About Me

2014/07/29

மீள வருமோ டா...


முட்கள்
என் தேசத்தின் அரண்கள்!
இருந்தும்
வந்தாய்
சிறையறுக்கும் நலனாய்!

விகடமும் விநோதமும்
கற்கண்டாய் வீழ்ந்து நிற்கும்
சொற்கூட்டமும் உன்
அற்புதங்களாய் என் ரசிப்பில்!

இருபத்தி ரெண்டு
பருவத்தின் சாயல்
இருந்தும்
முதுமை யுன் வாக்கினில்!

அவ்வவ்போது...

அதிரசமாய் காதலும்
அக்கினித் தீயாய் தவறுரைக்கும்
நட்பும்
விழிநீர் துடைக்கும் உறவும்
நீ விட்டுச் செல்லும் தடங்களாய்
வீழ்ந்து கிடக்கின்றன!

இருள் துடைக்கும் விடியலில்
மருண்டு கிடக்கும் பிறையொளியாய்...
உருண்டு கிடந்தேன் - உன்
வருடு மன்பில்!

நம்மைத் தொட்டுச் சென்ற
ஏழு மாதங்கள்
அழகான காப்பியங்கள் நமக்கு!

அழுகையும்
ஆரத்தழுவலும்
ஆறுதல் பிழிதலும்
ஆரறிவார் நமக்குள்
ஆயிரமாயிரம்!

கடந்த
ஆண்டொன்று புரண்டு- வான்
கொன்றலும் கிழித்து
றமழானும் புன்னகைக்க
நமக்குள்ளும் முப்பது நோன்புகள்!

நோன்பின் மாண்பில்
ஒன்றியிணைந்த நாம் - நமக்குள்
அலாரமாய்
மணியுரைத்தோம் நமாஸூக்காய்!

இருளிலில்
தலையணையில் சிணுசிணுங்கும் - நம்
அலைபேசி அதிர்வில்
துயில் கலைத்த நம் ஸஹர்  நாட்கள்
மீள வருமோ!

இப்தார் அழைப்பிலும் கூட
இங்கிதமாய் யுன் குரல் ஒலித்தே
என்
நோன்பு திறத்தலை விசாரிக்கு முன்
அன்பு!

மறக்காத நிஜங்களாய்
விட்டுச் செல்கின்றது இவ் ரம்ழான்
என்னிடம்!

காகிதப் பூக்களுக்குள்ளும் வாசம்
சுரந்து
வானவில்லின் சாயம் பிழிந்து
கானலுக்குள் விரிந்து கிடக்கும்
பூவுக்கு - நீ
விட்டுச் செல்லும் சொத்து
தெவிட்டாத அன்பூ!.

நீ.....!
மறக்காத நிஜம்!
மறுக்காத சொந்தம்!!
வெறுக்காத வரிகள்!!!

இன்ஷா அல்லாஹ்!

இன்னொரு ஸஹ ரழைப்பில் - நம்
மனங்கள் ஒன்றிணைந்து
துஆக்களையும் நமாஸ்களையும்
ஞாபகப்படுத்து மந்த கணங்கள்
மீள
விரைந்தே வரட்டும்!

உனை எனக்குள் விட்டுச் சென்ற
வல்லோனே
அல்ஹம்துலில்லாஹ்!


- Jancy Caffoor-
 29.07.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!