About Me

2012/08/31

கடலோரம்.........


---------------------------------------------
ஒரே கற்பனைக் கரு...
வெவ்வேறு சொற் வருடல்.....

மூன்று  கவிதைகளாயிங்கு!
---------------------------------------------

எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றது
அலைகள்...................
மணற் முத்துக்களையும் கோர்த்தபடி!

குவிந்து கிடக்கும் வானில்
"ஒட்டரை"ப் படையாய் .............
கொட்டமடிக்கின்றன முகிற் படைகள்!

கதிர் பரப்பி வீழ்ந்து கிடக்கும்
சூரிய பிம்பம்...............
சூட்சுமமாய் சூடேற்றுது கடலை!

வளைக்குள் சிறையிருக்கும்
கரையோர நண்டின் கோலம்
வரையத் துடிக்குது என் காலில் மெல்ல!

வெட்டியாய் ஊர்சுற்றும்
வெட்கங் கெட்ட காற்றும் - பல மேனி
தொட்டு  சில்மிஷம் பண்ணத் துடிக்குது!

காலை வருடும் கடற்சாதளைகள்
நுரை நீரில் எட்டிப்பார்க்கையில்
கூதல் சுண்டியிழுக்குது நரம்புகளை!

விடிகாலை கரைதேடும் - பாய்
மரக்கலங்கள் நாடுகின்ற என்னருகே
கரமசைத்தே மகிழ்வாய்!



எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றன
அலைகள்...........
மணற் பாயில் சுருண்டபடி!

வில்லொடிக்கும் வானில்
அம்புகளாய் மேகக் கூட்டங்கள்!

காற்றுவேலிக்குள் சிறைப்படும்
இயற்கையென் காதலாகி கசியும்!

மணற்கரையில் குடியிருக்கும்
வாண்டுகளாய் சிறு நண்டுகள்!

உப்பு நீரில் விழுந்தெழுகின்ற
வெப்புச் சூரியன் குளிக்கின்றதோ இதமாய்!

வானுக்குள் நூல் கட்டி ...........
நானிட்ட தூதாய் கொக்குப் பட்டமொன்று!

நுரைநீரில் எட்டிப் பார்க்கும் சாதளைகள்
திரையிட்டுக் கிடக்கும் கால்களை!

பாய் விரித்தே கரையொதுங்கும் வள்ளங்கள்
ஹாய் சொல்லி மீன் நிரப்பும் பையில்!




எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றது
அலைகள்...........
மணற் முத்துக்களையும் அணைத்தபடி!

வில்லாய் ஒடிந்து கிடக்கும் வானில்
வெள்ளை மேகப் படையெடுக்க !
விரட்டியடிக்கும் வில்லனாய்......
பரபரப்பாகுது காலைத் தென்றல்  !

கரையோரம் நடைபயின்றே - வளைக்குள்
சிறையிருக்கும் நண்டுக் கூட்டம்......
சீண்டுதே என் கால் பிராண்டி
"அண்டவோ" என் அருகாமைக்காய்!

உப்பு நீரில் விழுந்தெழுகின்ற
வெப்புச் சூரியன் கதிர் கண்டே......
அப்பப்பா மீன்கள் நழுவ இடம்தேடி
தப்பிக்க ஓடுதே  அம்மம்மம்மா!

வானேறும் கொக்குப்பட்டம் ..........
பாரெட்டிப் பார்க்கையிலே- என்
கரந்தொடுத்த நூற் கற்றையும்
பறந்தேறத் துடிக்குது மெல்ல!

காலை முகரும் "சாதளைகள்"
நுரை நீரில் முகம் பார்க்க................குளிரில்
விறைத்த என் மேனி கொஞ்சம்
முறைத்து முணுமுணுக்குது மெலிதாய்!

விடிகாலை கரையொதுங்கும் - பாய்
விரித்தே காற்றிலாடும் வண்ண.....................
மரக் கலங்கள் எனைப் பார்த்தே
கரமசைத்து மணற்றரை வருடுகின்றது!


ஜன்ஸி கபூர் 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!