About Me

2012/07/14

பரீட்சை !



சூரிய உதயத்தின்
இரகஸியங்களை அம்பலப்படுத்தும்
கைபேசி அழைப்புக்களாய் 
சிரிக்கும் சிட்டுக்களின் குரலேனோ
இன்னும் 
ரசிக்கவேயில்லை !

விரல்களின் ஸ்பரிசத்திலே
துவண்டிருக்கும் 
புத்தகங்களின் சிலிர்ப்பேனோ
இன்னும் 
சிந்தைக்குள் குவியவுமில்லை!

வண்ணத்தியின் சிறகுடைத்தே
கைப்பற்றும் 
அறிவின் மனனத்திற்காய்
அலையும் மனசின் அங்கலாய்ப்பும்
இன்னும் 
தணியவேயில்லை!

உணர்வுகள் களைந்த
இயந்திரமாய்
உருமாறிய மனதும்  
பாட வரிகளுள் இளைப்பாறிக்
கிடக்கும் ஒலியலைகளும்
இன்னும் 
தொலைவாகிப் போகவேயில்லை!

விழிக்குள் சுருண்ட கனவெல்லாம்
வில்லத்தனத்தோடு
பரீட்சையாய் முறைக்கையில் 
உதடுகளின் மௌனித்தலில்
கிறங்கிய பாட ங்களின் இறக்கம்
இன்னும் 
இறக்கவேயில்லை ஞாபகம் விட்டு!

என் உணர்வு தேசத்தின்
அறிவிப்புக்களெல்லாம்
பரீட்சையில் விழுந்து கிடக்க 
நாட்களோ 
நாடியறுத்து
மனவழுத்தத்தின் வீரியத்தை
இன்னும் 
நெஞ்சிலே பரப்பத்தான் செய்கிறது!

மனமோ வெற்றி யுத்தத்திற்காய்
பரீட்சைக் களத்தில் போராட 
பல 
நம்பிக்கை எதிர்வுகூறலில்
இரவும் பகலும் நசிந்து கிடக்கின்றன
தோல்வியின் மீட்சிக்காய்!

ஒளி விரல்களில்- என்
சுபீட்சம் பூட்டி 
விடைத்தாள்களின் தடத்தில் 
பயணிக்கும் என் பேனாச் சுவடுகளால்
நாளை 
என் இலட்சியங்கள் பேசப்படலாம்
நம்பிக்கைதனை உள்வாங்கியபடி!

ஜன்ஸி கபூர் 







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!