About Me

2015/02/24

பிரியாவிடை ஓ . எல். 13


டிசம்பர் 2 - 2013
-------------------
பாடசாலைப் பருவம் என்பது துன்பம் துறந்து, சிறகு விரித்துப் பறக்கும் பருவம். பொதுப்பரீட்சைகள் தடையும் பிரிவும் விதிக்கும் வரை நட்பின் வலி யறியாப்பருவம்.

எம் பாடசாலையின் தரம் 11 மாணவர்களுக்கும் இது பொருந்தும். இன்னும் கா. பொ. த சா/த பரீட்சைக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், பரீட்சை பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் ஒரு புறமிருக்க.....பல வருடங்களாக பின்தொடர்ந்த நண்பர்களைப் பிரியும் பிரிவு வலி மறுபுறம் நெருக்க வேதனையுடன் பிரியாவிடைக்கு தயாராகி விட்டனர் அம் மாணவச் செல்வங்கள்.

இரண்டு வருடங்களாக இவர்களுக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கின்றேன். நான் கண்டிப்புக் காட்டும் நேரத்தில் கூட அவர்கள் என்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. தங்கள் குடும்பத்தில் என்னையும் ஓர் அங்கத்தவராய் கருதி புன்னகையும் அன்பையும் சிதறும் இம் மாணவர்களின் பிரியாவிடைக்கும் பாடசாலையில் நாள் குறித்தாகி விட்டது.

ஓ.எல். விடுதி மாணவர்களின் பிரியாவிடை அழைப்பிதழை இன்று என் கையேந்தியபோது கண்கள் லேசாய் பனித்தன. மனசும்தான்.

அவ் அழைப்பிதழில் காணப்பட்ட பின்வரும் வரிகள் மனதைத் தொட்டுச் சொல்ல.

எதிர்வரும் பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற இறைவனைப் பிரார்த்தித்தேன். எல்லோரும் பிரார்த்திப்போம்!

"ஏர் பிடிக்க இருந்தோம்
எழுத்தறிவித்தாய்....
எட்டி முயற்சித்தோம்
ஏணியானாய்....
பிரிந்து செல்கின்றோம்
என்செய்வாய்?
பணிந்து சொல்கிறோம்
நீ சிறப்பாய்!"


- Jancy Caffoor-
  24.02.2015

அ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்


சமபோஷா கால்ப்பந்தாட்ட சாம்பியன் அணி - 2014
15 வயதுக்கு கீழ்பட்ட ஸாஹிரா மாணவர் கால்ப்பந்தாட்ட அணியினர் அ/மத்திய கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி போன்ற பிரபல்ய பாடசாலை மாணவ அணியினர்களை வெற்றியீட்டி இன்று (23.10.2014) சாம்பியன் பட்டத்தை தமதாக்கினார்கள். 
இவர்களின் வெற்றிக்குழைத்த பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் இம்மாணவர்களுக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

பாராட்டுக்கள் இவர்களுக்கு
---------------------------------------------

Australian National Chemistry Quiz - 2014
-------------------------------------------------------
மேற்படி போட்டியில் அ/ ஸாஹிரா  மகா  வித்தியாலய  மாணவர்களும் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களையும்,  அவர்களை  வழிப்படுத்திய ரமீஹா ஆசிரியையும் பாராட்டுவோம்

மாணவர்கள் விபரம்
-----------------------------
தரம் 11 (2014)
-----------------------------
1. M. Shalik - High Distinction
2. I. Hafeel - Credit
3. A. Waseema - Participation
4. N. Fayaza - Participation

க.பொ.த உ/த
--------------------
1.A. Ayisha   - Distinction
2. M. Rasna  - Distinction
3. S. Rinoosa  -  Credit
4. T. Simaya   -   Credit
5. A. Fazna  - Participation
6. F. Faseeha  - Participation
7. H. Thansila banu - Participation
8. N. Niroskhan  - Participation
9. R. Rozana - Participation
10. S. Sameema - Participation
11. T. Hisafa - Participation
---------------------------------------------------------------------

வலய மட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் தரம் 7 சீ மாணவன் M.U.M. பாலிஹ் மாகாண மட்டத்திற்குச்செல்லும் வாய்ப்பைப்பெற்றுள்ளார். இவரை நாமும் வாழ்த்துவோம்

---------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அவர்கள் விபரம் -

1.. M.F.Aadhil Ahamed...............  ( marks 182)
2. .M.V.Sameeha......................... .......... (177)
3..M.M.M. Akeel............................. .........(172)
4..N.Ashfan Ahamed...................... .........(167)
5..A.A.H.Nisha .........................................(165)
6.. N.Aysha.............................................. (162)
7..M.R.F.Salha......................................... (159)
8..S.H.Hafri ..............................................(158)
9..A.H.F.Rasheeka.................................. (158)
10..A.S.Shahama...................................... (158)
11..T.F.Sahara............................... ...........(156)

-------------------------------------------------------------------------------
 க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறுகளில் (2013 டிசம்பர்) அதிக கூடிய பெறுபேறுகளைப் பெற்ற அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவிகள் விபரம் -

C.M.Fathima Risla - 9 A
s. Fathima Sashna - 8A, 1 B
M.S. Fathima Aasra - 8A , 1 C
M.R.Hasheena - 8A , 1 C

-------------------------------------------------------------
சமூகக்கல்வி வினா- விடைப் போட்டி வருடாவருடம் நடத்தப்படும் போதெல்லாம் கோட்ட மற்றும் மாகாண மட்டங்களில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.


- Jancy Caffoor-
  24.02.2015



2015/02/22

கோணப்புளி


யுத்தம் சத்தமில்லாமல் பலரின் ஆதாரங்ளைப் பிடுங்கியது.
பறந்து போன இந்தப் பல வருடத்தில்  சிலர் வசதி வாய்ப்புக்களுடன் வேரூன்ற இன்னும்  பலர் அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகி  அலைய காலம் எப்படியோ கழிந்து  கொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் இரண்டாவது வர்க்கம். யாழ் நகரில் எம் பிறப்பிடம் வனாந்தரமாகி காய்ந்து கிடக்க, நாங்களோ இன்னும் பேரம் பேசும்  உலகில் இருப்பிடங்களை  மாற்றிக் கொண்டிருக்கின்றோம் நிரந்தர முகவரியில்லாமல்.

சரி விசயத்திற்கு வருகின்றேன்.

யுத்த காலத்தில்கூட   சன்னம் துளைக்காத எங்கள் வீடு சில எம்மினத் துரோகிகளால்  தன் சுவர்களையும்  கட்டடங்ளையும் இழந்து வனாந்தரமானது. மரங்களின் சுய ஆட்சியின் விஸ்வரூபமாய் ஓர் கோணப்புளிய மரமும்  கிணற்றுக்கு அருகிலுள்ள முற்றத்தை குத்தகை  எடுத்ததை நாங்கள்  அறிந்துகொண்டோம்.


யுத்தம் ஓய்ந்து சமாதான காலத்தில் வெறிச்சோடிப் போன எங்கள் வீட்டைப் பார்க்கப் போன போது  மரத்தை அயலாளர் அறிமுகப்படுத்தினார்கள். கிணற்றைச் சுற்றி  பசுமையாய் கிளைகள்  விட்டிருந்தது மரம்... அடி தண்டுப் பகுதிகள் முட்களற்றும், மேல்க் கிளைகள்  கொழுக்கி போன்ற வளைந்த முட்களையும் தனக்குள் நிரப்பி வைத்திருந்தன.

வளவை துப்பரவு செய்யும் முயற்சியில் இறங்கினோம். காடாகிப் போன வீட்டைத் துப்பரவு  செய்ய  பல ஆயிரங்கள் கூலிக்காரர்களுக்குள் இடமாறின. கிளைகளில் பசுமையும்  சிவப்புமாக சுருள்களாய்   தொங்கிக்  கிடந்த சீனிப் புளியங்காய்களுக்காக அம்மரத்தை  வெட்ட  அயலாளர் விடவில்லை.


"கோணப்புளியை  எங்க வீட்டுப் புள்ளங்க ரொம்ப  ஆசயாச் சாப்பிடுவாங்க,வெட்டாதீங்க. எங்களுக்காக அந்த மரத்தை விட்டுட்டு போங்க"  ஒரு அறிந்தவர் கெஞ்சினார்.
நாங்களும் மறுக்கவில்லை.  மரம் இன்னும் உயரமானது.

காலவோட்டத்தில் அம்மரத்தையே மறந்து விட்டோம்.

மூன்று வருடங்கள் மெல்லக் கரைந்து போனது....

அண்மையில் ஒரு கைபேசி அ ழைப்பு ........

அறிமுகமில்லாத  இலக்கம்...

"ஹலோ"  - இது நான்..

மறுமுனை தன்னை  அடையாளப்படுத்தியது. பட் பட் வார்த்தைகள் வெடித்தன. அது வேற யாருமில்ல! அதே அயலவர்தான்!

"மரத்துல மசுக்குட்டிகள் தொங்குது. உடனே  வெட்டுங்க ...."

மிரட்டல், விரட்டல்  கலந்த முறைப்பாடுகள் !

எங்கள் அனுமதியின்றி  இயற்கை  வளர்த்த  மரம். இத்தனை வருடங்களும்  அதன்  பலனை  அனுப்பவித்தவர்கள்  அயலாளர்.

இன்றோ

ஒரு தீமையைக் கண்டதும்  வீட்டுக்காரங்களுக்கு  அது  சொந்தம்!

கூலிகள் வைத்து மரத்தை வெட்ட  ஐயாயிரம் ரூபா பணம் அனுப்புவதாக அந்த அயலாளருக்கு உறுதியளித்துவிட்டு பெருமூச்சொன்றை மெல்லிழுத்தேன்..

எனக்கு  கொறக்காய்ப் புளி  தெரியும். இதன்   தாவரவியற் பெயர் Manilla tamarind இதுல என்ன  பகிடியென்றால் இதுதான் கோணப்புளி   என்று தெரியல . ஒரு
காய்கூட வாய்க்குள்ள வைக்கல. அதன் ருசி தெரியல. ஆனால்  சுளையா   ஐயாயிரம் ரூபா இந்த  மாசச்  சம்பளத்தில  மரத்த  வெட்ட  அங்க பறந்து போறதுதான்  கவலை!


-Jancy Caffoor-
22.02.2015

ஞாபகத் தீ


அன்றோர்
பொழுதொன்றில்
உன் கரத்தில் குவிந்திருந்த மாதுளங்கனியால்
என்னைச் சிவப்பாக்கினாய் 
இதழ்களின் சிணுங்கல்கள்
அழகாய் நம்மை மொய்த்த - அந்த
ஞாபகங்கள் நெஞ்சைப் பிளக்கின்றதடா!
---------------------------------------------------------------------------

நீ என்னை இம்சித்துச் செல்லும் போதெல்லாம்
திட்டுகின்றேன் உன்னை
வழிந்தோடும் சினத்தால் - உன்னைப்
போர்த்துகின்றேன் - இனி
நமக்குள் ஒன்றுமில்லயென
முடிவுரைகூட செப்புகின்றேன் உன்னிடம்
ஆனால்
நீ விட்டுச்செல்லும்  அந்த அப்பாவித்தனமான
மௌனத்தில்தான் - என்
இதயம் கனத்து
கண்ணீரில் கரைக்குது அன்பை!
------------------------------------------------------------------------

ஏழ்மைத் தேசத்தின்  பிரதிநிதிகளாய்
வியர்வைத் துளிகள்!
பசி ரேகைகள்  வரையும் ஓவியங்களாய்
அவலங்கள்!
அழுத்தங்கள் விழிகளுக்குள் வீழ்ந்து
அழுகிப் போகும் போதெல்லாம்
கன்னக் கதுப்புக்களில் உப்பளங்கள்!
இத்தனைக்கு மத்தியில்
அக்னிப் பிரசவங்களின் அழுகுரல்கள்
அடங்கிக் கிடக்கும் காப்பகமாய் மனசு!
அட
வறுமைக்குள் தோற்றுப் போகும் வாழ்வுகூட
ஒர் கணம்
தேற்றிக்கொள்கின்றது 
வாழ்க்கையின்னும் முடிந்து விடவில்லையென
நீயென்  அருகினிலிருப்பதால்!
--------------------------------------------------------------------

என் செல்லத்துக்கு,
இது
நாம் சிருஷ்டித்த உலகம் 
இங்குதான் 
நம் காதல் நம்மைக் காதலித்தது!
இங்குதான்
நம் குழநதைகளும்
நமக்குள் முத்தங்களைச் சிந்தின!
இங்குதான்
நாம்
உறங்க மறந்த பல இரவுகள்
நம் காதலை
கவிதைகளாய்ப் பேசின -
வா
இது நம்முலகம்!
தடையின்றி நம்மைப் பொறிப்போம்
காதலுடன்!
-----------------------------------------------------------------

நினைத்துப் பார்க்கின்றேன் - நம்
நிஜத்தின் வாசத்தை
அழகான நம் மனதுக்குள்
ஆழமான அன்பை வீசும் - அத்
தருணங்கள்தான்
இன்னும் நம்மை எழுதிக் கொண்டிருக்கின்றன
ஒருவருக்குள் ஒருவராய்!


- Jancy Caffoor-
  22.02.2015

2015/02/14

ஊழல்


அண்மையில் நடைபெற்ற தேசிய ஒலிம்பியாட் விஞ்ஞான தெரிவுப் பரீட்சை - 2015க்கு மேற்பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலயப் பணி. இதற்கான கொடுப்பனவு ரூபா 750. எமது பணியை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கு வெளியேறும்போது அவ் விஞ்ஞான அதிகாரி கொடுப்பனவுப் பத்திரத்தை நீட்டி எமது கையெழுத்துக்களைப் பெற்றார். பணம் இன்று இல்லை. நாளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கினறேன் என எல்லோருக்கும் உறுதியளித்தார். இன்று இது நடைபெற்று ஈர் வாரங்கள்....

பணத்தை எதிர்பார்த்து கடமை செய்ய முடியாதுதான். ஆனாலும்
கொடுப்பனவுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிகள் ஏதோ ஒருவகையில் சுரண்டுகின்றார்கள். இவ் ஊழல் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல.
இவ்வாறான அரச அதிகாரிகளிடமும் குவிந்து கிடக்கின்றது இன்னும் வௌிச்சத்திற்கு வராமல்! சிறு தொகையை உறிஞ்சுவதும் ஊழல்தான். அவவிடம் இன்னும் இது பற்றி நான் மூச்சு விடவில்லை. ஆனாலும் இவ்வாறானவர்களின் அழைப்புக்களை இனி நிராகரிக்கவேண்டும். ஏனென்றால் நாம்தான் ஊழல், இலஞ்சத்தை வளர்க்க அனுமதிக்கின்றோம்.


-Jancy Caffoor-
  14.02.2015