பத்தாம் பிறைமுனைப் பேனாவில் துளிர்க்கும் தியாகத்தின் பிரகாசம் -
துல்ஹஜ் பத்தில் முழங்கிடும் தக்பீரும்
துணிந்திட்ட தியாகமதை நமக்குள் திருநாளாக்கும்
அணிந்திட்ட புத்தாடையும் இசைந்திடும் நறுமணமாய்
இனித்திடும் பலகாரம் கனிந்திடும் உறவெனவே
சூழ்ந்திடும் மனதைத்தான் பள்ளியும் தானழைக்கும்
தீனொளிச் சுவைதனில் தீதுக்கள் கரைந்திடவே
தீட்டிடுவோம் நன்மைதனை துரத்திடுவோம் முரண்களையே
எட்டுத்திக்கெங்கும் இப்றாகிம் நபியவரின்
இறையன்பில் வியந்து நிற்க
கொட்டிடுமே மாண்புகளும் ஈகையேந்தும் அழகினிலே
கனவுக் கட்டளையும் கருத்தை நிறைத்ததனால்
கல்பின் வெளியெல்லாம் உயிர்த்திடுமே தியாகம்தான்
புத்தாடை புனைந்தே புதுப் பாதை அமைத்திடவே
பக்குவமாய் நாமும் வாழு
நமக்குள்ளும் உரைத்திடுமே தியாகத்தை
பிறை ஒன்பதிலே அரபா நோன்பும்
பிரார்த்தனைகளுடன் குர்பானும்
இறையன்பை வருடும் நமக்குள்
இதயங்களையும் இணைக்கும் உறவாய்
இறையன்பின் ஆழமும் சிகரமென உயர
இணைந்திட்டோம் நாமே சாந்தி நெறியினில்
இறை பள்ளியில் மறை ஓதிடும் நெறி வாழ்வுதனில்
இதயமும் நனைந்தே வாழட்டும் தினம்
ஈதுல் அழ்காவின் ஈகையழகை ஈர்த்திடும்
ஈகையாளரின் மாண்புகளும் உவப்பேறி போகுமே
சுங்கை பொருந்திய திருநாளில் சமூக
இடைவெளி நாம் பேணி
இல்லாதொழிப்போம் தொற்றுக்களை
வல்லோனின் ஆசி பெற்று
வையகத்தினில் வாழ்ந்திடுவோம் நலமாக
ஜன்ஸி கபூர்
01.08.2020 ஆம் திகதியன்று இலங்கை வானொலி முஸ்லிம் சேவை
கவிதா சாளரம் விசேட நிகழ்வில் ஒலிபரப்பான எனது கவிதை
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!