About Me

2014/08/08

பிரிதலும் கூடலும்




நீ வருவாயென..
இருளென்றும் பாராமல்
விடி விளக்காய் - என்
விழி யிரண்டும் ஏற்றி வைத்தே காத்திருந்தேன்...

வந்த நிலாவும் போனதுவே யுன்
சந்தடி யென் காற்றில் கலக்காமலே..
எந்தன் மனம் யுனக்காய் துடித்திருக்க - நீயோ
எனை மறந்துன் வழிப்பாதையில்!
------------------------------------------------------------------------------------

பிரியும்போதுதான்
புரிகின்றது - நம்
சண்டைகள்கூட .......
அன்பின் வருடலென்று!
-----------------------------------------------------------------------------------

நேற்றைய சரி
இன்றைய பிழை!
-----------------------------------------------------------------------------------

நம்
வாழ்வைத் தீர்மானிப்பது வயதல்ல
மனம்
ஏனெனில்
வயது எனபது வெறும் எண்கூட்டம்!
-----------------------------------------------------------------------------------

பிரிந்துதான் செல்கின்றாய்
இருந்தும்
என்னை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாய்
ஏனெனில்
முன்னைய நாட்களில்
உன் அன்பில் நான்!
----------------------------------------------------------------------------------

ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு வாய்ப்பு உள்ளது..
ஒவ்வொரு வாய்ப்பும் முயற்சியின் வழியாக நம்மை பலப்படுத்துகின்றது!
---------------------------------------------------------------------------------


மௌனம்..............
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்!
ஏனெனில் மனவேதனைகளின் இறுக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம் இதுதான்!

- Jancy Caffoor -




2014/08/04

கவாஸ்கர்






வாழ்க்கை அழகான கனவுகளின் கூடாரம். வாலிபம் அக் கனவுகளை மூடிக் கிடக்கும் திரை. இந்த வசந்த வனப்புக்களையும் அறுத்தெறியும் சதியாக விதி!

இன்னும் வாழத் தொடங்காத வயது..
இருபத்திரெண்டு!
பருவத்தின் விளிம்பில் நடமாடும் உணர்ச்சிப் பிழம்பாய்!

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. கலங்க வைத்து தன் ஆட்டத்தில் பலரை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

அதற்கு இவனும் விதிவிலக்கல்ல...

கவாஸ்கர்...!

வறுமைச் சிறையை உடைத்தெறிந்து வாழத் தெரிவு செய்த மார்க்கமாய் இஞ்ஜினியரிங் படிப்பு இவன் நிழலாகியது. ரொம்ப நல்லவன் என்பதால் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். இவனது இந்த அழகான இரசனை அவனுக்கு பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது..

வள்ளியூர் ....
திருநெல்வேலி....
இவன் பாதம் பட்ட  தரைச்சுவடுகள்!
M.E.T College of Engineering ..இவனைச் செதுக்கிய கல்விக்கூடம்..

இந்து , நாடார் குலம்...இவன் கலாசார சின்னம்..
வாழ்க்கையைக் கற்க புறப்பட்டவன் காலனிடம் சிக்கித் தவித்த போது, அவன் கனவுக்கூடாரங்கள் சிதைந்து கல்லறையாகியது..
தான் ஆசையாக வாங்கிய உந்துருளியில் பயணித்த போது விபத்துக்குள்ளானான். வேகமாகப் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தா அல்லது கொலைச் சதியா ...


இறைவன்தான் அறிவான். இவனுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மொய்த்திருக்கும். அவற்றைத் தனக்குள் சேகரித்திருப்பான் அல்லது தன் மனதைக் கவர்ந்தவர்களிடம் பகிர்ந்திருப்பான்.


மெல்லன விரிந்த மொட்டொன்று, தன்னிதழ்களை விரிக்க முன்னரே வாடிப்போனதுதான் கவலை..

தன்னைக் கடந்துபோன ஒவ்வொரு நொடிகளிலும், தான் அற்ப ஆயுசில் போவேனென நினைத்திருப்பானா.... விதியின் சதிராட்டத்தில்....இவனும் ஒரு பங்காளி!

ஜூன் 5ம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியவன், நினைத்தும் பார்த்திருக்க மாட்டான் ஜூன் 24ல் தன் கல்லறையை மண் திரட்டுக்களும் அக்கினியும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமென்று!

மரணம்..............

இவனைத் தேடி வரவில்லை மாறாக மரணத்திற்கான அழைப்பானை இவனால் விடுவிக்கப்பட்டது மறக்க முடியாத சோக வடு! வாழ வேண்டிய வயது...அற்ப ஆயுசில் உயிர்ப்படங்கிப் போவது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம்தான்..


அவன்  சோகத்தினை வாசிக்கும் கண்ணீர்த்துளிகள்!

ஒவ்வொரு பெற்றோரும். தம் பிள்ளைக்கு உயிர்ப்பூட்டி வாழ்க்கையும் தந்து நடமாடச் செய்யும்போது பலரோ அந்த வசந்தத்தை ஏதோ ஒரு வகையில் கரைத்து விடுகின்றனர். விதி பறித்த அந்த உயிர் மீள வருமா..

நம் வாழ்க்கையின் பெரும் பகுதி குடும்பத்தினருடனான சந்தோசத்தில் பகிரப்பட வேண்டும். ஆனால் மாறாக பலரோ அவர்களைக் கண்ணீரில் தள்ளி விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

மரணக் குகைக்குள் நுழைந்த அந்தச் சின்னவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

- Ms. Jancy Caffoor -

2014/08/03

ஏனோ



இப் பிரபஞ்சத்தில்
நானும்
நீயும்
இரு உருக்கள்
இறுகிய பாறைகளல்ல
அழகிய அன்பை யுடைக்க!

நம்
விழிகளில் விம்பம்
விழவேயில்லை யின்னும்
இருந்தும்...
அகக் கண்ணில் நம் நகர்வுகள்
அடிக்கடி வீழ்த்தப்பட்டு
வீம்பாய்
முறைக்கின்றன செல்லச் சண்டைகளாய்!

அடுத்தவர் முறைப்பில்- நம்
விருப்புக்கள் இடமாறிச் செல்லும்போதெல்லாம்
சிறகடிக்கும் அன்பும்
உயிர்க்கின்றன இதமாய்!

என்னை யுன்னிடம் நிருபிக்க
அன்பு மாத்திரமே யுண்டு!

பத்திரப்படுத்து அதனை - நாளை
என் ஞாபகங்களாவது
பொய்க்கா மலிருக்க!

காலத்தின் சிதைவில்
காத்திரமான என் அன்பும் உன்னில்
கறைபட்டுப் போனதோ!
கலங்கி நிற்கின்றேன்


- Jancy Caffoor-
 13.08.2014


சிந்தனைத்துளிகள்



எப்படி வாழ வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதனைக் கற்பனையில் செதுக்குவோம்!

எதனைச் செய்ய வேண்டுமென்று துடிக்கின்றோமோ அதனை செயலாய் உருவாக்குவோம்!

நம்மை தயார்படுத்தும் ஆற்றல் - நம்
உள்ளத்துணர்வில் பதிந்துள்ள சொற்களே!

ஏனெனில்....

நாம் சொல்லும் சொற்கள் அல்லது கேட்கும் சொற்களுக்கேற்ப நம் நடத்தைகளும் மாறும்!
----------------------------------------------------------------------------------------------

உறவுகள் உடைந்து விடக்கூடும்.
காதலும் கரைந்து விடக்கூடும்..

ஆனால்....

உண்மை அன்புள்ள நட்புக்கள் நம்மை விட்டுப் போகாது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் அதே எதிர்பார்ப்பற்ற அன்பு!

உண்மைதான்...

நட்பே அழகானது. இங்கு பேசுவது உணர்ச்சிகளல்ல. அன்பான உள் மனம் மட்டுமே!