கண்ணீர் பேசும் ஞாபகங்கள்!


வாழ்க்கை அழகானதுதான். ஆனால் அந்த அழகு, அந்தஸ்து, ஆரோக்கியம், அமைதி அனைத்துமே நிலையற்ற இவ்வுலகின் வெறும் ஞாபக எச்சங்களாகவே நம்முள் எட்டிப்பார்க்கின்றன..

புளாங்கித  வருடலுடன் விடிந்திருக்கின்ற இன்றைய பொழுதின் ஒவ்வொரு கீறலிலும் கனத்த சுமையாய் சோகமொன்று மெலிதாய் தாக்க கண்கள் பனிக்கின்றன...

சில ஞாபகங்கள் சில்லறையாய் என்னுள் வீழ பொறுக்கியெடுக்கின்றேன் அவற்றை...அந்த ஞாபகப் பரப்புக்களின் எல்லைச் சுவர்களில் அந்த முகம் புன்னகைக் கசிவுகளுடன் என்னை எட்டிப் பார்க்கின்றது.........

ஏனோ என்னாலின்று இக்கட்டுரையை எழுதமுடியாதபடி மன அழுத்தம் இழுத்துப்பிடிக்க, அந்தத் தடையையும் மீறி அவருக்காக சில வரிகள் என் இணைய வலைப்பூவிலின்று கண்ணீருடன் பயணிக்கின்றது!

அது.........

அவர்.......

ஜனாப் ...எச்.எம்.எம்.அப்துல் வஹாப் மௌலவி ஆசிரியர்
இருப்பிடம் - காத்தான்குடி

என்னுடன் கடமையாற்றிய சக ஆசிரியர், இனிய சகோதரன், தோழமைமிகு நண்பர், நலன்விரும்பி , என் தந்தையின் மதிப்பிற்குமுரிய குடும்ப நண்பர் என என்னுள் பன்முகம் காட்டிச் சென்றவர் இவர்..

நாங்கள் இருவரும் ஒரே காலத்தில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் ஓரே ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு எமது தொழில் ரீதியிலான விடயங்கள் பலவற்றை அடிக்கடி பகிர்ந்து கொண்டோம். இவர் என்னை விட பல வருடங்கள் வயதில் மூத்தவரென்றாலும் கூட, அந்த வேறுபாடுகளையெல்லாம் ஓரந் தள்ளி விட்டு நல்ல நண்பராக என்னுடன் பழகினார்..அவர் அழகான புன்னகையே அவர் நட்பு தேசத்தின் முகவுரையாக எல்லோருக்கும் மனதைத் தொட்டுச் சென்றது...

புதிய புதிய இஸ்லாமிய கீதங்கள் புது வரவு காட்டுகையில் "புளூ டூத் " வழியாக அவர் பதிவுகள் என் கைபேசிக்குள் இடமாறும்.இன்று அந்தப் பதிவுகளெல்லாம் என் கைபேசிக்குள் சேமிப்பாகி அவரை ஞாபகப்படுத்துகின்றது.

 நாங்கள் இருவரும் வகுப்பாசிரியராக கடமையாற்றும் போது எங்கள் வகுப்புக்கள் பக்கத்திலேயே அமைந்திருக்கும். அவருக்கும் எனக்கும் பொதுப்படையான சில விடயங்களுண்டு. எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் வகுப்புக்களை இயன்றளவு அழகுபடுத்துவோம். 2005 ம் வருடம் எமது பாடசாலையில் "5S" பேணலுக்கான போட்டி நடைபெற்ற போது அவர் வகுப்பும் (தரம் 11A) , எனது வகுப்பும் (தரம் 11 B) வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது இன்றும் மறக்க முடியாத ஞாபகங்களே!

அவர் மௌலவி ஆசிரியராக இருந்ததால் பல மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அவ்வாறே அவரும் தொழிலுடன் தொடர்புபட்ட சந்தேகங்களை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.....ஒருவருக்கொருவர் நல்ல நட்பு முகம் காட்டினோம்.

ஒழுக்கம் மிகு விழுமியக் கல்வியையூட்டும் இஸ்லாம் பாடத்தினை அழகாக , ஆழமாக அவர் மாணவர்களுக்கு கற்பிப்பார். ஆனால் மறுதலையாக கற்பித்தலில் பின்னடையும், நன்னெறிகளில் மூர்க்கத்தனம் காட்டும் மாணவர்களிடம் அவர் கடுமையான போக்கையே காட்டுவார். அவரின் இந்தக் கண்டிப்பான போக்கே பாடசாலையில் பல மாணவர்களின் குழப்படி நிலையை கட்டுப்படுத்தியிருந்தது..

" வஹாப் சேர்"

என்றதும் பயந்து நடுங்கும் பல முரட்டுத்தனமான மாணவர்களை நான் கண்டிருக்கின்றேன். பாட ஆசிரியர்களிடம் முரண்டுபிடிக்கும் மாணவர்கள் அவ்வாசிரியர்களால் இவரிடமே ஒப்படைக்கப்படுவார்கள். விசாரணையும் ஆலோசனையும் வழங்கும் நீதிமன்றமாக பல வருடங்கள் அவர் எம் பாடசாலையில் நிலையூன்றியிருந்தார்..

அவ்வாறே பல வருடங்கள் "மாணவ ஆலோசனையும் வழிகாட்டலும்" சேவையும் அவர் மூலம் பெருமிதமும் பயனுமாற்றியது. எமது பாடசாலை மாணவர்களின் கோலாட்டப் பயிற்சி அவருக்கிருந்த இலக்கிய ஈடுபாட்டின் சிறப்பான ஓரடையாளமாகும்!

எமது பாடசாலையின் பௌதிக வள வளர்ச்சியின் ஏறுமுகம் வஹாப் ஆசிரியரின் கரங்களிலேயே தங்கியிருந்தது. பல பிரமுகர்களைச் சந்தித்து பாடசாலையின் பல வளத் தேவைகளை நிறைவேற்றினார். பாடசாலைக்கட்டிட  அலங்கரிப்பு வேலைகள், ஆரம்ப வகுப்பு மாணவர்களின் நூலகம், ஒலிபெருக்கிச் சாதனங்களின் செயற்படுத்துகை என்பன வஹாப் ஆசிரியரை ஞாபகமூட்டுவன.

அவர் பேச்சாற்றலைக் கண்டு நான் வியக்காத நாட்களில்லை. எந்த தலைப்பைக் கொடுத்தாலும் மார்க்க நெறியின் வழிப்படுத்தலுடன் கூடிய உரையை உடனே ஆற்றுவார். எமதூர் பள்ளிவாசலின் பல ஜூம்- ஆ குத்பா பிரசங்கங்கள் அவர் சொற்பொழிவுகளால் மன நிறைவடைந்துள்ளது.

தன் குடும்பத்தை விட தான் சார்ந்திருக்கும் தொழிலை, கடமையை, சமூகத்தை நேசித்தார் என்பது அவரைச் சூழ்ந்திருப்போர் கண்டறிந்த உண்மை.
அந்த நேசிப்புத் தந்த கௌரவமாய் எமது பிரதேசத்தில் நடைபெறும் பல அரச விழாவிற்கு அவர் கௌரவ மதப் பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார்."அரேபி தேச" குடிமகனாய் அந்த ஆடையில் அழகு தரும் இவரைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றோம்.

அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற வஹாப் சேர் இஸ்லாமிய  மார்க்கத்தின் பால் தீவிர பற்றுள்ளவர். வருடந்தோறும் எமது பிரதேச மக்களின் ஹஜ் , உம்ரா பயணத்தின் போது வழிகாட்டியாக அவரே செயற்பட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தன் இளமைக்காலத்தையெல்லாம் அநுராதபுர மண்ணில் கழித்து விட்டு, இவ்வருட ஜனவரி மாதம் தன்னூரான காத்தான்குடிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அவரின் சேவையைக் கௌரவப் படுத்தி எம் பிரதேசமே தம் வேறுபாடுகளை மறந்து அவருக்கு பெருவிழா எடுத்து கௌரவித்து வழியனுப்பி வைத்தது.....

அந்த நண்பரின் ஞாபகங்கள் எம்மை விட்டகலமுன்னரே........

கடந்த மாதம் அவர் திடீர் சுகவீனமுற்றுள்ளார் எனும் தகவல் நெஞ்சை அழுத்தியது. இத்தனை வருடங்களாக சுயநலம் பாராமல் சேவையாற்றிய அந் நல்லவரை "புற்றுநோய் " விட்டுவைக்கவில்லை.என்பதை இந்திய மருத்துவனையொன்று நிரூபிக்க, .புற்றுநோய் வேரூன்றலின் ஆழமான தாக்கத்தினால் "மஹரகம" வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளியானார். உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையிலும் அவர் தன் புன்னகையை, தன்னம்பிக்கையை இழக்கவில்லை...

மரணிப்பதற்கு சில நாட்களின் முன், அவர் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கைபேசியழைப்பெடுத்துப் பேசினேன்.குரலில் தன் சோர்வை வெளிப்படுத்தாமலிருக்க அவர் முயன்றாலும், என்னால் வேதனையை தடுக்க முடியவில்லை..

சென்ற 2012.07.01 ந் திகதி வஹாப் மௌலவி அவர்கள் இவ்வுலக வாழ்விலிருந்து நீத்தார்.....

கண்முன்னால் நிறைந்திருக்கும் அந்த உருவம், ........
இனிமையான பேச்சுக்கள் , ..........
அந்தப் புன்னகை..............
அடிக்கடி சுகம் விசாரிக்கும் பண்பு..............

இவை இன்னும் என்னுள் ஆக்கிரமிக்க, அவர் பிரிவை மறைவை
நம்ப முடியாதவளாய் நான் விக்கித்து நிற்கின்றேன் !

தன் தொழில் நிமித்தம் பல வருடங்களாக அவரைப்பிரிந்திருந்த அவர் மனைவி, பிள்ளைகள் மீண்டும் அவருடன் வாழ இணைகையில் மரணம் அவரைப் பிரித்தது துர்ப்பாக்கியமே!

எல்லோருக்கும் மரணமுண்டு மறுப்பதற்கில்லை. இருந்தும் இழப்புக்கள் தரும் வேதனையினை கட்டுப்படுத்தும் வல்லமையற்றவர்களாய் நாம் கண்ணீருக்குள் நம்மைத் தொலைத்து நிற்கின்றோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

அவரின் இம்மை வாழ்வின் முற்றுப்புள்ளியைத் தொடர்ந்து, மறுமையின் வாசல்கள் திறந்திருக்கும் இந்நேரம்......

அவர் செய்த தவறுகளை மன்னித்து அல்லாஹ் த ஆலா அவருக்கு சுவர்க்கமளிப்பானாக!

"இன்னாளில்லாஹி வஇன்னா இலஹிராஜிஊன்"

2 comments:

  1. lost to kattankudy very lost to anuradhapura veryvery lost to ummaah we r asking to allaah to him jannathul firdhawzzz

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை