அழகும் இதமாகின்றது புன்னையின் புன்னகைபோல்
அருமையின் அடையாளமாகவே உயிர்க்கின்றது தானாகவே
வறுமையும் வளமற்ற சூழல்ப் போராட்டமும்
நிறுத்துவதில்லை இயல்பான இயற்கை வளர்ச்சியை
இருந்தும் சூழ்கின்ற சிறைக்கரத்தின் வன்மத்தில்
கரைந்தே விடுகின்றது மென்மையான மனம்
அடுத்தவரால் மலினப்படுத்தப்படுகின்ற உணர்வுக் குவியலுக்குள்
புதைந்தே புகைகின்ற பெண்மைத் தடத்திலும்
எதிர்பார்ப்புக்களை ஏந்தியவாறே பூத்துக் குலுங்குகின்றன
அடக்கமான அமைதியான வாசனைப் பூக்கள்
ஊர்விழிகளால் மொய்க்கப்படாமல் மூடி மறைகின்ற
இயற்கை பராமரிக்கின்ற இதமான அழகும்
இதழ்களுக்குள் நசிகின்ற மென் புன்னகையும்
சிந்துகின்ற வாசம் மௌனத்திலேயே உறைகின்றது
அடுத்தவரோடு இசைந்து வாழ்கின்ற வாழ்விலும்
விரிக்கப்படுகின்ற சுதந்திரச் சிறகின் நீளுகை
முறிக்கப்படுகின்றது முற்றத்தில் தரித்து நிற்போரால்
நிழலாகின்ற கொடைக்குள்ளும் குறிவைக்கின்றது செந்தணல்
தன்னலம் களைந்து வாழ்கின்ற வாழ்விலும்
விண்ணைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம்
புண்ணாய்ச் சிதைக்கின்றனர் உணர்வினை உடைத்து
நாற் சுவருக்குள் நாடித்துடிப்பை அடக்கி
பெண்ணைப் போலவே புண்ணையும் மொண்ணையாகவே மாற்றுகின்றனர் தரணிப் பரப்பிலே
ஜன்ஸி கபூர் - 03.01.2021


No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!