ஏதேதோ நினைவுகள்


ரெட்டை ஜடை கட்டி சிட்டாக பறந்து திரிந்த அந்த பசுமை மிகு அந்த பிள்ளைப் பருவம் ஏனோ இன்று நினைவுக்குள் வருகின்றது..வாழ்க்கைச் சுமை மறந்த , எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருக்காத அந்த வயதில், நாம் பண்ணிய குறும்புத் தனங்களும், விளையாட்டுக்களும் செயல்களும் ரொம்பவே மறக்க முடியாத நினைவலைகள்தான்!
....அந்த நினைவுகளில் ஒன்றுதான் இன்றைய ஸ்பெஷலாய் உங்களுக்குள் வருகின்றது....

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்திருந்தேன்..ரொம்ப அமைதியான டைப். யாருடனும் வலிந்து பேச மாட்டேன். என் நெருங்கிய நண்பிகள், உறவினர்களைத் தவிர...........

வயதுக்கு மீறிய சற்று குண்டு உடம்பும், நீளமான தலை முடியும், கல்வியில் நான் காட்டிய சுட்டித்தனமும் எல்லோர் பார்வையையும் என்னுள் விழ வைத்திருந்தது. நீல நிற "சொப்பர்" பைக் தான் என்னுலகின் இறகுகள். அந்த சைக்கிளிலில் பாடசாலை, முஸ்லிம் கொலிஜ் வீதியிலிருந்த உமம்மா வீடு என பறந்து திரிவேன்.  எனக்கு கச்சான் ரொம்பப் பிடிக்கும் என்பதால், இடைக்கிடையே கொலிஜ் வீதியில் இருந்த சித்திக்கா ராத்தா வீட்டுக்கும் போய் கச்சான் வாங்கி வருவேன். எப்போதாவது ரோஜா வீட்டுக்கும் (அமான் மாஸ்டர்) , சபீல் வீட்டுக்கும் (சலீம் மாஸ்டர்) விளையாடச் செல்வேன்..றவூப் காக்கா கடையும் அடிக்கடி என் கால் பதியும் வாசற்றலங்களாகும் .இதுதான் என் அன்றாட செயற்பாடுகள்!

எங்கள் வீடு யாழ்ப்பாண ஜின்னா வீதியில் இருந்தது. வீட்டிலிருந்து 5 வீடுகள் தள்ளினால் ஒஸ்மானியாச் சந்தி. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் ஆடு, மாடு போன்ற கால் நடைகள் அதிகமாக இருக்கும். அவற்றுக்கு தீனி போடுவதற்காக புல் வியாபாரமும் நடக்கும். முஸ்லிம் கல்லூரி வீதியும், ஜின்னா வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள ஒஸ்மானியாச் சந்தியில்தான் ஆட்கள் ஒன்றுகூடி ஏதாவது ஊர்ப் புதினங்கள் பேசுவார்கள்.

உங்களுக்கு போரடிக்காம இருக்க , பேச்சு வழக்கில இந்தப் பதிவத் தாறன்....சரியா.......

சனத்தால் நிரம்பி வழியும் அந்த இடத்தில்தான் "புல்லு" ஆச்சியும் தனது புல் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தா. அவக்கு பக்கத்தில அவட ஒற்றை மாட்டை சுமந்து கொண்டிருக்கும் மாட்டுவண்டிலும் கட்டப்பட்டிருக்கும். புல்லு ஆச்சியிட காது தோடு போட்டு இழுபட்டு தொங்கிக் கொண்டிருக்கும். மூக்கிலயும் சின்ன மூக்குத்தி . களையா ரொம்ப அம்சமா......ஆனா அவ ரொம்பக் கறுப்பு. அவட ஊரு இந்தியான்னு ஆக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறன். என்னடா ஆச்சிய இழுத்து விடுறாளேன்னு யோசிக்கிறீங்களா..........வெயிட் பண்ணுங்க......என்ர கதயில அவவும் ஒரு கதாநாயகிதான்.

எங்க வீடு ஜின்னா றோட்டில இருந்துது. ரெண்டு வாசல்.ஒன்னு கேட் போட்டிருந்தது. அத நாங்க பெரிசாகப் பாவிக்கிறதில்ல. மற்ற வாசல் கதவத்தான் நாங்க பாவிச்சம். அந்த கதவு முன்ஹோலோட சேர்ந்திருந்துது. அந்த ஹோலில தான் வீட்டுக்கு வாற நல்ல தண்ணீ டாங்கும் இருந்துது. அது தண்ணீ டாங்குதான்..ஆனா ஊரடங்கு சட்ட நேரங்களில நான் அதில ஏறித்தான் றோட்டில ஆமி போறத "விடுப்பு" பார்ப்பன். அது ஒரு அழகான கனாக்காலம்தான்.

அந்த தண்ணி டாங்க மூடி அதுக்கு மேல என்ட சின்ன பைசிக்கிள ஏத்தி வைச்சிருந்தம். அந்த பைக்க என் சின்ன தங்கச்சி ஓடிக் கொண்டிருந்தா( இப்ப அவ டாக்டர்)

ஒருநாள் வீட்டுக்கு ஹதியா கேட்டு அந்தப் பெரியவர் . வந்தார். "அவர் முந்தி வசதியோட இருந்தவராம். பாவம் மனுஷன் கொஞ்சம் கஷ்டப்பட்டு பொயிட்டார்." உம்மா சொல்லித்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும். அவருக்கு ஹதியா குடுத்தனுப்பினது நான்தான். அவர் கொலிஜ் றோட்டிலதான் இருந்தார்.

மாலை 6 மணி இருக்கும். ஏனோ எனக்கு கச்சான் தின்னுற ஆச வந்திட்டுது. உம்மாவ அலட்டி ஒரு ரூபா வாங்கிக் கொண்டு, குட்டி சொப்பர் பைக்கையும் மிதிச்சுக் கொண்டு சித்திக்கா ராத்தா வீட்டுக்கு போய் கச்சான் வாங்கினேன். என்னட்ட உள்ள நல்ல பழக்கம் றோட்டில வச்சு எதையும் சாப்பிட மாட்டன். ஆசய அடக்கிட்டு வீட்டுக்கு வந்துதான் ஒரு பிடி பிடிப்பன். அப்படி வரும்போது, ஏனோ புல்லு ஆச்சிய பார்த்திட்டன். அவட பக்கத்தில நின்ற அதையும் பார்த்திட்டன்......

அடடா...........என் ஹார்ட் வேகமாக அடிக்க ஆரம்பிச்சுது. புல் ஆச்சி வீட்டுக்கு போக ரெடியாகிறத கண்டதும் டென்ஷன் இன்னும் கூடிட்டுது. பாஸ்டா வீட்டுக்கு ஓடி விசயத்தச் சொன்னன் வாப்பாட்டா..........

"வாப்பா......புல்லு ஆச்சிட்ட நம்ம சின்ன சைக்கிள் நிக்குது"

வாப்பாவும், உம்மாவும் அது இருந்த இடத்த வந்து பார்த்தா அத காணல. உடனே வாப்பா என்னயும் கூட்டிக் கொண்டு புல்லு ஆச்சிட்ட போனாரு. (வாப்பா முந்தி பொலிசில இருந்துதான் ரீச்சிங்கிற்கு வந்தாரு) அந்தப் பாணியில விசாரிச்சப் போது, ஆச்சி எல்லாத்தையும் சொன்னா...........

எங்க வீட்டுக்கு ஹதியா கேட்டு வந்த அந்த பெரியவருதான் தனக்கு இன்னைக்கு 150 ரூபாவுக்கு இந்தச் சைக்கிள வித்ததா சொன்னா..

நாங்க எங்க சைக்கிள வீட்டுக்கு கொண்டு வந்தம்...பாருங்கோ, ஆச்சிதான் பாவம்..காசை இழந்திட்டா பரிதாபமா......ஆனாலும் ஆச்சி காசு விசயத்தில உஷாரா நின்னு அந்தக் காச அந்தப் பெரியவர்ட் மகன்ட இருந்து ஒருமாதிரியா புடிங்கிட்டா...

அன்றைக்கு என்னை நினைச்சு நானே ரொம்ப சந்தோஷப்பட்டன். என்ட முயற்சியால காணாம போனத கண்டுபிடிச்சேனே..

அந்தச் சம்பவத்துக்கு பொறகு கொஞ்சம் வீட்டுக்கு வாற வெளியாட்கள் மேல ஒரு கண்ணு வைச்ச ம் என்பது வேற விஷயம்..........

என் மனசு இப்படி உங்ககிட்ட பேசுறது எனக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்கா....புடிச்சா சொல்லுங்க.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை