About Me

2019/06/25

அவசர வாழ்க்கை

அழகான வாழ்க்கை இறைவனால் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அந்த வாழ்க்கையைப் பெறுமதியுள்ளதாக மாற்றுவது நமது கடமையாகிறது. கிடைத்த வாழ்வை வசந்தமாக்குவதும், பாழாக்குவதும் நாம் வாழ்க்கையை அணுகும் விதத்திலும், செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.   வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் பல தரிப்பிடங்களை நம் குணங்களால் அடையாளம் காண்கிறோம் 

மனித மனங்கள் பல்வேறு குணங்களின் சேர்க்கை மையம். அக்குணங்களில் ஒன்றுதான் அவசரம். ஆனாலும் மனிதனின் விரும்பாத, தகாத குணம்தான் இந்த அவசரம்.

"மனிதன் அவசரக் குணத்துடன் படைக்கப்பட்டுள்ளான்" 
அல் குர்ஆனில்  கூறப்பட்டுள்ள இவ் வசனம் அவசரத்தை வெறுத்து விடுகின்ற இஸ்லாம் நன்மையான காரியங்களை செய்யச் சொல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு"
"ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது"
 இப் பழமொழிகள்  அவசரத்தின்   பண்பை கோடிட்டுக் காட்டுகின்றது.   

இன்றைய நவீன உலகமானது ஒவ்வொரு நொடிகளில் மிக வேகமான நகர்வுகளைக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதராகிய நாம் நமது தேவைகளை தக்க வைக்க அவசரமாக இயங்குகிறோம். அவசரம் என்பது விவேகமானது அல்ல. அது நமது சிந்தனையை மிக வேகமாக  இயக்கி, சறுக்கி விடுகிறது. இங்கே "கீழே விழுதல்" என்பது நமது பலமான சக்திமிக்க எண்ணத்தில் இருந்து நாம் விலகி நிற்பதாகும். "அவசரமான குணம்" நமது வெற்றி வாய்ப்புக்களை பின்னோக்கி நகர்த்தி விடுகின்றது.

நம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காரியங்களும் இலக்கு நோக்கி நகரும். இலக்குகள் வெற்றி பெற்றால் சிறப்பான விளைவு எட்டப்படும். இந்த சிறப்பான காரியங்கள் தவறினை நோக்கி போவதற்கு அவசரம் காரணமாகின்றது.  அவசரம் மனித வாழ்வின் பெறுமதியான கணங்களை விழுங்கும் அரக்கன்.  நம் மிகச்சிறந்த சிந்தனைகளைக் கூட இவ் அவசரமான செயற்பாடுகள்   வீணாக்கி விடுகின்றன.

நமது பலகீனமான குணங்களில் அவசரமும் ஒன்றே! அவசர புத்திக்காரன் தனது செயல்களை நிதானத்துடன் செய்வதில்லை. அவனது பார்வையில் பதற்றம் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது. அவசரம் எனும் இயற்கைக்  குணத்தை மாற்றுதல் என்பது கல்லில் நாருரிப்பது  போல்தான். 

தவறுகளின் வாசட் படியாகவும் இந்த அவசரத்தை கருதலாம். நாம் நமது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யும் போது நேரம் போதிய அவகாசம் தரும். அக்காரியங்கள் தொடர்பாக நன்கு சிந்திக்க முடியும். நல்ல விடயங்களின் பால் மனம் நகரும். பக்குவம் நம் வசமாகும். நேர்ச்சிந்தனை வயப்பட்ட நிலையில் நமக்கு சாதகமான விடயங்களை மட்டும் நாம் நினைக்க முடியும்.  
மறுதலையாக மனம் ஒன்றாமலோ அல்லது கடைசி நேரத்திலோ காரியங்களை அவசர அவசரமாகச் செய்யும் போது அவை சிதறி விடுகின்றன. 

சிலர் வார்த்தைகளையும் அவசர, அவசரமா வெளிப்படுத்துவார்கள். இவ்வாறாக கருத்துச்செறிவில்லாத, பெறுமதி அற்ற வார்த்தைகள் வெளிப்பட்டு, அவை பிறரிடத்தில் நமது பெறுமதியைக் குறைத்து விடுகின்றன. அதுமாத்திரமின்றி அடுத்தவருடனான முரண்பாடுகளையும், கோபதாபங்களையும்  இயல்பாகவே ஏற்படுத்துகின்றன.

எனவே சூழ்நிலைகளை அனுசரித்து அவசரமின்றி, நேரத்தையும் செயல்களையும் திட்டமிட்டுச் செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது!

- Jancy Caffoor-
 25.06.2019 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!