பாரதி கண்ட புதுமைப் பெண்
சாத்தான்கள் வேத மோத
சாத்திரங்களும் கோத்திரங்களும் போர்வை விரிக்க
கொத்தடிமைகளாய் பெண்டுகளை
கொத்திச் செல்லும் வல்லுாறுக்களுக்கு
சத்தமிட்டு கற்றுக் கொடுக்கும் நானும்
நித்திலம் சுமக்கும் புதுமைப் பெண்தான்!
.
களவாய் மேகங்கள் மறைத்தும்
உலா வரும் நிலவாய்....
பாறை மோதியும் பக்குவமாய் நௌிந்தோடும்
சிற்றாற்று நீராய்....
சளைக்க மாட்டேன் அற்பர்களை வேரறுக்க - நானும்
களையறுக்கும் புதுமைப் பெண்தான்!
.
எப்படியும் வாழ்ந்திடலாம் மாக்கள் - ஆனால்
இப்படித்தான் வாழ்க்கையென கோடு கிழித்து
தப்பில்லா வழி காட்டும் பாதைகளில்
அப்பிக் கிடக்கின்ற மங்கையாய்
எப்பவும் தன்னம்பிக்கை சுமந்து வாழும் நானும்
இப்புவியின் புதுமைப் பெண்தான்!
.
அடுப்பங்கரை புகைக் கரியை
தடுப்புச் சுவராக்கி
தடுத்து வைக்கும் மூடர்களின் வலையறுத்து
விடுதலை பருகும் வீரப் பட்சி நானும்
நடுநிலை தவறா புதுமைப் பெண்தான்!
.
ஆணாதிக்க அகந்தைக்குள்
வன்முறை கோர்க்கும் கயவர்களை
கொன்றொழிக்கும் ஆயுதமாகவும்
நின்றடக்கும் அஹிம்சையுமாகவும் - சமுக
மன்றில் குரல்கொடுக்கும் நானுமோர்
பாரதி கண்ட புதுமைப்பெண்தான்!
- Jancy Caffoor-
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!