பரந்து விரிந்து காணப்படுகின்ற ஆகாயக் கூரைக்குள் தன்னை அடக்கிக் காணப்படுகின்ற அழகிய பூமிக்கு இறைவனால் வழங்கப்பட்ட அற்புதமான வளங்களே பசுமை மரங்களாகும். பச்சைப் பசேலென கண்ணுக்கு இதமளிக்கின்ற இயற்கைக் கொடையினை காக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் தங்கியுள்ளது.
சுயநலம் எனும் குறுகிய சிந்தனையால் மனிதர்கள் தமது தேவைகளுக்காக பசுமையைத் தாக்குகின்ற விசக் கிருமிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இயற்கைச் சமநிலை பேணப்படக் கூடிய விதத்தில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிணைப்பு இப்பசுமை அழிப்பினால் அறுந்து போவதனால் புவியின் உயிர்ப்பான கட்டமைப்பும் செயற்பாடுகளும் அழிவடைகின்றன.பசுமைக்குள் நாம் அழிவினை ஏற்படுத்தும்போது ஓசோன் படை சிதைவடைகின்றது. அத்துடன் தட்ப, வெப்ப சூழ்நிலை மாற்றம், அனல் காற்று, நிலத்தடி நீர் வற்றிப் போதல், பருவ மழை பொய்த்தல், சூழல் மாசடைதல் போன்ற இயற்கை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன்இ சுவாசப் பாதிப்புக்கள் உள்ளிட்ட நமது தேக ஆரோக்கியமும் பாதிப்படைகின்றன.
நாம் இயற்கை எனும் சொத்துக்கு ஏற்படுத்துகின்ற சேதத்தால் நமக்கு நாமே அழிவினை ஏற்படுத்துகின்றோம். நமது வாழ்வின் வனப்பினையும் அழிக்கின்றோம். நாகரிக வளர்ச்சி எனும் மாயைக்குள் நாம் ஏற்படுத்தும் அழிவு உலகத்தையே ஆபத்தின் விளிம்புக்குள் தள்ளுகின்றது. பூமியை உயிர்ப்புடன் அசைத்துக் கொண்டிருக்கின்ற சுவாச மையமான இந்த பூமியைக் காக்க வேண்டுமானால் மரங்களை வெட்டுவதைத் தவிர்தது புது மரங்களை நட்டுதல் வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகள் மூலமாக பசுமையைக் காத்து இயற்கை இன்பத்தை நாமும் அனுபவிக்கலாம்.
ஜன்ஸி கபூர் - 01.10.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!