About Me

2019/06/16

யாழ் நினைவுகள்




யாழ்ப்பாணம் 
1990 ஆம்  ஆண்டுக்கு முன்னர் நாம் பிறந்த ஒரு தேசம். வாழ்விடம். பிறப்பிடம் தான். ஆனால் இடப்பெயர்வின் பின்னர் வேறு ஊர்களில் தங்கி இருக்கும் போதுதான் சொந்த ஊரின், வீட்டின் வாசம்  புரிந்தது. அதன் ஏக்கம் நெஞ்சில் நிறைந்து ஆழமான மனத் தாக்கமாய் உள் நுழைந்தது. இழப்பின் போதுதானே அதன் அருமை புரியும். அந்த வகையில் எம் சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போது சின்ன வயது நினைவுகள் மெல்ல மெல்ல அதிர்ந்து கண்கள் வழியே கண்ணீரை வெளித் தள்ளும்.

பிள்ளைப் பருவம் என்பது பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையிலான பருவமாகும். இப்பருவம் வாழ்வின் ஆரம்ப நிலை பலவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மனதை நிறைக்கும் பருவம். அனுபவங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பருவம். பயம் பாதி, தைரியம் பாதி என   நம்ம நாமே நிரப்பிக் கொள்ளும் பருவம். வாழ்க்கை தத்துவங்களை புரிந்து கொள்ளாமலே நமக்கென சில கோலங்களை நாமே வகுத்து அணி வகுக்கும் காலம்.  குடும்பமே வலிமையான உறவாக நம்மை வட்டமிடும். கஷ்டம், நஷ்டம் மனதுக்கு புரிவதில்லை. கிடைக்கும் சிறு காசு கூட கற்பனை  மாளிகையின் வண்ணக் கோலம்கள்தான். சுதந்திரமான காற்றின் அசைவுகளில் வாழ்நாட்கள் நகரும் அழகிய பருவம்.

அந்த பருவ அசைவுகள் யாழ்பாணத்து தெருக்களில் என்னை பதித்த நினைவுகளை மெல்ல அசை போடுறேன்.

அப்போது நான் 4 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலம். சைக்கிள் பழகும் ஆசை ஏற்படவே உம்மாவிடம் மெல்ல ஆசைகளை அவிழ்த்தேன். பக்கத்தில் லுகுமான் காக்காவின் சைக்கிள் கடை. ஒரு மணித்தியாலத்திற்கு குறித்த சில்லறைகள் வாடகையாகக் கொடுக்க வேண்டும். பக்கத்துக்கு வீட்டு நண்பிகள் புடை சூழ சைக்கிள் பயிற்சி  தினமும் ஆரம்பமானது.

சில மாதங்கள் நகர்ந்தன.

உம்மாவின் கோரிக்கைக்கேற்ப வாப்பா எனக்கென சிறு சைக்கிள் வாங்கித் தந்தார். இப்போது வாப்பாவின் மேற்பார்வையில் சைக்கிளோட்டம் ஆரம்பமானது. வாப்பா முன்னே செல்ல, நான் பின்னே பயத்துடன் ஊர்ந்து கொண்டிருந்தேன்.

அது ஓட்டுமடச் சந்தி கடந்த அராலி வீதி.

அப்போது முதலாம் குறுக்குத் தெரு பொம்மைவெளியில் வீடுகள் பெரிதாக இல்லை. ஆங்காங்கே  குடிசைகள்.  வீதிக்கும், குறுக்கு நிலத்துக்கும் இடையில் பெரிய பள்ளம்.

ஈருருளி நகர்ந்து கொண்டிருக்கும் போது என் பின்னால் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பயத்தில் கைகள் நடுங்க, ஈருருளியை பள்ளத்துக்குள் வீழ்த்தினேன். 

"உம்மா"

மெல்ல முனகலுடன் எழும்ப  முயற்சித்தேன். "ம்ம் ஹும்" முடியவில்லை. வாப்பாவும் பள்ளத்துக்குள் இறங்கி  என்னை தூக்கி விட்டார். அந்தக்கணம் பாதி வெட்கம், மீதி வேதனை.

அன்று எனக்கேற்பட்ட அடி மெல்ல என் முயற்சிகளுக்கு  பலமானது. இன்று நான் லாகவமாக உந்துருளியை செலுத்தும் போதெல்லாம் அந்த நினைவுகள் மெல்ல என்னை உலுக்கி செல்கின்றது. வீழ்கின்ற ஒவ்வொரு அடியும், அவமானமும் நம்மை தூக்கி விடும் தூண்கள்தான்! 
 

- Jancy Caffoor -
  16.06.2019





தனி மரம்

Image result for divorce

பெண் இப்புவியில் கருக்கொள்ளும் போதே அவளை சூழ இருளும் கவ்வத் தொடங்குகிறது போலும்1 பெண் எனும் அழகிய உருக்குள்ளே சோகங்களும் மையம் கொள்ளத் தொடங்குகிறது. அவளுக்குள்ளே உறைந்து கொண்டிருக்கும் கனவுகள், எதிர்பார்ப்புகளை காலம் "திருமணம்" எனும் பெயரால் விகாரப்படுத்தி விடுகின்றது. 

திருமணம் ஒரு பெண்ணை முழுமைப்படுத்துகிறது. அவள் தன் மனதில் படிய வைத்திருக்கும் ஆசைகள் அரங்கேற்றும் இடமாக அந்த மணவாழ்க்கையை கருதுகிறாள். அவள் உணர்வுகளோடு ஒன்றித்துப் போகும் கணவனை மனம் தேடுகிறது. தன் குடும்பமே அவள் உலகமாக உரு எடுக்க, தன் உணர்வுகளை குடும்பத்துக்கே அர்ப்பணித்து வாழ்கிறாள். அந்த திருமணம் அவள் பெற்றோர் உடன்பிறப்புகள்,  உறவினர்கள், நண்பர்கள் என பல உறவுகளையும் பிரித்து, கணவன் எனும் கயிற்றை பலமாகப் பற்ற அவளுக்கு கற்றுக் கொடுக்கிறது. 

வருடங்கள் அவள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர அவளுக்கென்றே அவள் இரத்தத்தோடு  உறவாடும் பிள்ளைகள் சொந்தமாகிறார்கள். 

தனிமரம் அவள் கிளை விட்டு தோப்பாகிறாள். 

சில வருடங்கள் ஓடிச்சென்றது விதி சதி செய்கிறது!

மருமகளின் உணர்வுகளை புரிந்து மகளாக ஏற்றுக் கொள்ளாத மாமியார், மதினிமார் அவள் மீது வன்மம் வளர்த்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால் கணவன், மனைவிக்கிடையில் மனக்கசப்பு உருவானது. அவர்களின் உறவுக்குள் மௌனம் பிசைந்து கொண்டது. ஒரு வீட்டுக்குள் வாழும் பறவைகள் உடலாலும், மனதாலும் தொலைவாகினர். அந்த வாழ்வு வெறும் சம்பிரதாயமாக மாறியது. அவள் ஏதோ வாழ்ந்தாள். அவள் பிள்ளைகள் மீது உயிரை போர்வையாக்கி மகிழ்ந்தாள். தன் குடும்ப மகிழ்வுக்காக அவள் சுயநலம் களைந்து ஒடுங்கிக் கொண்டாள்!

" பெண் என்றால் பேயும்  இறங்கும் "  என்பார்கள்.  

ஆனால்!

இந்த ஆணாதிக்க யுகத்தில் அவளுக்கென்று வெறும் போராட்டங்களே தரித்து நிற்கின்றன.   காற்றாகி போகும் கானல்கள் அவளுக்குள் தீயாய்  உறைந்து விடுகிறது.  நிம்மதி தேடும் வழிப்பயணத்தில் அவள் பதிக்கும் சுவடுகள் எல்லாம் கலியாகி  உலர்ந்து விடுகிறது. திருமணம் எனும் உணர்வுமிக்க புரிந்துணர்வு வெறும் சடங்காகிப் போகும் போது பெண்ணின் வாழ்வும் கேலியாய்,  கேள்வியாய் வீணாகிப் போய் விடுகின்றது.
   
நம்பிக்கை தந்து வாழ்வை பகிர்ந்த கணவன் வேறு பெண்ணை நாடும் பறவையாகிறான். அவள் மனநிலை இறுக்கமடைகிறது. தற்கொலை எண்ணம் தீயாய் அவளை சூழ்ந்து மனதை அல்லல்படுத்துகிறது.  தன்னை கட்டுப்படுத்த, தன் பிள்ளைகளுக்கான இருப்பை தக்க வைக்க அந்த சூழலை விட்டு சில காலம் வெளியேற நினைக்கிறாள்.  உணர்வுகளை நேசிக்காத  அந்த மனிதாபிமானமற்ற மனிதனிடமிருந்து, தன் பிள்ளைகளிடமிருந்து  யாருமறியாமல்  பிரிந்து தாய் வீடு செல்கிறாள்.  பிள்ளைகள் அவனுடன் இருந்தால் அவன் தன் அடுத்த மனைவியை தேடிச் செல்லமாட்டான்  எனும் நப்பாசை அவளுக்குள்!

சில காலம் சென்றதும் 

தன் கொந்தளிக்கும் மனதை அடக்கி மீள வீட்டிட்குச் செல்கிறாள்.  அவள் கணவன் அவள் குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கவில்லை.  பிள்ளைகள் அந்த சிலகாலமும் தகப்பனால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் போலும் ! தாய் மனநிலையை புரிந்து கொள்ளாமல் வெறுப்பை கக்கினார்கள்.  

அவள்  பிள்ளைகள் கணவனால் பிரிக்கப்படுகின்றார்கள். பிரிக்கப்பட்ட போது பெத்த மனம் கண்ணீரால் தன்னை கழுவிக் கொண்டது. 

இன்று விவாகரத்துக்காக    விண்ணப்பித்துக் காத்திருக்கும் அவள் மனம்!

போராட்டக் கலவை. கணவனால் வேறாக்கி கொண்டு செல்லப்பட்ட அவள் குழந்தைகள் தாய்ப்பாசம் மறந்து இன்று கணவனின் மனைவியான சிற்றன்னையுடன் வாழும்  பிள்ளைகளாக மாறி விட்டார்கள் . 

ஏன் ?

தாயை  மறக்கும் படி கணவன் மிரட்டினானா அல்லது கணவன் ஈனச் செயல் தாங்காது அவள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தன் தாய் வீடு சென்றதா?  

அவள் இன்று தனி மரம்!
வாழ்வோடு போராடும் தனி மரம்!!
வாழ்வு தரிக்கப்பட்ட சோக மனம்!!!

அவளுக்கு அவள் தெரிவு செய்த இந்த திருமண வாழ்வு பொய்த்து போனதே!

இது யார் குற்றம்? 

அவனைத் தெரிவு செய்த அவள் குற்றமா அல்லது இறைவன் விட்ட வழியா?

அவள் துன்பத்துக்கு ஒருநாள் முடிவு வரும் அதுவரை அவள் வாழ்வு காலத்தின் கையில் புதிர்தான்!
கலங்காதே உன் துன்பம் விரைவில் தீரும்!!   பிரார்த்தனைகள்!!!

- Jancy Caffoor-
    16.06.2019


Image result for life

வாப்பா



வாப்பா!

இன்னும் உச்சரிக்கிறேன்
உங்கள் பெயரை
என் பெயரோடு !

உங்கள் கரம் பற்றி திரிந்த பயணங்கள்தான்
இப்போதும்   
என் அடையாளமாகின!

வாப்பா!
உங்கள்   அருகாமையில்
தைரியம் முளைத்தது  எனக்குள்!

நிரப்பினேன் என்னை
நீங்கள் கற்றுத் தந்த அனுபவங்களால்
தினமும்!

வாப்பா
தூரிகைகளுக்கு உயிர் கொடுத்த
ஓவியர் நீங்கள் !

வாப்பா!
உங்கள்  அழகான கையெழுத்தும் மொழிப் புலமையும்
நான் வியந்த கிரீடங்கள்!

தொலைவாகி போன
உங்களை இன்னும் தேடுகிறேன்
நிழல்கள் எல்லாம் உங்கள் முகமாக!

தீ வீசும் உஷ்ணத்தில் இன்றும்
நீராய்  வழிகின்றன
உங்கள் வார்த்தைகள்! 

உங்கள் நினைவுகள் இன்னும்
பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
என் வெறுமை மனதில்!

உங்களை
நான் புரிந்து கொண்ட போது
என்னை பிரிந்தீர்கள் வாப்பா!

உங்கள் மரணம் கூட
என் அருகாமையில்!
விழி நீர்  நிரப்புகிறேன் இன்று வரை!

ஓய்ந்து போன உங்கள் சுவாசத்தில்
இன்னும்
என் நினைவுகள்  கலந்திருக்கு!

வாப்பா !
பிரார்த்தனை குடை பிடிக்கிறேன்
உங்கள் ஆன்மாவின்  சுவனத்திக்காய்!

மறைந்தும் மறையாத உங்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள் வாப்பா 16.06.2019
 


- Jancy Caffoor -

மௌனமே சிறந்த தேர்வு



வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு நகர்விலும்  நமது காலடியில் பலவித அனுபவங்கள். அனுபவங்களை உள்வாங்கியபடி நாம் பயணிக்கும் போது சூழ்நிலைகளின் தாக்கத்திலும் உள் வாங்கப்படுகிறோம். எண்ணங்களை நாம் உருவாக்கி அதனை செயற்படுத்தி வாழ முயற்சிக்கிறோம்.   ஆனால் நாம் நினைத்த படி வாழ்க்கை அமையாத போது மனதிலும் அமைதி இன்மை குடி கொள்கிறது. அர்த்தமற்றதாக தோன்றும் வாழ்வில் துன்பங்களின் ஆதிக்கம் அதிகமாகிறது. வாழும் ஒவ்வொரு நொடியும் பெரும் சுமையாக மாறுகிறது. நாம் நம்பிக்கை வைத்த அனைத்துமே மாயமாக மாறி மனதை அங்கலாய்க்கிறது. உலக உருண்டையில் சுழலும் ஒவ்வொரு துளிகளிலும் நமக்கான வெறுப்பு மேலோங்குகிறது. நயம் தரும் வாழ்வு காயம் தரும் நகர்வாக மாற ஆரம்பிக்கிறது. புரிந்துணர்வில்லாத மனிதர்களின் சொல் , செயல்கள் புயலாக மாறி தாக்கும் போது வார்த்தைகள் நாவுக்குள் ஒடுங்கி மௌனமே சிறந்த தேர்வாக   நமக்குள் அங்கீகரிக்கப்படுகிறது .

Related image

- Jancy Caffoor-
   15.06.2019