About Me

2019/07/12

பாடசாலை முரண்பாட்டு முகாமைத்துவம்

முகாமைத்துவ செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது பாடசாலையில் எதிர் கொள்ளும் முரண்பாடுகள் 
---------------------------------------------------------------------------------------------------

Image result for முரண்பாடு
ஏதோ ஒரு இலக்கினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நம்  வாழ்வில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் நினைவில் நின்று விடுவார்கள். சிலர் வெறுப்போடு மறைந்து போவார்கள். வெறுப்போடு  மறையும்  காரணங்களில் ஒன்று முரண்பாடு. 

"வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்."

முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும். சுருங்கக் கூறின் வேலையிடத்தில் தனது கடமைக்கும், மனசாட்சிக்கும் இடையிலான எதிர்ப்பு நிலையை இது அடையாளப்படுத்துகின்றது.

முரண்பாடுகளுக்கான சில பண்புகள் 
  • குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.
  • குறை கூறல்.
  • தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல். 
  • ஒதுக்கி வைத்தல். 
  • தனித்திருத்தல். 
  • பேசுவதை தவிர்த்துக் கொள்ளல். 
  • கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல். 
முரண்பாட்டுக்கான காரணங்கள் 
  • பக்கச்சார்பு. 
  • தனிநபர் ஆளுமை.
  • புலனுணர்வில் வேறுபாடு. 
  • வேறுபட்ட இலக்கு. 
  • வரையறுக்கப்பட்ட வளம். 
  • தவறான தொடர்பாடல். 
  • அந்தஸ்து பேணப்படல். 
  • பகுதியாக்கல். 
  • தெளிவற்ற பொறுப்புக்கள். 
  • ஆளுமை மோதல். 
  • அதிகப்படியான வேலைச்சுமை. 
  • வேறுபாடான எண்ணக்கருக்கள். 
முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள் 
  • புதிய கருத்துக்கள் உருவாகும். 
  • இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. 
  • தேவைகளை நிறைவு செய்கிறது. 
  • நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது. 
  • பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும். 
  • தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி. 
  • உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும். 
  • வித்தியாசமான அனுபவங்களைத் தரும். 
  • புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 
  • உண்மையான பிரச்சனை வெளிப்படும்.
  • குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது. 
  • இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு. 
  • புரிந்துணர்வு வளர்ச்சி. 
முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள் 
  • சக்தி நேரம் வீணாகும். 
  • தாமத முடிவு. 
  • ஆரோக்கியமற்ற சமூகம். 
  • எரிச்சலூட்டுதல். 
  • பின்தங்கிய நிலை. 
  • குழுவினர் விலகுதல். 
  • குறிக்கோளை அடைய முடியாது. 
முரண்பாட்டின் வகைகள் 
  • கட்டமைப்பு ரீதியிலானது. 
  • அமைப்பு ரீதியிலானது. 
கட்டமைப்பு ரீதியிலானது.
 அதிபர்  -  ஆசிரியர் தொடர்பு (செங்குத்து வடிவம் )
-----------------------------------------------
  • தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல். 
  • தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
ஆசிரியர்  -  ஆசிரியர் தொடர்பு (கிடை மட்டம் )
-----------------------------------------------
  • ஆசிரியர் ஒருவர் அதிபரின் வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல். 
ஆசிரியர்  -  மாணவர் தொடர்பு
------------------------------------------------
  • குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
அதிபர்  -  பிற பாடசாலை அதிபர் 
------------------------------------------------------
  • ஒரே வளவுக்குள் இரு பாடசாலைகள் இயங்குதல்.
நிரந்தரக் கட்டிடம் உள்ள அதிபர்,  அதே பாடசாலையில் தற்கலிகமாக இயங்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்குதல்

 அம் முரண்பாடுகளை வினைத்திறனாக தீர்த்துக் கொள்வதற்கு தங்கள் கடைபிடிக்கும் படிமுறைகளை விளக்குக 
---------------------------------------------------------------------------------------
முரண்பாடுகள் முடிவடைவதில் நன்கு அடிப்படை விதங்கள் உள்ளன. 
  • வெற்றி    -  தோல்வி 
  • தோல்வி  -  வெற்றி 
  • தோல்வி   - தோல்வி 
  • வெற்றி   -  வெற்றி 
இவற்றுள் வெற்றி  -  வெற்றித் தீர்வு முறை மிகச் சிறந்ததாகும்.

ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக  கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -
  • தவிர்த்தல். 
  • தீர்வொன்றை விதித்தல். 
  • மிருதுவாக்குதல். 
  • ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக்  கொள்ளல். 
  • பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.
  • கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம். 
  • பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும். 
  • மத்தியஸ்தம். 
  • பிரச்சினை தீர்த்தல். 
  • ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல். 
தீர்வு காணும் உத்திகளுக்கான அணுகுமுறைகள் 
  1. பகுப்பாய்வு அணுகுமுறை 
  2. தொகுப்பு அணுகுமுறை 
இவற்றுள்
1. பகுப்பாய்வு அணுகுமுறை மூலமாக பிரச்சினை சிறு, சிறு கூறுகளாகக்  பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறுகளும் தீர்வு காணுதல் ஆகும். இதன் மூலம் சிறந்த தீர்வு காண முரண்பாட்டுப் படம், மாற்று வழிகளைத் தோற்றுவித்தல் உதவுகின்றது. விடய ஆய்வின் மூலம் மாற்றுவழி தீர்வு உதவும் .

2. கோட்பாட்டு முறை மூலமாக உடன்பாடு காணச் செய்தல் .இதன் மூலமாக தத்துவ ரீதியில் அதிபருடன் ஆசிரியரையும் இணங்கச் செய்தல்.

இதன் அடிப்படையில் மேற்குறித்த பிரச்சினைகள் பகுப்பாய்வு செய்யப்படும் 
மேற்கூறப்பட்ட  முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக தெரிவு செய்யும் நுட்பம் பிரச்சினை தீர்த்தல் ஆகும். பிரச்சினை தீர்த்தல் நுட்பத்தின் படி முறைகள் ஆவன:- 

1. பிரச்சினை 
  1. தவறு எங்கே உள்ளது?  அவை யாவை? 
  2. காணக்கூடிய பண்புகள் யாவை? 
  3. அவற்றினால்  நட்டம்,  தீங்கு என்பவற்றை ஏற்படுத்துபவை யாவை? 
இதன் அடிப்படையில்   மேற்காட்டப்பட்டுள்ள  பிரச்சினை பகுத்து ஆராயப்படும். அத்துடன் சம்பந்தப்படும் பிரச்சினைகள் தொடர்பாக பகுப்பாய்வு அணுகுமுறையின் முரண்பாட்டுப்படம் தயாரிக்கப்பட்டு காணப்பட்ட  பிரச்சினைகளுக்கு பெயர்கள்  இடப்படும்.

தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல்.
பெயர் இடல்  -அதிக லீவு  பெறல் 

தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
பெயர் இடல் - தாமத லீவு பெறல் 

ஆசிரியர் ஒருவர் அதிபரின் வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல்.
பெயர் இடல் - தன்னிச்சையான தீர்மானம்.

குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
பெயர் இடல் - தண்டனை பெறல். 

ஒரே வளவுக்குள் இரு பாடசாலைகள் இயங்குதல்.
நிரந்தரக் கட்டிடம் உள்ள அதிபர்,  அதே பாடசாலையில் தற்கலிகமாக இயங்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்குதல்
பெயர் இடல் -  ஒத்துழைக்காமை. 

2. பகுப்பாய்வு 
  1. பண்புகளை வகைப்படுத்தி பார்த்தல். 
  2. காரணங்களை இனம் காணுதல் 
  3. குறைபாடுகளை அவதானித்தல் 
  4. பிரச்சினைகளின் தீர்வுக்கு தடையாக இருப்பவற்றை கண்டறிதல் 
 இவ்வாறே முரண்பாட்டுப்படம் அடிப்படையில் முரண்பாட்டுடன் தொடர்புள்ளவர்களை இனம் காணுதல்  வேண்டும். 

சம்பவம் 1

தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல்.
அதிபர்  ,   ஆசிரியர் 

சம்பவம் 2
தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
அதிபர்  ,   ஆசிரியர் 

சம்பவம் 3
குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
ஆசிரியர்,    மாணவர் 

சம்பவம் 4
ஆசிரியர் ஒருவர் அதிபரின் (எனது) வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல். 
ஆசிரியர் , ஆசிரியர் 


3. பிரவேசம் 

தீர்வுகளை பிரயோகிக்கக்கூடிய உபாயங்கள்  யாவை ?

தீர்வுக்கு வழி  காட்டும் விதிகள் யாவை? 

தீர்க்கக் கூடிய வழி பற்றிய விரிவான கருத்தை எடுத்துக் காட்டுதல். 


அத்துடன் முரண்பாட்டுப்படம் அடிப்படையில் தரப்பினரின் தேவைகளையும், ஐயப்பாடுகளையும் இனம்கண்டு பட்டியல்படுத்த வேண்டும். 

சம்பவம் 1
தேவைகள் : - மனிதத் தேவை, அனுகூலம், சுய கெளரவம் , தொடர்பாடல் 

சம்பவம் 2
தேவைகள் : - பாதிப்பு அடையாமை, தொடர்பாடல்  

சம்பவம் 3
தேவைகள் : - பாதிப்பு அடையாமை , மனிதத் தேவை, உணர்ச்சி கட்டுப்பாடு  தொடர்பாடல் 

சம்பவம் 4
தேவைகள் : - சிறப்பான மனிதத் தொடர்பு , தொடர்பாடல் 

அவர்களின் தேவைகளை அவர்களிடம் நேரடியாகவோ அன்றி நண்பர்கள் மூலமாகவோ அன்றி நமது அவதானத்தின் அடிப்படையிலோ கண்டறியலாம். 

இவ்வாறாக பிரச்சினை தொடர்பாக பகுப்பாய்வு செய்து தகவல்களை திரட்டிக் கொள்ளுதல் வேண்டும். 

பின்னர் அதிபர் குறித்த தரப்பினருடன் சிறந்த முறையில் தொடர்பாடலைப் பேண வேண்டும்

உதாரணம்: - 
  • "இவ்வாறான செயல்கள் பாடசாலையின் பெயருக்கு களங்கம் தரும்" என்று பாடசாலை குறிக்கோளினை நிறைவுபடுத்திக்க கொள்ளலாம். இதனால் அவர்கள் சுமுகமாகலாம்.
  • சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்வுக்கு வழி தேடலாம்.
  • அதிபர் நிறுவனம் தொடர்பான தகவல்கள் சுற்று நிருபங்கள் கருத்துக்களை சகலரும் அறியும் விதத்தில் பரிமாறலாம்.
  • சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தலாம். 
  • ஆளணியினரின் திறன்கள், குணப்போக்குகளை கண்டறிந்து அதற்கேற்ப பொறுப்புகளை ஒப்படைத்தல். அத்துடன் அவர்கள் பாடசாலைக்கு வரும் விதம், குடும்ப தன்மை, தனியாள் வேறுபாடுகள் என்பவற்றையும் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு பொறுப்புகளை ஒப்படைக்கலாம். 
அவ்வாறே
  • பாடசாலை சமூகத்துடன் மன ஒருமைப்பாட்டுடன் சிறந்த செவிமடுத்தல் திறனை வளர்க்க வேண்டும் இதன் மூலம் சிறந்த மனிதத் தொடர்பு கட்டி எழுப்பப்படுகிறது.
  • அவ்வாறே செவிமடுத்த விடயங்களை அன்புடன் மீளக் கூறும் போது முரண்பாடுகள் மறைந்து போக்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
  • குறித்த ஆசிரியர், பிற பாடசாலை அதிபர்  என்போரின்  குறைகளை அவர்களே உணரச் செய்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருவர் செய்யும் குறைகளை பொதுப்படையாக கூறும் போதும் அவர் தனது குறைகள் தொடர்பாக தன்னை மதிப்பிட முடியும்.
  • அவ்வாறே அவர் தவறுகளை மனம் நோகாமல் மெல்லச் சுட்டிக் காட்டலாம்.  
  • நேரடியாக  ஆசிரியர்களை சுட்டிக் காட்டி (நேர காலத்துடன் பாடசாலை வரும் ஆசிரியர்கள்) நேரடித் துலங்கள் காட்டலாம்.
  • முரண்பாடுடன் சம்பந்தப் பட்டவர்களை பேச்சு வார்த்தைக்கு வரவழைத்து தீர்வு காணச் செய்யலாம் (சம்பவம் 3, 4 ) 
 சம்பவம் 4
அதிபர்  மத்தியஸ்தம் வகித்து, சிரேஷ்ட மற்றும் தொழில் அனுபவங்கள் கல்வித் தகைமைகள் என்பவற்றை அடிப்டையாகக் கொண்டு பிரச்சினையில் சமரசமும், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் உருவாக்கலாம். 

இவ்வாறாக முரண்பாட்டுக்குள் உள்ளானோர் பின்னணியினை ஆராய்ந்து, அதிகாரத் தோரணை இன்றி அவர்களின் நம்பிக்கையினை கட்டியெழுப்பி தாம் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய, அவர்களாகவே ஒரு முடிவு காணக்கூடிய தக்க தீர்வை கொடுக்கும் போது அதிபர் எனும் வகையில் என் நிறுவனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதுமாத்திரமின்றி முரண்பட்டோர் கருத்துக்களை "நேருக்கு நேர் நோக்குதல்" போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம்.

இவற்றுடன் சம்பந்தப்பட்டோரின் சிந்தையை கிளறச் செய்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன்வைத்து அதன் மூலமாக நியாயமான தீர்வினை கொடுப்பதுடன்  நிறுவனத்தில்  ஏற்படும் முரண்பாடுகளை சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம்.

- Ms.A.C.Jancy-
   SLPS -3
J/Kadeeja Ladies College,
Jaffna


2019/06/28

முரண்பாடுகள்

Image result for முரண்பாடுகள்

பன்மைச் சூழலில் பல்வேறு இனங்கள் வாழும் போது அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் பாரிய அழுத்தம் தரக்கடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லெண்ணம், ஒற்றுமை, நம்பிக்கை குறைவடையும் போது முரண்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறுகின்றன. பாதிக்கப்படும் சமூகம் அடுத்த சமூகங்களின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத நிகழ்வாகியுள்ளது. ஒருவரின் பலம், மற்றையவரின் பலகீனத்தை தீர்மானிக்கிறது. பாதிக்கப்படும் சமூகத்தின் கஷ்டங்களும், நஷ்டங்களும், துன்பங்களும் மற்றைய சமூகத்தின் ரசிப்பாகி போய் விடுகிறது. சந்தேகங்கள் தொடரும் போது சந்தோசங்கள் ஓடிப் போய் விடுகிறது. 

அந்த வகையில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களும், சவால்களும் இன்னும் முற்றுப் பெறாத பனித் தூறல்களாகவே  உள்ளன. அப்பின்னனியில் இன்று (28.06.2019)  நான் சந்தித்த இந்த அனுபவத்தையும்  பதிவிடுகிறேன்.

பணம் வைப்பில் இடுவதற்காக ................ வங்கி சென்றேன். வழமை போலவே படிவங்களையும் நிரப்பியவாறு, கவுண்டரில் வரிசையாக நின்று கொண்டிருந்தேன்.  அப்போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தேடி வந்ததும்  எரிந்து விழுந்தார்.

"உங்களுக்கு தெரியாதா?  இங்கு கேமரா இருக்குது. தலையில் மூடி இருக்கும் சீலையைக்  கழட்டுங்கள்" என்றார்.

நான் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம்  எதுவும் கதைக்கவில்லை. "எய்தவர் யாரோ இருக்க அம்பை நோவானேன்". மனம்  கொதிநிலையில் வெந்து கொண்டிருந்தது. என் கோபத்தின் அலைவை நின்று கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்திடரிடம் வெளிப்படுத்தாமல், வரிசையில் இருந்து நகர்ந்தேன். என் கால்கள் வங்கி முகாமையாளர் அறையில் போய் நின்றன. அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைக்கும் வரை பொறுமையாய் காத்து நின்றேன். 

அவர் என்னை அழைத்ததும் உட்காரச் சொன்னார். என்னை அறிமுகப்படுத்தியவாறே நடந்ததைக் கூறி   முஸ்லீம் பெண்கள் வங்கிக்கு வரும் போது தலையில் முக்காடு போடக் கூடாதா Sir?  அப்படி ஏதும்  சுற்று நிருபம்  இருக்கின்றதா? என்றேன்.  மானேஜர் அதிர்ந்தவாறே, 

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்கு யார் சொன்னது?"

என்றவாறு அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தேடி வெளியே சென்றார். நானும் அந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினேன். வங்கி முகாமையாளர் அந்த ஆளைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த நபர் ரூமுக்கு வந்ததும் என் முன்னிலையில் நடந்ததை விசாரித்தார்.

 "அவ முகத்தை மூடியா  வந்திருக்கிறார். முகம் தெளிவாத் தெரியுதுதானே?  எத்தனை தடவை விளக்கி சொல்லியும் இப்படி இருக்கிறீர்.  இனி இப்படி செய்தால் உம்மை இங்கே வைத்திருக்க மாட்டேன்"

 என்று  சற்றுக் கடுமையாக நியாயத்தின் பக்கம் நின்று பேசினார். ஏசினார். முகாமையாளர் தொனி உயர்ந்ததும் பா.ஊ குரல் பணிந்தது.

"மன்னியுங்க  Sir"

 என்றவாறு பாதுகாப்பு ஊழியர் வங்கி முகாமையாளரிடம் மன்னிப்புக் கேட்டதும், மனேஜரோ "என்னிடம் சொல்லாமல் அவரிடம் கேளும்" என என்னைச் சுட்டிக் காட்டினார்.

 நானும்  அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கலாச்சாரம் பற்றியும் கொஞ்சம் சூடாக சற்றுக் கோபமாக கதைத்தேன். முகாமையாளர் எதுவும் சொல்லாமல் என் வார்த்தைகளை அங்கீகரித்துக் கொண்டிருந்தார்.

"இது எனக்காக மட்டும் இல்லை. இங்கே வாற ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கட கலாச்சாரத்தை நாங்க அவமதிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.  நானும் இந்த ஊர்தானே?  துவேசம் காட்டாதீங்க."

பா.ஊ தலையை குனிந்து கொண்டிருந்தார். முகாமையாளர் முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக நன்கு விளக்கியும் கூட, கீழ்நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத நிலையே இந்த சம்பவத்தின் பின்னனி !

என் முறைப்பாட்டுக்கு உடன் தீர்வு தந்த அந்த  மேலதிகாரி மீது எனக்கு மதிப்பு ஏற்படவே, இதனை மேலும் பிரச்சினை ஆக்காமல் அந்த தடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். இங்கு வாழும் என் சமூகப் பெண்களுக்காக  நானும் ஏதோ சிறு துளியாவது செய்திருக்கிறேன் எனும் மன நிறைவு எனக்குள்!

- ஜன்ஸி கபூர் -
   28.06.2019

2019/06/25

அவசர வாழ்க்கை

அழகான வாழ்க்கை இறைவனால் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அந்த வாழ்க்கையைப் பெறுமதியுள்ளதாக மாற்றுவது நமது கடமையாகிறது. கிடைத்த வாழ்வை வசந்தமாக்குவதும், பாழாக்குவதும் நாம் வாழ்க்கையை அணுகும் விதத்திலும், செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.   வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் பல தரிப்பிடங்களை நம் குணங்களால் அடையாளம் காண்கிறோம் 

மனித மனங்கள் பல்வேறு குணங்களின் சேர்க்கை மையம். அக்குணங்களில் ஒன்றுதான் அவசரம். ஆனாலும் மனிதனின் விரும்பாத, தகாத குணம்தான் இந்த அவசரம்.

"மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான்" 
அல் குர்ஆனில்  கூறப்பட்டுள்ள இவ் வசனம் அவசரத்தை வெறுத்து விடுகின்ற இஸ்லாம் நன்மையான காரியங்களை செய்யச் சொல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு"
"ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது"
 இப் பழமொழிகள்  அவசரத்தின்   பண்பை கோடிட்டுக் காட்டுகின்றது.   

இன்றைய நவீன உலகமானது ஒவ்வொரு நொடிகளில் மிக வேகமான நகர்வுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதராகிய நாம் நமது தேவைகளை தக்க வைக்க அவசரமாக இயங்குகிறோம். அவசரம் என்பது விவேகமானது அல்ல. அது நமது சிந்தனையை மிக வேகமாக  இயக்கி, சறுக்கி விடுகிறது. இங்கே "கீழே விழுதல்" என்பது நமது பலமான சக்திமிக்க எண்ணத்தில் இருந்து நாம் விலகி நிற்பதாகும். "அவசரமான குணம்" நமது வெற்றி வாய்ப்புக்களை பின்னோக்கி நகர்த்தி விடுகின்றது.

நம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காரியங்களும் இலக்கு நோக்கி நகரும். இலக்குகள் வெற்றி பெற்றால் சிறப்பான விளைவு எட்டப்படும். இந்த சிறப்பான காரியங்கள் தவறினை நோக்கி போவதற்கு அவசரம் காரணமாகின்றது.  அவசரம் மனித வாழ்வின் பெறுமதியான கணங்களை விழுங்கும் அரக்கன்.  நம் மிகச்சிறந்த சிந்தனைகளைக் கூட இவ் அவசரமான செயற்பாடுகள்   வீணாக்கி விடுகின்றன.

நமது பலகீனமான குணங்களில் அவசரமும் ஒன்றே! அவசர புத்திக்காரன் தனது செயல்களை நிதானத்துடன் செய்வதில்லை. அவனது பார்வையில் பதற்றம் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது. அவசரம் எனும் இயற்கைக்  குணத்தை மாற்றுதல் என்பது கல்லில் நாருரிப்பது  போல்தான். 

தவறுகளின் வாசட் படியாகவும் இந்த அவசரத்தை கருதலாம். நாம் நமது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யும் போது நேரம் போதிய அவகாசம் தரும். அக்காரியங்கள் தொடர்பாக நன்கு சிந்திக்க முடியும். நல்ல விடயங்களின் பால் மனம் நகரும். பக்குவம் நம் வசமாகும். நேர்ச்சிந்தனை வயப்பட்ட நிலையில் நமக்கு சாதகமான விடயங்களை மட்டும் நாம் நினைக்க முடியும்.  
மறுதலையாக மனம் ஒன்றாமலோ அல்லது கடைசி நேரத்திலோ காரியங்களை அவசர அவசரமாகச் செய்யும் போது அவை சிதறி விடுகின்றன. 

சிலர் வார்த்தைகளையும் அவசர, அவசரமா வெளிப்படுத்துவார்கள். இவ்வாறாக கருத்துச்செறிவில்லாத, பெறுமதி அற்ற வார்த்தைகள் வெளிப்பட்டு, அவை பிறரிடத்தில் நமது பெறுமதியைக் குறைத்து விடுகின்றன. அதுமாத்திரமின்றி அடுத்தவருடனான முரண்பாடுகளையும், கோபதாபங்களையும்  இயல்பாகவே ஏற்படுத்துகின்றன.

எனவே சூழ்நிலைகளை அனுசரித்து அவசரமின்றி, நேரத்தையும் செயல்களையும் திட்டமிட்டுச் செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது!

- Jancy Caffoor-
 25.06.2019 

2019/06/23

கனவு தேவதையே




நட்சத்திர கீறல்கள்
வீழ்ந்தன புன்னகையாய்!

புல் நுனி கழுவும்  பனியோ
தள்ளாடி வீழ்ந்தன  கன்னவோரம்!

வியர்வையின் ஈர வீரியம் கண்டு
அயர்ந்தன மேனி யிதழ்கள் துவண்டு!

வானவில்லின் சாயம் கரைந்து
வழிந்தது இடை நெருக்கும் மெல்லாடையாய்  !

நறுமணம் பூசும் தென்றல் கெஞ்சும்
சுவாசம் கொஞ்சிப் பேச!

இமையோரம் வெட்கிக் குனியும்
விழியின் சிறகடிப்பின் மோகம் கண்டு!

விரல் வருடும் ரேகை கழன்று
வரிகள் வரையும் உனை நினைந்து!

காதல் தேவதை யுனக்காய் என் தேசம்
காத்திருக்கும் ஏக்கங்கள் பல சூடி!