About Me

2021/04/12

வாழ்க்கைப் பாடங்கள்

 

உரசிச் செல்கின்ற நீரலைகள் இங்கு

உறவுகளின் பிணைப்புக்களை வருடுகின்றனவோ

தந்தை தாய் செல்லும் வழியில்

சிந்தை மகிழும் பாசச் சேய்கள்!


பெற்றவர் நிழலோடு பொருந்திடும் பண்பாடும்

பெற்றிடும் பாதுகாப்பும் ஈடில்லாத் துணைதானே

வாழ்வியல் அனுபவங்களை தாமும் கற்றிடும்

வாத்துக்களின் வாழ்க்கை நமக்கும் பாடமே


ஜன்ஸி கபூர் - 12.04.2021

 




சாதனைகள் சரித்திரமாகும்


சாதனைகள் சாகா வரம் பெற்றவை. உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்களுக்கு தன்னம்பிக்கையுடன் தொடர் முயற்சியும் பயிற்சியும் வழங்குகின்றபோது அங்கு வெற்றியின் வாசம் மனதினை நிறைக்கின்றது.

அடுத்தவர்களால் இயலாததொன்றை தன் இலட்சியமாகக் கொண்டு சாதிக்கின்ற வீரர்களை பிரமிப்புடன் நாம் பார்க்கின்றோம்.

எதனையும் சாதிக்கலாம். நம்மிடம் அதற்கான நம்பிக்கை மலையளவு நிறைந்திருக்கின்றபோது.....

அந்த வகையில்

தற்போது இலங்கை ஊடகங்களில் பேசப்படுகின்ற பெயர் ரொஷான் அபேசுந்தர

கடந்த 11.04.2021 இல் புதிய சாதனையை நிலைநாட்டினார்.

தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கும் 59.3 கிலோமீற்றர் தூரத்தை 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 43 செக்கன்களில்  பாக்குநீரிணையில் நீந்தி புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டினார்.

பிரம்மிப்பான கொந்தளிக்கும் கடலலைகளையும் தன் ஆற்றலால் வசப்படுத்தி சாதனை புரிந்த இந்த இலங்கை விமானப் படையின் நீச்சல் வீரரை நாமும் வாழ்த்துவோம்.

அதே நேரம் 1971 ஆம் ஆண்டு 51 மணித்தியாலங்களில் மேற்கூறப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருந்த குமார் ஆனந்தனும் நினைவூட்டப்படுகின்றார்.

ஓவ்வொரு முயற்சிக்கும் ஊக்கமாக காணப்படுகின்ற சுவடுகளும் நினைவூட்டப்படுகின்றன.

ஜன்ஸி கபூர் - 12.04.2021




 



2021/04/11

பயணம்

சின்ன வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதென்றால் மகிழ்வினை வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாது. அதிலும் புகைவண்டிப் பயணம் என்றால் .......... 

கனவுகளைச் சுமந்து எதிர்பார்ப்புக்களை நெஞ்சில் தாங்கி சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்ந்த அந்த பட்டாம்பூச்சிக் காலம் மறக்கப்பட முடியாத வசந்த காலம்...

வெளிநாடு செல்வதுபோல் கொழும்பு போவதற்காக புதிய ஆடைகள் தைத்து பல நாட்கள் ஆயத்தப்படுத்தலை மேற்கொண்ட அந்த சின்ன வயதுப் பருவம் இன்றும் கண்களில் மெலிதான விம்பம்போல் தெறித்துச் செல்கின்றது.

தந்தை அரச உத்தியோகத்தர் என்பதால் புகையிரத ஆணைச்சீட்டுப் பயணம். வுழமையாக கொக்குவில் புகையிரத நிலையத்தில் வைத்தே ஏறுவோம். எனக்கு எப்பொழுதும் ஜன்னல் அருகிலான இருக்கையே வேண்டும் என்பதால் என் பெற்றோர் அதனை ஒதுக்கித் தந்துவிடுவார்கள். நான் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊர் பற்றிய குறிப்பை எனது பதிவேட்டில் குறித்தவாறு பயணிப்பது எனது வழமை. இயற்கையின் இரசிப்பை மனதினுள் படரவிட்டவாறு பயணிப்பது அலாதி சுகம்தானே...

பிரம்மாண்டமான கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இறங்கியதும், அந்த பரபரப்பினை நுகர்ந்தவாறு முன்னே செல்கின்ற தந்தையைப் பின்தொடர்ந்து செல்வதும், அந்த நகரத்தின் நகர்வை அதிசயமாக உள்வாங்கிக் கொண்டதும் இன்றும் மறக்கப்படமுடியாத அழகிய கனாக்கள் போல்தான் இருக்கின்றது.

அப்பொழுது கொழும்புத் தண்ணீரைக் குடிக்கும்போது கசப்பதைப் போன்ற உணர்வு. வாப்பாவிடம் சொல்லி கடைகளில் சுடுநீர் வாங்கிப் பருகுவோம்.

ஆனால் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழப் பழகிய பிறகு, அந்தக் கனவுப் பயணம் சுவையற்று இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தண்ணீர் சுவையில்கூட மாற்றம் தெரியவில்லை. இரசிப்பின் வருடலை மனம் இழந்துவிட்டது போலும்..

காலம் மனதை மட்டுமல்ல வாழ்வையும் மாற்றிவிடுகின்றது..

ஜன்ஸி கபூர் -11.04.2021  


காத்திருப்பு

 


உஷ்ணம்...!🌞🌞🌞

கஷ்டம் கொடுக்கவில்லை போலும்!!

கொந்தளிக்கும் கடற்கரையோரத்திலும்

முளைத்திருக்கின்றன குடைகள்☂☂☂ 

காதலுடன்....🧡🧡🧡

-ஜன்ஸி கபூர் -11.04.2021 -