About Me

2012/08/26

எனது தந்தை




என் தந்தையைப் பற்றிய சில நினைவு வரிகள்

என் தந்தையாகிய ஒசன் சாய்பு முஹம்மது அப்துல் கபூர் அவர்கள், (O.S.M.A), யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், வண்ணை தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று, முதல் நியமனமாக அரச பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் நியமனம் பெற்றுச் சேவையாற்றினார்.  சில காலங்களின் பின்னர் பொலீஸ் சேவையிலிருந்து விலகி, ஆங்கில உதவியாசிரியராக ஆசிரியவுலகில் இணைந்தார்.

அட்டாளைச்சேனை  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்  பயிற்றப்பட்ட  தமிழ்மொழி ஆசிரியராக பயிற்சி பெற்றாலும் கூட, தெரிவுப்பரீட்சைக்கு தோற்றி, சித்தியடைந்ததன் மூலம் ஆங்கிலப் பயிற்சி தராதரப்பத்திர ஆசிரியராக நியமனம் பெற்றார். ஆசிரியர் சேவையில் சிறப்பாக சேவையாற்றிய பின் , அதிபர் சேவைக்குள்ளீர்க்கப்பட்டு  , ஓய்வுபெறும் போது முதலாம் தர அதிபராக பதவி வகித்தார். 

யாழ்ப்பாண கல்வித்திணைக்களத்திலும், இடம்பெயர்ந்த பின்னர் வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்திலும்  இணைப்புச் செய்யப்பட்டிருந்தார். வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்தில் 5 வருடங்கள் பணியாற்றினார்.

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆங்கில உதவி ஆசிரியராக தொடரப்பட்ட இவரின் முதற்சேவை, பின்னர் யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் ஒஸ்மானிக்கல்லூரி, அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் என ஆசிரியத்துவப் பணிக்காக விஸ்தரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடமொன்று தோற்றம் பெற என் தந்தையாற்றிய பங்களிப்பும் மறக்கமுடியாதது.

மண்கும்பான் முஸ்லிம் பாடசாலை, யாழ்ப்பாணம் அல்ஹம்ரா முஸ்லிம் பாடசாலை, வவுனியா சூடுவெந்தபுலவு  மு.வி, முல்லைத்தீவு மு.வி என்பன தந்தை அதிபராகக் கடமையாற்றிய சில பாடசாலைகளாகும்.

தந்தை சிறந்த இலக்கியவாதி. ஆனால் அவர் நூல் பதிப்பில், தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் பெரிதும் அக்கறை காட்டவில்லை.  இதற்கு அன்றைய யுத்தச் சூழலும் காரணமாக இருந்திருக்கலாம். அவர் எழுத்துக்களே என்னையும் சிறிய வயதில் எழுதத் தூண்டின.

நல்ல மேடை நாடக நடிகர். படிக்கும் காலத்தில் பல மேடை நாடகங்களில் அவர் திறமைகள் வெளிப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்ணை ஏ.எஸ். மணி அவர்களின் நட்டுவாங்கத்தில் பல மேடை நாடகங்களை நடித்துள்ளார். அவற்றுள் சில "உயிர்காத்த உத்தமன்", " தோட்டக்கார மகள்" "கற்சிலை" ,போன்றவையாகும். இவற்றுள் கற்சிலை என்பது தந்தையால் எழுதி இயக்கப்பட்ட நாடகமாகும். அன்றைய நாட்களில் ஏ.எஸ். மணி அவர்களின் மேடை நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்று, மக்கள் அபிமானத்தை வென்றவையாக இருந்தன. 

அட்டாளைச்சேனையில் ஆசிரியராகப் பயிற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் , அங்கு நடைபெற்ற கலைவிழாவில் இடம்பெற்ற சித்திரப்போட்டி, விஞ்ஞானப் போட்டி, நடிகர் போட்டி போன்ற  3 கலைவெளிப்பாடுகளிலும் முதலாமிடத்தைப் பெற்று பரிசில்களை வென்றுள்ளார்.

முதலுதவிப் பிரிவு ஆசிரியராகவும், சாரண இயக்க ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். 

சிறந்த பாடகர்...கற்கும் காலங்களில் பாடசாலை மன்றங்களில் தந்தையின் பாடல் இடம்பெறாத நாட்களே  இல்லையென்றே சொல்லலாம்.

சிறந்த ஓவியர். அவரின் ஓவியங்கள் பல வரையப்பட்டிருந்த ஆல்பம் என் பிஞ்சு வயதின் ரசிப்பை பல தடவைகள்  வென்றிருக்கின்றன. இத்தனை வருட கால உதிர்விலும் கூட, என் மனக் கண்ணில் அவை வந்து வந்து போகின்றன. அவர் வெள்ளைச்சங்குகளின் மேற்பரப்பில் செதுக்கிய  பல அரபு எழுத்தணி வடிவங்கள் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும் விடயங்கள்!.

கைவைத்தியம் உட்பட தன் சுயமுயற்சியால் பல துறைகளைத் தானாகவே கற்றுத்தேர்ந்தவர். வானொலி திருத்தம், தொலைக்காட்சிப் பெட்டித் திருத்தம், கணனி போன்ற உபகரணங்கள் திருத்தம், வீட்டு மின்னிணைப்பு வேலைகள், அன்ரனா தயாரிப்பு, பிளாஸ்டர் தயாரிப்பு போன்ற பல துறைகள் அவர் கைதேர்ந்த துறைகளாகும்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் முன் முகப்புத் தோற்றம் அவரின் ஓவியத்திறனால் உயிர் பெற்றதொன்றாகும். இதனை "யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு" நூலில் அதனாசிரியர் ரஹீம் ஆசிரியரவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அவ்வாறே யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் தோற்றத்தையும் தந்தையே வரைந்து, அத்தோற்றத்திலேயே பள்ளிவாசலைக் கட்டிமுடிக்க பெரும் பங்களிப்பாற்றியதை அன்றைய யாழ் முஸ்லிம் சமூகம் மறந்திருக்க மாட்டார்கள். வரையப்பட்டிருந்த பள்ளிவாசலின் தோற்றம், அன்றைய காலங்களில் சித்திரமாக பள்ளிவாசலின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்ததை நானே பல  தடவைகள் அவதானித்துள்ளேன்.

அவ்வாறே வி.எம்.முஹீதின் தம்பி அவர்களின் தலைமையில் இயங்கிய யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் கட்டிடக் குழுவின் செயலாளராக இருந்த காலத்தில், யாழ் முஸ்லிம் சமுகத்திற்கு பெரும் சேவையாற்றினார்,. அவரது நிர்வாகக் காலத்திலேயே யாழ்ப்பாண முஸ்லிம் மையவாடி, பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. வக்பு சபைக்கான பணத்தையும் அவர் முன்னின்றே அனுப்பி வைத்தார்.

"ஒன்றே ஜூம்ஆ' சமூக எழுச்சியிலும் போராட்டத்திலும் தந்தையின் பங்களிப்பு அன்றைய கால கட்டத்தில் முக்கியமானதொன்றாக விளங்கியது.

வெள்ளிப் பேழையாலான தீப்பெட்டி அளவினாலான  திருக்குர்ஆன்  உள்ளிட்ட  பல பரிசில்களும் சான்றிதழ்களும்,  குர்ஆன் மனனம், பேச்சுப் போட்டி உள்ளிட்ட  பல  போட்டிகளில் பங்குபற்றி வென்றுள்ளார்.

அன்றைய நாட்களில் இந்திய அமைதி காக்கும் படையினர் , யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தில், எமது பிரதேச மக்களுக்காக என் தந்தை சேவையாற்றியதை அம் மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

பல வருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  ஈழநாடு பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அவ்வாறே பல வருடங்களாக நல்லூரில் இயங்கி வந்த யாழ்ப்பாண பல நோக்கு கூட்டுறவுச்சங்க நிர்வாகக் குழுவிலும் முகாமைத்துவ அங்கத்தவராகப் பணியாற்றினார்..

மொழித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களப் பரீட்சையின் மூலமாக இரண்டாம் மொழி ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டார். மூன்று மொழிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கியமையால்  அவரது அறிவுத்துறைப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் சிறந்த ஆங்கிலப் புலமை என்னை பல தடவை வியக்க வைத்துள்ளது. 

அன்றைய நாட்களில், கப்பல் - துறைமுக அமைச்சு நடத்திய "மொழி பெயர்ப்பிற்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையில்" சித்திபெற்று ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட, சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அப் பதவியினையேற்கவில்லை. எனினும் வடமத்திய மாகாண சபையினால் வழங்கப்பட்ட ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.

புனித அல்குர்ஆன் , ஹதீஸ்கள், நபி வரலாறுகள் உள்ளிட்ட  மத சார்பான நூல்களும் ,  மருத்துவம் , இலக்கியம் , ஓவியம் , சரித்திரம் , அரசியல், தமிழ் இலக்கியங்கள், அரசியல், குடிசைக்கைத்தொழில்கள்  உள்ளிட்ட பல வகையான நூல்களும்   எங்கள் வீட்டிலுள்ள தந்தையின் நூலகத்தில் நிரப்பப்பட்டிருந்த நூல்களாகும்.

தனது தீர்மானத்தை, எண்ணத்தை உறுதிப்படுத்த, நிறைவேற்ற அதிக சிரத்தை எடுத்து தந்தை செயலாற்றும் பாங்கு எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று.அவரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் முன்னாயத்தம்...எதனையும் திட்டமிட்டே நேர காலத்துடன் செய்ய முயற்சிப்பார்.

தந்தையின் வழிப்படுத்தலில் நான் சிறிய வயதிலேயே அகில இலங்கை ரீதியிலான ஹிஜ்ரா கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று, அன்றைய ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜயவர்த்தன  அவர்களிடம் பரிசில் பெற்றேன். அவ்வாறே அன்றைய  போக்குவரத்து அமைச்சர் ஜனாப் முகம்மது அவர்களின் கரங்களால் பேச்சுப் போட்டியிற்கான பரிசில்களைப் பெற்றதும் மறக்கமுடியாத அனுபவமாகும். 

அவ்வாறே ஸாஹிரா வெள்ளி விழா மலரில் இடம்பெற்ற  "யாமறிந்த மொழியிலே" எனும் எனது கட்டுரையும் அவர் வழிகாட்டலில் நானிட்ட பதிவாகும்.

அவர் அன்று பெற்ற விருதுகள், வரைந்த அழகான ஒவியங்கள், கையெழுத்துக்களில் பொறித்திருந்த பல இலக்கியப் பதிவுகள், தந்தையின் சாதனைகளைச் சுமந்து நின்ற பத்திரிகைச் செய்திகள், அவரெழுதிய நாடகப்பிரதிகள் , அவரது சேவையை நினைவு கூறும் புகைப்படங்கள் போன்ற பல ஆவணங்களை, யாழ்ப்பாணத்திலிருந்தான எம் இடப்பெயர்வும், யுத்தமும் விழுங்கிவிட்டன.


இவ்வாறாக தன்னுள் பல சாதனைகளை வைத்துக் கொண்டு, அவற்றை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தல் மூலம் எத்தி வைக்காது, சுருங்கிய தன்னுலகமான தன்குடும்பத்திற்குள்ளும், தன்னுறவுகளுக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும், யாழ் பிரதேச எல்லைகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தியவாறு வாழ்ந்த என் தகப்பனாரின் சாதனைகளை, அவரை நன்கறிந்தவர்கள் மறுக்கப் போவதில்லை. அவை ஏடுகளில் பொறிக்கப்படாவிட்டாலும் , மனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவருக்கும் சீரீசீ குழுமம் நினைவுச்சின்னம் வழங்கி, அவரை வாழ்த்தியிருக்கும்  இச் சந்தர்ப்பத்தில் தந்தையின் சாதனை கலந்த நினைவுப்பாதையை நானும் இப்பதிவினூடாகத் தரிசிப்பது, அவருக்கான எனது வாழ்த்தாக இருக்கும் என்பதாலேயே இப் பதிவை இடுகின்றேன்.

நல்ல மனங்களின் வாழ்த்துக்கள் பூத்தூவ, அவர் ஆரோக்கியம் என்றும் சிறப்பு நிலை பேண, வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் !

- Ms.A.C.Jancy -
.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!