ஆலமர விரல்களின் கீழ்
விழுந்து கிடக்கின்றது -என்
விலாசம்!
உறவுகள் தொலைத்த
தெருநாய்களால் - என்
சாமம் தொலைந்து கொண்டிருக்கின்றது
தாராளமாய்!
நுளம்பின் ரீங்காரம் விரட்டும்
என் கைத் தாளத்தால்
கைரேகைகள் கழன்று கொண்டிருக்கின்றன
சுருதி பிசகாமல்!
வெளியுலகை
களவாய் எட்டிப்பிடிக்கும்
கிழிசல்களால்
கலியுகம்
களவாய் சிறைபிடிக்கின்றது
இளமை மேனியை!
சாலையோரச் சந்தடிகளில்
கலைந்து போகும்
கனாக்களின் கண்ணீரில்
மனசோ "ஜலதோஷத்தில்"
கரைந்து கொண்டிருக்கின்றது!
சின்ன மின்மினிகளின்
ஒளிச் சிதறல்களில்
இருளோ காவு கொள்ளப்படுகின்றது
மருளாமல்!
எச்சில் பருக்கைகளுக்கும்
ஏலம் போடும்
வறுமை தேசத்தில் - என்
வாழ்வும் வரண்டு கிடக்கிறது
வனப்பை மறந்து!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!