாட்டும்
மின்னலாய் அடிக்கடி
என்னுள் கண் சிமிட்டும் நீ

அறிவாயா!

அறிவியலாய் என்னுள் வாழும்
அழகு நட்பு தானென்று !


- Jancy Caffoor-
    09.04.2013








நான் நானாகத்தான்


நான் நானாகத்தான் இருப்பேன்
மாற்றமின்றி

ஆனால்

இரசப் பூச்சில் என் விம்பம் மட்டும்
வாலிப இழப்பை பறைசாட்டிக் கொண்டிருக்கும்

கார் குழலாய் எழில் முடித்த  நீள்கூந்தலில்
குதர்க்கம் செய்து கொண்டிருக்கும்
நரைகள்!

மினுங்கும் வாலிபத்தின் ரேகையாய்
சுருக்கங்கள் கோடுகள்  கிழித்திருக்கும்

மூக்குக் கண்ணாடியின் கைத்தாங்கலில்
கன்னக் குழிகள்
விகாரமாய் சிரித்துக் கொண்டிருக்கும்!

பட்டாம் பூச்சியாய் பறக்கும் விழிகள்
சிறகுடைத்து
கண்ணீர் கூட்டுக்குள்
கதவடைத்துக் கொள்ளும்!

வாலிபம் காலியாகும்  தேகமதில்
வலிகளின் ஆக்கிரமிப்புக்கள்
எல்லைகளாய் வழி மறித்துக் கொண்டிருக்கும்...

பற்றுப் பாசங்களுடன்
சுற்றியிருந்த கூட்டங்களெல்லாம்
காணாமல் போவதால்

தனிமை வரத்தினுள் வாழ்க்கை
அலைந்து கொண்டிருக்கும்!

காலத் தீர்ப்பில் வாலிபம் தொலைந்து
இயலாமை எனதாகும் போது

"கிழம்" என வாலிபங்கள் பரிகசிப்பார்
நாளை தம் வாழ்வறியாமலே!

அப்பொழுதும்

நான் நானாகத்தான்

கண்ணாடி மட்டும்
உருவை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும்!

- Jancy Caffoor-
    09.04.2013

பிறை



வான் தேவதை துப்பிய
நகத் துண்டு!

விண்மீன்களைப் பறித் தெடுக்கும்
கொழுக்கி!

மேகத் திரள்களை விரட்டிடும்
அரிவாள்!



-Jancy Caffoor -







அன்று



அந்த நடுச்சாம நிசியின் அமைதியைக் கிழித்தவாறு ஆட்காட்டி குருவி சப்தமிடத் தொடங்கிய போது ஹெலியின் உறுமலும் லேசாக செவிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது..........

"இன்னைக்கும் தூங்கினபாடில்லை"

அச்சம் முகிழ்க்க, மனது எதையோ எதிர்பார்த்து, பங்கருக்குள் ஒளிந்து கொள்ளத் தயாரானது..........

ஹெலியின் அண்மையை அதன் சிறகுகளின் படபடப்பு உணர்த்திய போது, வீட்டு லைட் வெளிச்சத்தை சற்று அணைத்து விட்டு சுவரோரம் பதுங்கிக் கொள்கின்றோம்.

ஹெலியின் படபடப்பும், அதன் சிறகுகளின் துடிப்பும் காதுகளுக்குள் நன்கு கேட்கத் தொடங்கியது.

"பட் பட் பட்"

இயந்திரத் துப்பாக்கிகள் ஆக்ரோஷமாக தம்மில் பொருத்தி வைத்திருக்கும் குண்டுகளை பாய்ச்சத் தொடங்கின,

அது யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரை மையப் படுத்தி புலிகள் மேற் கொண்ட தாக்குதல்....

"பெடியளும் சுடத் தொடங்கிட்டினம், இனி என்ன நடக்கப் போகுதோ!"

உள்ளுணர்வுகள் அச்சத்தில் மேலும் பிசையத் தொடங்க, யுத்தத் தாக்குதல் மேலும் தீவிரமாகியது. அதன் உச்சக் கட்டமாக நாலைந்து பொம்பரும், இரண்டு ஹெலிகொப்படர்களும் யுத்தத் தளத்தில்
தீயைக் கக்கத் தொடங்க, ..........
மறுமுனைகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறிகள் ஷெல்களைப் பீய்ச்சத் தொடங்கின.

"கண்களை இறுகப் பொத்தி, மனதில் இறைவனைத் தியானித்து, காதுகளை இறுக்கிப் பொத்தியவாறு பங்கர்த் தரையில் சுருண்டு கிடந்திருந்தோம்.

லேசாக பங்கருக்குள் ஒளி நுழையும் துவாரத்தினுள் வெளிக் காட்சிகள் மங்கலாய் தெரிந்தன.....

பொம்பர் தரை நோக்கி தன் முகம் காட்டி வேகமாய் கீழிறங்கிக் கொண்டிருக்க,அதன் முன்முனையிலிருந்து ஷெல்கள் பாய்ந்து வெடிக்கின்றன.

"படீர்"

சுவாச மையங்களும் சிதைந்து நானும் மரணித்ததைப் போன்ற பிரமை..........
கண்களை இறுக மீண்டும் மூடிக் கொள்கின்றேன்.. கண்களிலிருந்து குருதி கண்ணீராய்ப் பாய்ந்து கொண்டிருந்தது.


சுகமான காதலும் சுமைகளும்...


ஆகாயம் குடை பிடிக்க
அழகாய் ஒரு பயணம்
நிலாவின் நெஞ்சத் தரையில்!

சில்லென்ற காற்றில்
உன் குறும்புகள் தைத்து
நேசப் பயணம் உன் மனவெளியில்!

இராக்கள் கூட பசுமை சிந்தும்
நீ அருகினில் நின்றால்
தீ கூட குளிரேந்தும்
உன் அன்பினைக் கண்டால்!

காதல்!
சுகமானதுதான்
வாழ்க்கைப் பிரபஞ்சத்தின் சுகங்களை
தரிசிக்காதவரை!

துகள்களாய் வீழும்
ஒவ்வொரு பனித்துளிகளும்
மனசுக்குள் கசிந்து
உணர்வாகி முகிழ்க்கும் போது
காதல் சுகமானதுதான்!

ஆனால்!
புரிந்து விலகிக் கொள்!

யதார்த்த வாழ்வின் தழும்புகள்
கறைகளாகி
வாழ்வை நனைக்கையில்

சுகமான காதல் கூட
சுமையாகி
சமாதியாகின்றது வாழ்க்கைப்
போராட்டத்தினுள்!


- Jancy Caffoor-
    09.04.2013