ரிஸானா நபீக்


2013.01.09 ந் திகதி, இலங்கை தேசம் எங்கும் கண்ணீர்க் கசிவுகளுடன் உலா வரும் செய்திதான் றிஸானா நபீக்கின் மரண தண்டனை ! இன, மத பேதமின்றி அனைவர் உள்ளங்களையும் துன்பத்திலாழ்த்திய இம் மரண தண்டனையின் கொடூரம் எம்மை பிரமைக்குள்ளாழ்த்தியுள்ளதென்றே சொல்லலாம்.

றிஸானா நபீக்.........!

மூதூர் சகோதரி.

வண்ணக் கனவுகளுக்கு வாலிப மெருகூட்டி வசந்தம் நுகர வேண்டிய இந்தப் பருவச் சிட்டாள், வறுமையின் வாசலுக்குள் எட்டிப் பார்த்ததால் றியாத் எனும்  சவூதியின் நிழலுக்குள்  தன் பாதங்களைப்  பதித்தாள் நம்பிக்கையுடன்!பெற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சொறிந்தனர் தம் வாழ்க்கைப் போராட்டங்களை இனி ஓரளவாயினும் சமாளிக்கலாம் என்று! தனது பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி,  தம்பி, தங்கைகளையாவது வாழ வைக்கலாமென்ற நப்பாசையில் பாலைவனம் நோக்கி, பல எதிர்பார்ப்புக்களுடன் பறந்த இச் சகோதரி இன்று அலைவரிசைகளில் முக்கிய செய்தியாகி, எம் உறவினர் போன்ற பரிதவிப்பை எமக்குள் ஏற்படுத்தி மறைந்துள்ளார்.

2005ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி ........

றியாத்திலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில்  தவாத்துமி பிரதேசம் அமைந்துள்ளது. அங்குள்ள அல்ஜிம்ஸ் எனும் கிராமத்தைச் சேர்ந்த நய்வ் ஜிஸியான் காலவ்  எனும் எஜமான்  தலைமையிலான குடும்பத்தினரே அவரைப் பணிப்பெண்ணாக உள்வாங்கிக் கொண்டனர். அவர்களது நான்கு மாத ஆண் குழந்தையொன்றுக்கு பாலூட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி மரணித்தது. றிஸானா கொலை செய்ததாக அக் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பட, சிறைப்படுத்தப்பட்டார் அவ் இளமங்கை. பாலூட்டும் போது பால் தொண்டையில் சிக்குண்டு குழந்தை இறந்ததாக றிஸானா மறுதலிக்க, அவரின் வாக்குப் பதிவு பலனளிக்கவில்லை. ஏனெனில் அக்குழந்தையை தானே கொலை செய்ததாக பொலிஸ், மஜிஸ்ரேட், நீதிமன்ற விசாரணைகளின் போது  மூன்று தடவை அவர் வாக்கு மூலம் ஏற்கனவே அளித்திருந்தார். அரபு பாஷை சரியாகத் தெரியாமை, தன்னை விடுவிக்கட்டும் என்ற பதற்றம், பதகளிப்பு , பயம் , மிரட்டல் போன்றன அவரைக்  குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்திருக்கும். எனவே இத்தகைய நிலையில் பெற்றோர் மன்னித்தாலே விடுதலை கிடைக்கும் எனும் நிலைப்பாடு  றிஸானாவின் குரல்வளையை இறுக்கியது. எனினும் பெற்றோர் மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. றிஸானாவின் இறுதி ஆசையாக இருந்தவை , 2 ரக் அத் தொழ வேண்டும், அத்துடன் தான் சேகரித்த பணத்தை உறவினர்களுக்கு ஸதகா கொடுக்க வேண்டுமென்பதாகும். சிறைக்கூடத்தில் றேந்தை பின்னி உழைத்த இந்த இளம் சகோதரி, பலர் முன்னிலையில் கழுத்தறுபட்டு துடிதுடித்து மரணித்த அந்தக் காட்சியைக் காணும் போது பதறாத உள்ளங்கள் இருக்கவே முடியாது.

வயது பதினேழு ..........!

பக்குவம் தெரியாத மனநிலை........குழந்தைத் தனமும் குறும்புத்தனமும்  வலை வீசும் கட்டிளமைப் பருவம்...இருந்தும் கடவுச்சீட்டில் தனது வயதினை அதிகமாகக் காட்டி, உழைப்புக்காக முயற்சித்த பயணமே இன்று சிரச் சேதமென்னும் முற்றுப்புள்ளியில் முக்காடிட்டு நிற்கின்றது.

அக் குழந்தையின் பெற்றோர் அதனை கொலை என வழக்குத் தொடர்ந்ததில் 2007ம் வருடம் ஜூன் மாதம் 16ம் திகதி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையைத் தீர்ப்பளித்தது.மேன் முறையீடு வரை கொண்டு செல்லப்பட்ட இவ்வழக்கிற்கு பல மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை- சவூதி அரச தரப்பு பேச்சு வார்த்தைகள் , பல்வேறு மக்களின் கையெழுத்துப் பதிவுகள், றிஸானாவின் பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்கள் , ஜம்இய்யத்துல் உலமா போன்ற மத அமைப்புக்களின்  வேண்டுகோள்கள் , மகளிர் அமைப்புக்களின் கோரிக்கைகள் , அரசியல் குழுக்களின் முயற்சிகள் , மக்கள் போராட்டங்கள் என வெடித்தெழுந்த அழுத்தங்கள்  கூட   பெறுமதியற்று, உயர்நீதிமன்றத்தின் சிரச் சேதம் எனும் மரண தண்டனை எனும் தீர்ப்பே வலுப்பிடியாக அமைந்திருந்தது. பல சர்வதேச நாடுகள் ஏழைப் பெண்ணான றிஸானாவுக்கு கருணை காட்டும்படி விடுத்த வேண்டுகோள்களும் நிராகரிக்கப்பட்டன. சவூதி அரசின் இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பை மேலும் சட்டரீதியாக கொண்டு நடத்தமுடியாதளவிற்கு சிக்கல் நிலை தோன்றியது. தீர்ப்பு வழங்கப்பட்டு 3 மாதத்திற்குள் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற சட்டத்தை சவூதி அரேபியா 7 வருடங்களுக்கு ஒத்திப் போட  அரச உயர் மட்ட பேச்சு வார்த்தைகளும் பல தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் காரணமாக இருக்கலாம். இந்தக் காலத்தினுள் இறந்த குழந்தையின் பெற்றோர் மனமாற்றமடையலாம், அதன் காரணமாக மன்னிப்பு வழங்கலாம் எனும் எதிர்பார்ப்பும் சவூதி அரசுக்கு இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

துடிதுடித்து மரணித்த அந்தப் பிஞ்சுப் பாலகனின் இழப்பின் வலி , உரிய பெற்றோருக்குத் தான் தெரியும். அந்த மரணத்தை நியாயப்படுத்த யாராலும் முடியாதுதான். ஆனால் வறுமையின் நிமித்தம் தனது வயதினையும் கடவுச் சீட்டில் அதிகமாகக் காட்டி உழைக்கச் சென்ற அந்த ஏழை முஸ்லிம் குமர்ப் பிள்ளைக்கு மன்னிப்பளித்திருக்கலாம். தவறுக்கு தண்டனை வழங்குவதை விட, மன்னிப்பதே மிகப் பெரிய மனசாட்சி உறுத்தலை ஏற்படுத்தும்.

தவாத்மி பிரதேச சிறையில் அழுதழுது நிதமும் தொழுகையிலும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த அச் சகோதரியின் விடுதலை, குழந்தையைப் பறிகொடுத்தவர்களின் கைகளிலேயே தங்கியிருந்தது பெற்றவர்கள் மன்னித்தால் மாத்திரமே விடுதலைக்கு வழி கிடைக்கலாம் எனும் ஷரீஆ சட்டத்தின் திசையைச் சுட்டிக் காட்டி சவூதி அரசு  மௌனிக்க, நடக்க வேண்டியதெல்லாம் தானாக நடந்தேறி விட்டது.சிறைக்கூடத்தில் தன் பெற்றவர்களை சந்தித்த றிஸானா அழுதழுது தன்னையும் இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி விடுத்த பாச நெருடல் நம் கண்ணீரை வெளியேற்றச் செய்யக்கூடியது.

இலங்கை- சவூதி அரசுகளினால் சாதிக்க முடியாத கோரிக்கைகள் வெறும்  பூஜ்ஜியமாகிப் போக, றிஸானாவின் தலை நிலத்தில் உருண்டோடியது. தான் மரணிக்கப் போகின்றோம் என்ற அந்த இறுதிப் பயங்கரக் கணங்கள் இனி யாருக்குமே வரவேண்டாம்.
.
சாந்தி, சமாதானம் , அன்பு, கருணை, காரூண்ணியம் போன்ற உயர் பண்புகளைக் கொண்ட இஸ்லாம் மதத்தை ஆணி வேராக்கி இறுக்கப் பற்றிப் பிடித்து ஷரீஆ சட்டங்களை கடுமையாக அமுல் செய்யும் சவூதி, இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பின் பாலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தண்டனை எனும் பெயரில் சிறுவயதினரை சிரச்சேதம் போன்ற ஈவிரக்கமின்றி கொல்லும் இவ் அரபிகளின் செயலை மன்னிக்கவே முடியாது. வாழ் வேண்டிய ஓர் ஜீவனைக் கபனிட்டு மண்ணுக்கு வலுக்கட்டாயமாக மறைத்து வைப்பதில் இவர்களுக்குள் அப்படியென்னதான் சாதனை முளைக்கப் போகின்றது.

மறுமுனையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாடுகளிற்கு  ஆட்களை ஏற்றுமதி செய்யும்  முகவர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவும் இம் மரண தண்டனை நிகழ்வு வழிவகுத்துள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்த ஏஜென்ஸிக் காரர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்குண்டமை, பணிப்பெண்ணை குழந்தை வளர்ப்பிற்காக நியமிக்க முடியாது , வயது குறைந்த பெண் போன்ற சாதகமான காரணிகள் இருந்தும் கூட, பெற்றோரின் மன்னிப்பென்ற வார்த்தையின்றி இச் சகோதரி பாலைவன மண்ணில் தன் குருதி சிந்தி கோரமான மரணத்தை எய்தினார்.

பல வருடங்கள் சிறைத் தண்டனைக்குள் சிக்குண்டாலும் கூட, தான் விடுவிக்கப்படுவேன்  எனும் நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகளுடன் , அந்த இருளுக்குள் முகம் தேடிக் கொண்டிருந்த இந்த மூதூர் சகோதரியின் மூச்சு இன்று  முற்றாக நிறுத்தப்பட்டது வேதனையே!

றிஸானாவின் இறுதி நேர வீடியோக் காட்சி2007-01-30
அல் தவாத்மி சிறைச்சாலை
அல் தவாத்மி

தற்போது அல் தவாத்மி சிறைச்சாலையில் கொலை குற்றச்சாட்டின் பெயரில் சிறையிடப்பட்டுள்ள ரிசானா நபீக் ஆகிய நான் இன்று பின்வருமாறு வாய் மொழி இடுகிறேன் மேற்படி நான் முதலில் மேல் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு பதிலாக இன்று தாழ்வான மன நிலையுடன் பின்வருமாறு கூறுகின்றேன்.

இலங்கையில் எனது முகவரி
எம்,எஸ்,நபீக், சாலி, நகர்,மூதூர்

எனது உண்மையான வயது [19] பிறந்த திகதி 02-02-1988 எனது வயதை கொஞ்சமாக எனது சப் ஏஜன்ட் அஜிர்தின் என்பவர் பிறந்த திகதியை ௦2-௦2-1982 என குறிப்பிட்டு பாஸ்போட் [கடவுச்சீட்டு] வழங்கினார் முதலில் நான் 2005-04-01ல் சவூதி வந்தேன்.

எனது சவூதி வாப்பா விட்டில் 1.1/2 மதம் வேலை செய்தேன் குரிப்பிடதாக்க பிறர்சினைகள் இருக்க விலை இந்த விட்டில் சமைத்தல் கழுவுதல் 4மாத குழந்தையைப் பார்த்தல் ஆகியவற்றை செய்தேன் இவ்விட்டில் நன்றாக இருந்தேன்.

குரித்த சம்பவத்தினம் ஞபக்கம் இல்லை அது ஒரு ஞயிற்றுக் கிழமை பகல் 12.30 இருக்கும் அப்போது யாரும் விட்டில் இருக்க வில்லை இக்குழந்தைக்கு மேலே 4 வயது 3 வயது ஆண் பென் குழந்தைகளும் உண்டு வழமையாக நான்தான் குழந்தைக்கு பால் கொடுத்தேன்.

வழமைபோல் பால் உட்டிக் கொண்டிருந்தபோது குழந்தையின் வாய் முக்கின் முலம் பால் வெளிவர ஆரம்பித்தது நான் குழந்தையின் தொண்லையை மெதுவாக தடவினேன் அப்போது குழந்தை கண்முடி இருந்தபடியால் நான் அக் குழந்தை தூக்கமென நினைத்தேன்,

எனவே மாமா [குழந்தையி தாய்] 1.1/2மணிக்கு வந்து சாப்பிட்டு விடு பிள்ளையை பார்த்து விட்டு ''செருப்பால்'' அடித்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார் என் வாய் மற்றும் மூக்கில் இரத்தம் வந்து பின்பு பொலிஸ் விட்டுக்கு வந்து என்னை எடுதுச் சென்றனர்.

போலீசில் வைத்து எனக்கு அடித்தார்கள் ஒரு பட்டியால் அடித்தார்கள் அடித்து குழந்தையின் கழுதை நேரித்ததாக [நசித்ததாக] கூறுமாறு அடித்து வர்புரிதினார்கள் அவ்வாறு கூராவிடின் சொல்லும்வரை கரண்ட் பிடிப்பதாக கூறினார்கள் எனவே அவர்கள் எழுதியபேப்பரில்கையப்பம்மிட்டேன்.

என்னை வேறு இடத்திற்கு கொண்டுபோய் கேட்டபோது பயங்கரமாக இருந்தது ஞபகசக்தி அப்போது இல்லாதபடியில் நான் கழுதை நரித்ததாகக் கூறினேன். அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொள்ள நான் கழுதை நசிக்கவில்லை மேற்படி எனது வக்குமூலம் வசித்து விளங்கிய பின் உறுதியான உணர்ந்து கையப்பம் மிடுகின்ரேன்

N. RISANA
எல்லாப் புகழும் இறைவனுக்கேதுபாய் பத்திரிகையொன்றில் வெளியான பதிவிது
------------------------------------------------------------------------

ரிஸானாவின் வாக்கு மூலம் இது-
-----------------------------------------------
" குழந்தைக்கு 4 நாட்களாக தொடர் இருமல், சளி இருந்தது. சம்பவ தினம் நான் குழந்தையை மடியிலிருத்தி பாலூட்டிக் கொண்டிருந்தேன். போத்தலில் இருந்த பாலை முக்கால் வாசி அக்குழந்தை குடித்து முடித்து விட்டது. மேலும் அது குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இரும ஆரம்பித்து விட்டது. இருமல் மேலும் அதிகரிக்கு மூக்காலும், வாயாலும் பால் வெளியேற, திடுக்கிட்டெழுந்து குழந்தையின் இரு கக்கத்திற்குமிடையில் கையைப் போட்டு தூக்கினேன். குழந்தையோ மூச்சுத் திணறி தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தது. எனக்குப் பயமாக இருந்தது. உடனே குழந்தையை என் உள்ளங்கையில் படுக்க வைத்து மறு கையால் பிடரியில் தட்டினேன். இப்படிச் செய்தால் குழந்தை இருமலில் இருந்தும் மூச்சுத் திணறலில் இருந்தும் நீங்கி விடும் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். அதனை நானும் நேரில் பார்த்திருக்கின்றேன். கொஞ்சம் அழுத்தித் தட்டியதால் அந்த இடம் சற்று சிவந்து விட்டது. இதே நேரம் என் எஜமானி அம்மா அதைப் பார்த்து விட்டு ஓடி வந்து என் கையில் இருக்கும் குழந்தையைப் பறித்து விட்டு என்னைப் பிடித்து தள்ளி விட்டார். அதன் பிறகு அக் குழந்தையின் இருமல் சத்தமோ, அழுகையோ கேட்கவில்லை. என் பிள்ளையைக் கொன்றுவிட்டாய் என்று அழுது கொண்டு பொலிஸில் ஒப்படைத்தார்கள்" என தொடர்கிறது. 

குழந்தை மூச்சுத் திணறியே இறந்ததாக போஸ்மாட்டம் அறிக்கை கூறும் போது, இதனை கொலை என சாடி , குற்றமற்ற இந்த இளம் உயிரை எல்லோர் முன்னிலையிலும் துடிதுடிக்க உறிஞ்சிய இந்த ஈனச் செயலைக் காட்டுமிராண்டித்தனம் என்றுதான் கூற வேண்டும்..இவர்களை அல்லாஹ் தண்டிப்பானாக!

குடும்ப வறுமையை நீக்க வேண்டும் எனும் கனவுகளைச் சுமந்து சென்ற அந்த சகோதரியின் கனவு, அவர் இறப்பின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. என்னதான் வசதியான வாழ்வு கிடைத்தாலும் கூட, இழப்பின் வலி ஈடுசெய்ய முடியாதது. றிஸானாவின் பிரிவுத் துயரில் உருகும் அவர் குடும்பத்திற்கு கவிதாயினியும் தனது சோகத்தைப் பகிர்கின்றது.

வறுமை இன்னும் பல றிஸானாக்களை உருவாக்கலாம். நமது சமுதாயத்தில் காணப்படும் சிறுசிறு ஓட்டைகளால் தான் இவ்வாறான துக்ககரமான நிகழ்வுகள் இடம் பெறுகின்றது , இனி எந்த றிஸானாக்கும் இந்தக் கதி நிகழக்கூடாது. வருமுன் வசதி படைத்தவர்கள் இளம் சமுதாயத்தைக் காக்க தோள் கொடுங்கள். இழப்புக்களைக் கண்டு கண்ணீர் சிந்துவதை விட, ஏழைக் குடில்களில் வேரூன்றியிருக்கும் இந்த மனிதங்களின் கண்ணீர்த்துளிகளை ஒற்றியெடுப்பதும் ஓர் இபாதத்தே!

றிஸானாவின் 7 வருடப் போராட்டங்களும், கதறல்களும் ஓய்வுக்குள் கொண்டு வரப்பட, மரணித்த அந்த சகோதரி விட்டுச் சென்ற அனுபவங்களும் சேதியும் இன்னும் பல றிஸானாக்களுக்கு  எச்சரிக்கைகளாக அமைய வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கே கல்லெறிந்து சித்திரவதை செய்த அந்த கோத்திரத்தாரிடையே றிஸானா நபீக் சிக்குண்டதும் தன்னுயிரை அநியாயமாக பலிகொடுக்கவா...........................!

யா அல்லாஹ்..........நீயே துணை!


இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் . ........ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் சுவனபதியை அல்லாஹ் தஆலா வழங்குவானாக.  ஆமின் !


றிஸானா நபீக்கின் வீடு


தாய் சகோதரிகள்


சிறைச்சாலையிலிருந்து
மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடம் நோக்கிசெல்லும்
இறுதிக் கணங்கள்சிரச் சேதம் செய்யப்பட்ட நிலையில்


ஜனாஸா1 comment:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை