About Me

2012/07/29

உலக தாதியர் தினம்



2012.05.12
---------------
கல்வி மற்றும் வைத்திய துறைகளுடன் சம்பந்தப்பட்டோர் வெறும் ஊதியத்திற்காக மட்டும் செயற்படுவதில்லை. இவர்கள் உண்மையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் போதே அத்துறைசார் குறிக்கோள் வெற்றி நிலையடைகின்றது. அந்த வகையிலின்று உலக தாதியர் தினம் அல்லது செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

1953 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாகப் பிரகடனம் செய்யும்படி விடுத்த வேண்டுகோள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது. 1965ம் ஆண்டிலிருந்து தாதியர் சேவையை கௌரவிக்கும் விதமாக புளோரன்ஸ் பிறந்தநாளான மே 12 ம் திகதி இந் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் செல்வச்சிறப்புமிக்க உயர் குடியைச் சேர்ந்தவர் நைட்டிங்கேள். இத்தாலி புளோரன்ஸ் எனும் இவரது பிறப்பிடத்தின் ஞாபகமாக பெற்றோர் இவருக்குப் பெயர் சூட்டினார்கள்.

தாதித் தொழிலின் மகிமையில் ஈர்க்கப்பட்ட நைட்டிங்கேள் போரில் காயம்பட்ட வீரர்களை ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதியர்களுக்கான  பயிற்சிப்பள்ளியையும் இவரே முதன் முதலில் ஆரம்பித்தார். புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டில் ஆதரவற்றோர் விடுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற போராட்டத்திலும் ஈடுபட்டார்.

1846 ஆம் ஜேர்மனி சென்ற இவருக்கு, அங்குள்ள கெய்சர்ஸ்வர்த் மருத்துவனைச் செயற்பாடுகள் மனங் கவர்பவையாக இருந்தது. இதனால் 1851 ல் தொடர்ச்சியாக 4 மாதங்கள் அக் குறித்த மருத்துவமனையில் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். அக்காலத்தில் தாதியர் சேவைக்குரிய கௌரவம் அளிக்கப்படவில்லையென்பதால் தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறியே அவர் தன் முழு வாழ்வையும் தாதியர் தொழிலுக்காக அர்ப்பணித்தார்.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படிகின்றது. இங்குள்ள செவிலியர் மூலமாக விளக்கு ஏற்றப்படும். இங்கு வருகை தரும் செவிலியர் மூலமாக ஏற்றப்பட்ட விளக்கு கைமாறப்பட்டு இறுதியில் அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன மூலம் தாதியர் தமது அறிவைப் பரிமாறுவதாகக் கருதப்படுகிறது.

'விளக்கேந்திய சீமாட்டி', 'கைவிளக்கேந்திய காரிகை' என அனைவராலும் போற்றப்பட்ட புளோரன்ஸ் ஒரு எழுத்தாளரும், புள்ளிவிபரவியலாளருமாவார்.

ப்ரிய சகி!



ப்ரிய சகி!

சந்தனங் குலைத்த உன்
மதி முகத்தில் ..................
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதிக்கின்றேன் - என்
இதழோரங்களில்!

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்.....................!
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே.........
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும் உன்..................
அசைவுகளில்
இதிகாச காதலுணர்வுகளை
சேகரித்துக் கொண்டேன் !
நாளைய நம் வரலாற்றிற்காக!

என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு
நொடிகளும்...............
என்னுயிர் உனக்குள்ளல்லவா
ஒளிந்து கொள்கின்றது  சகீயே!


ஜன்ஸி கபூர் 














2012/07/28

ஞாபக அலைகள்

1990 ஒக்டோபர் 30
-------------------------
            ******************************************
                ஐின்னா வீதி - யாழ்ப்பாணத்திலுள்ள
                 எமது  வீட்டின் முன்புறம்*
            ******************************************

யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட  கரிய நாள்...............

அத் துரோக நாளில் எலும்புக்கூடாய் மாற்றப்பட்ட எங்கள் வீட்டின் படங்களையே இப்பதிவில் இணைத்துள்ளேன்..

அந்த ஞாபகங்களின் பதிப்பிவை .....இவை இனத்துவேசத்தினை யார் மீதும் தூண்டக்கூடியவையல்ல...நான் அனுபவித்த வேதனைகளின் சங்கமம்.என் நட்பினருடன் பகிர்வதில் ஆத்ம திருப்தி. இவ்வாறான இனச்சுத்திகரிப்பு இனி ஒருபொழுதும் எந்த சிறுபான்மைக்கு எதிராகவும் கனவில் கூட நடக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடனேயே இதனை எழுதுகின்றேன்...

யுத்தம் தன்னிரைக்குள் எம் பிரதேசத்தின் வனப்பையெல்லாம் உறிஞ்சிய நிலையில் எஞ்சியிருந்தவை வறுமைப்பட்ட வாழ்வும், அவல மனநிலையும், ஊனப்பட்ட உடல்களும் ,உருக்குலைந்த மனைகளும் தான்............


வெறுமையே தேசியமாய் மாற, மலினப்பட்ட மனசாட்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு,  யுத்தங்களின் எச்சங்களாய் உதிர்ந்து கொண்டிருந்தோம்..

பீரங்கித் தாக்குதலும், ஆட்லறி ஷெல் வீச்சும், ஹெலிச்சூடும், பொம்பர் குண்டுவீச்சும் பழக்கப்பட்டவையாக எம்மோடு பதிவாகிக் கிடந்தன.

மின்விநியோகம் தடைப்பட்டும், வெகுசனத்தொடர்பூடகங்களின் செல்வாக்குமிழக்கப்பட்ட நிலையில் என் பொழுதுபோக்காக ,உதிர்ந்து விழும் சன்னங்களையும் பொம்பர் குண்டுவீச்சின் எச்சங்களையும் சேகரிப்பதனைக் கொண்டிருந்தேன்.மாணவர்ப்பருவத்திலிருந்த என்னிடம், திரட்டூக்கம் அதிகமாகவே இருந்ததால் என் கவனம் இச் சேகரிப்போடு ஒன்றிக்கிடந்தது.

 மக்களில் ஓரிரு குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்க, ஏனையோர் தம் பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த நிலையில் , யாழ்ப்பாணம் சோனகதெரு வெறிச்சோடிக்கிடந்தது..

அந்த ஓரிரு குடும்பங்களில் நாமும் அடக்கம்...பங்கரோ வேறெந்த பாதுகாப்போ இல்லாத சூழ்நிலையில், இறைவன் துணையுடன் தலைக்கு மேல் கூவும் ஷெல்களை எண்ணுவதில் உயிர் கரைந்தது..

ஒக்டோபர் 30 காலை 6.30 மணியளவில் எமக்கு அறிவிப்பு விடப்பட்டது. சகல முஸ்லிம் மக்களும் யாழ்ப்பாணம் ஐின்னா மைதானத்தில்  கூடும்படி................
ஒலிபரப்பு காற்றிலே அலைந்து எமக்குள் பீதியைக் கரைத்துக்கொண்டிருந்தது...எம்மிருப்பிடத்தை இழக்கப் போகின்றோம் என உள்ளம் எச்சரிக்கையுணர்வில் ஆட்பட்டு தவித்தது.


                         **************************************************
                              என் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அறை
                         ***************************************************

நாம் வீட்டிலிருக்க என் தந்தை மட்டும் கூட்டத்திற்குச் சென்றார். அரைமணித்தியாலம் கழிந்து போகாத நிலையில் முஸ்லிம் வீதிகளை மனித அவலங்கள் நிறைத்தன. கூக்குரலும், கண்ணீருமாய் துணி மூட்டைகளை மட்டுமே ஏந்தியவர்களாய் மக்கள் தம் பாரம்பரீய பூமியிலிருந்து வீசியெறியப்பட்டார்கள். நாமும் வெளியேற்றப்பட்டோம் . எம் வீடு, வாசல், சொத்து அனைத்தையும் அந்த ஒரு நொடியில் தாரை வார்த்தவர்களாய்  வெறுமையுடன் வெளியேற்றப்பட்டோம்

இந்திய இராவணுத்தினர் எம் தேசத்தைக் கைப்பற்றிய போதெல்லாம் இடம்பெயராத நாம் அன்று எம் சமூகத்தினருடன் ஒன்றாகக் கலந்து வேரறுக்கப்பட்டோம். எங்கள் கடைசிப் பயணச்சுவட்டின் கறை வீதியில் பதிந்து மறையத் தொடங்கியது.

போகும் வழி தெரியவில்லை.....
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையேதுமில்லை..
அலையோடு அடிபட்டுச் செல்லும் படகுகளாய் மக்கள் போகும் திசை நோக்கி எம் கால்களும் பயணித்தன.

மரண மிரட்டல்களும், துப்பாக்கிக் கரங்களும் எம்மை வழி நடத்திச் செல்ல எமது வீதியான ஐின்னாவீதிச் சந்தியிலுள்ள அவர்களின் சோதனைச் சாவடிக்குள்   நாங்கள் உடல் சோதனைக்காகத் தள்ளப்பட்டோம்.. துப்பாக்கியேந்திவர்களாய் எம் உடல்களை அழுத்தி சோதித்தனர். பெண்களிடமிருந்த தங்க நகைகளும் பணங்களும்  பறித்தெடுக்கப்பட்டன.....

இருப்பிடத்தை இழந்து வெளியேறும் இந்நிலையில் அவர்களின் எஞ்சிய வாழ்வின் நம்பிக்கையாகக் கொண்டு செல்லும் சிறு தொகைப்பணமும் ,நகைகளும் மீண்டும் பறிக்கப்படும் அந்தச் சிறுமைத்தனம் கண்டு  பல பெண்கள் கதறி மயங்கி விழுந்தனர்...

கூட்டத்தில் 1 பவுண் நகை கொண்டு செல்லலாம் என அறிவிப்புச் செய்து விட்டு கையில், காதில், கழுத்தில் இருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொண்டிருந்தனர் அந்த சுதந்திரவாதிகள்...

 ஒரு சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்போர் தம்மையண்டியிருந்த வேறொரு சிறுபான்மையினரை வேரறுப்பதென்பது  எவ் வகையிலான நியாயம் எனும் வினா மட்டும் எனக்குள் தொக்கிக் கிடந்தது இரகஸியமாய் !




                            ******************************
                            *  எங்கள் வீட்டின் பின்புறம் *
                            ******************************
நான் சோதிக்கப்பட்ட போது என் கையிலிருந்த தங்க வளையல்களும், சல்வாருக்குள் மறைந்து கிடந்த தங்கச் சங்கிலியும் பென்ரனும்   இரக்கமின்றி கழற்றியெடுக்கப்பட்டது........மனமோ விறைத்த நிலையில் எதையோ இழந்த நிலை.

அந்த ஆயுதக்கரங்கள் முன்னிலையில் நாங்கள் வலுவற்றவர்கள்...எங்களால் அவர்கள் மீது சபிக்கத்தான் முடிந்தது...இறைவனிடம் எங்கள் மனக்கவலையை ஒப்படைத்தவர்களாய் நாங்கள் கைகாட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினோம்..

தண்ணீர் கேட்டுத் துடித்த மூதாதையருக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கப்பட்டது.. இளைஞர்கள் தாக்கப்பட்டனர். வயதானவர்கள் கேலி வார்த்தைகளால் இம்சிக்கப்பட்டனர். ஒரே மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களின் பண்பாட்டுச் சிதறல்களை அன்றுதான் நான் கண்முன் கண்டேன். சிலரின்   அலட்சியங்களால் அவர்களின் இலட்சியங்களின் கனம் குறைந்து கொண்டிருந்தது எம்மவர்கள் முன்னிலையில். 

எம்மை மனோகராத் தியேட்டரில் 2 நாட்கள் தங்க வைத்தனர். பசியும் நுளம்புக்கடியும் எங்கள் அன்றைய பொழுதைப் பேரம் பேச நண்பர்கள் இரக்கத்தில் கொண்டு வந்து தந்த பாண் துண்டுகள் சோர்வைக் கொஞ்சம் போக்க  தயாரானோம் அகதி வாழ்வுக்குள் நுழைய !

அன்று அந்த இருளான வாழ்க்கைக்குக் காரணம் நாங்கள் முஸ்லிம்களாய் பிறந்தமையே! தவறு சிலர் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு சமூகத்தின் பாரம்பரீயத்தையே உயிரறுப்பது ஆகாத, தண்டனைக்குரிய, கண்டிக்கத்தக்க செயலே !

இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வாகனங்களில் நாம் நிறைத்து  ஏற்றப்பட்டு கேரதீவு கடலருகே இறக்கப்பட்டோம். பலர் தம் உறவுகளைப் பிரிந்தார்கள். கேரதீவிலிருந்து "பரிசில்களில்" ஏற்றப்பட்டோம். சிலர் பழக்கமற்ற தன்மையால் கடலில் வீழ்ந்தார்கள். சிலரோ தாம் கொண்டு வந்த உடுப்பு பொட்டலங்களை கடலில் தவறுதலாக வீழ்த்தினார்கள். யாரை யார் ஆறுதல்படுத்துவது. 

                               *********************************
                               * எமது வீட்டு  அறையொன்று  *
                               *********************************

எங்கள் பயணம் அக்கரையை அடைந்த போது வாகானங்கள் பயணிக்க முடியாத காடுகள் தென்பட்டன. சேறும், சகதியும், முட்களும், கற்களும் எமைச் சூழ்ந்திருக்க ஈர் தினங்கள் கால்நடைகளாகப் பயணித்தோம். வயதானவர்களை அவர்கள் ஆண் மக்கள்கள் தோளில் சுமந்து சென்ற காட்சிகள் கண்ணுக்குள் இரும்பைக் காய்ச்சியூற்றின. கர்ப்பிணிகளும், சிறுவர்களும், ஊனமடைந்தவர்களும் பயணிக்கமுடியாத அந்த அந்தரிப்பு நிலை  பார்ப்பவர் நெஞ்சக்குழியில் கண்ணீரைத் தேக்கக்கூடியவை. 

இவ்வாறாகப் பயணித்த ஐந்து நாட் பயணத்தின் முடிவில் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் எம்மை அரவணைத்தது. கொடுமையான பசியின் இரைச்சலுக்குத் தீனியாக கிடைத்த பாணும் சோறும் பருப்பும் கரட் கறியும் எமக்கு வழங்கப்பட்ட அமிர்தங்கள் அன்றைய நிலையில் !

                        ***********************************
                        *    எங்கள் வீட்டின் நடுக்கூடம்     *
                        ***********************************

எம் வருகையறிந்த அநுராதபுரத்தில் வசித்து வந்த என் மாமா, சாச்சி குடும்பத்தினரின் ஆதரவுக்குள் நாம் ஒன்றிக்கொண்டோம். எம் உடமைகளைப் பறித்தெடுத்தவர்களால் எமது கல்வியறிவைச் சுரண்ட முடியவில்லை. எமது இன்றைய வாழ்க்கை அத்தியாயத்தின் தொடக்கவுரையைப் பதிவு செய்த பெருமை நாம் கற்ற கல்விக்கே சேரும் !

இரண்டு தசாப்தம் கழிந்து விட்ட நிலையில் புதிய நேசங்கள், புதிய ஊர், புதிய வாழ்க்கை  என சுழலும் யதார்த்தங்களின் நிழலில் நாம் ஒதுங்கத் தொடங்கிவிட்டோம். 

                        ************************************
                         *   சமையலறையின் ஓர் பகுதி  *
                        ************************************

இருந்தபோதிலும் எம் பாரம்பரிய தேசத்தில் எமக்கான விடியல் எப்போது . என் பிறப்புத் தாயகத்தில் எனக்கேற்ப தாக்கத்தின் வலியைத்தான் பகிர்ந்தேன்.

அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடி, தமது அற்பத் தேவைகளுக்காகத் தவறிழைக்கும் மனிதர்களை நாம் தண்டிக்கத் தேவையில்லை. படைத்தவன் அவர்களுக்கான கூலியைக் கொடுப்பான். அதனை சரித்திரம் சுமக்கும்.  

 

வன்முறைகள் எமது முகமூடிகளல்ல. ஆனால் எம் சாபம், எம் குடியிருப்புக்களை அங்கறுத்து அகதிகளாக இத்தனை வருடங்களும் மனக்குறைகளுடன்  வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்றுமுண்டு..

இது தனி மனிதக் கதையல்ல.......திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் கதை. கண்ணீர்க்கதை.    அன்று நாம் சிறியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள். இன்றோ காலம் எம்மையும் பேச வைத்து விட்டது.! நிறைய பேசுவோம்.

தமிழ் எங்கள் தாய்மொழி. கறை படிந்த அந்த இறந்த காலம், நெஞ்சுக்குள்ளின்னும் வலிக்கத்தான் செய்கின்றது. நாங்கள் மரணிக்கும் வரை, அந்த வலியிருக்குமோ!

இவை தொடர்பாக கண்டெடுத்த யூரியூப் வீடியோ பதிவுகளையும் சற்று அழுத்திப் பாருங்கள்..

இது யாழ்ப்பாணத்திலுள்ள மஸ்ஜிதுகள் பற்றிய பார்வை......

மீண்டு வந்த நாட்கள்


கவிஞர்  வதிரி சி ரவீந்திரன் அவர்களின்  முதலாவது கவிதைத் தொகுதியான "மீண்டு வந்த நாட்கள்" கவிதைத் தொகுதி தொடர்பான எனது பார்வையிது..............!

என் முகநூலில் ஏற்கனவே இடப்பட்டிருந்த இக் கட்டுரையை இன்று இணைய வலைப்பூவில் பதிவு செய்கின்றேன் மகிழ்வுடன்............


இலக்கியவுலகில் தனக்கென  தனி முத்திரை பதித்தவர்களுள், புதியவர்களை ஆர்வத்துடன் வரவேற்பவர்கள் ஒரு சிலரே...! அவர்களுள் இவரும் ஒருவர்.!


"மீண்டு வந்த நாட்கள்"

தன் தாய் மண்ணின் காலடியில் வாஞ்சையோடு வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் துடிப்பே முகப்பட்டையாக முகங்காட்ட, 80  பக்கங்களுடன் கனமான கவிதைகளை ஏந்திக்கொண்டிருக்கும் காத்திரமான கவிதைத் தொகுதியான இதனை அவர் தன் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்கின்றார்.

தெனியான் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு இக் கவிதைத்தொகுதி ஈழத்துக் கவிதை இலக்கியத்தில் இவர் பெயர் பொதித்து , அவரைத் தொடர்ந்தெழுத ஊக்குவிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தலைப்பைக் கண்ணுற்றதும் அனைத்துக் கவிதைகளிலும் யுத்த வாடை வீசும் எனும் எண்ண வார்ப்புடனேயே இதழ்களைப் புரட்டத் தொடங்கினேன்...

ஆனால் பல கருப்பொருட்களும் அவற்றினை அடையாளப்படுத்தும் தலைப்புக்களுமாக கவிதைகள் சிதறிக் கிடக்கின்றன. இப் பரிமாண விசாலிப்பு கவிதைத் தொகுதியின் சிறப்பாகி எம் மனதையும் நிறைத்து நிற்கின்றது........

ஏழ்மை, சாதியொழிப்பு, பொய்மை, உறவுகள், ஏக்கங்கள் , எதிர்பார்ப்புக்கள், யுத்தம் என நீளும் உணர்ச்சிச் சிதறல்கள் அழகான தமிழ்க் கட்டுக்குள் அடுக்கப்பட்டு, யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக பகிரப்பட்டுள்ளன. அவ்வவ்போது வார்த்தைகளில் யாழ் மண்ணின் வாசமும் கலந்து வருவது கூட சிறப்பே!

தினபதி, யாதும், வீரகேசரி, மல்லிகை, தினக்குரல்,ஞானம்,ஐீவநதி, நீங்களும் எழுதலாம், பொறிகள், தினகரன், அக்னி என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகள் "மீண்டு வந்த நாட்கள்" கவித்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரது முப்பத்தெட்டு வருட புதுக்கவியாக்கத்தின் ஆளுமைச் செழுமையை பறைசாற்றும் விதமாக முப்பத்தொன்பது கவிதைகளும், பத்தொன்பது துளிக்கவிதைகளும், ஐந்து மெல்லிசைப்பாடல்களும் இக் கவித்தொகுப்பில் உட்பதிக்கப்பட்டு நம்முள் அழகாய், அர்த்தத்தோடு சிரிக்கின்றன...


யுத்தமானது நிமிடங்களை யுகங்களாக மாற்றக்கூடியது. ஒவ்வொருவரினதும் வாழ்வியல் அனுபவங்களை , கவிஞர்களும் தம் பேனா முனைக்குள் ஏந்தும் போது முரண்பாடு காணாத கருத்தியல்கள் ஒத்துப்போய் இலக்கியத்தில் உயிர்ப்புத்தன்மையை தக்க வைக்கின்றது.


தேசம் தொலைத்து நேசம் துறந்து செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைச் சுமந்தவாறே மனப்புகையைக் கக்கிச் செல்லும் "அந்த ரயில் போகிறது" எனும் தொடக்க கவிதையே என் நெஞ்சை நிறைத்து நிற்கின்றது..

ஒவ்வொருவரும் தன் பிறப்பிடம் விரட்டப்படும் போது அவிழ்க்கப்படாத சோகங்களும், நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புக்களும் ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன..அவ்வாறான மனத்திரைக்குள் மௌனித்துக் கிடக்கும் ஊமைக்காயங்களை "மனத்திரைக்குள்" உணர்த்துகின்றது..

சேரியின் சகதி வாழ்வை "பாதை" யும், "முற்றத்து மல்லிகை" யின் அழகில் கிறங்கிக் கிடக்கும் உவமைச் செழுமையும், அடிமைத்தனத்தை அறுத்தெறியும் முனைப்புடன் களமிறங்கிய நயினாரை "புதிய கதை பிறக்கிறது" கவிதையிலும் , "போலிகளை இங்கு தேடுது பார்" கவிதையில் வேஷமிடும் மனிதர்களின் முகமூடிகளையும் கவிஞர் நமக்கு அழகாகத் தொட்டுக் காட்டுகின்றார்.

ஒவ்வொரு ஜீவனின் உற்பத்தியில் தாய்மைப் பற்றோடு மடி தரும் பூமியே பிறப்பிடமாகும். ஷெல்லடி உறிஞ்சிய ஊர் வனப்பையும், சிதைவையும் "சாவு வந்ததே "கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது."எலும்புக்கூடாய் செத்துக்கிடக்கும் சந்தை" எனும் வரிகள் முழுச் சிதைவின் மொத்தவுருவாய் நம்முன் வீழ்ந்து கிடக்கின்றது..

அவ்வவ்போது மனதுக்குள் ஒத்திகை பார்க்கப்படும் உள்ளத்தாசைகளை நிறைவு செய்ய காத்திருக்கும் எதிர்பார்ப்பு  "வள்ளம் வர வேண்டும் " எனும் கவிதையிலும், "முளையிலே கிள்ளல்" மூலம் நாளைய வரலாறு நசுக்கப்பட்ட துயரத்தையும் கவிஞர் நம் முன்னால் யதார்த்தம் சிதையாமல் நிலைநிறுத்துகின்றார்.

"இயல்பு நிலை", "கையடக்க தொலைபேசி", "உள்ளக்குமுறல்" , "புரியாமையும் புரியும்", "நயந்துரை", எனது ஆல்பம்" இக்கவிதைகள் ஒவ்வொன்றும் புலப்படுத்தும் உணர்வுகள் மனதை இறுக்கிக் கௌவிப்பிடித்து, கவிஞரின் சொல்லாடல், வரி வார்ப்பின் அழகு என்பவற்றை நமக்குள் உணர்த்தி நிற்கின்றது.

புலப்பெயர்வென்பது மறுக்கமுடியாத தேவையாகி விட்ட இன்றைய காலப் பொழுதில், ஒவ்வொருவரினதும் அந்தரிப்புக்களை "புலம் பெயர்ந்தவனின் கடிதம்" வாசித்துச் சொல்கின்றது..

இவ்வாறு இங்கு பதிவாகியுள்ள ஒவ்வொரு கவிதைகளும்  கவிஞரின் கவித்துவ செழுமையைப் பறை சாட்டிக் கொண்டிருக்கின்றதென்றால் மிகையில்லை.

மெல்லிசைப்பாடல்களின் வரிகளோ சங்கீத சந்தத்துடன் இசையேதுமின்றி நம் செவிக்குள் இனிய பாடலை நுழைத்துத் தரும் பிரமிப்போடு நம்முள் கரைந்து கிடக்கின்றன.

இக் கவிதைத் தொகுப்பின் ஈற்றுப்பக்கங்களில் "வதிரி ரவி நேச நினைவுகள்" எனும் தலைப்பில் அவரின் கலையுலகோடு சங்கமித்திருந்த கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் நாற்பது வருட கால இலக்கிய சில நினைவுகளை மீட்டுகின்றார்....வதிரி சேர் அவர்கள் கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்ல நல்ல நடிகராக, விளையாட்டு வீரராக, நகைச்சுவையாளராக  வகித்த வகிபாகங்களையும் நாமறியச் செய்கின்றார்.........

விவாக பதிவாளராக தொழிலாற்றும் அவரின் மறுபுறத்தில் கலைகளின் விளைநிலம் பெரிஞ்செல்வாகி அவர் பெயர், புகழை நாற்றிசையிலும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.

வதிரி சேரின் எண்ண வார்ப்புக்கள் எக்காலமும் பொருந்திக் கிடப்பதே அவரது இந்தக் கவித்துவத்தின் வெற்றியாக நான் கருதுகின்றேன்.

"மீண்டு வந்த நாட்கள்" ........!
நாம் மெச்சுகின்ற நாட்கள் !!

அவரது முதல் தொகுப்பே நம் மனதில் மானசிக நிறைவைத் தந்து நிற்கின்றது வாசிப்பின் இறுதியில்..!

இன்னும் அவர் பல தொகுதிகள் வெளியிட வாழ்த்துகின்றேன்....

அவரின் கையெழுத்துடன் கூடிய (06.08.2011) அவரது கவித்தொகுப்பை எனக்கும் அனுப்பி வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...................





- Jancy Caffoor -