ஊக்குவித்தல் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நிறுவன பணியாளர்களால் வினைத்திறனான வெளியீடுகளைப் பெறலாம் .
-----------------------------------------------------------------------------
ஊக்கல் சில வரைவிலக்கணங்கள்
- 'ஊக்கல்' என்பது கேட்பவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது தேவைகளை அவரது சூழலில் காணப்படும் பொருள்களின்பால் வெளிப்படுத்தும் ஒரு செயன்முறையாகும்" - G.M.Blair & Othersd (1947)
- "அது யாதேனும் பெறுபேற்றை பெறுவதற்காக ஆட்களை வழிப்படுத்தும், உந்தும் போக்காகும்" - J.W.Atkinson (1966)
எனவே ஊக்கல் என்பது யாதேனும் நடத்தைக்கு சக்தி வழங்குகின்ற உந்து சக்தியாகும். இதனை விரும்பிய இலக்கை அடைவதற்காக தனியாட்களை தூண்டும் செயல் முறையாகவும், நிறுவனத்தின் இலக்குகள் சார்ந்து உயர் மட்டத்திலான முயற்சியை எடுப்பதற்கான விருப்பமாகவும் கொள்ளலாம்.
ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவைகளையும், விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்ற செயல் ஊக்குவித்தல் எனப்படுகிறது.
கிடைக்கும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துவதுடன், அதிபர்- நிறுவனப் பணியாளர்களின் தொடர்பு, போதனைசார் செயற்பாடுகளின் மேற்பார்வை மற்றும் மதிப்பீடு, ஆசிரியர்களது பன்மைத்துவ விருத்தி, குழு விருத்தி, செயற்பாட்டு ஆராய்ச்சி, ஒரு நேர் கணியப் பாடசாலைச் சூழல் போன்ற அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புபட்டதாகவும், சமநிலை உள்ளதாகவும் பேணப்படும் போதே பாடசாலையிலும் வினைத்திறன்மிக்க அபிவிருத்தியானது ஏற்படுகிறது. எனவே நிறுவனப் பணியாளர்களிடம் கடமைகளையும், பொறுப்புகளையும் பொருத்தமாகப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களைப் பாடசாலை இலக்குகளை நோக்கி முறையாக வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலமே பாடசாலையை சக்திமிக்க நிறுவனமாக மாற்ற முடிகிறது.
பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களின் தேவைகள் வேறுபாடானவை. எனவே அவர்களின் தேவை, விருப்புகளை அறிந்து அந்த நிறைவுத் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான ஊக்கலை வழங்க வேண்டும். ஊக்குவித்தலானது தேவை, உந்துதல், இலக்கு, தூண்டு விசை எனும் நடத்தையின் பல்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது.
வேலையாள் ஒருவர் உயர்மட்டத்திலான வினையாற்றலை வெளிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன :-
- சாதனை
- அங்கீகாரம்
- பொறுப்பு
- வேலையில் உயர் அடைவதற்கான வாய்ப்பு
- தனிப்பட்ட வளர்ச்சி
இவற்றை ஊக்குவித்தல் வழங்கும். இவ் ஊக்குவித்தலானது ஒரு உள்ளார்ந்த உணர்வாகவும், ஒரு உளவியல் செயன்முறையாகவும் இருப்பதனால் திருப்தி உணர்வு ஏற்படுகின்றது. இதன் மூலம் நிறுவன பணியாளர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அவர்களும் நிறுவனத்தின் இலக்கு நோக்கி நகர்கின்றார்கள்.
ஊக்குவித்தலானது சகலரையும் நிறுவனச் செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்வதால், சகலரும் தீர்மானம் எடுத்தலில் பங்குபற்றுகின்றார்கள். இத்தகைய ஜனநாயகச் சூழ்நிலையின் வெளிப்படுத்துகை மூலம் இவர்களிற்கிடையில் "தாமே உரித்துடையவர்" என்ற உணர்வு ஏற்படும். இது பாடசாலை தொடர்பான இலக்குகளை அடைவதற்கு உந்துசக்தியாக காணப்படுகின்றது.
உயர்மட்டத்தில் ஊக்குவித்தலை வழங்கும்போது பெறப்படும் உந்துசக்தியானது சமநிலை அடைந்து பொருத்தமான நடத்தையைத் தீர்மானிக்கிறது. இதனால் குறைபாடுகள் குறைவாகக் காணப்படும். முரண்பாடுகள் காணப்படாத உன்னதமான நிலை ஏற்படும்.
ஊக்குவித்தலை பாடசாலையில் நடைமுறைப் படுத்தும் விதம்.
------------------------------------------------------------------------------
- பங்கேற்பு -
சுதந்திரமான கருத்து வெளிப்படுதல், ஜனநாயகத் தன்மையான சூழல் ஏற்படுத்தும்.
- தொடர்பாடல் -
அடையப்பட்ட வெற்றிகள், இலக்குகள் பற்றி சகலரும் அறியச் செய்தல். இருவழித் தொடர்பாடல், கவனத்துடன் செவிமடுத்தல், தகவல் பகிர்வு, நேர்மையும் விசுவாசமும் ஏற்பட்டு ஆசிரியர்களை ஊக்குவிக்கும்.
- அங்கீகாரம் -
ஒருவரின் தனித்த தன்மையை அங்கீகரிக்கும் போதும், மதிக்கும் போதும் அவர் உள்ளார்ந்த திருப்தி அடைவர். இதனால் பாடசாலை அபிவிருத்திக்கு உதவுவர்.
- அதிகார பகிர்வு -
ஒருவரின் பதவி உயர்த்தப்படுமானால், அது திட்டமிட்ட அபிவிருத்திக்கு வழி வகுக்கும். எனவே தகுதியானவர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்து அவர்களை சிறந்த தீர்மானம் எடுக்க ஊக்குவிக்கும் போது பாடசாலை வினைத்திறனான செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்கும். அதிகார பகிர்வு கடமைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
பிறரால் ஏற்கப்படல், பிறரால் பாராட்டப்படல், பிறரோடு இணைந்து வாழல் போன்ற பண்புகள் நிறுவன பணியாளர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நிறுவன பணியாளர்களால் வினைத்திறனான வெளியீடுகளைப் பெறுவதற்காக ஊக்குவித்தல் நுட்பங்களைப் பயன்படுத்த முடியும்.
--------------------------------------------------------------------------------------
பாடசாலை அதிபர் ஒருவர் தனது ஆசிரியர்களையும், சக பணியாளர்களையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்
---------------------------------------------------------------------------------------
அதிபரானவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திருப்தி ஏற்படுத்தும் விடயங்கள், அதிருப்தி ஏற்படுத்தாத விடயங்கள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுதே பணியாட்களின் தன்னடைவுத் தேவைகளை அடைந்து கொள்வதற்குரிய தடைகளை அதிபரால் அகற்ற முடியும். இதனால் பணியாள் மன அழுத்தம் குறைந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் இலக்கு நோக்கி பயணிக்கலாம்.
பின்வரும் ஊக்குவித்தல் உத்திக்களைப் பிரயோகித்தல்.
- பாராட்டும், பரிசும் சரியான முறையில், சரியான நபருக்கு வழங்குதல்.
- ஒரு செயலை செய்து முடிப்பதற்கான செயல் திறமை, நடத்தை பற்றித் தெளிவாகக் கூறல்.
- தங்கள் கூறிய கருத்துக்கள் மாற்றவர்களால் வரவேற்கப்பட்டதாகவும், மற்றவர் உறுதுணையாய் நிற்பதாகவும் உணரச் செய்தல்.
- அவர்களுக்கு எழும் வினாக்களுக்கு நேர் பதில் வழங்கி பாராட்டுதல்.
- கடினமான செயல்களை சிறு, சிறு செயல்களாக செய்யப் பழக்குதல்.
- எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்ய வழிப்படுத்தல்.
- வேலைகளை உடனுக்குடன் மதிப்பிடல்.
- மற்றவருடன் ஒப்பிடாமல் அவரவர் திறமைக்கு ஏற்ப மதிப்பிடல்.
- ஒவ்வொருவரின் தனித்தன்மையை இனம் கண்டு ஊக்குவித்தல்.
- புதிய அறிவு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் புதிய, புதிய செயல் திட்டங்களில் ஈடுபடுத்துதல்.
- பாடசாலை மட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- தொலைவிலிருந்து பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
- மேலதிக கற்றலில் ஈடுபடும் ஆசிரியர்களை ஆசிரியர் கூட்டங்கள், விளம்பர பலகைகளில் வெளிப்படுத்தி ஊக்குவித்தல்.
- பெற்றோர் தரவட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடு ஆசிரியர்- பெற்றோர் இடையே சீரான தொடர்புகளைப் பேண உதவுதல்.
- பயனுறுதிமிக்க தொடர்பாடல் மூலம் உற்சாகப்படுத்தல்.
- கூட்டுணர்வுள்ள ஒன்றிணைந்த செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்.
- போதிய வளங்களை பெற்றுக் கொடுத்து கற்றல் - கற்பித்தலை மேற்கொள்ள வழிப்படுத்தல்.
- பாடசாலைச் சூழலை மகிழ்ச்சி மிக்கதாக மாற்றுதல்.
- பாடசாலையில் ஏற்படும் உளநெருக்கீடுகளையும், முரண்பாடுகளையும் குறைத்தல்.
- அனைவரின் திறமைகளுக்கு ஏற்றவாறு பொறுப்புகளை பகிந்தளித்தல்.
- அவற்றை முறையாக மேற்பார்வை செய்தல், ஊக்கப்படுத்தல், சிறப்பான வெளிப்படுத்தலூக்காக பரிசு வழங்கல்.
- கற்றல் - கற்பித்தல் செயன்முறை போட்டிகளை ஆசிரியர்களுக்கிடையில் நிகழ்த்தி பரிசு வாங்க, பாராட்டுப் பெற ஊக்குவித்தல்.
- கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை புத்தாக்கத்துடன் தயாரித்து, கற்பிக்க ஊக்குவித்தல்.
- கற்பித்தல் துணை சாதனங்களாக கட்புல, செவிப்பு புல சாதனங்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.
- தாம் செய்யும் செயல் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றிய விளக்கத்தையும், கற்பித்தலின் தன்மை பற்றியும், கற்பித்தல் மேற்பார்வை மூலமாக ஆளணியினருக்கு உணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தம்மை தாமே மதிப்பிட்டு தமது செயல்களில் ஆர்வத்துடன் செயற்படும் சூழ்நிலையை உருவாக்குதல்.
- அழுத்தங்கள் ஏற்படாமல் ஊழியர்களை வழிப்படுத்தல்.
- ஆசிரியர் கற்பித்தல் செயன்முறையில் காட்டும் முன்னேற்றங்களை உடனுக்குடன் அவர்களுக்கு தெரியப்படுத்தல்.
- சிறப்பான அதிபர் - ஆசிரியர் அல்லது ஆளணியினர் தொடர்பினை பேணல்.
- வாண்மைத்துவம் சார்ந்த அனுபவப் பகிர்வினை குழுச்செயன்முறைகள் மூலம் மேற்கொள்ளல்.
- விரைவான தீர்மானம் இயற்றும் ஆற்றல், படைப்பாற்றல் திறன், அர்ப்பணிப்பு என்பவற்றை அதிகரித்தல்.
- வளங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
- சிறந்த தொடர்பாடல் திறன்களை பிரயோகித்தல்.
- செவிமடுத்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற சமூகத் திறன்களை பிரயோகித்தல்.
- பணியாளர் நலம் பேணல்.
- முக மலர்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் செயலாற்றும் சூழல் உருவாக்கல்.
- நிறுவனப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக அங்கீகரித்தல் அவர்களின் தரம் உயரக் காரணமாக அமையும்.
- ஆசிரியர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் போதே மாணவர்களின் கல்வித்தரமும் அதிகரிக்கும். எனவே ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை அதிகரிக்க அதிபர் வழி காட்ட வேண்டும். உயர் தகைமை அடையும் போது பாராட்ட வேண்டும்.
- உரிய நிறுவனங்களில் தொடர்பு கொண்டு, பொருத்தமான தகவல்களைப் பெற்று ஆசிரியர்களின் தொழில் உயர்ச்சிக்கான விடயங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
- பணியாளரின் சுயமரியாதையை ஏற்றல்.
- அவர்களின் தன்னம்பிக்கையை மதித்தல்.
- வலுவூட்டுதல் - புன்னகை, தலை அசைப்பு செயல்கள் மூலம்
- வெற்றியைப் பற்றிய நம்பிக்கை ஊட்டல்.
- கவலையைக் குறைத்தல்.
- நல்லுறவு பேணுதல் - இதனால் மேம்பட்ட உறவு பேணப்படும்.
- தனியாள் எதிர்பார்ப்புகளை நிர்ணயித்தல்.
- ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்குதல்.
- ஆர்வத்தை எழுச்சியுறச் செய்தல்.
- செய்யும் செயலில் கவனத்தை ஏற்படுத்தல்.
- ஒருவருக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் ஊக்கிகளை அவருடைய இயற்கையான உந்துதலோடு இணைத்தல்.
Ms. A.C.Jancy,
S.L.P.S -3
S.L.P.S -3
J/ Kadeeja Ladies College,
Jaffna
உங்கள் பணி தொடரட்டும்...
ReplyDeleteThank you
ReplyDelete