About Me

2012/07/23

அன்பின் அவஸ்தை



மிரண்டோடாதே!
உன் ......
குண்டுவிழியில்
கண்டுகொண்டேன் என்னை!

உன் கருமித்தன
புன்னகையில்............
கழுவிக் கொண்டேன் - என்
சோகங்களை!

நீ யறியாமலே.............
உன்
காலடித் தடத்திலே
பதித்தேன் - என்
பயணப்பாதையை!

உன்...........
ஓரிரு வார்த்தைக்குள்ளும்.............
கோர்வையாக்கினேன் - என்
வாலிபக் கனவுகளை!

நீ..............
விரட்டிய போதும்
பரிவு தந்தேன் கவிதைகளால் - உன்
உறவுக்குக் கரமேந்தி!

சமூக அழுத்தங்களால் - நீ
எரிமலையாகும் போது...........
உன்னுள் படர்ந்தேன்
பனித்துளியாய்!

என் ..........
பல நாட் தேடல் நீ!
புரியவைக்க எனக்குள் - பல
யுகப் போராட்டங்கள்!

உன்............
அருகாமை நந்தவனத்தில்
பல மல்லிகைகள்
என் வசமாகின - உனக்கு
மாலை தர!

நீ அறிவாயா......!
உன் கனவு முகத்தில் கூட
அக்கினியின் ஆக்ரோஷம்
என்
வியர்வை பிடுங்கியது!

நீ தூவிய நேசத்துளி
சிறுதுளியே!
பார்...............
பாரையே பற்றிப்பிடிக்கும்
வேராய்.............
உருப்பெற்றதின்று !

உன் ஞாபகங்களில்
எனையும் நிரப்பிக் கொள்...........
நாளை உன்னுள்
நானும் வாழவேண்டுமென்பதால்!

ஜன்ஸி கபூர் 

என் தேவதை


தாமரைச் சாறில் மையெடுத்து
சூரிய விரலில் பேனா ஏந்தி - நீ
நிலவின் விளக்கொளியில்
களவாய் வரைந்த காகிதங்கள்
என் மலர் மெத்தையின்
பூவாச தூதோலைகள்!

புன்னகைக் கொலுசினிலே
ஒட்டிக் கிடக்கும் உன் வார்த்தைகள்............
இன்னிசைத் தொகுப்பாக - என்
செவிப்பறை யேந்தி நிற்கும்!

உன் பார்வை மின்னொளியில்
என்னுயிரும் ஒளியுறுஞ்சும்...........
நீ பருவச் சேமிப்பினிலே
உதிர்க்கும் நாணமள்ளி- துருவப்
பனிப்பாறை நித முருகும்
தங்கச் சிற்பமாய் உன் விரலது தொடும்!

நேர நகர்விற்கு நங்கூரமிட்டு - நீ
நெடு நேரம் எனை நேசிக்கையில்
என்....................
தனிமைச் சாரளம் விழி திறக்கும்
உன்னையே உள்வாங்கி
கனவுவெளியில் காதல் செய்யும்!

என் நெஞ்சத் தரையில் விழுதாகும்
மன அண்டவெளியின் ஆட்சிக்காரியே...........!
என்
ஞாபகக் கல்வெட்டில் நீ - நிதம்
விரல் தொட்டுச் செல்கின்றாய் அழகாய்!


ஜன்ஸி கபூர் 


சின்னத் தாமரை !


அந்த நிலாவைக் களவாப் பிடித்தே
பொத்தி வைச்சேன் நெஞ்சுக்குள்ள ............
பௌர்ணமி யவள் சிரிப்பினில்
வாழ்வின் இருளும் மிரண்டோடியதுவே!

தாமரை விழி விரித்தாள் - இன்ப
மகரந்தங்கள் அள்ளித் தெளித்தாள் - தினம்
மடியினில் மெல்லப் புரண்டாள்
கருவண்டாய் எனை ஈர்த்து நின்றாள்!

பஞ்சுக் கரத்தால் முகம் வருடியே- என்
நெஞ்சுக்குழியின் சுவாசமாய் நிறைந்து நின்றாள் !.....
வஞ்சியென் னன்பில் மூழ்கிக் கிடந்த - அந்த
பிஞ்சு மகள் என் செல்வமன்றோ!

சந்தனம் கரைத்து மேனி கொண்டாள்
மல்லிகையின் மொட்டுக்களின் வாசம் கொண்டாள் !
அள்ளியணைத்திட ஆசை கொண்டாள்- அந்த
வண்ண மகளவள் வைரமானாள்!

மழலை தேனில் என் பெயர் நனைப்பாள்-என்
ஜடை அவிழ்த்தும் மெல்ல விழுப்பாள்..........
வெள்ளிக் கொலுசொலி யவள் சிரிப்பில்
வெள்ளி னிலவாய் கண்ணுள் ஒளிர்வாள்!


(எங்கள் செல்லம் அஸ்காக் குட்டிக்கான என் கவிதை)


உணர்வோசை


இந்தப் புவிக்கோளத்தில் - நாம்
இரணயாத சமாந்தரங்கள் !
அதனாற்றானோ
என்......................
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
உன் நிராகரிப்பின் சலிப்போடு
விழிநீராய் வழிந்தோடுகின்றது!

உன் நேச ஒளியில்
அன்று......
விட்டிலான என் மனசோரங்களெல்லாம்
இப்போது.......
வெறுமைச்சிறகுகளால்
பறக்கின்றன
உயிர்ப்பை துறந்தபடி!

என் வாழ்க்கை மெழுகு- உன்
அனல் பட்டதால் உருகி உருகியே
கரைந்ததில்...............
கறைப்படிவுகளாய்
சோதனைகளும் சோர்வுகளும்
படிந்து கிடக்கின்றன
என்னுள்!

நம்முள் நனைந்த கனவெல்லாம்
உலர்ந்து உவப்பின்றி- பிரிவின்
புலர்வில் காணாமல்தான் போனது!

இருந்தும்..............
என் வெற்றிட மனதில்
சுற்றியோடுமுன்னை நிதமும்
பற்றிப்பிடிக்க காத்திருக்கின்றேன்!
சற்றுப் பொறு.............
நம்பிக்கையின் அதிர்வோசைகள்
மனத் தந்தியில்
முரசறைகின்றதே பலமாய்!

ஜன்ஸி கபூர்