About Me

2015/02/22

ஞாபகத் தீ


அன்றோர்
பொழுதொன்றில்
உன் கரத்தில் குவிந்திருந்த மாதுளங்கனியால்
என்னைச் சிவப்பாக்கினாய் 
இதழ்களின் சிணுங்கல்கள்
அழகாய் நம்மை மொய்த்த - அந்த
ஞாபகங்கள் நெஞ்சைப் பிளக்கின்றதடா!
---------------------------------------------------------------------------

நீ என்னை இம்சித்துச் செல்லும் போதெல்லாம்
திட்டுகின்றேன் உன்னை
வழிந்தோடும் சினத்தால் - உன்னைப்
போர்த்துகின்றேன் - இனி
நமக்குள் ஒன்றுமில்லயென
முடிவுரைகூட செப்புகின்றேன் உன்னிடம்
ஆனால்
நீ விட்டுச்செல்லும்  அந்த அப்பாவித்தனமான
மௌனத்தில்தான் - என்
இதயம் கனத்து
கண்ணீரில் கரைக்குது அன்பை!
------------------------------------------------------------------------

ஏழ்மைத் தேசத்தின்  பிரதிநிதிகளாய்
வியர்வைத் துளிகள்!
பசி ரேகைகள்  வரையும் ஓவியங்களாய்
அவலங்கள்!
அழுத்தங்கள் விழிகளுக்குள் வீழ்ந்து
அழுகிப் போகும் போதெல்லாம்
கன்னக் கதுப்புக்களில் உப்பளங்கள்!
இத்தனைக்கு மத்தியில்
அக்னிப் பிரசவங்களின் அழுகுரல்கள்
அடங்கிக் கிடக்கும் காப்பகமாய் மனசு!
அட
வறுமைக்குள் தோற்றுப் போகும் வாழ்வுகூட
ஒர் கணம்
தேற்றிக்கொள்கின்றது 
வாழ்க்கையின்னும் முடிந்து விடவில்லையென
நீயென்  அருகினிலிருப்பதால்!
--------------------------------------------------------------------

என் செல்லத்துக்கு,
இது
நாம் சிருஷ்டித்த உலகம் 
இங்குதான் 
நம் காதல் நம்மைக் காதலித்தது!
இங்குதான்
நம் குழநதைகளும்
நமக்குள் முத்தங்களைச் சிந்தின!
இங்குதான்
நாம்
உறங்க மறந்த பல இரவுகள்
நம் காதலை
கவிதைகளாய்ப் பேசின -
வா
இது நம்முலகம்!
தடையின்றி நம்மைப் பொறிப்போம்
காதலுடன்!
-----------------------------------------------------------------

நினைத்துப் பார்க்கின்றேன் - நம்
நிஜத்தின் வாசத்தை
அழகான நம் மனதுக்குள்
ஆழமான அன்பை வீசும் - அத்
தருணங்கள்தான்
இன்னும் நம்மை எழுதிக் கொண்டிருக்கின்றன
ஒருவருக்குள் ஒருவராய்!


- Jancy Caffoor-
  22.02.2015

2015/02/14

ஊழல்


அண்மையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பியாட் விஞ்ஞான தெரிவுப் பரீட்சை - 2015க்கு மேற்பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலயப் பணி. இதற்கான கொடுப்பனவு ரூபா 750. எமது பணியை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கு வெளியேறும்போது அவ் விஞ்ஞான அதிகாரி கொடுப்பனவுப் பத்திரத்தை நீட்டி எமது கையெழுத்துக்களைப் பெற்றார். பணம் இன்று இல்லை. நாளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கினறேன் என எல்லோருக்கும் உறுதியளித்தார். இன்று இது நடைபெற்று ஈர் வாரங்கள்....

பணத்தை எதிர்பார்த்து கடமை செய்ய முடியாதுதான். ஆனாலும்
கொடுப்பனவுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிகள் ஏதோ ஒருவகையில் சுரண்டுகின்றார்கள். இவ் ஊழல் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல.
இவ்வாறான அரச அதிகாரிகளிடமும் குவிந்து கிடக்கின்றது இன்னும் வௌிச்சத்திற்கு வராமல்! சிறு தொகையை உறிஞ்சுவதும் ஊழல்தான். அவவிடம் இன்னும் இது பற்றி நான் மூச்சு விடவில்லை. ஆனாலும் இவ்வாறானவர்களின் அழைப்புக்களை இனி நிராகரிக்கவேண்டும். ஏனென்றால் நாம்தான் ஊழல், இலஞ்சத்தை வளர்க்க அனுமதிக்கின்றோம்.


-Jancy Caffoor-
  14.02.2015

கோபம்



சாலையோரத்தில் காற்றோடுரசும் ரோசாவை
வாஞ்சை யோடணைத்தேன் கைகளில்
சிரித்தது முள்
ரணம் தருவதை மறைத்து
...................................................................................

கோபம்!
மனக் கஷ்டம்
பண நஷ்டம்
சில காலங்களாக எனக்குள் வலை பிண்ணிக் கொண்டிருக்கும் இக் கோபம் இனி வராதிருக்கட்டும்


- Ms. Jancy Caffoor -
   14.02.2015

காதலர் தினம்



வருடா வருடம் 
சிவப்பு ரோசாக்களும் சிவக்கின்றன
பெப்ரவரியில் பன்னீர்த்துளிகள் வீழ்கையில்
வெட்கம் தொட்ட காதல்
மனசெங்கும் ஏங்கி
நிலாவௌியில் அன்பைக் களவாய் வாசிக்க!

அடடா

ஊர் செவி விரித்து சங்கதி கேட்குதோ!
காதலின் குணம் நுகர்ந்து
கேலியும் கிண்டலும் மாலையும் சில சேர
சிலவோ 
விமர்சனம் கண்டு அரிவாளும் அழுகையுமாய்
சமாதியில் வீழ
எங்கும் காதல் எதிலும் காதல்!
பேதங்களுக்கு அப்பால் பேசப்படும் மொழியாய் 

ஓ     இன்று காதலர் தினம்!

காற்றுவாக்கில் காதில் அதிர்ந்து
காத்து நிற்கின்றது நமக்கும் தன் வரலாற்றின் ஞாபகங்களை
மெல்லச் சொல்லிப் போக!

முத்தங்களும் பரிசுகளுமாய் பரிமாறு மின்று....
அன்றைய தியாகமொன்றும்
மீண்டும் உயிர்க்கின்றது சுயமாய்!

நீங்கள் அறிந்தவைதான்
இருந்தும் 
செவி கொடுங்கள் மீண்டுமொரு முறை!

அரசன் கிளாடிஸ் மிமி கிளர்ந்தெழுந்தான் 
ரோமாபுரியில் திருமணம் செய்பவர்கள்
சிரம் சிதைத்துக் கொல்லப்படுவார்களென!

உத்தரவின் அகோரத்தில் திருமண நிச்சயதார்த்தங்களும்
காதல் ஒப்பந்தங்களும் ரத்தாகும் வேள்வியில்...

பாதிரியார் வாலண்டைன்
பசுமை வார்க்கும் நெஞ்சினனாய்
ரகஸியமாய்
இல்லறமிணைக்கின்றார் காதலர்களை!

அறிந்தான் அரசன்
அவன் ஆக்ரோசத்தில் வாலன்ரைன்!.
சிறையில்
இரும்புக் கம்பிகளையும் துளைத்துச் செல்கின்றது
சிறைக்காலவர் தலைவனின் பார்வையிழந்த பூமகளின்
அன்பு!

அவள் அஸ்டோரியசு

சிரமிழக்கப் போகும் தன்னவனுக்காய்
துவண்டாள் பேதை
போராடினாள்   விளைவு
வீட்டுக்காவலில் வேராகினாள்!

கட்டுப்பாடுகள்
காதலின் சக்தி முன் வெறும் காற்றலைகளோ..

காவலை மீறினார் வாலன்டைன்
காகித அட்டை துளைத்தெழுதிய - அவர்
காதல் வாழ்த் தவள் கரம் சேரும் நேரம்!

சித்திரவதைக்கூடம் அவருயிர் பிரித்து
சத்தமின்றி கலைக்கின்றது
சத்தியக் காதலை!

அது
முதல் காதலர் வாழ்த்து!

270 வது வருடம் பிப்ரவரி 14 !
கண்ணீரில் கசிந்த காதலின் ஈரம்
இன்றும் காதலர் தினமாய்
காலத்தின் ஞாபகங்களில்


- Jancy Caffoor-
  14.02.2015