திரைப்படம் பற்றிய என் பார்வை
இந்தத் திரைப்படமானது ஈ ஆர் ப்ரைத்வைட்டின் 1959 ஆம் ஆண்டின் சுயசரிதை நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் 1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் நாடகத் திரைப்படமாகும். இது ஒரு உள் நகர பள்ளியில் சமூக மற்றும் இனப்பிரச்சினைகளை கையாளுகிறது. இதில் பிரதானமான பாத்திரமான தாக்கராக சிட்னி போய்ட்டியர் நடித்துள்ளார். இவருடன் கிறிஸ்டியன் ராபர்ட் ஸ், கீசன் சுசி கெண்டல் மற்றும் பாடகர் லுலு இணைந்துள்ளனர். ஜேம்ஸ் கிளாவெல் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படமானது எண்டர்டெயின்மென்ட் வீக்லியின் 50 சிறந்த உயர்நிலைப் பள்ளித் திரைப்படங்களின் பட்டியலில் 27 வது இடத்தைப் பிடித்தது. இது அமெரிக்காவில் அதிக வசூல் செய்த எட்டாவது திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்தில் ...............
பொறியியலாளராக வர வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற பிரிட்டிஷ் கயானாவிலிருந்து கலிபோர்னியா வழியாக பிரிட்டனுக்கு குடிபெயர்கின்றார் மார்க் தாக்கரே. அவரே இப்படத்தின் கதாநாயகன். எனினும் அவர் எதிர்பார்த்த தொழில் உடனடியாகக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும்வரை தற்காலிகமாக லண்டன் கிழக்கு முனையிலுள்ள நார்த் க்வே மேல்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியில் தன்னை இணைத்துக் கொள்கின்றார். ஏனைய பாடசாலைகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட மாணவர்களே இப்பாடசாலையில் கல்வி கற்பதனால் அவர்களின் நடத்தைகள் ஆசிரியர்களுக்கு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவே எல்லோரும் தமது வேலையை ராஜினாமா செய்தனர். பேர்ட் டென்ஹாம் மற்றும் பமீலா டேர் தலைமையில் இத்தகைய வெறுக்கத்தக்க குறும்புகளைச் செய்யும் மாணவர்களுக்கே மார்க் தாக்கரே கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றார். அவர்களின் பலவிதமான குறும்புகளையும் தார்க்கரே அமைதியாக எதிர்கொள்கின்றார். இருந்தும் சில நேரங்களில் மாணவர்களின் சில நடத்தைகள் அவரைக் கோபப்பட வைக்கின்றன. மாணவர்களின் நடத்தைகள் பற்றி தார்க்கரே சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றார். அவர்கள் இனி பாடப்புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே தமது கற்றல் காலத்தில் பெரியவர்கள் தொடர்பான எந்த விடயங்களையும் தன்னிடம் விவாதிக்க வழிப்படுத்தினார். மாணவர்களும் உறவுகள், திருமணம், தொழில் உள்ளிட்ட பல விடயங்களைக் கேட்டறிந்தனர். தமக்குள் எழுந்த பிரச்சினைகளைத் தீர்த்தனர். டென்காமைத் தவிர ஏனைய அனைத்து மாணவர்களின் மனதையும் தாக்கரே வென்றார்.
ஸ்தாக்கரே அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யும்போது
ஜிம் ஆசிரியரான மிஸ்டர் பெலுக் பாட்டருக்கிடையில் வன்முறை ஏற்படுகின்றது. தாக்கரே அதனைத் தடுக்கிறார். பெல்லிடம் தவறு காணப்பட்டாலும்கூட மிஸ்டர் பெலுக் பாட்டர் தன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கூறுகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் சில மாணவர்களின் ஆதரவை தாக்கரே இழக்கின்றார். அவர்கள், அவரை வகுப்பு நடனத்திற்கு அழைக்க மறுக்கின்றார்கள். சீலஸின் தாய் இறந்தபோது தாக்கரேயின் நன்கொடையை ஏற்க மறுக்கின்றார்கள்.
இந்நிலையில் .......
பள்ளி தலைமை ஆசிரியரோ 'வயது வந்தோர் அணுகுமுறை தோல்வியுற்றதாகவும், வகுப்புப் பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவிக்கின்றார். இப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு கிடைக்கும்வரை தாக்கரேயே ஜிம் வகுப்பினை எடுக்க வேண்டுமெனவும் தலைமை ஆசிரியர் கூறுகின்றார். அத்தகைய சூழ்நிலையில் தாக்கரேக்கு விண்ணப்பித்திருந்த பொறியிலாளர் பதவி கிடைக்கின்றது.
ஒரு சந்தர்ப்பத்தில் ஜிம் வகுப்பில் தாக்கரேயைக் குத்துச் சண்டைப் போட்டிக்கு வருமாறு சவால் விடும் டென்ஹாமின் திறனைப் பாராட்டும் தாக்கரே, அவனை இளைய மாணவர்களுக்கு குத்துச் சண்டை கற்பிக்குமாறு அறிவுறுத்துகின்றார். இச்செயற்பாட்டில் மாணவர்களின் திறன்களை இனங்கண்டு ஊக்குவிப்பவராக மாறுவதுடன் சில நடத்தைகளையும் மாற்றியமைக்கின்றார். அதன்பின்னர் டென்ஹாம் சக மாணவர்களிடம் தாக்கரே மீதான தனது மதிப்பை வெளிப்படுத்துவதுடன் அவர்மீதான காழ்ப்புணர்ச்சியையும் குறைக்கின்றான். தாக்கரே மீண்டும் மாணவர்களின் மதிப்பினைப் பெறுகின்றார். வகுப்பு நடனம், நன்கொடை நிகழ்வுகள் என முன்னர் மறுக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் மரியாதையுடன் அவரைத் தேடி வருகின்றது. பமீலா 'லேடிஸ் சாய்ஸ்' நடனத்தில் தன்னுடன் இணைந்தாட தாக்கரேயை தெரிவு செய்கின்றார்.
இவ்வாறாக தாக்கரே மாணவர்களின் உளமறிந்து தனது செயற்பாடுகளை பொறுமையுடன் நகர்த்தி குழப்பமான கேவலமான நடத்தைகளை கொண்டிருந்த மாணவர்களின் மனதை வென்றெடுத்தவராக வகுப்பறை கற்பித்தலிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
ஆசான் ஒரு சிற்பி. பொருத்தமான அணுகுமுறைப் பிரயோகங்களினூடாக மாணவர்களின் உளங்களை வென்றெடுக்க முடியும் என்பதை தாக்கரே நிருபித்திருக்கின்றார்.
தாக்கரே வகுப்பறையை விட்டு வெளியேறும்போது இரண்டு இளம் மாணவர்கள் உள்ளே வந்து பரிசளிக்கின்றனர். அதில் டேங்கார்ட் மற்றும் அட்டை 'ஐயா அன்புடன்' என சிரிக்கின்றது.
அடுத்த வருடம் 'இந்த இளம் மாணவர்களும் இவரது வகுப்பில் இருப்பார்கள்' என்ற சக ஆசான்கள் இருவரின் கேலி வார்த்தைகளை செவியில் ஏந்திய தாக்கரே மாணவர்கள் தன்மீது கொண்ட அன்பினைக் கண்டு கண்ணீர் சிந்தியவாறு, தனது பொறியியல் தொழிலுக்கான அழைப்பிதழை கிழித்தெறிந்தவராக தனது கற்பித்தல் பணியை முன்னெடுக்கின்றார்.
இங்கு தோலின் நிறம் கடந்த மனிதம் பேசுகின்றது. இந்தப் படத்தில் வருகின்ற மாணவர்களின் நடத்தைகளையுடைய பல மாணவர்களை நாமும் காண்கின்றோம். ஆனால் தாக்கரே போன்று மாணவர்பால் தமது முழுக் கவனத்தினையும் செலுத்தி அவர்களின் உளப்போக்கிற்கேற்ப தமது அணுகுமுறைகளை மாற்றி வழிப்படுத்துபவரே என்றும் காலத்தை வென்று நிற்கின்றார்.
அந்த யதார்த்தத்தை இப்படம் மெய்ப்பிக்கின்றது.
ஈற்றில்..................
தாக்கரே ............
மாணவர்களின் மனதை வென்றார்....!
இந்த மென்மையான கதைகளினூடாக எமது மனங்களையும் தொட்டார்.!!
தாக்கரே ஆசான்களுக்கெல்லாம் முன்னுதாரணமான கதாபாத்திரம். வகுப்பில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்தி சரியான விதத்தில் மாணவர்களை வழிப்படுத்தியுள்ளார்.
சுருங்கக்கூறினால் இத்திரைப்படத்தில் ஆசான் பற்றிய கதாபாத்திரம் ஒழுக்கம், மரியாதை, ஒருமைப்பாடு உள்ளிட்ட சகல பண்புகளையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கி வாழ முயற்சிக்கின்ற ஒரு நிர்வாகி.
இந்த திரைப்படம் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களை நோக்கினால் திரு.போய்ட்டியர் கூறுவதைப் போல இது விவேகத்துடன் விளையாடப்படுகின்ற சிறிய கதை என்கின்றார். இங்கு இனம் பற்றிய பிரச்சினைகள் எழவில்லை. வகுப்பில் தோன்றும் பதற்றங்களும் தணிக்கப்படுகின்றன.
டைம் அவுட் ஃபிலிம் கையேடு இது 'எங்களுக்குத் தெரிந்தபடி பள்ளி வாழ்க்கையுடன் எந்த ஒற்றுமையையும் கொண்டிருக்கவில்லை' எனக் கூறுகின்றது.
ஹல்லிவெல்லின் திரைப்படம் மற்றும் வீடியோ கையேடு இதனை 'செண்டிமென்ட் அல்லாத யதார்த்தம்' எனக் கூறுகின்றது.
சிறந்த பாடல்கள், கதை, நடிப்பு என பல பரிமாணங்களிலும் பல விருதுகளை வென்ற இத்திரைப்படம், கற்றல் சார்பான பல விடயங்களை முன்வைக்கின்றது. சூழல் மாற்றங்களால் உளத்தாக்கம் ஏற்படுகின்ற இளம் சந்ததியினர் உரிய விதத்தில் வழிப்படுத்தப்பட்டால் சமூகப் பரிமாணமுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றப்படுவார்கள் எனும் உண்மையை இத்திரைப்படம் உரக்கச் சொல்லி நிற்கின்றது.
அருமையான விமர்சனம்
ReplyDeleteThank You
Delete