About Me

2014/08/08

பணத்தின் அருமை


Anuradhapura Bank town

அன்பியா ஜூவலர்ஸ் முன்னாலுள்ள வீதி மஞ்சள் கோட்டுக்கருகில்!

இன்று மாலை ஒரு தேவையின் பொருட்டு கடைக்குச் சென்றிருந்தேன். எனது வேலை முடிவடைந்த பின்னர் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எனது மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்த போது..................

எனக்கருகே மோட்டார் சைக்கிளொன்று உரசி நின்றது..

திரும்பிப் பார்த்தேன்...

"ஸ்கூட்டி பைக்"

நடுத்தர நவநாகரிக சிங்களப் பெண்மணி அவசரமாக உந்துருளியிலிருந்து இறங்கினார்.

அவரைச் சுற்றி என் கண்கள் மொய்த்தன.........

எனக்கு மிக அருகில்  காற்றில் படபடத்துக் கொண்டிருந்த நூறு ரூபாய் நோட்டினை  தனது சைக்கிள் சில்லினால் மறைத்தவறே நின்றிருந்தார். அருகில் நான் நிற்பது அவர் அவசரத்திற்குப் புரியவில்லை.

மின்னல் வேகத்தில் கீழே குனிந்து அந்தப் பணத்தை தன் கைகளுக்குள் பொத்தியவாறே பறந்தார்.

அவர் முகத்தில் சந்தோஷக் களை...ஆனால் பணத்தைத் தொலைத்தவர் மனதில்!

சனநடமாட்டம் உள்ள இடத்தில்கூட அடுத்தவர் பற்றிய எண்ணமில்லாது பாய்ந்திறங்கி பணத்தை எடுத்த அப்பெண்மணியைக் கண்டதும்....

என் மனதில் பணத்தின் அருமை புரிந்தது.

நானோ  ....

மனம் தேவையொன்றைத் தீர்மானித்ததும் கவலையின்றி பணத்தைக் கரைக்கும் தவறு  உறைத்தது...

சாதாரணமாக கவலையின்றி நான் செலவளிக்கும் அந்தப் பணத்தை, அப்பெண்மணி எடுத்துக் கொள்ள பதினைந்து நிமிடங்கள் செலவளித்திருக்கின்றார். அடுத்தவர் பணத்தை எடுப்பது தவறு என்றாலும்கூட, அச்சிறு பணத்தின் பெறுமதி அம்மணிக்கு நன்கு புரிந்திருக்கின்றது!

என் நலனில் அக்கறை கொண்டோர், பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமிக்கப் பழகிக் கொள் என்று அடிக்கடி கூறும் வார்த்தைகள் அப்பொழுது எனக்குள் சுழல, மனதில் ஒரு தௌிவும் படர்ந்தது...

இன்ஷா அல்லாஹ்......

இனி பணத்தை வீண்செலவு செய்யக்கூடாதெனத் தீர்மானித்துக் கொண்டேன்!

அஹமட்



அஹமட்.....

ஆறு வயது!

என் சகோதரி மகன்.. விடுமுறைக்காக கட்டார் தோகாவிலிருந்து அவன் குடும்பத்துடன் வந்துள்ளான்.  நன்றாக ஆங்கிலத்தில் விளாசுவான் பெரியோரே வியந்து நிற்கும்படி!

இன்று மாலையில் நானும் அவனும் சகோதரியும் பொடி நடையாக Foodcity டவுனுக்குப் போனோம். சல்ஹாது பாண் வெதுப்பகம் முன்னால் ஒரு சைனாக்காரன் நின்று கொண்டிருந்தான். அவன் பார்வையோ இவன்மீதுதான்!

"அஹமட்......உன் இங்கிலிசில பேசு"

சொன்னேன்.

நாங்கள் அவனைக் கடக்கும்போது அவன் அஹமட்டைப் பார்த்து "ஆய்போவன்"  சொன்னதும், இவனும் அவன் முன்னால் நின்று விட்டான்.

"ஆஹா...அஹமட் பொடியன் ஏதோ பேசப் போறன் போல"

என் மனம் நினைக்க, நானும் அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றேன்
.
அஹமட் சைனாக்காரனைப் பார்த்துக் கொண்டே நின்றவன், திடீரென அவனுக்குப் பதில் சொல்லாமல் விருட்டென என் பக்கத்தில் வந்தான்.

"ஏன்டா பேசல" இது நான்...

"அவன் நோட்டி" இது அவன்..

"வை டா" புரியாமல் அவனைக் கேட்டேன்..

அவன் சரியில்ல..சிகரெட் குடிக்கிறான். அவன்கூட பேச மாட்டேன்"

அவன் தன் பிஞ்சுக்குரலில் சொன்னபோதுதான் சைனாக்காரனை  நோட்டம் விட்டேன். சைனாக்காரன் கையிலிருந்து புகை வளையங்கள்
வௌியேறின!

சிறு வயதில் பிள்ளையின் மனதில் நல்ல அனுபவங்களைப் பதிப்பது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்...

காலங்கள்



நம் அன்பானவர்கள்
கடந்த காலத்தை மறந்து விடச் சொல்லுவார்கள்

நிகழ்காலத்தில் நம்முடன் இணைந்து
இன்ப துன்பங்களில் பங்கு கொள்வார்கள்

எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவார்கள்

நீ கொண்ட அன்புக்கு சாட்சியமாய்
என் காலங்கள் உன் வசமாய்!



- Jancy Caffoor -

மனதின் இருப்பு


மனம் ஒருவரை நேசிக்கும்போது அவரின் குறைகள் எல்லாம் நிறைவாகிப் போகும். இதனால் அவரை ரசித்து மகிழ்கின்றோம்!
ஆனால்
காலத்தின் விதிவசத்தால் அவரை வெறுக்கின்றபோது  அவரின் ஒவ்வொரு சாதாரண அசைவிலும் குற்றமும் குறைகளும் தேடிக் கண்டுபிடித்து   வலி கொடுத்தவாறே நமது விலகலை வௌிப்படுத்துகின்றோம்
விருப்போ, வெறுப்போ மனதின் வௌிப்பாடு நம்மை தன்னுள் அடக்கியாள்கின்றது என்பதே யுண்மை!
----------------------------------------------------------------------------------------

நண்பர்களுக்கு நாம் வழங்கும் மிகச் சிறந்த பரிசு
" உண்மையான அன்பு"
---------------------------------------------------------------------------------
கடல் .....!

அலையடிக்கும்போதுதான் அதன் நுரை கரையோடு மோதி அழகு காட்டும். அலைகள் பாய்ந்து வரும்போது பயம் கொள்ளும் மனது,
தரை தொட்ட  அலைகள் கால்களை வருடும்போது சிலிர்த்து நிற்கின்றன..

வாழ்க்கையும் இப்படித்தான்...
துன்பங்கள் நெருடும்போது மனதை கட்டிப்போடும் பயம், அவ்வலியை நீக்க நாம் போராடும்போது பலமாக மாறி விடுகின்றது..

பலம் பலகீனமாகவும், பலகீனம் பலமாகவும் மாற்றிப் போராடும் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்ளும்போது காலம் போய் விடுகின்றது. அனுபவம் எஞ்சும்போது நாமோ வாழ்க்கையின் பசுமையை இழந்து விடுகின்றோம்.
----------------------------------------------------------------------------------------


உன்
உரிமை
உறவெல்லாம்

சினமாகி
என்னுள் தூறிக் கொண்டிருக்கின்றது
இப்போதெல்லாம்!

வருந்தவில்லை நானும்
ரசிக்கின்றேன் உன் அன்பை!

திட்டி விடு
அன்றேல் கொஞ்சி விடு
--------------------------------------------------------------------------------------
எதனையும் நாம் மனப்பாடம் செய்து பேசுவதில்லை. சந்தர்ப்பங்கள்தான் நம் வார்த்தைகளைத் தீர்மானித்து விடுகின்றன. ஒருவரின் வார்த்தைகள்தான் அவர்களது மனதைப் படம் பிடித்துக் காட்டும் கருவி.

அன்போ
நட்போ
பாசமோ
உரியவர்களிடம் அதிகம் பேச வைத்து விடுகின்றது..
முடிவில் அதன் விளைவு்.

அவர்கள் நம்மிடம் கொள்ளும்
நல்லபிப்பிராயம் அல்லது தப்பெண்ணம்!
------------------------------------------------------------------------------------------
அவசரம்
அறியாமை
ஆத்திரம்
முட்டாள்தனம்
என்பவற்றின் பின்னல்தான்
தவறுகள்

நம் தவறுகளின் வலி
நம்மை மீளவும் புது மனிதராய்
மாற்றக்கூடியது

ஏனெனில்

ஒருவரின் வார்த்தைகளின் வலி
நம்மைச் செதுக்கும் உளி!
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஆரம்பமும்
முடிவொன்றின் அடித்தளம்
எனது பாடசாலை இடமாற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில்,
கற்பித்தல் பணியிலிருந்து நீங்கி
தனிமையில் நான்!

- Jancy Caffoor-
    08.08.2014

பிரிதலும் கூடலும்




நீ வருவாயென..
இருளென்றும் பாராமல்
விடி விளக்காய் - என்
விழி யிரண்டும் ஏற்றி வைத்தே காத்திருந்தேன்...

வந்த நிலாவும் போனதுவே யுன்
சந்தடி யென் காற்றில் கலக்காமலே..
எந்தன் மனம் யுனக்காய் துடித்திருக்க - நீயோ
எனை மறந்துன் வழிப்பாதையில்!
------------------------------------------------------------------------------------

பிரியும்போதுதான்
புரிகின்றது - நம்
சண்டைகள்கூட .......
அன்பின் வருடலென்று!
-----------------------------------------------------------------------------------

நேற்றைய சரி
இன்றைய பிழை!
-----------------------------------------------------------------------------------

நம்
வாழ்வைத் தீர்மானிப்பது வயதல்ல
மனம்
ஏனெனில்
வயது எனபது வெறும் எண்கூட்டம்!
-----------------------------------------------------------------------------------

பிரிந்துதான் செல்கின்றாய்
இருந்தும்
என்னை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாய்
ஏனெனில்
முன்னைய நாட்களில்
உன் அன்பில் நான்!
----------------------------------------------------------------------------------

ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு வாய்ப்பு உள்ளது..
ஒவ்வொரு வாய்ப்பும் முயற்சியின் வழியாக நம்மை பலப்படுத்துகின்றது!
---------------------------------------------------------------------------------


மௌனம்..............
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்!
ஏனெனில் மனவேதனைகளின் இறுக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம் இதுதான்!

- Jancy Caffoor -