About Me

2015/03/21

பெருமூச்சு

தும்புத் தோரணங்கள் - எங்கள்
குறுவீட்டின் சாளரங்கள்!

மூச்சைக் கோர்த்து விடும் காற்றில்
ஊஞ்சலாடும் தொட்டில்கள் அவை!

அவஸ்தைகள் தரவு மில்லை
எவர் குடியும் கெடுக்கவுமில்லை

சின்ன அலகு தேய்க்க
உணவும் கேட்கவில்லை

விரட்டுகின்றீர்கள் எங்கள் இல்லங்களை
அறுக்கின்றீர்!

நிழல் தர எமக்கு மரங்களுமில்லை
நிம்மதியான மடமுமில்லை

சிறகறுக்கும் உங்கள் முன் - எம்
உறவு  தொலைத்தோ டுகினறோம்!

இருந்தும்

எம் குரல்ளை நெரிக்கு முங்கள்
கரங்களில்
குருவிச் சப்தங்கள் அழைப்பொலிகளாக!


- Jancy Caffoor-
 
.

2015/02/27

மனசு



முருங்கை  இலை மென்று
சுருங்கி உறங்கி வளரும் மயிர்க்கொட்டியின்
கருமேனி  கண்டு
அருவருப்போடு பீதிசேர்த்து ஒதுங்கும் மனசு...
பறந்தோடும் வண்ணாத்தியி னழகில்
இறுமாந்து கிடக்கின்றது!


- Jancy Caffoor-
  27.02.2015

தொல்லை

தவழும் குழந்தைக்கு
கட்டுக்காவல் தொல்லை...

பருவ வயதில்
பருக்கள் தொல்லை....

வாலிபம் வந்தால்
காதல் தொல்லை.......

குடும்பஸ்தனுக்கோ
எடுக்கும் சம்பளம் தொல்லை...

வயோதிப மானால்
தள்ளாடும் தேகம் தொல்லை....

எல்லையில்லா தொல்லைகள்
இல்லாதவருண்டோ வாழ்வில்!



- Jancy Caffoor-
 

2015/02/26

இவர்கள்



வறுமை .....
இவர்கள் முகவரியா - சதை
மறுக்கும் தேகம் அறிவிக்கின்றதே!

பசி ......
இவர்கள் ஓலமா - அன்றேல்
நாசியோர  வலியின் பரிதவிப்பா!

நெஞ்சுக்கூட்டுக்குள் அஞ்சாமல்
யார் செருகினார்
எக்ஸ்ரேயின் இலவச அழைப்பிதழை!

பாலைவன குடைக்குள்
அடைக்கலம் தேடும் நிழல்களா
இவர்கள்!

பண ஆசியில் குவிந்திருக்கும்
வீண் பருக்கைகள்......
இவர்கள் உதரத்துக்குள்ளாவது
இருக்கை யாகி யிருக்கலாம்!

ஐயகோ.....

உணவின்றி உணர்விழக்கும் இவ்வுயிர்களுக்கு
தினமு மினி
துன்பம் துடைக்கும் கரங்கள்  யாதோ!


- Jancy Caffoor-
 

நானுமோர்


பாரதி கண்ட புதுமைப் பெண்
 
சாத்தான்கள் வேத மோத
சாத்திரங்களும் கோத்திரங்களும் போர்வை விரிக்க
கொத்தடிமைகளாய் பெண்டுகளை
கொத்திச் செல்லும் வல்லுாறுக்களுக்கு
சத்தமிட்டு கற்றுக் கொடுக்கும் நானும்
நித்திலம் சுமக்கும் புதுமைப் பெண்தான்!
.
களவாய் மேகங்கள் மறைத்தும்
உலா வரும் நிலவாய்....
பாறை மோதியும் பக்குவமாய் நௌிந்தோடும்
சிற்றாற்று நீராய்....
சளைக்க மாட்டேன் அற்பர்களை வேரறுக்க - நானும்
களையறுக்கும் புதுமைப் பெண்தான்!
.
எப்படியும் வாழ்ந்திடலாம் மாக்கள் - ஆனால்
இப்படித்தான் வாழ்க்கையென கோடு கிழித்து
தப்பில்லா வழி காட்டும் பாதைகளில்
அப்பிக் கிடக்கின்ற  மங்கையாய்
எப்பவும் தன்னம்பிக்கை சுமந்து வாழும் நானும்
இப்புவியின் புதுமைப் பெண்தான்!
.
அடுப்பங்கரை புகைக் கரியை
தடுப்புச் சுவராக்கி
தடுத்து வைக்கும் மூடர்களின் வலையறுத்து
விடுதலை பருகும் வீரப் பட்சி நானும்
நடுநிலை தவறா புதுமைப் பெண்தான்!
.
ஆணாதிக்க அகந்தைக்குள்
வன்முறை கோர்க்கும் கயவர்களை
கொன்றொழிக்கும் ஆயுதமாகவும்
நின்றடக்கும் அஹிம்சையுமாகவும் - சமுக
மன்றில் குரல்கொடுக்கும் நானுமோர்
பாரதி கண்ட புதுமைப்பெண்தான்!


- Jancy Caffoor-