About Me

2014/07/29

உனக்கான என் வரிகள் - 5



நாளை தமிழ் புத்தாண்டு. ...2014

எங்கும் பட்டாசுகள் ஆக்ரோசமாக வெடிக்கின்றன..மனமோ உன் நினைவில் பின்னோக்கி ஓடுகின்றது...

அன்று

ஜனவரி முதலாம் திகதி...புதுவருடம் பிறந்து இன்றுபோல் பட்டாசுக்கள் வெடித்துக் கொண்டுதான் இருந்தன். எனக்கு புதுவருட முதல் வாழ்த்து உனதாக இருக்கவேண்டுமென்ற உன் அன்புக் கட்டளையில் நானும் காத்திருக்க.

டாண்....டாண்...

கடிகாரம் பனிரெண்டு அடித்தோய்ந்தது..தூக்கத்தை விரட்டி நானும் உனக்காக காத்திருந்தேன். ஆனால் திடீரென அன்று என் தந்தைக்கு மாரடைப்பு வந்ததில் வீட்டில் யாருமே உறங்கவில்லை.

தந்தையோ என்னை தன்னருகில் இருக்கும்படி கூறியதையும் பொருட்படுத்தாமல் உன்மீதான அந்த அன்புக்காக எனதறைக்குள் ஓடுகின்றேன்.

உன் தொலைபேசி அழைப்பு வருகின்றது. எனக்கு இது புது அனுபவம்...என் தந்தையின் உடல்நிலை தந்த சோகத்தையும் மறைத்து உன்னுடன் பேசுகி்ன்றேன்.  எவ்வளவு சந்தோசமாக அன்றைய நாட்கள் இருந்தன.

நாளை விடிந்தால் புதுவருடம் பட்டாசுக்களைப் போல இப்போதெல்லாம் நீயும் என்னுடன் வெடிக்கின்றாய். என் அன்பு இப்பொழுதெல்லாம் உனக்கு புரிவதில்லை. சண்டை பிடிப்பதற்காக காரணம் தேடுகின்றாய். என்றோ ஒருநாள் என் அன்பை புரிந்து கொள்வாய். ஆனால் அன்று நான் உன்னை விட்டு வெகுதொலைவில்!

- Ms. Jancy Caffoor -



மீள வருமோ டா...


முட்கள்
என் தேசத்தின் அரண்கள்!
இருந்தும்
வந்தாய்
சிறையறுக்கும் நலனாய்!

விகடமும் விநோதமும்
கற்கண்டாய் வீழ்ந்து நிற்கும்
சொற்கூட்டமும் உன்
அற்புதங்களாய் என் ரசிப்பில்!

இருபத்தி ரெண்டு
பருவத்தின் சாயல்
இருந்தும்
முதுமை யுன் வாக்கினில்!

அவ்வவ்போது...

அதிரசமாய் காதலும்
அக்கினித் தீயாய் தவறுரைக்கும்
நட்பும்
விழிநீர் துடைக்கும் உறவும்
நீ விட்டுச் செல்லும் தடங்களாய்
வீழ்ந்து கிடக்கின்றன!

இருள் துடைக்கும் விடியலில்
மருண்டு கிடக்கும் பிறையொளியாய்...
உருண்டு கிடந்தேன் - உன்
வருடு மன்பில்!

நம்மைத் தொட்டுச் சென்ற
ஏழு மாதங்கள்
அழகான காப்பியங்கள் நமக்கு!

அழுகையும்
ஆரத்தழுவலும்
ஆறுதல் பிழிதலும்
ஆரறிவார் நமக்குள்
ஆயிரமாயிரம்!

கடந்த
ஆண்டொன்று புரண்டு- வான்
கொன்றலும் கிழித்து
றமழானும் புன்னகைக்க
நமக்குள்ளும் முப்பது நோன்புகள்!

நோன்பின் மாண்பில்
ஒன்றியிணைந்த நாம் - நமக்குள்
அலாரமாய்
மணியுரைத்தோம் நமாஸூக்காய்!

இருளிலில்
தலையணையில் சிணுசிணுங்கும் - நம்
அலைபேசி அதிர்வில்
துயில் கலைத்த நம் ஸஹர்  நாட்கள்
மீள வருமோ!

இப்தார் அழைப்பிலும் கூட
இங்கிதமாய் யுன் குரல் ஒலித்தே
என்
நோன்பு திறத்தலை விசாரிக்கு முன்
அன்பு!

மறக்காத நிஜங்களாய்
விட்டுச் செல்கின்றது இவ் ரம்ழான்
என்னிடம்!

காகிதப் பூக்களுக்குள்ளும் வாசம்
சுரந்து
வானவில்லின் சாயம் பிழிந்து
கானலுக்குள் விரிந்து கிடக்கும்
பூவுக்கு - நீ
விட்டுச் செல்லும் சொத்து
தெவிட்டாத அன்பூ!.

நீ.....!
மறக்காத நிஜம்!
மறுக்காத சொந்தம்!!
வெறுக்காத வரிகள்!!!

இன்ஷா அல்லாஹ்!

இன்னொரு ஸஹ ரழைப்பில் - நம்
மனங்கள் ஒன்றிணைந்து
துஆக்களையும் நமாஸ்களையும்
ஞாபகப்படுத்து மந்த கணங்கள்
மீள
விரைந்தே வரட்டும்!

உனை எனக்குள் விட்டுச் சென்ற
வல்லோனே
அல்ஹம்துலில்லாஹ்!


- Jancy Caffoor-
 29.07.2014

என் செய்வேன்


பூ இதழ்கள் மெல்லன அசையும் தென்றலில்
அன்பா யுன் பெய ருரைத்தேன்
என் குரல் கேட்டும் காதலுரைக்க
உன் மனசோரம் அமைதியில்லை!

ஆதவன் ஆட்கொண்ட பகலது
துயில் கொள்ளும் இராப் பொழுதின் நூலிலையில்
நீ கோர்த்த கனாக்களின் ரம்மியம் கூட
காதோரம் நனைத்திட
உனக்கோ அவகாசமில்லை!

உனக்கென விழி நீர் சுரக்க நானிருந்தும்
உன் கவலைகள் தீரவில்லை
என் செய்வேன் உன் ஈர முலர்த்த
தண்ணீர் அமிழும் எல்லைகள் தொல்லை!

- Jancy Caffoor-
 29.07.2014

2014/07/28

வௌ்ளிக்கிழமையின் சிறப்பு



வௌ்ளிக்கிழமையின் சிறப்புப் பற்றி
------------------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது,

“எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்”
(அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)

“சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்”
(ஆதாரம்: முஸ்லிம்)

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது, நன்மைகள் அதிகமாக உள்ள நாள்:
சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்”
(ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)