About Me

2015/02/22

கோணப்புளி


யுத்தம் சத்தமில்லாமல் பலரின் ஆதாரங்ளைப் பிடுங்கியது.
பறந்து போன இந்தப் பல வருடத்தில்  சிலர் வசதி வாய்ப்புக்களுடன் வேரூன்ற இன்னும்  பலர் அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகி  அலைய காலம் எப்படியோ கழிந்து  கொண்டிருக்கின்றது.

இதில் நாங்கள் இரண்டாவது வர்க்கம். யாழ் நகரில் எம் பிறப்பிடம் வனாந்தரமாகி காய்ந்து கிடக்க, நாங்களோ இன்னும் பேரம் பேசும்  உலகில் இருப்பிடங்களை  மாற்றிக் கொண்டிருக்கின்றோம் நிரந்தர முகவரியில்லாமல்.

சரி விசயத்திற்கு வருகின்றேன்.

யுத்த காலத்தில்கூட   சன்னம் துளைக்காத எங்கள் வீடு சில எம்மினத் துரோகிகளால்  தன் சுவர்களையும்  கட்டடங்ளையும் இழந்து வனாந்தரமானது. மரங்களின் சுய ஆட்சியின் விஸ்வரூபமாய் ஓர் கோணப்புளிய மரமும்  கிணற்றுக்கு அருகிலுள்ள முற்றத்தை குத்தகை  எடுத்ததை நாங்கள்  அறிந்துகொண்டோம்.


யுத்தம் ஓய்ந்து சமாதான காலத்தில் வெறிச்சோடிப் போன எங்கள் வீட்டைப் பார்க்கப் போன போது  மரத்தை அயலாளர் அறிமுகப்படுத்தினார்கள். கிணற்றைச் சுற்றி  பசுமையாய் கிளைகள்  விட்டிருந்தது மரம்... அடி தண்டுப் பகுதிகள் முட்களற்றும், மேல்க் கிளைகள்  கொழுக்கி போன்ற வளைந்த முட்களையும் தனக்குள் நிரப்பி வைத்திருந்தன.

வளவை துப்பரவு செய்யும் முயற்சியில் இறங்கினோம். காடாகிப் போன வீட்டைத் துப்பரவு  செய்ய  பல ஆயிரங்கள் கூலிக்காரர்களுக்குள் இடமாறின. கிளைகளில் பசுமையும்  சிவப்புமாக சுருள்களாய்   தொங்கிக்  கிடந்த சீனிப் புளியங்காய்களுக்காக அம்மரத்தை  வெட்ட  அயலாளர் விடவில்லை.


"கோணப்புளியை  எங்க வீட்டுப் புள்ளங்க ரொம்ப  ஆசயாச் சாப்பிடுவாங்க,வெட்டாதீங்க. எங்களுக்காக அந்த மரத்தை விட்டுட்டு போங்க"  ஒரு அறிந்தவர் கெஞ்சினார்.
நாங்களும் மறுக்கவில்லை.  மரம் இன்னும் உயரமானது.

காலவோட்டத்தில் அம்மரத்தையே மறந்து விட்டோம்.

மூன்று வருடங்கள் மெல்லக் கரைந்து போனது....

அண்மையில் ஒரு கைபேசி அ ழைப்பு ........

அறிமுகமில்லாத  இலக்கம்...

"ஹலோ"  - இது நான்..

மறுமுனை தன்னை  அடையாளப்படுத்தியது. பட் பட் வார்த்தைகள் வெடித்தன. அது வேற யாருமில்ல! அதே அயலவர்தான்!

"மரத்துல மசுக்குட்டிகள் தொங்குது. உடனே  வெட்டுங்க ...."

மிரட்டல், விரட்டல்  கலந்த முறைப்பாடுகள் !

எங்கள் அனுமதியின்றி  இயற்கை  வளர்த்த  மரம். இத்தனை வருடங்களும்  அதன்  பலனை  அனுப்பவித்தவர்கள்  அயலாளர்.

இன்றோ

ஒரு தீமையைக் கண்டதும்  வீட்டுக்காரங்களுக்கு  அது  சொந்தம்!

கூலிகள் வைத்து மரத்தை வெட்ட  ஐயாயிரம் ரூபா பணம் அனுப்புவதாக அந்த அயலாளருக்கு உறுதியளித்துவிட்டு பெருமூச்சொன்றை மெல்லிழுத்தேன்..

எனக்கு  கொறக்காய்ப் புளி  தெரியும். இதன்   தாவரவியற் பெயர் Manilla tamarind இதுல என்ன  பகிடியென்றால் இதுதான் கோணப்புளி   என்று தெரியல . ஒரு
காய்கூட வாய்க்குள்ள வைக்கல. அதன் ருசி தெரியல. ஆனால்  சுளையா   ஐயாயிரம் ரூபா இந்த  மாசச்  சம்பளத்தில  மரத்த  வெட்ட  அங்க பறந்து போறதுதான்  கவலை!


-Jancy Caffoor-
22.02.2015

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!