கானல் நீர்


ஒவ்வொரு பொழுதுகளும் அழகாகத்தான் விடிகின்றன. குருவிகளின் இசைச் சுரங்களின் இனிமையில் மனம் வீழ்ந்திடத்தான் துடிக்கின்றது.இருந்தும் அந்தக் கொடுப்பனையில்லாத பாவி மகளாய் இந்தப் புவிப் பரப்புக்குள் வீழ்ந்து கிடக்கின்றேனே!.

பாசம் தர உறவிருந்தும் சிறகறுந்த சின்னச் சிட்டாய் சோக முற்றத்தில் விளையாடிடும் கண்ணீர் வாழ்வின் மொத்த உருவமாய் நான்!

" அப்பா"

எனக்குள் ஓர் உருவமும் உயிரும் கொடுக்கக் காரணமாய் இருந்தவர். எல்லாப் பிள்ளைகளைப் போல் எனக்கும் ஓர் அன்பான அப்பா இருக்கிறார். மனசு சொல்லத் துடித்த கணங்கள் பற்பல. ஆனால் ஏனோ வார்த்தைகள் சிறைப்பட்டு வெளியேற மறுக்கின்றது.

நான் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டதே அவரிடமிருந்துதான்..எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் தந்த அனுபவங்களே என்னைச் செதுக்கியிருக்கின்றன. என் வயதை விட அனுபவச் செறிவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனாலோ என்னவோ நானும் சராசரி பெண்ணாய் இல்லாமல் இன்னும் இன்னும் வாழ்வின் தன்மையைப் படிக்க பல தேடலுக்குள் உள்ளிறங்கித் தேடுகின்றேன்..

அப்பா........!

இப்புவியில் உங்கள் பிள்ளையாய் நான் பிறந்ததால் என் வயதையொத்த பெண்கள் தொலைத்த எல்லாவற்றையும் என்னுள் நிரப்பி அதிசய பெண்ணாய் அடுத்தவர் என்மீது வீசும் புதிர்ப் பார்வையையும் சுமந்தபடி விதி வழியே போகின்றேன்.....

வாழ்வின் அழகிய பருவம் மழலைப் பருவம்....அம்மா அடிக்கடி சொல்வார்....தாங்கள் திருமணமாகி பல வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளையாம் நான்... என்னுள் தந்தையின் முகச் சாயல் அதிகமாய் இருப்பதால்  அப்பாக்கு என் மீது கொள்ளைப் பிரியமாம்........பல நாட்கள் என்னைத் தோளிலிட்டு பாட்டுப் படித்து நீங்கள் தூங்க வைத்ததும் சின்னச் சின்ன ஞாபகங்களாக இன்னும் நெஞ்சக் குழியில் இறங்கிக் கிடக்கின்றன..

நான் சின்னவளாய் உங்கள் நெஞ்சை உதைத்த போது கோபங் கொள்ளாமல் ரசித்த சராசரித் தந்தையாகவும் இருந்ததை எண்ணி என்னுயிர்க் கணுக்கள் ஒரு கணம் மகிழ்வோடு தம்மை மறந்து உணர்ச்சிவசப்படுகின்றன....

அப்பா.....உங்களை நான் நல்ல பாடசாலை அதிபராக, கலைஞனாக, எழுத்தாளனாக , சிறந்த ஓவியனாக கண்டு ரசித்துள்ளேன்...ஒரு மருத்துவனாக, தொழினுட்பவியலாளனாக, பொறியியலாளராக, நல்ல ஆலோசகராகவும் கண்டு பெருமிதப்பட்டுள்ளேன்.....யாருக்கிந்த கொடுப்பனை கிடைக்கும்......நீங்கள் பல் துறை வேந்தர்......

கல்வி கற்றவர்கள் கூட உங்கள் ஆங்கிலப்புலமை கண்டு மெச்சாத நாள் உங்கள் வாழ்க்கையில் குறைவென்று தான் சொல்லுவேன்...உங்கள் அந்தத் திறமைகள் தான் பாரம்பரீய வழியாக என்னையும் ஆட்கொண்டு நானும் ஏதோ கல்வித் துறைக்குள் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். நன்றி தந்தையே !

இருந்தும்.................!

இத்தனை திறமை படைத்த உங்களால் ஏனப்பா நடிக்க முடியாமற் போனது?
உங்களின் அடுத்த பக்கம் ஏன் ஆரோக்கியமற்றுக் கிடக்கின்றது.
 நல்ல தந்தையாக பிள்ளைகளுக்கும், நல்ல கணவனாக மனைவிக்கும் உங்களால் முகங்காட்ட முடியாமற் போனதுதான் உங்கள் வாழ்வின் இயலாமை எட்டிப்பார்த்த தருணங்களோ...........

பல தடவை உங்கள் இதயம் ஏன் மரத்துக் கிடக்கின்றது என நான் ஆய்வு செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் நீங்கள் கண்ணீர் சிந்திய அந்த ஞாபகங்கள் என்னுள் முட்டி மோதி அந்த எண்ணத்தையே மண்ணாக்கி விடுகின்றது...

அப்பா...........!

நீங்கள் அழுதிருக்கின்றீர்கள் பல சந்தர்ப்பங்களில் .!
உங்கள் பதினாறு வயதில் உங்களைத் தவிக்க விட்டு இறைவனடி சேர்ந்த உங்கள் அன்னையின் திடீர் மறைவின் ஞாபகங்கள் உங்களைப் புரட்டும் போதெல்லாம் நீங்கள் எங்கள் குழந்தையாகி வெம்பியிருக்கின்றீர்கள்..........
அந்தப் பாசங் கண்டு நாமும் பரிதவித்திருக்கின்றோம்!

அப்பா....நீங்கள்  நல்லவரா................... கெட்டவரா..........!

ஏனப்பா இரண்டினதும் கலவையாகி மனதை இறுக்கி வைத்திருக்கின்றீர்கள்!

எனக்கு நான் சிரித்ததாக ஞாபகமே இல்லை...உங்களுக்கு நாம் சிரித்துப் பேசுவது பிடிக்காதென்பதால் அந்த உணர்வே மரத்து, மறந்து போனது....

எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது..........

தவறே செய்யாமல் நான் உங்களால் தண்டிக்கப்பட்டு கிடந்த நாட்கள்..பல !எல்லாப் பிள்ளைகளைப் போலவே நானும் ஆசைப்பட்டு பக்கத்து வீட்டில் விளையாடப் போன நாட்களில், என்னை வீதி வழியாக "தர தர" வென இழுத்து வந்து இரத்தம் கசிய நீங்கள் அடித்த அந்த நாட்கள்....இன்னும் வலிக்குதப்பா...

எங்களுடன் மற்றவர் பழகுவதோ, பேசுவதோ உங்களுக்குப் பிடிக்காததென்பதை அறிந்த பின்னர், என்னியக்கமும் வீட்டுக்குள் சிறைபடத் தொடங்கியது. எனக்கென்று நான் நண்பர்கள் தேடவில்லை.......என்னுலகத்தையே சுருக்கிக் கொண்டேன்.........

உறவுகள் நெருங்காத தனி ராஜ்ஜியத்தின் அங்கத்தவர்களாக எம்மை முடிசூட்டினீர்கள்.அந்தப் பழக்கம் தான் இன்னும் என்னை மற்றவருடன் நெருங்கிப் பழகத் தடுக்கின்றது...
பிறர் பேசினால் பேசி.......சிரித்தால் சிரித்து.......
போலச் செய்யும் சிறு குழந்தையாய் இன்னும் தான் என் வகிபங்கு தொடர்கின்றது..

அப்பா......உங்கள் மனநிலை புரிந்தபின்னர் உங்களுக்கேற்ப எம்மை நாம் மாற்றிக் கொண்டோம்.. உங்களுக்குப் பிடிக்காத எதனையும் நினைவில் கூட நான் இருத்துவதில்லை. தனியார் வகுப்புக்கள், கல்விச்சுற்றுலா, என் நெருங்கிய தாய் வழி உறவினர் திருமணங்கள் , நட்பினர் தரும் அழகிய சந்தோஷங்கள் அனைத்துமே என் தியாகங்களாகிப் போகின........

என்னவோ தெரியவில்லை சோகம் எனக்கு இப்பொழுதெல்லாம் ரொம்ப பிடிக்கின்றது..நீங்கள் எமக்குத் தந்த சொத்து அது........

உங்கள் அறியாமையால், அவசரத்தால், மறதியால் நீங்கள் செய்கின்ற தவறுகளை எம்மீது சுமத்தி , அவற்றுக்கு நாம் தான் காரணமென திசை திருப்பும் உங்கள் செய்கை வலிக்குதப்பா............இன்னுமின்னும் தொடரும் அந்த வாழ்க்கைப் போராட்டத்தை சுமக்கும் சக்தியற்றவர்களாய் நாம் திணறிக் கொண்டிருப்பதை படைத்தவன் வேடிக்கை பார்க்கின்றான்...

முரண்பட்டு கிடக்கும் என் பெற்றவர்களின் வாழ்வின் போக்கு என் வாழ்வையும் சிதைத்து விட்டது.....காதல், திருமணம் , பொழுதுபோக்கு மகிழ்ச்சி, உறவுகள் ..........இவையெல்லாம் என்னைத் தொடர அனுமதிக்காதவளாய் நான் தனி வழியே பயணிக்கின்றேன்..இன்று!.........

பழகிப் போன இந்த வாழ்க்கையுடன் தைரியமாய்  பயணிக்கின்றேன்....... முடிவுறாத என் வாழ்க்கைப் போராட்டங்களை சமாளிக்கலாம் எனும் நம்பிக்கை ஒருபுறம் .............
மறுபுறம் சராசரி அன்பான அப்பாவுக்கான ஏக்கம்!

கானல் வாழ்க்கை தொடர்கிறது...போராட்டங்களோ வாஞ்சையுடன் தொட்டுச் செல்கின்றன!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை