About Me

2020/07/18

நிலா முற்றம் கவி அரங்கம் -224

நிலா முற்றம் கவி அரங்கம் -224

தமிழ் வணக்கம்

என் உணர்வோடிசைந்து உணர்வுகளில் கலந்து அமிர்தமாய்ச் சுவைக்கும் அழகுத் தமிழுக்கு என் முதல் வணக்கம்

தலைமை வணக்கம்
கவியரங்கம் நிறுவனர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த அன்பு வணக்கங்கள். நடுநிலை தவறாத கவியரங்கத் தலைமைக்கும் என் இதயபூர்வ நன்றிகளை மகிழ்வுடன்; முன்வைக்கிறேன்.
அவை வணக்கம்
கவியரங்கில் வாதிட களம் நிற்கும் அவையோருக்கும் என் அன்பு வணக்கங்கள்;

தலைப்பு
மனதிற்கு இனிமை தருவது

துணைத் தலைப்பு
இயற்கையே

விழி இன்பம் அழகிய மொழி
விலகிடும் துன்பங்கள் இயற்கை வனப்பிலே
விண் தொடும் மேகக் கூட்டங்கள்
விருப்புடன் நனைத்திடும் நல் மழையாய்
விளைந்திடும் கனிகளும் நறுஞ் சுவையே

பழகிடும் தோழமையாய் இயற்கையும் மாறுகையில்
பாசத்தோடு தொட்டுச் செல்லும் தென்றலும்
பறந்தோடும் சோம்பலும் உற்சாகம் நமதாகும்
பசுஞ்சோலைகள் குடைகளாகி வனப்புக் காட்டுகையில்
பசியும் விட்டகன்றே மகிழ்வும் சுவையாகும்
பறவைகளின் சிறகடிப்பும் பார்க்கையில் பரவசமே

இயற்கையும் அரணாகும் புவியும் அழகாகும்
இரசனையான அனுபவங்களும் கூடிவரும் பாடங்களாய்
இலக்குகள் கற்றிடவே இங்கும் பயிற்சிகளுண்டே
இதயமும் லயித்தாடும் நீரூற்றின் குளிர்மையிலே
இன்னுயிரும் பண்பாடும் குயிலோசை ஒலிக்கையிலே
இரவின் கண்களிலே விருந்தாகும் விண்மீன்கள்

அலைகள் துடிக்கையிலே கலிகள் கரைந்தோடும்
அணைத்திடும் தென்றலுமே ஆருயிர் வருடிவிடும்
அல்லியும் முகங்காட்ட ஆனந்தம் வழிந்தோடும்
அற்புதக் காட்சிகளில் அனலும் குளிராகும்
அன்பின் உணர்வோங்க ரசிப்பும் சுகமாகும்
அகிலத்தின் இயக்கத்திலே அமைதியும் அருகாகும்

ராகங்கள் இசைபாட உந்துதல் இயற்கையே
ராத்திரி வான்நிலவும் ரசிப்பின் சொப்பனமே
ராஜாங்கப் பூமியிலே ரசனைகள் ஏராளம்
ரகஸியங்கள் அறிந்திடவே தேடல்களும் சுவையாகும்

காதலும் வசப்படும் இயற்கையின் இதயத்திலே
கருத்துக்கள் மலர்ந்திடுமே கற்பனையும் ஊற்றெடுக்கும்
கருணை பூமியிலே பதிக்கும் தடங்களெல்லாம்
கல்வெட்டாய் பதிவாகும் நினைவின் ஏட்டினிலே

வனப்பின் ஆட்சியினில் வாழ்க்கையும் வென்றிடுமே
வாழ்நாளும் போதாதே வசந்தத்தை ரசித்திடவே
இறைவனின் அற்புதமே கண் ரசிக்கும் காட்சிகளே
இயற்கையோடு வாழ்கையில் மனமே இனிதாகும்

நன்றி நவிலல்
வாய்ப்பளித்த குழுமத் தலைமைக்கும் கவியரங்கத் தலைமைக்கும் பங்கோடிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம்

ஜன்ஸி கபூர் - 18.07.2020
யாழ்ப்பாணம்





பரத நாட்டியம்

முகவழி பாவங்களும்/
கைவழி முத்திரைகளும்/
சலங்கை ஒலியினில் ஜதியாக/
அழகிய நடனமும் விருந்தாகும்/
 

நயன விழிகள் அசைகையில்/
நவரசங்கள் கண்டேன்/
இசையுடன் ஜதியும் இசைகையில்/         
சிற்பமாய் நின்றேன்/

ஜன்ஸி கபூர் 


வான் சிறப்பு


குறள் 11

வானின்றி உலகம் வழங்கி வருதலால்/
தானமிர்தம் என்றுணரற் பாற்று/
 

வான்மழையும் தடையின்றித் தொடர்ந்து பொழிவதால் 
வையகமும் நிலைத்தே வாழ்கிறது அழிவின்றி
அகிலத்தில் வாழும் உயிர்களின் நிலவுகையை
அமிழ்தமாகி காத்து நிற்கிறதே இம்மழையும்
 
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


மழை பருகி தளிர்க்கும் பயிர்களால்
மண்ணுலகமும் சிறந்தே உயிர்களும் வாழும்
தண்ணீராய் மாறி தாகமும் உடைக்கும்
உன்னத மழை உயிர்களைக்; காக்கும்

 
குறள் 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி

வான்மழையின் பொழிகை தடைபட்டுப் போனால்
கண்ணீராகும் கடலைச் சுற்றிய உலகும்
புண்ணாகி வருத்தும் கொடும் பசியால்
மண்ணுலகில் வாழும் உயிர்களும் இறக்கும்

ஜன்ஸி கபூர் 


2020/07/17

உனக்குள் உன்னையே தேடு


ஏழையின் அன்பு மனமே மகிழ்ந்திடு/
உழைக்கும் பாதைகளைத் தெரிந்து கொண்டால்/
உலகத்தின் அடையாளமாய் உயர்வாய் நீயும்/
உழைப்பின் பெறுமதியில்  நொருங்கும் வறுமையும்/
உனக்குள் உன்னையே நீயும் தேடு/
உனக்கும் உதவ காத்திருக்கிறதே மனிதம்/

ஜன்ஸி கபூர்  
  •