About Me

2012/07/29

இதயம் கிழிந்து


என் கனவு முகங்களைக்
கிறுக்கிய கிறுக்கனே!
உன்னால்
உருகிக் கொண்டிருக்கின்றது
என்னிதயம் அடிக்கடி!

இலையுதிர் கால சருகாய்
விதிக் காற்றில் விளையாடும்
கண்ணாமூச்சிக்காரா
நம்
ஞாபகங்களை ஈரப்படுத்துகின்றேன்
அடிக்கடியென்
கருவிழிக் கண்ணீரில்!

நீ வெறுப்புமிழ்ந்த
அந்தக் கணங்களெல்லாம்
உன் வார்த்தைத் துண்டங்களின்
நெருப்புத்தளிர்கள் - என்
மன விருட்சத்தின்
ஒளித்தொகுப்பாய்
சோகத்தைக் கற்றுக் கொள்கின்றது
இப்போது!

சந்தர்ப்பவாத சூரியனின்
சகபாடி நீயானதால்
புதைகுழிக்குள்ளமிழ்ந்த
என் வாழ்வும்
சதை கிழிந்து
கதை முடிந்து போனது!

உன் மனசென்னவோ வெள்ளைதான்
இருந்தும்
காலத்தின் கட்டாயத்தில்
கறைப் படிவுகளைச் சுமந்தே
நீயும் அந்நியமாகி - என்
அழகான அந்திப் பொழுதுகளை
அழுகைக்குள் அழுகச் செய்கின்றாய்!

உன்னிரும்புக் கரங்கள்
என் குரல்வளை வளிச்சேமிப்பை
நசுக்குவதால்
என் ஆத்மாவும்
விழி பிதுங்குகின்றது
மரண ஓலத்துடன் !

நம் இளமைப் பயணமேட்டில்
முட்களின் முகங்கள்
வழிகாட்டியாய் எட்டிப் பார்க்கின்றது
நீயோ
அறுத்தெறியத் தெம்பின்றி
அடுத்தவர்க்காய்
என் மூச்சின் வேரை
வெட்டியெறிகின்றாய்
கெட்டித்தனமாய்!

அன்றுன்
காதல் சுயம்வரத்தில்
தெரிந்தெடுத்த என்னை
இன்றோ
இயக்கம் பறிக்கும் விஷமாய்
தயக்கமின்றி
என்னுடலின் உயிரணுக்களை
பிடுங்கியெறிகின்றாய்!

யோசி!
 வாசிக்கப்படாதவுன் நேசத்தினால்
போஷிக்கப்படாத என் சந்தோஷங்கள்
இம்சிக்கப்பட்டே
இதயம் கிழிந்து ஆவியாகின்றது
அசுரத்தனமாய்!


- Jancy Caffoor-




முரண்பாடு



கானல் நீருக்குள் நாம்
காகித ஓடமிட்டோம்
மணல் மேட்டில்
சிற்பங்கள் வார்த்தோம்!

ஆலமர நிழலில்
ஆசையாய் தீ வார்த்தோம் !
மூங்கில் தடி நாட்டி
புவியைத் தாங்கிக் கொண்டோம்!

கடலலை சேமித்தே
இருதயத் துடிப்பில் வேலி கோர்த்தோம்
தென்றலை உறிஞ்சியெடுத்து
சுரங்கத்தில் தாழிட்டோம்!

சூரிய கால்களில்
சூனியம் கட்டி விட்டோம் !
கடிகார நகர்வினையும்
கடிந்தே நிறுத்தி வைத்தோம்!

குயிலின் குரலுடைத்து
வெயிலிலுக்குள் உலா்த்தி விட்டோம்
வானவில்லை வளைத்தெடுத்தே
கானகத்துள் வில்லொடித்தோம்!

தீ சுருட்டியெடுத்து
நம் வார்த்தைக்குள் கோர்த்தெடுத்தோம் 
அழகை அழ வைத்து
அவலத்துள் விரட்டி விட்டோம்!

முரண்பாட்டை முன்னுரையாய்
தலைப்பிட்டோம் நம்முறவுக்குள்!
உரமிட்டோம் பிரிவை நம்முள்
இனி எதிர்வாதங்களே நம்முறவாய்!








அழகான பெண்டாட்டியே


என் அழகான பெண்டாட்டியே
என் ஆத்துக்கும் நீதான் குளிரூட்டியே

நீ நாலு வார்த்தை பேசவில்லை
எந் நாளும் நீ அருகிலில்லை
உன் ஊடலின்னும் குறையவில்லை
என் காதல் மோகம் கலையவில்லை
என் செல்லப் பெண்டாட்டியே

ஊருப் பொண்ணுக பார்வை கண்டு
பாவை நீயும் என்னைக் கொல்ல
ஊருப்பயல்கள் சீண்டிச் சீண்டி
என்னைத்தான்டி ஏத்தி விட
நீ ஒதுங்கிப் போற
என்ன உசுப்பிப் போறே
என் செல்லப் பொண்டாட்டியே

சாதி மறந்து  காதலிச்சேன்
என் மூச்சுக் காத்தில உன்ன தைச்சேன்
என் உசுருக்குள்ள உன்னை வைச்சன்
என் கண்ணுக்குள்ள காத்துநின்றேன்
என் செல்லப் பொண்டாட்டியே

காலை எழுந்ததும் உன் முகம்தான்
கண்ணுக்குள்ள தெரியுது நிசம்தான்
காபி தண்ணி குடிக்கலியே
என் களத்துக்குள்ள எறங்கி உரசும்
என செல்லப் பொண்டாட்டியே

காரெடுத்து போகையிலே
ரோட்டெங்கும் உன் நினைவு மறைக்கும்
சிறுக்கி மக உன்ன என்ன செய்ய
இறுக்கி நசுக்கிறீயே என் உசுரை நித்தம்
என் செல்லப் பொண்டாட்டியே

பொய்தான்டீ  பேசிபுட்டேன்
என் பொண்டாட்டி நீதான் மன்னிக்கணும்
என் மெய்யே நீதான்டீ
என் நெஞ்சுக்குள்ள நீ மட்டும் தான்டீ
என் செல்லப் பொண்டாட்டியே

சத்தியமா நம்பு புள்ள
என் சாதி தாண்டி வந்தேன் மெல்ல
உன் முத்தச் சூடு ஆற முன்னர்- நீ
என் மொத்தத் தேகம் எரிக்கும் எண்ணெய்
என் செல்லப் பொண்டாட்டியே

கண்ணச் சுற்றி விண்ணப் பார்த்தால்
கண்ணகியாய் என்னை எரிக்கிறாய்
என்னடி ஆச்சு என் பொண்டாட்டியுனக்கு
என்னய கவனிக்கலயே நேத்தில இருந்து
என் செல்லப் பொண்டாட்டியே

ஆத்தோரம் போய் நின்றால்
ஆத்தாடி யுன் ஞாபகம் புள்ள
ஆருமில்ல எனக்குள்ள
ஆணையிட்டுச் சொல்வேனில்ல
என் செல்லப் பொண்டாட்டியே

மருதாணிச் சாறெடுத்து
ஆசையில உன் னகம் பூசவா
நிலாவைக் காட்டிக் காட்டி
நிசமாவே தோசையூட்டவா
என்னைக்கும் நீதான்டீ
என் செல்லப் பொண்டாட்டியே

ஆசையாய் அருகில் வந்தால்
அக்கினியாய் முறைப்புக் காட்டி
ரோசா நீ முள்ளெடுத்து
ராசா என் கண்ணில் நோண்டுறெ நோண்டுறே
என் செல்லப் பொண்டாட்டியே

வாடி என் பொண்டாட்டி பக்கத்தில
வாடித்தான் போனேனடி மொத்தத்திலே
ஜோடி நாம சொர்க்கம் போகத்தான்டி
ஓடித்தான்  போகலாம் மெல்ல மெல்ல
செல்லப் பொண்டாட்டியே

(ஹா.ஹா........இதை வாசித்து சிரிப்பு வந்தால் சிரியுங்கோ, கோபம் வந்தால் .மொறைக்காதீங்க.....................நான் பாவங்க )





ஜன்ஸி கபூர் 


சர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்


ஏப்ரல் 25
--------------
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச மலேரியா தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் 10 லட்சம் பேரில் அதிகமானோர் 5 வயதிற்குட்பட்டவராவார். இலங்கையில் வருடாந்தம் 450 மலேரியா நோயால் ஏற்படும் மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மலேரியா, சிக்கன்குன்யா,டெங்கு,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, யானைக்கால நோய் போன்ற நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களால் வருடாந்தம் 21 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையைச்சுற்றியுள்ள மித வெப்பமுள்ள நாடுகளிலேயே நுளம்புகள் அதிகம் பரவுகின்றன. ஓர் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் 12 நாட்களாகும். அதிக பட்சம் 34 நாட்கள் உயிர் வாழும். பெண் நுளம்புகளை விட ஆண் நுளம்புகள் உயிர் வாழும் நாட்களினளவு குறைவாகும். சுமார் 11 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு நுளம்புகளால் பறக்க முடியும்.

பெண் நுளம்பு முட்டையிடும் நேரத்தில்தான் உயிரினங்களில் இரத்தம் குடிக்கும். 0.025 மில்லிகிராம் எடையுள்ள நுளம்பு தனது வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்..ஆண் நுளம்பு தாவரச்சாற்றைப் பருகும்.

பொதுவாக எல்லா வகை நுளம்புகளும் மாலை, இரவு நேரத்தில் தான் கடிக்கின்றன. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் "ஏடிஸ்" மற்றும் சிக்கன் குன்யா நுளம்புகள் மட்டும் பகலில் கடிக்கும்.

அனோபிலிஸ் நுளம்புகள் சுத்தமான நீரிலும்
க்யூலக்ஸ் நுளம்புகள் அசுத்தமான நீரிலும் முட்டையிடும்
ஏடிஸ் நுளம்புகள் தாவர இலை , தழைகளிலும் முட்டையிடும்..

மலேரியா நோய்க்குரிய "பிளாஸ்மோடியம்" எனும் ஒட்டுண்ணியை மனிதரிடத்தில் பரப்பும் காவியே மலேரியா நுளம்பு ஆகும். இது பகலில் மறைந்து வாழ்ந்து இரவில் உலா வருகின்றது. ..நோய் ஒட்டுண்ணியைக் கொண்டுள்ள நுளம்பு மனிதர்களைக் கடிக்கும் போது அவை நுளம்பின் உமிழ்நீர் வழியாக மனித உடலையடைந்து அங்கிருந்து குருதியினூடாக கல்லீரலை அடைகின்றது..3 நாட்கள் முதல் 1 வாரம் வரை கல்லீரலில் பல்கிப் பெருகும்.. பின்னர் "முத்திரை மோதிர நிலையினாலான வித்திச்சிற்றுயிராக மாறி" குருதியை அடைந்து அதிலுள்ள செங்குருதிச்சிறுதுணிக்கைகளை அழிக்கத் தொடங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படும்.

மலேரியா காய்ச்சலின் 3 கட்டங்களாவன -
-----------------------------------------------------------
1, நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சலும் உடல் நடுக்கமும் ஏற்படும். இந்நிலை அரை மணித்தியாலயம் நீடிக்கும்.

2, இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்

3.இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார்.

இதே காய்ச்சல் மறுநாளோ,  2 அல்லது  3,4 நாட்களுக்கு ஒரு தடவையோ ஏற்படும்.

இப்பொதுவான அறிகுறிகள் தென்பட்டவுடன் இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

கடும் காய்ச்சல், கண்சிவத்தல், உடல் வலி என்பன கடுமையான நோய்த்தாக்கத்தின் விளைவாகும். உடனே சிகிச்சை பெறவேண்டும். இல்லாவிடில் மரணமும் ஏற்படலாம்.

எனவே பின்வரும் வழிகளில் நுளம்புகள்  பெருகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு
----------------------------------------------------------------------------------------------

1.வீட்டைச் சுற்றியும், சுற்றுப்புறச்சூழலைச்சுற்றியும் "டி.டி.டி" "டெல்டாமெத்திரின்" போன்ற மருந்துகளைத் தெளிக்கலாம்.
2.நுளம்புப் பெருக்கமுள்ள 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் "கிரிசாலை" ப் புகைய விட்டால் நுளம்புகள் இறக்கும்.
3. சுத்தமான நீர் நிலைகளை (தண்ணீர்த்தொட்டிகள்) மூடி விட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டிகளை கழுவிச் சுத்தம் செய்து, 2 மணித்தியாலம் வரை காய வைக்க  வேண்டும். இவ்வாறே வீடுகளிலுள்ள வாளி நீரையும் பராமரித்தல் வேண்டும்.
4. நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மூடி விடல் வேண்டும் (சிரட்டை, டயர், குரும்பை, யோகட் கோப்பை ,டப்பாக்கள் போனறவை)
5. மீன்தொட்டிகளில் "கப்பிஸ்" போன்ற மீன்களை வளர்த்தல்..
6. சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
7. பாடசாலைகளில் இது தொடர்பான செயற்றிட்டங்கள், சிரமதானம், போட்டிகள், கண்காட்சி நடத்தல்

மலேரியா நோய் எற்படுவதன் மூலமாக ஏற்படக்கூடிய மனப்பாதிப்புக்களை இழிவாக்கி, மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத் தினம் பயன்படுகிறது.

"சுத்தம் பேணி மலேரியாத் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போமாக!"