About Me

2012/06/10

மே தினம்



மனப்பாறை சிதைக்கப்படுகின்றது
முதலாளித்துவ
முறுக்கேறிய கரங்களால்!

உளியின் வலியால்
சிற்பமாகும் எங்கள் கனவு கூட
ஆவியாகிப் போகின்றது!

களமேட்டில் காத்திருக்கும் அந்தப்
பதர்களாய்...........
காய்த்துப் போனவர்கள் நாங்கள் !

வேரறுக்கப்பட்ட மரங்கள் பரப்பும்
நிழலுக்கும்
தகுதியற்றவர்கள் நிஜங்கள் நாம்!

விரல்களின் தீண்டாமைப் புரட்சியால்
காலாவதியான புத்தகங்களின்
சகபாடிகள் நாம்!

வியர்வைத்துளி நா
உறிஞ்சியெடுக்கும் கைரேகைகள்
முறிந்து வீழ்கின்றன வறுமைக்குள் !

எதிர்பார்ப்பு சமிக்ஞ - அடிக்கடி
வறட்சிக்குள் நிரப்பப்படும்
தொழிற்பூக்கள் நாம்!

உயரப் பறக்கும் எத்தனங்கள்
உடைக்கப்படுகின்றன
சிறகுடைக்கும் வல்லுறுக்களால் !

வைகாசி முதற்பொழுதினில்....
வெடித்திடும் ஒலிப்பதிவுகள் - ஏனோ
அழிக்கப்படுகின்றன அடிக்கடி!

வண்ண விண்மீன்களெம்மை
எரியூட்டும் தீப்பந்தங்களாய்
பணமுதலைகள் வாய் பிளக்கின்றன!

மனிதம் கொஞ்சம் தாருங்கள் - தொழில்
சூளைக்குள்ளும் எம் சுவாசம்
சூடேறட்டும் உயிர்ப்புக்காய்!




மழை


வானம் சலவை செய்யப்படுகின்றது
நெடுநேரமாய் - மேகத்தின்
வாலிப மிடுக்கோடு!

வழிந்தோடும் நீரில்
அடிக்கடி முகம் கழுவும் - என்
வீட்டின் முற்றங்கள்
ஜலதோஷத்தில் தோஷம் கழிக்கின்றது!

கூதல் காற்று குடை பிடிக்கும்
அண்டவெளிகளில்
புரண்டெழும் நீர்வயல்கள்
அணிவகுக்கின்றன ஆறுகளைத் தேடி
ஆர்ப்பாட்டமாய்!

உள்ளத்தின் குதுகலத்திற்காய்
ஊசலாடும் காகிதக் கப்பல்கள்
துறைமுகம் தேடி
கரையொதுங்குகின்றன - என்
தெருக்கோடி கரைதனில்!

கூரை பிழியும் நீரை
நிறைத்தெடுக்கும் பாத்திரங்கள்
திரு திருவென முழிக்கின்றன
விறைக்கும் தம்மேனியைச் சிலிர்த்தபடி!

சிட்டுக்களின் சிணுங்கலும்
சின்னப்பூக்களின் நீராட்டமும்
வண்ணப்பூச்சிகளின் சிறகுடைப்பும்
மின்னலின் படமெடுப்பும்
சிதறி வீழ்கின்றன என்னுள்
பரிதாபமாய்!

வெட்டவெளியில் வெருண்டோடும்
நீரை
இட்டத்தோடு பற்றிப் பிடிக்க
நட்ட மரங்களும் துடிக்குது - சில
தன் நாடித் துடிப்பை அடக்குது!

மழைக்குருவியாய் கரைந்திட
மனசும் துடிக்கையில்
அன்னையின் மிரட்டல் படியிறங்குது- என்
நினைவுத்தளத்தில் ஆக்ரோஷமாய்!

விழியோரம் வியப்புத் தேக்கி
மழைதனை ரசித்திட
புளாங்கிதத்தின் ஊர்கோலத்தில்
உலாவி நிற்குது என் மனம்!


- Jancy Caffoor-

மனிதம்


அராஜகங்களின் அணிவகுப்புக்கள்
அர்ஜிக்கப்படுகின்றன
அடிக்கடி இங்கே 
குருதிப்பூக்களால்!

பறக்கும் சிறகுகளை
உரித்தெடுத்து 
தீக்குள் சுருக்கும்
முகமூடிகளின் சில்மிஷங்களுக்கு
முகவுரைகள் எழுதுகின்றன
அரசியல் எழுத்தணிகள்!

மத வயலோரங்களில் 
பிரிவினை விதைத்து
வேற்றுமை விளைச்சலுக்காய்
ஒன்றுகூடுமிந்த பேரினவாதிகளின்
மயானங்களாய் உருமாறுகின்றன
நம் தேசம் 
அடிக்கடி!

மனிதங்களிங்கே 
அறையப்படுகின்றன சிலுவைகளில்!
இறையில்லங்களோ
வேரறுக்கப்படுகின்றன
மறை கற்றறியா துவம்ஷங்களால்!

விதைக்கப்பட்ட நம்பிக்கைகளின்
சிதைவால் 
கருகிக் கதறும் மாண்புகள்
உருகி வடிகின்றன ஆர்ப்பாட்டங்களாய்!

கலிகாலத் தெருக்கூத்துக்களின்
அரிதார இருளை 
களைத் தெறியவோ- இனி
சேவல்கள் கூவட்டும் !
சுந்தரப் பொழுதுகளும் சிரிக்கட்டும்!

ஜன்ஸி கபூர் 
 

இவர்கள்


நெருப்புத்துண்டங்களாய்
வறுமை
இவர்கள் வாழ்வை விழுங்கும்!

ஒட்டடை கூட
ஒட்டிக் கொள்ளாத உதரம்
ஆகாரத்திற்காய்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்!

வீதியோர நிழற்படுக்கையில் - தினம்
விழுந்து மொய்க்கும் விழிகள்
பழுதாகி துடிக்கும் கண்ணீரில்!

வீசப்படும் சோற்றுப் பருக்கைகள்
வீம்பாய் முறைத்துக் கிடக்கும்
இவர்கள் 
தெம்பில்லா மேனிகள் கண்டு!

கள்ளிச் செடியின் 
முள்ளுறுத்தலில் முணங்கிக் கிடக்கும்
இவர்கள் வாழ்வோ 
கேள்வியாகி முறைத்துக் கிடக்கும்!

சோகப் புழுக்களின் பிறாண்டலிலும்
சோர்வடையா பசி மிரட்டல்கள் 
வந்தமரும் சேமிப்பகங்கள்
இவர்கள் !

திட்டலும் முறைப்பும் சரிதமெழுத
விட்டகலா பசிக்காய் - தினம்
பறக்கும் பட்டாம் பூச்சிகளிவர்கள் !

ஜன்ஸி கபூர்