About Me

Showing posts with label தீன் வழி. Show all posts
Showing posts with label தீன் வழி. Show all posts

2021/04/13

அன்றாட வாழ்வின் அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்)

 அன்றாட வாழ்வின்  அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்)

---------------------------------------------------------------------------------------------------- 

தெளிவான பகுத்துணரக்கூடிய அனைவராலும் ஏற்கக்கூடிய கொள்கைகளை வகுத்து அதன்வழியில் வாழ்ந்து காட்டிய எம் பெருமானாரின் ஒவ்வொரு செயல்களிலும் முன்மாதிரித் துளிகள் நிரம்பிக் காணப்படுகின்றன.

ஒட்டுமொத்த முழு சமுகத்திற்கு முழுமைபெற்ற முன்மாதிரி என அகில உலகத்தைப் பரிபாலித்து தன் அதிகாரத்திற்குள் அதனை வைத்து இயக்குகின்ற அல்லாஹ் தஆலா சாட்சி பகிர்ந்து நற்சான்றிதழ் வழங்கியுள்ளான்.

அல்லாஹ் சொல்லுகிறான். 

'அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது."

'நிச்சயமாக நபியே நீர் நற்பண்புகளுக்குச் சொந்தக்காரர்'

என அல்லாஹ் தஆலா வின் நற்சான்றினைப் பெற்ற எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து பார்ப்போமானால், அவர் வாழ்ந்து காட்டிய ஆத்மீக, லௌகீக துறைகள் உட்பட அனைத்து துறைகளிலும் அழகிய முன்மாதிரிகள் தெரிகின்றன. அவற்றிலிருந்து நாம் பின்பற்றவேண்டிய சிறந்த வாழ்வியல் நெறிகள் காணப்படுகின்றன.

'நான் உங்களுக்கு இரண்டு விடயங்களை  விட்டுச் செல்கிறேன், அவைகளைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். அவைதான் அல்-குர்ஆன்,, அல்-ஹதீஸ்' என்றார்கள்  நபி (ஸல்) அவர்கள்.

எனவே,நாயகம் (ஸல்)  அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில் அவர் காட்டிச் சென்ற நல்வழி மனித குலத்துக்கு இன்று மிகவும் அவசியமாகும்.

இன்றைய உலகின் போக்கினை ஈடுசெய்யக்கூடிய மருந்தாக நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிகள் காணப்படுகின்றன. பகுத்தறிவுடன் அனைவரும் விரும்பக்கூடியதான தெளிவான கொள்கைகளை வகுத்து, அதன் வழியில் வாழ்ந்து காட்டியவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள்.

மறுமை வாழ்வை அடைவதை நோக்காகக் கொண்டு வாழ்வில் அநாவசியமான ஆடம்பரங்களிலிருந்து நீங்கி உளத்தூய்மையுடன் வாழ்வதற்கே இஸ்லாம் வழிவகுத்துள்ளது. எம் பெருமானார் (ஸல்) அவர்களும் அவ்வாறே வாழ்ந்து காட்டினார்கள்.

எம் பெருமானார் ஸலாமை அதிகம் அதிகமாகப் பரப்பினார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா!. அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். அது உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 93.

முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கிடையே அன்பு காணப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் சொல்லும் ஸலாம் இப்பண்பை வளர்க்கின்றது.

மனிதனின் பலவீனம் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது.  எனவே நாவடக்கம் என்பது நமது தனித்துவத்தைப் பேண உதவுகின்றது. எமது பெருமானார் (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட நாவடக்கம் நாம் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரியாகும்.

"மனிதன் உடலில் நாவு, மர்மஸ்தானம்  இந்த இரண்டு உறுப்புகளும் அபாயகரமான பலவீனமான இடங்கள். இங்கிருந்து தாக்குதல் நடத்துவது ஷைத்தானுக்கு எளிதானது. பெரும்பாலான பாவங்கள் இந்த இரண்டு உறுப்புக்களிலிருந்துதான் ஏற்படுகிறது. எவராவது ஷைத்தானின் தாக்குதல்களிலிருந்து அவ்விரண்டையும் காப்பாற்றிக் கொண்டால் அவரது தங்குமிடம் சுவனமாகவே இருக்கும் என்பதுக்கு நான் பொறுப்பு"

 என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அதுமாத்திரமின்றி ஒருவர் பற்றிய அவதூறுகளின் பரப்புகையும் அவரிடம் காணப்படவில்லை. 

"என் தோழர்களில் எவரும்  யாரைப்பற்றியும் என்னிடம் எந்த குறையும் சொல்ல வேண்டாம் நான் உங்கள் அனைவர்களையும் தூய்மையான உள்ளத்தோடு சந்திக்க விரும்புகிறேன்"

என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அவ்வாறே பொய் பேசாமையும் அவரிடம் காணப்பட்ட அழகிய முன்மாதிரியான குணமாகும்.

"ஒரு தாய் தன் மகனை இங்கே வா நான் உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைப்பதைக் கண்ட  நபியவர்கள் அப்பெண்ணிடம் உன் மகனுக்கு ஏதாவது தருவதாக் அழைத்தாயே ஏதும் கொடுக்கிறாயா? எனக்கேட்க, ஆம் பேரித்தம்பழம் என அப்பெண் கூறினார். அதற்கு நபியவர்கள் அப்படி எதுவும் கொடுக்க வில்லையானால் பொய் சொன்ன குற்றம் உன் மீது எழுதப்படும் என்றார்கள்.

(ஹதீஸ் அபூ தாவூது 4339.)

அவ்வாறே அடுத்தவரின் பொருள் சொத்துக்களுக்கு ஆசைப்படாதவராகவே அண்ணல் நபியவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். 

'சின்னஞ் சிறுவராக இருந்த நபியின் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் ஸதகா பேரித்தம் பழங்களில் ஒன்றை தங்களின் வாயில் போட்ட பொழுது அதைக்கண்ட நபியவர்கள் துப்பு துப்பு என துப்ப வைத்து ஸதகா பொருளை நாம் சாப்பிடக்கூடாது எனத் தெரியாதா என்றார்கள்.  

(புகாரி 1396)

அவ்வாறே வியாபாரத்தில் ஏமாற்று மோசடி என்பவற்றையும் வெறுத்தார்கள். 

"நபி(ஸல்) அவர்கள் உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்றார்கள்.  ஸஹிஹ் முஸ்லிம் 102:

நற்குணத்தில் நபி பெருமான் சிறந்தவர் என்பதை அல்லாஹ் தஆலாவை சாட்சி பகிர்கின்றான். அதனால்தான் அவரை இவ்வுலகின் இறுதித் துதுவராக நியமித்தான்.

மக்களின் குணங்களை சீர்படுத்துவதும் அவர்களுக்குள் இருக்கும் தீய குணத்தின் வேர்களைப் பிடுங்கி விடுவதும் நற்குணங்களை உருவாக்குவதும் தான் அண்ணல் நபியின் நோக்கமாக இருந்தது. நாமும் நமது குணப் பண்புகளை சீர்படுத்தி நல்வாழ்விற்குள் நுழைவது அவசியமாகும்.

மேலும் நாயகம் (ஸல்) கண்ணியத்திற்குரிய தலைவராக இருந்தும்கூட பதவிநிலை பெருமை அவரிடம் இருக்கவில்லை. அரசியல்சார் எக்காரியத்தை ஆற்றுவதாக இருந்தாலும் தம்முடன் கூட இருப்போரின் ஆலோசனையைக் கேட்டறிவார்கள். மக்களோடு மக்களாக நின்று துல்ஹஜ் பிறை பத்தாம் நாளன்று தங்களின் ஒட்டகத்தின் மீது அமர்ந்த நிலையில் பெரிய ஜம்ராவுக்கு கல் எறிந்தார்கள். 

அவர்களின் சகிப்புத் தன்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பண்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாருடைய தூதுக்குழுவின் தலைவரை நோக்கி (பாராட்டும் வகையில்) கூறினார்கள் உம்மிடம் அல்லாஹ்விற்கு விருப்பமான இரு குணங்கள் உள்ளன. அவை சகிப்புத்தன்மையும் (உணர்ச்சிவசப்படாமை) நிதானமும்தான் என்றார்கள்.

எம் பெருமான் ஸல் அவர்கள  சிறந்த ஆசிரியர்ப் பண்புகளைக் கொண்டவராகக் கற்றுக் கொடுத்தார்கள்.

"நபியே நீர் மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்m அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு நாம் அருளினோம்"

. அல் குர்ஆன் 5:67

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், அவர்களுக்கு அருளப்பட்ட வஹியை (அல் குர்ஆனை) அழகிய முறையில் மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அது மாத்திரமின்றி தனது வாழ்கையையும் அல் குர்ஆனிய வாழ்கையாக வாழ்ந்து காட்டினார்கள். செருப்பணிவது முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்துக்குமான வழிகாட்டல்களை நபிகளார் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

கல்வி கற்பதை ஆர்வமூட்டி மாணவர்களை அமைதியாக செவி தாழ்த்தி கேட்க வைத்தார்கள். மாணவர்கள் மறந்து விடாது சரி வரக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே விடயத்தை மூன்று முறை மீட்டிக்   கூறுதல் உரத்த குரலில் கற்பித்தல் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காக சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு பதிலைக் கற்றுக் கொடுத்தல் மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமைகளைக் கூறிக் கற்றுக் கொடுத்தல் போன்ற பல நடைமுறைகளைக் கைக்கொண்டு மாணவர்களுக்கு அறிவைப் புகட்டிக் கொடுத்தார்கள். 

ஒவ்வொரு ஆசானும் அண்ணலாரின் முறைகளைப் பின்பற்றினால், எமது மாணவர் சமுதாயம் உயர் சிந்தனைத்திறன் கொண்டவர்களாக மாற்றப்படுவார்கள் என்பது வெள்ளிடைமலை. 

இஸ்லாம் அல்லாத அண்டை மக்களுடனும் அன்புடன் நடந்தார்கள். இத்தகைய மனப்பக்குவம் நம் மனிதர்களிடம் இருக்குமானால் இவ்வுலகம் அழகிய சமாதானப் பூஞ்சோலையாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

தங்களிடம் வரும் விருந்தினர்களையும் நாயகமவர்கள் பெரிதும் உபசரிப்பார்கள். முஸ்லிம் அல்லாதாரும் நபியவர்களிடம் விருந்தினர்களாக வருவதுண்டு. அவர்களையும் இன்முகத்துடன் உபசரித்து வந்தார்கள். தங்களுக்கு இன்னல் புரிந்தவர்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னித்து விடுவார்கள். அல்-குர்ஆனும் இதனையே வற்புறுத்துகின்றது. 

'யாராவது உமக்கு அநியாயம் செய்து தொல்லை கொடுத்தால் அதைப் பாராட்டாமல் பொறுத்துக் கொள்ளும், நன்மையும் நற்காரியங்களுமே (மக்கள்) செய்யுமாறு நீர் ஏவும்.அறிவில்லாதவர்களிடமிருந்து விட்டு விலகிக்கொள்ளும்' 

என திருமறை பகர்கின்றது.

சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு, அமைதியாக இயங்குவதற்குத் தேவையான சமநிலைத் தன்மை கொண்ட மகத்தான சட்டங்களை வழங்கியவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள்.

பெண் இனத்தைக் கண்ணியப்படுத்தி ஆண்களுக்கு நன்மதிப்பை வழங்கியவர் நாயகம் (ஸல்) அவர்களே.

 இறுதி ஹஜ்ஜின்போது நிகழ்த்திய பேருரையில், 

'உங்கள் மனைவிகள் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பதுபோல் அவர்களுக்கு உங்கள் மீது உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவிகளை அன்புடனும் அமைதியுடனும் நடாத்துங்கள்.இறைவனுக்குப் பயந்து அவர்களின் உரிமைகளைக் கவனியுங்கள்' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காட்டாது எல்லோரையும் ஒரு முகமாகவே நோக்கி வந்தார்கள். எனினும் ஏழைகளிடம் மிகவும் பரிவு காண்பித்து வந்தார்கள்.

ஒரு சமயம் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கி, 'ஆயிஷாவே! உம்முடைய வாசலிலிருந்து ஓர் ஏழையை ஒன்றும் கொடுக்காமல் திருப்பி விடாதீர், ஒரு பேரீச்சம்பழத் துண்டு கொண்டாவது அவரைத் திருப்தி செய்யும்.

ஆயிஷாவே! ஏழைகளிடம் அன்பு வையும். நீர் அவர்களை உமக்கு அருகாமையில் ஆக்கினால் இறைவனும் உம்மை அவனுக்கு அருகாமையில் ஆக்குவான்' என்று சொன்னார்கள்.

 எனவே இவ்வாறு ஒவ்வொரு துறைகளை எடுத்துப் பார்த்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரிகள் காணப்படுகின்றன. அரசியல், பயிற்சியளித்தல், வியாபாரி, தந்தை, கணவன், நீதி செலுத்துபவர், மன இச்சைகளை தியாகம் செய்தல், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வீரர், தலைசிறந்த தலைவர், சங்கைமிக்கவர் என எத்துறைகளை எடுத்து நோக்கினாலும் அவர்களின் முன்மாதிரிகளுக்கான சான்றுகள் கிடைக்கின்றன. 

குர்ஆன் ஸூன்னா பற்றி பேசக்கூடிய எம்மிடத்தில் இப்பண்புகள் வரவேண்டும் நாம் முன்மாதிரி சமூகமாக வாழ வேண்டும்.

 



2015/01/04

அல்லாஹ்வின் அருட்கொடை


ரபியுல் அவ்வல் பிறை 12
அவனியெங்கும் பூத்தூறல்
அண்ணல் நபி பூ முகங் காண!

இருளின் வெம்மையில் மானிடா்
மருண்டெழுந்த நேரம்
திருமறையின் வாசகங்கள்
மாநபியின் மாண்பின் சுவாசமாய்!

ஜாஹிலியா  துகிலுரித்த நாட்களில்
அருள் மொழியின் சுவடுகளாய்
ஔிப் பிராவகம்
அரபுத் தேசமதில்!

வஹி
அஹிம்சையின் ஆதாரம்!
அகிலத்தின் வாழ்க்கைக் கையேடு!
இவ்வுலகின் அறியாமை
பிழிந்தழிக்கும் அதிசயம்!

இஸ்லாம்
முஸ்லிம்களின் முகவரிகள்
தீன் அமுதூட்டலில்
இவ் வையகத்தை நிமிர்த்திட
உம்மி நபியின்  உன்னதங்களை
உரைக்கும் உரைகல்!

எம் பெருமானார் அவதரித்த
இந்நாளில்
முழங்கட்டுமெங்கும் அவரற்புதங்கள்!
சந்தனம் கமழும் நம் ஸலாம்
மொழிவில்
எந்தன் நபியின் கண்ணியம் மிளிரட்டும்!

அல்லாஹ்வின் அருட்கொடை
அண்ணல் நபியவர்கள் பிறந்த
இன்னாளில்
நல்லமல்கள் செய்தே
வல்ல அல்லாஹ்வின் அருள் பெறுவோமே!


-Jancy Caffoor -
 01.04.2015

2014/10/29

முஹர்ரம்


ஒவ்வொரு மனிதரைச் சூழவும் அவர் அண்டி நிற்கும் சமூக, சமய, கலாசார உணர்வுகள் அவர்களது அடையாளங்களாக நிற்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள் முஹர்ரம் எனும் தமது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.

ஹிஜ்ரி வருடம் 1436 ன் புதுப் பிரவேசத்தில் பிரவேசிக்கப் போகும் நிலையில் நாம்!

நாட்கள் எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஆமை வேகத்தில் நமது செயல்களுடன் பயணிக்கின்றோம்.

இருந்தும் இதோ நமது புதுவருடத்தின் நிழலில் அண்மித்தவர்களாக நாமிப்போது!

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

10 வது தினத்தில் நோற்கப்படும் ஆசுரா நோன்பானது ,
தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக நோற்கப்படுவதாகும்.

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். 
"இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பை நோக்கினால் -

”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் முஹர்ரம் தொடர்பான கணக்கெடுப்பு பின்வருமாறு கணக்கெடுக்கப்படுகின்றது.
(இன்ஷா அல்லாஹ்)
முஹர்ரம் ஆரம்பம் 25 அக்டோபர் 2014 ----.........இறுதி 22 நவம்பர் 2014

எனவே முஹர்ரம் ..............!

எனும் போர் செய்யத் தடை செய்யப்பட்டுள்ள இப்புனித மாதத்தில் சகல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நேர்வழி ஏற்பட்டு அதனூடாக சாந்தி, சுபீட்சம், அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக!

                                                                                                                               
- Jancy Caffoor-

2014/10/12

பிரார்த்தனை எனும் ஆயுதம்


மரணம் எனும் எல்லை வரை தொடரக்கூடிய இம்மனித வாழ்வில் பாவங்களை அகற்றி இறைவனுடன் ஆன்மீகத் தொடர்புகளை ஏற்படுத்த பிரார்த்தனைகள் அவசியமாகின்றன. நம் வாழ்வில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் இப்பிரார்த்தனைகள் மூலமாகவே இலகுவில் நம்மை வந்தடைகின்றன..

ஹஜ்ஜின்போது புனித அரபாவௌியில் கேட்கும் பிரார்த்தனைகள், ரமழானில் கடைசிப் பத்து இராக்களில் கேட்கப்படும் பிரார்த்தனைகள், தஹஜ்ஜத் தொழுகையின்போது கேட்கப்படும் பிரார்த்தனைகள் 

போன்ற சகல பிரார்த்தனைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமானால், நாம் நம்மைப் படைத்தவன் விரும்பும் வகையில் நமது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும். அப்போதே நமது துஆக்களின் பெறுமானம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் முதலில் நமக்கும் அல்லாஹ்வுக்குமிடையிலான தொடர்பு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதே நமது மனமுறுகல் இறைவனிடத்தில் கசிந்து கிடக்கும். மாறாக பாவங்கள், ஷரீ அத்துக்கு முரணான செயற்பாடுகளிலீடுபடும்போது தீமைகளின் செல்வாக்கில் நன்மைகள் தடுக்கப்பட்டு விடுகின்றன. இப் பாவக்கறைகள்தான் பிரார்த்தனைகளின் வலுக்களைக் குறைத்து விடுகின்றன.

இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள்

"நீங்கள் நன்மையை ஏவ வேண்டும். தீமையைத் தடுக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற மார்க்கக் கடமையைப் புறக்கணிக்கின்றபோது அல்லாஹ் தீயவர்களை உங்கள் மீது சாட்டி விடுகின்றான். பின்னர் உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற நல்ல மனிதர்கள் துஆ செய்வார்கள். ஆனால் அந்த துஆவுக்கு பதில் கிடைக்காது"

எனவே நமது மனதைச் சுத்திகரித்து, அச்சுத்தத்தின் பிரதிபலிப்பை நாம் வாழும் சூழலிலும் பரவவிட்டு வாழும்போது பாவம், குற்றமற்ற செயல்களைப் புரியாதவர்களுடன் அல்லாஹ் இறுக்கமான தொடர்பைப் பேணி பிரார்த்தனைகளை ஏற்கின்றான்.
.
"ஈமான் கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களது பாதங்களை ஸ்திரப்படுத்துவான்"
(ஸூரா முஹம்மத்  7,8)

எனவே இங்கு உதவி செய்வதென்பது அவனது கட்டளைகளுக்குப் பணிந்து வாழ்தலைக் குறிப்பதால், துஆ அங்கீகாரமென்பது  இறைவனால் மிக விரும்பப்படும் மனிதருக்குக் கிடைக்கும் அருட்கொடை எனலாம்.

அல்லாஹூவுடனான தொடர்பை இறுக்கமாக, நேர்த்தியாகப் பேண முதல் நம்முளம் தூய்மையுள்ளதாக இருக்க வேண்டும்.

"யா அல்லாஹ்! நீதான் அகிலத்தின் அதிபதி, நான் உன தடிமை" 

எனும் மனப்பாங்கு நம்மிடத்தில் இருக்கும்போதுதான் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்குரிய செயல்களாக இருக்கும்.

நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவன் எங்கள் ரப்பு எனும் நம்பிக்கையான வார்த்தைகள் அடி மனதிலிருந்து எழும்போதுதான் நாமும் நமது  உளத்தை ஆரோக்கியமாகப் பேணி, இறைவனுடனான தொடர்பைப் பேணுவோம். இது பிரார்த்தனை ஏற்றலின் ஆரம்பநிலை.

பரிசுத்தமான மனதானது பரிசுத்தமான உடலின் ஓர் பாகமாகும். எனவே இறைவனிடத்தில் துஆக்களைக் கேட்டு எமது கரங்கள் உயரும்போது தூய்மையான உள்ளத்துடன் உடல், ஆடைகளும் தூய்மையாகி நம்மைப் போர்த்திக் கொண்டிருக்க வேண்டும். எனவே ஹராம் கறைகளை அகற்றியதாகவும், ஹலாலை நோக்கியதாகவும் எமது தேடல்களும் .  செயல்களும் இருக்க வேண்டும். அப்போதே நமது துஆக்களும் இறைவனால் அங்கீகரிக்கப்படும்.

மேலும் இஸ்லாம் எனும் வாழ்க்கைநெறியின் அடித்தளம் ஈமானாகும். அந்நம்பிக்கை இறைவணக்கத்தின் ஆணிவேராகும். எனவே அல்லாஹூ தஆலா எனது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வான் என மனதிலிருத்தி நம்பிக்கையுடன் நாம் அவனிடம் உதவி கேட்கும்போது, நமது துஆக்கள் வலுவுள்ளதாக மாற்றப்படுகின்றன. அதுமாத்திரமல்ல பிரார்த்தனைகள் வெறும் நாவினால் மாத்திரம் உச்சரிக்கப்படாமல், அது மனதின் ஒலியாக வௌிப்படும்போதுதான் இறைவனும் நம் குரலுக்குச் செவிசாய்க்கின்றான்.

பிரார்த்தனைகள் துன்பம் தீர்க்கும் வழியல்ல..இன்பத்திலும் இறைவனிடம் சென்றடைய வேண்டிய பாதை. எனவேதான் இன்பமோ, துன்பமோ நாம் செய்த பாவங்களை மனதால் ஏற்றுக் கொண்ட நிலையில், ஒவ்வொரு துஆவையும் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது மீட்டி, கிப்லாவை முன்னோக்கி அமர்ந்த நிலையில் கேட்க வேண்டும். அப்போது எங்கள் தொனி அமைதியானதாகவும், தாழ்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்வுலகில் நாம் ஜனனிக்க பெற்றோர் அவசியம். தன்னைப் பெற்றோரை இகழ்வோனின் துஆ ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. தாயின் காலடியில் சுவனத்தை வைத்த எம் மார்க்கம் அத்தாய்மைக்கு கருணை காட்ட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது. பெற்றோருக்காக கேட்கப்படும் துஆக்கள் நிச்சயமாக ஏற்கப்படுவதைப் போன்றே, நோயாளி கேட்கும் துஆக்களும், நோன்பு திறக்கும்போது கேட்கும் துஆக்களும் ஏற்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் நமது துன்பம், கவலைகளை மறக்கச் செய்கின்ற ஆயுதமாகும்.

கஷ்டம், துன்பம், மன வேதனை, கவலைகள் நீங்குவதற்கும் பிரார்த்தனை எனும் ஆயுதத்தை கையிலேடுக்குமாறு நபியவர்கள் பணித்திருக்கிறார்கள்.

இப்பிரார்த்தனைகளில்  நாம் கேட்கின்ற "லா இலாஹ இல்லா அன்த" எனும் சொல்லை முன்மொழிவதன் மூலமாக இறைவனின் ஏகத்துவத்தை ஏற்று அவனிடம் பிரார்த்தனைகளை  சமர்ப்பிக்கும்போது அவனும் அத் துஆவை ஏற்றுக் கொள்கின்றான்.

எனவே மேற்கூறிய மனநிலையில் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைகளுக்குமான நிறைவேற்றலுக்காக நாம் படைத்தவனிடம் கையேந்தும்போது அது நிறைவேற்றப்படுகின்றது. எமது முயற்சியும் அதனோடிணைந்த பிரார்த்தனைகளும் நம்மை வழிப்படுத்துகின்ற மேன்மைப்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற கேடயங்களாக இருப்பதால் அவை நமக்கான, நம் துன்பம் கலைக்கின்ற ஓர் ஆயுதமாகவும் நம்முடன் கூடப் பயணிக்கின்றன.  எனவே உளத்தூய்மையுடன் மொழியப்படுகின்ற பிரார்த்தனைகள் வீண்போவதில்லை.......அவை நம் வாழ்வை வளப்படுத்தும் ஓர் இறை வணக்கமுமாகும்.

பிரார்த்தனை எனும் இபாதத்
நம் வாழ்வின் வெற்றிகளைக் குவிக்கும் ஆயுதம்! 

-Jancy Caffoor -
.

2014/09/21

அன்பு


தாயிடமிருந்து கிடைக்கும் அன்பை இவ்வுலகில் யாரிடமுமிருந்தும் நாம் பெற முடியாது..அந்தத் தாய்மையின் ஸ்பரிசம் நமக்குக் கற்றுத் தந்த இவ்வன்பை , நம் மனதின் முகவரியாக்கினால் பண்பான வாழ்க்கை நமக்குச் சொந்தமாகும்....

அன்பு பற்றியதான சில ஹதீஸ்கள்..
--------------------------------------------------------
‘மனிதர்களுக்கு அன்பு காட்டாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
-------------------------------------------------------------------------------------------------------
"இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குலுக்கிக் கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்"  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).

2014/07/28

வௌ்ளிக்கிழமையின் சிறப்பு



வௌ்ளிக்கிழமையின் சிறப்புப் பற்றி
------------------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது,

“எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்”
(அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)

“சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்”
(ஆதாரம்: முஸ்லிம்)

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது, நன்மைகள் அதிகமாக உள்ள நாள்:
சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்”
(ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)

ரமழான் உணவு




இறைவனை அஞ்சி, அவன் ஏவியவற்றை மாத்திரம் செய்து முடிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. இஸ்லாம் ஈமானை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வாழ்க்கைநெறி..

இது புனித ரமழான் மாதம்...நோன்பிருப்பதும்.அதனை திறப்பதும் ஒவ்வொரு சக்தியுள்ள முஸ்லிமின் அன்றாட வாழ்வியலாக மாறியுள்ள இந்நாட்களில்...

நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில உணவு வழிமுறைகள் இவை

இப்தார் நோன்பு திறக்கும்போது 500 மி.லீ நீரில் 1 தேக்கரண்டி தேனைக் கலந்தும் பேரீச்சம்பழங்களைக் கொண்டும் நோன்பு திறக்கும்போது நாம் அதிக புத்துணர்ச்சி பெறுவோம். இது நம் சக்தியிழப்பைத் தவிர்ப்பதுடன் நோய் தொற்றுகையையும் தவிர்க்கும்.

பேரீச்சம்பழங்கள் நமக்கு விற்றமின்கள், கனியுப்புக்களைத் தருகின்றன. இம்மருத்துவ உண்மைகளை அன்றே நமது புனித இஸ்லாம் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளது.

அவ்வாறே நோன்பு நோற்கும்போதும், நோன்பு திறக்கும்போது ரமழானுக்குப் பொருத்தமான பழங்கள், மரக்கறிகளைத் தேடிப் பெற்று உண்ண வேண்டும்.

பழங்களுள் சில -
ஸ்ரோபெரி, வாழைப்பழம், திராட்சை,பேரீச்சம்பழம், பப்பாசிப்பழம், அன்னாசிப்பழம், மாம்பழம் , தார்ப்பூசனி

பழங்களை தனியாகவோ அல்லது புறூட் சலட், யூஸ் போன்றவையாகவோ உண்ணலாம் அல்லது பருகலாம்.

தார்பூசனி (Watermelon ) ஐ ஜூஸாகவோ அல்லது தனியாகவோ சாப்பிடும்போது நமது சருமம் பொலிவடைவதுடன், நமது உடலுக்குத் தேவையான மங்கனீசு , மக்னீசியம். பொஸ்பரசு, இரும்பு, நாகம், செம்பு மற்றும் பொற்றாசியம் கனியுப்புக்கள் கிடைக்கின்றன.
அத்துடன் இது நமது உடலில் நீர் இழக்கப்படாமல் தடுக்கின்றது..

பழங்கள் நோன்பு காலங்களில் உண்பது தொடர்பான அல்குர்ஆன் திரு வசனங்கள் சில

The Holy Qur'an mentions fruits as a generic term فاكهة fourteen times.

1. And for them there is fruit, and for them there is what they ask for. [36:57]

2. Therein they will recline; therein they will call for fruit in abundance and drinks. [38:51]

3. Therein for you will be fruit in plenty, of which you will eat (as you desire). [43:73].

அவ்வாறே மரக்கறிகளான கீரை வகைகள், தக்காளி, கரற், கறிமிளகாய், போஞ்சி போன்றவையும் ரமழான் மாதத்தில் நமக்கு பொருத்தமான காய்கறிகளாகும். இவற்றை சோற்றுடனோ அல்லது சூப்பாகவோ பயன்படுத்தலாம்.

சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய இவை நம் ரமழான் மாத உணவுப்பட்டியலில் சேரட்டும்....

ரமழான் சிறப்பு




ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

ரமழானியப் பூக்கள்


ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்
2:185



“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி


நோன்பின் சில ஒழுக்கங்கள்



நோன்பின் சில ஒழுக்கங்கள்
-----------------------------------------------------

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

ரமழான் சிந்தனைகள்


நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,”.

இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது.உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும்.

“”நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக!
அதிகமதிகம் நன்மை செய்வாயாக.
பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள்
செய்வதைக் குறைத்துக் கொள்,”

என்கிறார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில்
சிந்திப்போம்
----------------------------------------------------------------------------------------------

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!
எங்கள் இறைவனே! என்னுடைய  பிரார்த்தனையையும்  ஏற்றுக் கொள்வாயாக!
குர்ஆன் 14-40
---------------------------------------------------------------------------------------------

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

“நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், “நான்
நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிவிடுங்கள்,” என்கிறார்கள்
---------------------------------------------------------------------------------------------

"ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்."
(அல்குர்ஆன் 2:185)
-------------------------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------


'ஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சி ஒன்று. மற்றது அல்லாஹ்வை சந்திக்கும் போது மறுமையில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி'

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


சந்தேகங்களும் விளக்கமும்





ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. ஊசி போடலாமா ?

உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

2. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ?

தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா? எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்.
 நூல் : அஹமத், அபூதாவுத்

3. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால்
நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும்.
(அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

4. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

சஹர் செய்தல்



சஹர் செய்தல்
---------------------

நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்)

அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர்.
நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.  அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி)
நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்


நோன்பின் தற்காலிக சலுகைகள்
--------------------------------------------------
"நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்". (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.

வந்தது ரமழான்


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் நோக்கத்தை சரியாகப் புரிந்து நோன்பினை அனுஷ்டிக்கும்போது இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தக்கூடியதாகவும், செய்த பாவங்களுக்கான கறையைப் பிரார்த்தனைகளுடாகக் கழுவக்கூடியதுமான மாதமாகின்றது.

ரமளான் மாதகாலம் முழுவ‌தும் ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் எனும் இஸ்லாத்தின்  கடமையை நாம் ஏற்று நோன்பிருக்கும்போது, மறுமையை வெற்றி கொள்வதற்கான இறையாச்சமும் அதனை வளர்க்கும் ஆன்மீகப் பயிற்சியும் நமக்குக் கிடைக்கின்றன.

இந்தப் பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச்செய்யும்.

நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக்
கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும்.

அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில்செய்யப்படும்)

ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.

“நோன்பு எனக்குரியது.
அதற்கு நானே கூலி கொடுப்பேன்’

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ரமழானே


ரமழான் கலண்டர்
------------------------------------
பிறை பார்த்தே நம் ரம்ழான் நோன்பு ஆரம்பமாகின்றது. இந்த சந்திரன் தோற்ற நிலை, பயணங்களின் அடிப்படையைக் கொண்டு 2020 ம் ஆண்டு வரை எக்காலங்களில் புனித ரம்ழான் மாதம் நம்மை ஆரத் தழுவும் என்பதை விஞ்ஞானம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்நாட்கள் உண்மையா..அல்லாஹ்தான் அறிவான்..
இன்ஷா அல்லாஹ் நாமும் காத்திருந்து பார்ப்போம்..

ஹிஜ்ரி 1435 - வருடம் 2014 - June 29 - July 27
ஹிஜ்ரி 1436 - வருடம் 2015 - June 18 - July 16
ஹிஜ்ரி 1437 - வருடம் 2016 - June 07 - July 05
ஹிஜ்ரி 1438 - வருடம் 2017 - May 27 - June 25
ஹிஜ்ரி 1439 - வருடம் 2018 - May 16 - June 14
ஹிஜ்ரி 1440 - வருடம் 2019 - May 05 - June 03
ஹிஜ்ரி 1438 - வருடம் 2017 - April 24 - May 23

-----------------------------------------------------------------------------------------

தக்வா என்பது இறையச்சம். அல்லாஹ்விற்குப் பயந்து அவன் ஏவியவற்றைச் செய்தும் தடை செய்வதைத் தவிர்த்தும் வாழ்வதற்கான இப்பயிற்சியை நோன்பு வழங்குகின்றது. நோன்பில் இவ்வாறான உயரிய பண்புகள் இருப்பதனால்தான் நோன்பை ஒரு வணக்கமாக அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். 

எனவே .......

நோன்பிற்கு அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பதைப் போன்று நம் வாழ்வின் சகல விடயங்களிலும் அஞ்சி நடப்போமாக! 

ரமழான் இஸ்லாம் கூறும் நல்ல விடயங்கள் அனைத்தையும் நமக்கு ஞாபகப்படுத்தும்  மாதமாகையால்...

பசி, தாகம் கட்டுப்படுத்துவதனைப் போல் நமது அனைத்து பாவங்களையும் கட்டுப்படுத்துவோமாக.!
--------------------------------------------------------------------------------------------------



("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும்,என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!
குர்ஆன் 14-40

அல் குர்ஆன்

புனித அல்குர்ஆனில் .....

ஜூஸ்ஊக்கள் (பாகங்கள்) - ----30
மன்ஸில்கள் -------------------- ---07
சூறாக்கள்-------------------------- 114
மக்கி சூறாக்கள் ----------------- --86
மதனி சூறாக்கள் ------------------ 24
ருகூ கள் ---------- ----------------- 540
வசனங்கள் ---------- -------------6666
சொற்கள்--- ---------- -----------77934
எழுத்துக்கள்--- ---------- ------323760
ஸஹதாக்கள்-----------------------14


நோன்பு திறத்தல்


நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

1. நோன்பு திறக்கும் நேரம்:
---------------------------------------
'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

2. விரைவாக நோன்பு திறப்பது:
------------------------------------------------
'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

3. நோன்பு திறக்கும் உணவு:
-------------------------------------------
'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

4. துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரமிது
---------------------------------------------------------
'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

6. நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு:
---------------------------------------------------------
'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735)

7. நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி:
---------------------------------------------------------------
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

நல்வழி காட்டும் ரமழானே





سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى தன் அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்”

(அல்குர் ஆன் 17:1)
--------------------------------------------------------------------------------------------------

“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” ”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------------

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------------

எவரேனும் நோயாளியாகவோ,அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்
(என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

2013/04/12

பிர் அவுன்



தொல் பொருள் ஆய்விற்காக எகிப்திலிருந்து பிரான்ஸிற்கு கொண்டு செல்லப்பட்ட பிர் அவுனின் உடல்
------------------------------------------------------
பிர் அவுன் எவ்வாறு இறந்தான் என்பதைக் கண்டுபிடிப்பதே ஆய்வின் நோக்கம். இவனின் உடலில் காணப்பட்ட  உப்புப் படிவுகள் இவன் கடலில் மூழ்கி இறந்ததை சான்று பகிர்கின்றன. அதுமாத்திரமின்றி இவனின் கடலினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமையும், பின்னர் வெளியே எடுக்கப்பட்டமையும் ஆச்சரியமான விடயமென ஆய்வுகளுக்காக தலைமை வகிக்கும் சத்திரசிகிச்சைக் குழு தலைவர்  Prof:Maurice Bucaille குறிப்பிடுகின்றார்.
இவ் ஆய்வின் முடிவில் Prof:Maurice Bucaille இஸ்லாத்தை தழுவிக் கொண்டார்.

( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

- Ms.A.C.Jancy -