About Me

2012/06/11

நண்பனே !



தொலைவில் சிறு புள்ளியாய்
சூரியன் 
அதன் வெம்மைக்குள் சிறைப்படும்
என் வியர்வைத்துளிகள் - உன்
பார்வையில் ஆவியாகிப் போகின்றது!

நிமிஷங்களின் சில்மிஷத்தால் - நம்
உதடுகள் மௌனித்தாலும் 
உணர்வுகளின் பாஷையில் - நம்
இதயம் உறைந்துதான் கிடக்கின்றது!

உன்னாசைகளில் நானும்
என்னாசைகளில் நீயும் - நம்மை
பகிர்ந்து கொள்கையில் 
உயிரின் உயிலில்- நம்
நட்பும் கைரேகை பதிக்கின்றது
ஆனந்தமாய்!

நம் பார்வைப் புலத்தில் பதிக்கப்படுகின்ற
நம் விம்பங்கள் 
நம் மனவெளியை ஆக்கிரமிக்கையில்
சிலிர்த்துக் கிடக்கின்றோம் - நாம்
கவலைகளை விற்றவர்களாய்!

நம் நட்பின் இதத்தில்
பனித்துளிகளின் சாம்ராஜ்யமாய் 
முழு மனசுமே அப்பிக்கிடக்கிறது !

நாமோ !
புன்னகைகளை மட்டுமே சேகரித்தபடி
நட்புலகில் அலைகின்றோம் 
சுதந்திரமாய்!

ஜன்ஸி கபூர் 

வறுமை தேசம் !

காற்றை நீவும்- அந்த
ஆலமர விரல்களின் கீழ் 
விழுந்து கிடக்கின்றது -என்
விலாசம்!

உறவுகள் தொலைத்த 
தெருநாய்களால் - என்
சாமம் தொலைந்து கொண்டிருக்கின்றது
தாராளமாய்!

நுளம்பின் ரீங்காரம் விரட்டும்
என் கைத் தாளத்தால்
கைரேகைகள் கழன்று கொண்டிருக்கின்றன
சுருதி பிசகாமல்!

வெளியுலகை 
களவாய் எட்டிப்பிடிக்கும்
கிழிசல்களால் 
கலியுகம்
களவாய் சிறைபிடிக்கின்றது
இளமை மேனியை!

சாலையோரச் சந்தடிகளில்
கலைந்து போகும் 
கனாக்களின் கண்ணீரில்
மனசோ "ஜலதோஷத்தில்"
கரைந்து கொண்டிருக்கின்றது!

சின்ன மின்மினிகளின்
ஒளிச் சிதறல்களில் 
இருளோ காவு கொள்ளப்படுகின்றது
மருளாமல்!

எச்சில் பருக்கைகளுக்கும்
ஏலம் போடும் 
வறுமை தேசத்தில் - என்
வாழ்வும் வரண்டு கிடக்கிறது
வனப்பை மறந்து!

ஜன்ஸி கபூர் 

ஆசை......ஆசை !


விண்கற்கள் பொறுக்கி
வண்ண வீடு கட்டணும் !
மின்குழிழாய் பொருத்த- அந்த
சூரியனை நிறுத்தணும்!

காற்றில் மெல்ல ஊஞ்சல் நெய்து
நாள் முழுதும் ஆடணும்!
பசி மெல்ல வந்துவிட்டால்
நிலாப் பீங்கான் தேடணும்!

வியர்வை முகம் தான் துடைக்க
மேகக் கைக்குட்டை வாங்கணும்!
முந்தானையாய் போர்த்திக் கொண்ட
வானவில் சேலை கழுவணும்!

கோள்களுக்கு "கோள்" மூட்டி
சீண்டிக் கொஞ்சம் பார்க்கணும்!
புவிப்பந்தை மெல்ல உருட்டி
விண்ணை முட்டச் செய்யணும்!

வான் நீலம் கழுவியெடுத்து
என் கதிராளி நிரப்பணும்!
தேன் சிந்தும் மழைத்துளியால்
சின்ன மாலை கோர்க்கணும்!

எந்தன் நெஞ்சின் எத்தனைஆசைகள்
அவையென்னை 
கட்டியணைக்கும் பேராசைகள்!

ஜன்ஸி கபூர் 

2012/06/10

தனிமை!















அந்த வானம் போல 
நீண்டு செல்லுமிந்த இரவில்
தேடிக் கொண்டிருக்கின்றேன் - என்
உறக்கத்தை!

தந்தையே !

நீங்களோ  
மீளா உறக்கத்துக்குள் நனைந்து - எமையே
மறந்து கொண்டிருக்கின்றீர்கள்!

என் வீட்டுச் சுவர்களில்
சிதறிக் கிடக்கும் உங்கள் ஞாபகங்கள்
என் குரல்வளைக்குள் இடர்வதால்
மூச்சுத் திணறி 
உயிரறுக்கின்றேன்
வெறும் ஜடமாய் நான்!

 உங்கள்
அதிர்வுகளில்லாது 
எங்கள் மௌனங்கள் கூட
காயம் பட்டுக் கிடக்கின்றது கன காலமாய்!

சித்திரவதைக்குள் சிறைப்படும்- அந்த
கைமுஷ்டியளவு இதயத்துள்
அமிலமூட்டும் விதியைச் சபிக்கின்றேன்
உங்கள் அருகாமையை அது
நகர்த்துவதால்!

தந்தையே !
என் பாசத்துளிகள் ஒவ்வொன்றும்
கண்ணீராய் கரையுதிங்கே!
அதைக் காணாமல் நீங்களோ
அங்கே 
மூச்சறுந்து கிடக்கின்றீர்கள்!

ஜன்ஸி கபூர்