என் பார்வையில் குறிஞ்சிப்பாட்டு


எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும். நம் வாழ்விற்கு  இவையிரண்டுமே அடித்தளமாகின்றன எனும் உண்மையை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் எழுத்தறியாதவன் இவ்வுலக வாழ்வியலிலிருந்தும், பண்பிலிருந்தும் நெறி தவறுகின்றான். சங்க காலமாயினும் சரி, சங்கமருவிய காலமாயினும் சரி, தற்காலமாயினும் சரி தமிழுக்கென்று தனி அந்தஸ்து எப்போதுமுண்டு. அதனால்தான் அது அமுதத் தமிழாகின்றது.....நமக்கும்  இன்பத்தமிழாகின்றது.

எனது பள்ளிவாழ்வில்,  பதினொராம் வருட பள்ளிவாழ்வு வரைக்குமே  தமிழ்ப்பாடம் என்னுடன் நடைபயின்றது. கம்பராமயணம், மகாபாரதமென அவ் இலக்கிய சொல்வீச்சில் மதிமயங்கி, வரிகள் தந்த காட்சிப்புலத்தை என் மனக்கண்ணில் நிறுத்தி, மானசீகமாக காட்சிகளை வரிகளால் விரித்து மகிழ்ந்த , வியந்த , பாக்கள் ஆக்கப்பட்ட அக்கருத்துச் செறிவில் இரண்டறக் கலந்த அந்தக்காலம் அழியாத பதிவுகளாய் இன்னும் நினைவிலிருக்கின்றது.

அதன்பிறகு உயர்தரக் கற்கைக்காக நான் விஞ்ஞானப் பாடத்தைத் தெரிவு செய்த போது, தமிழின் பல புராதன இலக்கிய பக்கங்களை ஆழமாக நுகரும் வாய்ப்பினையும் இழந்துவிட்டேன். எனினும் கிடைக்கும் ஓய்வுப் பொழுதுகளில் மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் தமிழ்ப்புலமை சுட்டும் இலக்கியங்களுடன் உறவாடியதால், இன்று என் உணர்வுகளுக்கும் கவிதை, கதை, கட்டுரை என ஓரளவு இலக்கிய வடிவம் கொடுக்க முடிகின்றது..

பிள்ளைப் பருவத்தில் அம்புலிமாமா கதைப்புத்தகத்தில் ஆசை கொண்ட  என் தமிழ்மொழிப்பற்று , பின்னர் பண்டைத் தமிழிலக்கியங்களை ஆராய ஆவல் கொண்டது. அவை சிந்தும் கருத்துச் செறிவின் ஆழத்தைக் கண்டு வியந்து நின்றது,

அவ்வாறு நான் வாசித்து, ரசித்த ஓர் கருத்துளியே இங்கே சிந்திக்கிடக்கின்றது என் எழுத்துக்களில் நசிந்து...............!

தமிழ்நடை பயிலும் இலக்கியங்களின் சுவை இன்னும் இனிமையானது. அவ்விலக்கியங்கள் நம்முள் சிதறும் அழகியல் என்றும் ரசிப்பைச் சிந்தி நிற்பது.  படித்தவர்கள் மட்டுமல்ல, இப் பாக்களின் பொருள் தெரிந்தால் படிக்காதவர்கள் கூட  மயங்கிக் கிடப்பா் என்பது திண்ணம்.

தமிழர் நிலத்திணைகள்!

பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களான முல்லை , குறிஞ்சி , மருதம் , பாலை , நெய்தல் என்பன , மக்களின் வாழ்வியல்புக்கேற்ப ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டன. இவையே தமிழர் நிலத் திணைகள் எனப்படுகின்றன.

காடும் காடு சார்ந்த நிலம் முல்லைத் திணையெனவும்
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை எனவும்
இவையிரண்டுக்குமிடைப்பட்ட நிலம் பாலை எனவும் (முல்லையும், குறிஞ்சியும் வளங்குன்றிய நிலை)
வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும்
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டது.

மக்கள் வாழ்வியலானது சமுகத்தில் பிரதிபலிக்கின்ற கண்ணாடியாகும் . ஒவ்வொரு மக்களும் தம் வாழ்க்கைப் போக்கிற்கேற்ற கலை, கலாசார , பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். அவற்றை வெளிப்படுத்துவனவாக இலக்கியங்கள் மாறும் போது நாமும் அதன் ரம்மியமான சுவையில் இனங்கலந்து விடுகின்றோம்.

பாலை நிலத் தலைவர் விடலை எனவும், மக்கள் எயினர் என்றும் அழைக்கப்பட்டனர். இங்குள்ள மக்கள் விடலை, மறவர், காளை , மறத்தியர் எனக் கொள்ளப்பட்டனர். பாலை நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் பிரிதல் எனவும், புற ஒழுக்கம் வாகை எனவும் கொள்ளப்பட்டது.

நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன் , துறைவன் , புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். மக்கள் சேர்ப்பன், நுழைச்சி, நுழையர், பரதவர் , பரத்தியர் என அழைக்கப்பட்டனர். நெய்தல் நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் இரங்கல் எனவும், புற ஒழுக்கம் தும்பை எனவும் கொள்ளப்பட்டது.

மருத  நிலத்தலைவர்கள் மருதன், ஊரன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.  மக்கள் மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் என அழைக்கப்பட்டனர். மருத  நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் ஊடல்  எனவும், புற ஒழுக்கம் உழி​ைஞ எனவும் கொள்ளப்பட்டது. மருதம் பற்றிய தகவல்களைத் தரும் பிற்கால இலக்கியங்கள் பள்ளு நூல்கள் ஆகும்.

அக்கால தமிழ் இலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களின் பின்னணியாக இத் திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இங்கு இயற்றப்பட்டுள்ள பாக்களை பார்க்கும் போது அவற்றின் கருக்கள் இச் சூழ்நிலையின் பின்னணியை பிரதிபலிப்பாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.

கி்பி 4 ம் நூற்றாண்டில் புலவர் மாறன் பொறையனார் எழுதிய ஐந்திணை ஐம்பது எனும் நூலில் ஒவ்வொரு நிலத்தின் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் பத்துப் பாடல்களுண்டு. இவ்வாறாக ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களுண்டு.

பாலை நில காதல் ஒழுக்கத்தினை மேவும் பா வொன்று ,

"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் ...................................................."

எனத் தொடர்கின்றது . இதன் பொருளானது ,

கலைமான், பிணைமான் எனும் இரு மான்கள் பாலை நிலத்து நீர்ச்சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல பாசங்கு செய்கிறதாம் ஆண்மான்"

என புலவர் காதல் ஒழுக்கம் பற்றிக் கூறுகின்றார்.

உண்மையில் பாலை நிலம் மிகவும் வரண்ட பூமி, இந்த இயற்கைச் சீற்றத்தின் கொடுமைக்கு ஈடுகொடுத்து  , தமக்கிடையே விட்டுக்கொடுத்து தமது காதல் நினைவுகளை மேம்படுத்தி நெருக்கமாகின்றனர் இந்நில தலைவனும் , தலைவியும் ! உண்மைதான் விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வுமில்லாத காதல் மனங்களால் நிராகரிக்கப்படுகின்றன.

இவ்வாறே நான் ரசித்த இன்னுமொரு பக்கம் குறிஞ்சிப்பாட்டாகி நிற்கின்றது. குறிஞ்சிக்குரிய பொருளை உணர்த்துவதால் குறிஞ்சிப்பாட்டு  எனப் பெயர்கொண்ட இப் பாடல்களை  கபிலர் எனும் புலவர் இயற்றியனார். இக்குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றது.

அவற்றுள் சில பூக்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.


வாழ்வின் அச்சாணி ஒழுக்கமாகும். அகவாழ்வின் ஒழுக்கம் மனதினைச் சார்ந்ததாகவும், புறவாழ்வின் ஒழுக்கம் நடைமுறை வாழ்வுடன் ஒட்டியதாகவும் காணப்படுகின்றன.

இக் குறிஞ்சி நில மக்களின் பிரதிநிதியான கபிலப் புலவரும் இம் மக்களின் அகவாழ்வு ஒழுக்கத்தினை கற்பு, வாழ்க்கை என இரு கூறுபடுத்தி, அவற்றினூடாகப் பாக்களை ஆள்கின்றார்.

நான் ரசித்த ஒரு  குறிஞ்சிப்பாடலைக் கருவாக்கி,  புலவர் எடுத்துக் கொண்ட அதன் கருத்துச் சிதையாமல் , காதல் நயம் ரசம் சொட்ட எனது  வரிகளில்  எழுதியுள்ளேன் கீழ்வரும் பதிவை!

அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல் ..........

எனத்  தொடரும் குறிஞ்சிப்பாட்டில் காதலொழுக்கம் ஆழமாகத் தொட்டுக்காட்டப்படுகின்றது

தலைவனும் தலைவியும் ஊழ்வினையால் எதிர்ப்பட்டு வாழும் நிலையில், தலைவன் தலைவியை இரவிலேயே சந்திக்க வருவான். பல பொழுதுகளில் அவர்களால் சந்திக்க முடியாமற் போகும். அத்துக்கத்தில் தலைவி மெலிந்து போய் நோய்வாய்ப்படுகின்றாள்.  அதனைக் கண்ட அவளது செவிலித்தாய் வருத்தமுற்று குறி சொல்பவரிடம் காரணம் கேட்டறிகின்றாள். தெய்வத்திடம் வழிபடுகிறாள். ஆனால் அவள் நோய் தீரவில்லை. மறுகணம் இத் துன்பத்திலிருந்து மீளும் பொருட்டு தலைவியோ, தன் தோழியிடம் தன் காதலை தாயிடம் கூறலாமா என உணர்த்த, தோழியும் அவளைப் புரிந்து கொண்டவளாய் அறத்தோடு வழி நின்று தலைவியின் காதல் விடயத்தை செவிலித் தாயிடம் , அவள் கோபமுறாத வகையிலும் , தலைவன் தலைவி எந்தக் குற்றமுமிழைக்காதவர்களாகவே இரவில் களவில் சந்திக்கின்றார்களெனவும் , அவர்களுக்கிடையில் நடைபெற்ற சகல செயல்களும் நல்வினையின் பயனே எனவும் அச்செவிலித்தாய் உணருமளவிற்கு தோழி செய்தி கூறுகின்றாள் எனத் தொடர்கின்றது இக் குறிஞ்சிப்பாட்டு!...

இப் பா  தோழியின் உணர்வுபூர்வமான சிந்தனையூட்டத்தின் மூலமே செவிலித் தாய்க்குரைக்கப்பட்டு உயிர்ப்படைகின்றன. காதலுக்கு துணை நிற்கும் தோழியே, அக் காதலின் திருமண சங்கமத்திற்கும் பாதை வகுக்கின்றாள்.

செவிலித் தாய்க்கு ,  தன்  தலைவி எவ்வாறு தலைவனைச் சந்தித்தாள் என தோழி எடுத்துக் கூறும் வரிகள்,  நாம் நேரில் சந்தித்த யதார்த்தமொன்றை நமக்குணர்த்தும் பிரமையை அனுபவபூர்வமாக  அது தந்துநிற்கின்றது.

குறிஞ்சிப்பாட்டில் நான் ரசித்த சில கருத்துக்களை முன்வைக்கும் பாக்களின் முதல் வரிகள் இவை-(..35-  251ம் பாடல் வரை)
---------------------------------------------------
நெல்கொள் நெடுவெதிர்க்கு அணைந்த யானை....(035-039)....
கலி கெழு மரமிசைச் சேணோண் இழைத்த ...........(040-045)
விசும்பு ஆடுபறவை வீழ்பதிப் படர .............................(046-053)
அண்ணல் நெடுங்கோட்டு இழி தரு தெள்நீர் ...........(054-061)
------வள் இதழ் ஒண் செங் காந்தாள் , ஆம்பல்..........(061-098)
புள்ளார் இயத்த விலங்கு மலைச் சிலம்பின் ...........(099-106)
எண்ணெய் நீவிய சுரி வளர் .............................................(107-116)
பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி ....................(117- 127)
முனை பாழ் படுக்கும் துன்னருந் துப்பின்..................(128-134)
மாறு பொருது ஓட்டிய .....................................................  (135- 142)
அதன் எதிரே............................................................................(143-152)

உண்மையில் காதலென்பது ஓர் வசீகர உணர்வு..இவ்வுணர்வுக்குள் மதிமயங்கும் ஆன்மாக்கள், தம் புறவுலகை மறந்து சொர்க்கபுரியாக விளங்கும் காதலுலகினுள் அமிழ்ந்து விடுகின்றனர். நண்பர்கள், உறவினர், குடும்பம் சுற்றுப்புறம் யாவருமே அந்நியமாக, தாம் நேசம் கொண்டவரையே, தம் உலகாக வரித்து வாழ முற்படுகின்றனர். காதல் போற்றும் பல இலக்கியங்களிலும் இப் பண்பு சிதைக்கப்படுவதில்லை. கவிகளினூடாக புலவர்கள் இவற்றை அழகாக எடுத்தியம்புகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டின் பத்துப் பாடல்களுள் ஒரு பாடலைத் தெரிவு செய்தேன். அதில் ஒளிந்திருக்கும் காதலின் சிலிர்ப்பைக் கண்டு  நானும் உவத்து, ரசித்து அதனை உங்கள் பார்வைக்குள்ளும் எத்திவைக்கின்றேன் இதோ  .
தலைவியின் அன்பான காதலையும் , ஆழமான உணர்வோட்டத்தையும், நாமும் ரசிக்கலாம்..........ரசிப்போமா! இங்கு புலவர் சொன்ன தன்கூற்று  நடையை ,,என் மொழி வழக்கில் பிறர் கூற்றாக்கி மாற்றி, புலவரின் கவிக் கரு சிதையாமல் என் மொழிநடை யில் உங்களை அழைத்துச் செல்கின்றேன் இந் நாயகியை தரிசிக்க.......... 

மென்மையான தலைப் பகுதியைக் கொண்ட வளைந்த பெரிய கதிர்களைக் கொண்ட தினையை, திண்பதற்காக வரும் கிளி போன்ற பறவைகளை விரட்டும் காவலில் ஈடுபடுவதற்காக , ஆரவாரமிக்க மரத்தின் மேல் பரண் ஒன்றையமைத்து , அதிலமர்ந்து எந்த கருவியில் எப்படி இசைத்தால் பறவைகள் விரண்டோடுமோ, அவ்வாறு அதற்குரிய சில இசைக்கருவிகளான தழல், தட்டை, குளிறு , கவண் போன்ற இசைக்கருவிகளால் இசையெழுப்பிக் கொண்டிருந்தாள் தலைவி . அது  வெப்பமான உச்சிப் பொழுது. அவளெழுப்பிய ஒலி கேட்டு கிளிகள் மிரண்டோடின. அந் நண்பகல் நேரம் வெப்பப் பொழுது திடீரென மாற்றம் பெற, இடி, மின்னலுடன் கூடிய  மழை மலையின் மீது பெய்தது. தலைவியும் அவள் தோழியும் நனைந்தனர். ஆனால் அந்நனைவு அவர்களுள் மகிழ்வைப் பிரட்டிக் கொடுத்தது.

மலையுச்சியிலிருந்து பளிங்கினைச் சொரிவதைப் போல் வீழும் வெள்ளருவியில் அவர்கள் மனமகிழ்ந்து ஆடிப்பாடினார்கள். . அவளோ கூந்தல் கவர்ந்தெடுத்த நீரினைப் பிழிந்து ஈரம் உலர்த்தி மீண்டும் மீண்டும் .  நீரிலே விளையடியதால் அவள் கண் உள்ளிடமெல்லாம் சிவந்தது

மழை நின்ற பொழுதில், அந்த அடர்ந்த காட்டின் பல பகுதிகளிலும் மனமகிழ்ச்சியோடு உலாவித் திரிந்து, ஆசையோடு பல மலர்களைப் பறித்து , மழை பெய்ததால் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட அகன்ற மலைப் பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தாள். குறுக்கிட்டுக் கிடந்த பக்க மலையெங்கும் பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. அவ்விடத்தே, கூர்மையான ஓசையோடு தெளிந்த சொற்களை இடையிடையே கூறி கிளிகளை விரட்டத் தலைவி தவறவில்லை.

சேகரித்த மலரிதழ்களை ஒன்றாகக் கோர்த்து , தான் அணிந்திருந்த தழையாடைக்கு ஏற்றவாறு சரி செய்து கட்டிக் கொண்டாள். பல்வேறு நிற மலர்களால் மாலை கட்டி, மென்மையான கொண்டையில் அழகாகச் சூட்டி அலங்கரித்தவளாய்  , தன் தோழியுடன் அசோக மரத்தின் குளிர்ச்சியான நிழலில் அமர்ந்தபோது...................!

அவனைக் கண்டாள். அவன் எண்ணெய் தடவி சுருண்டு வளர்ந்திருந்த தனது தலைமயிரில் , மணம் வீசும் அகில், சந்தனம் போன்றவற்றை பூசி மணக்கப்பெற்றவனாகவும், தலைமயிரின் ஈரத்தை தன் விரல்களால் நீவியும், கரிய அகிலையிட்டு உண்டாக்கிய புகையினாலும்  உலர்த்துபவனாகவும் இருந்தான். அத்துடன் மலையிலுள்ள பல்வேறு வண்ணங்களாலும் குணங்களாலும் ஆன மலர்களைக் கொண்டு, தயாரிக்கப்பட்ட குளிர்ச்சியான மணம் வீசும் மலர்மாலையையும் அணிந்திருந்தான். அவற்றுடன் அவனைக் கண்டவர் அச்சப்படும்படியாகவும் வெண்தாழை மடலான மாலையினையும் அழகாக தலையில் சூடியிருந்தான்.

அவன் காதில் செருகியிருந்த அசோகத் தளிர், அவனின் திரண்ட தோளில் அசைந்து கொண்டிருந்தது.  அவன் அழகிய மார்பில் அணிகலன்களும், மாலைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிவந்த இரேகைகள் உடைய உள்ளங்கைகளுக்கேற்ற இறுகி பருத்த முன்கையில் , வில்லை ஏந்தியிருந்தான். அம்புகளை அசைவில்லாதவாறு கோலமிடப்பட்டிருந்த துணிப்பையில் பிணைத்திருந்தான்.

அப்போது . பகைவர்களின் இடங்களைப் பாழ் செய்யும், நெருங்குதற்கரிய வலிமையும் மிகுந்த சினமும் , கூரிய வாள் போன்ற பற்களையும் , கூர்மையான நகங்களையும் கொண்ட நாய்கள் தலைவியின் இருப்பிடத்தை நோக்கி வந்தன. அவற்றைக் கண்டு நடுங்கிய அவர்கள், அச்சத்துடன்  இருந்த இடத்திலிருந்து எழுந்து யாதும் செய்ய முடியாத நிலையில் மனம் வருந்தினார்கள்.

அப்போது அவன் அவர்களின் தடுமாற்றத்தைக் கண்டு அருகில் சென்று, அவர்கள் அச்சம் தீரும் வகையில் மென்மையாகப் பேசி , அவள் அழகினையும் கூந்தல், கண்கள் உள்ளிட்ட உடலழகையும் புகழ்ந்தான்.

"என்னிடமிருந்து தப்பிச்சென்ற விலங்கொன்று இவ்வழியால் போனதோ "

எனத் தலைவியின் விழிகளைப் பருகியவாறு வினவினான்.

அவளோ, இயற்கை ஆக்கிரமித்த நாணத்தினால்  பதிலேதும் சொல்லாமல் மௌனித்துக் கிடந்தாள். அவள் மௌனம் அவனை வருத்தியது. மனம் வருந்தியவாறு

"என்னிடம் பேசுவது குற்றமோ "

என்றான். பின்னர் வலிந்த மரக்கிளையொன்றை உடைத்து  அந்நாய்களை தேடியடக்கிய பின்னர், அவர்களுடன் பேசும் ஆர்வத்தில் மீண்டும் அவளை நெருங்கி, பேசும் வார்த்தைகளுக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் உதடுகள் அசையவேயில்லை. அவனுள் ஏமாற்றம் வழிந்தது.

மௌனமாக  நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன ,

தினைத்தாள்களால் நாட்டப்பட்டிருந்த குடிசையொன்றில் காவலிருந்த கானவன் ஒருவன், தன் எழிலான மான் போல மிரளும் தன் மனைவியின் பார்வையினால் ஈர்க்கப்பட்டவனாய்,  அவள் மீதுள்ள காதலால் தன் தொழில் மறந்து அவளுடன் கூடினான், காதலில் மலர்ந்த  குலைவு அவன் காவலை மறக்கடித்தது . அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் தினைப்புனத்தில் புகுந்த யானை எல்லாத் தானியங்களையும் உட்கொண்டது. தினை ஓரளவு எஞ்சிய நிலையிலிருக்கும் போதே , மோகித்திருந்த அந்தக் கானவன் சிந்தை தெளிந்து, ஒலி எழுப்பி யானையை விரட்டினான்.

விரட்டப்பட்ட யானை சினங்கொண்டு, அவளிருப்பிடத்திற்குள் நுழைந்தது. எதிர்பாரதவிதமாக அவளை  நோக்கி , மதங் கொண்ட யானையாக வருவதைக் கண்ட அவள்  , அச்சமுற்று தன் நாணங் கலைத்து , தனது பதிலுக்காக காத்திருக்கும் அவனருகே போய் நின்றாள் . அவன் தன்னைப் பாதுகாப்பான் எனும் நம்பிக்கை அவளுக்குள் வலிமை பெற்றது.

அவன் முகத்தை அச்சம் பிசைய விழிகளால் துலாவினாள். விழிகள் நான்கும் ஓர் நொடியில் சந்தித்து மீண்டன. அச் சிலிர்ப்பின் உத்வேகத்தில்.அவனும் , தன்னுள் சிறைப்படுத்தியிருந்த வில்லையெடுத்து, அதில் அம்பைச் செருகி யானையின் நெற்றியில் குறிபார்த்து தன் அம்பைச் செலுத்தினான். தாக்கப்பட்ட யானையின் நெற்றி சிதைந்து முகத்திலிருந்து  குருதி வழியும் நிலையில் அது புறமுதுகிட்டோடியது. அவள் பெருமூச்செறிந்து நன்றியுடன் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையை விழுங்கிய அவனும் புன்னகையை மெல்ல அவளுள் பரப்பினான். நாணத்தால் அவள் முகம் கவிழ்ந்தது. இருதயத்தில் ஓர்மூலையில் அவன் நினைவுகள் கௌவிக் கொண்டன. தன் பார்வையைத் தாழ்த்தி மறைவாக அவனை ரசித்தாள்.  ஆனாலும் அவள் கரங்கள் இன்னும் அவள் தோழியின் கரத்துடன் பிணைத்துக் கொண்டிருந்தன. உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

"அழகிய கூந்தலையுடையவளே , அஞ்சாதே , உன் அச்சம் போக்க இனி நானிருக்கின்றேன் "

எனக் கூறியவாறு, அவளை அவன், அவள் தோழியின் பிடியிலிருந்து தளர்த்தி, தலைவியின் நெற்றியில் வடிந்த வியர்வைத்துளிகளை தன் கரத்திலேந்தி மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான் அவள் நாணத்தையும் பொருட்படுத்தாதவனாய்..........!அவள் நாணிப் புன்னகைத்தவறே அவனிடமிருந்து விடுபட நெளிந்தாள்.

அச்சமும் நாணமும் அவளை ஆட்கொள்ள, அவனின் பிடியிலிருந்து நழுவ முயற்சித்தும். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் மார்பு, தன் மார்புடன் பொருந்த , இறுக்கியணைத்தான். உஷ்ணம் மூச்சுக்காற்றிலடங்கி, இடமாறத் தொடங்கின. கூடவே காதலும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டது அவர்களுக்குள்!.

அவன் மலைநாட்டுத் தலைவன், இயற்கையை வசீகரித்து வாழ்பவன், செல்வச் செழிப்பினன், பண்பானவன், அவள் மனமறிந்து, தன் காதலைப் பற்றி எடுத்துக்காட்டி, அவள் விரும்பும் விதத்தில் அறம் சிதையாத இல்லறம் பற்றிப் பேசினான். அவளும் மகிழ்வோடு தன் துணையாக அவனை வரித்துக் கொண்டாள். மனங்கள் பேசத் தொடங்க வானமும், பூமியும் மலர்கள் துவி வாழ்த்தின. அவளைப் புரிந்தவளாய் தோழி விலகிச் செல்ல, அவள் அவனின் அன்புக்குள் கட்டுண்டாள்..

மிதமான மகிழ்வில் தலைவன் பருகிய அருவி நீரில் கூட கள் கலந்து அவனை போதைப்படுத்தியது. மகிழ்வின் உச்சத்தில் இறக்கை கட்டி பறந்தனர் அச்சோடியினர். அவள் அவனுடன் தன் இராப் பொழுதைக் கழித்தாள்.

ஒருமித்த மனங்களின் அன்றைய அந்தச் சந்திப்பே, இறுக்கமான இதமான காதலாக முகிழ்த்தது.  கூடலில் கழித்த அவள் பொழுதுகள் விடிந்தன. அவன் பிரியப் போகும் தருணத்தை எண்ணி வருந்தினாள். அவனோ ஊர், சுற்றமறிய  விரைவில் அவளை மணந்து , தன்னிருப்பிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அவளது இருப்பிடத்தில் அவளை நிறுத்தியவனாக, அவளைப் பிரிந்து சென்றான்.

அவள் கண்ணீரில் நனைந்து நின்றாள். ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட வலிமையான அன்பு அவள் மனநிலையின் இயல்பைக் குலைத்த போது வாடி நின்றாள்.

நாட்கள் விரைந்தன. அவர்களின் சந்திப்பும் இரவில் களவாக ரகஸியமாகத் தொடர்ந்தது. யாருமறியாது களவில் அவளை இவன் சந்திப்பது ஒழுக்கமற்ற செயல் என தலைவி நினைந்து விலக முற்பட்டாலும் கூட, அவனைச் சந்திக்காமல் அவளால் இருக்கமுடியவில்லை. சில பொழுதுகளில் அவன் சந்திக்காமல் செல்லும் இரவுகளில் இவள் சிந்தும் கண்ணீர் மார்பை மட்டுமல்ல, இரவின் நிழலினையும் ஈரப்படுத்தியது. அவளழகை அழிக்கும் இந்தத் துன்பம் அவளுக்குச் சொந்தமாகிப் போனது.

அவன் அவள் உயிர்..! .நல்ல குலத்தில் பிறந்தவன். அன்பு சிந்தும் காதலில் வெறும் காமம் மட்டும் கலப்பவனல்லன். அவன் ஒருபோதும் ஏமாற்றமாட்டான். தன் பரிவாரங்களுடன் அவளை தனக்குள் உரிமையாக்க நிச்சயம் வருவான். அவள் மனதிலிருந்து அவன் சிந்தும் காதல்த்துளிகள் நிஜமானவை !

ஆனால் அவளின் இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவனது பிரிவுத்துயராக இருந்தாலும் கூட, அவன் அவளைச் சந்திக்க  வரும் காட்டுப்பாதையில் வாசம் செய்யும் சிங்கம், கரடி, புலி போன்ற கொடிய மிருகங்களால் இவனுக்கேதும் இடர் ஏற்பட்டிருக்குமோ , அதனால்தான் அவன் சந்திக்க வரவில்லையோ எனும் துக்கத்தில் இடைக்கிடையே கரைந்து கொண்டிருக்கின்றாள் இக்கன்னி!

காதல் அழகானது.......அழிவில்லாதது........!


2 comments:

  1. நற்றமிழ் பகிர்வு. தொடரட்டும் தமிழின் சிறப்பு!

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை