About Me

2012/07/29

விதியின் காலடியில்


அன்றோ நாம்
நேசத்தைச் சுருக்கிக் கொண்டோம்
மூன்று  முடிச்சுள் !
இன்றோ
நம் வாழ்வின் ஸ்பரிசம்
தூக்குக் கயிற்றில்!

போலியான வாழ்விற்கு
வேலியெதற்கு தங்கத்தால்!

நேச வார்த்தைகளால்- நம்
நெஞ்சை நிரப்பி
நாமீன்ற கனாக்கள்
வீழ்ந்து கிடக்கின்றன
ஞாபகவறையில்
வெறும் செல்லாக் காசாகி!

மனப் பொருத்தமென்று
மணம் கண்டோம்
பணப் பொருத்தமின்றி
கானலில் தடம் பதித்தோம்!

குடும்ப விழுதுகளில்
உலாக் காணத் துடித்து நின்றோம்!
நீயோயின்று - எனை
அக்கினிக்குள் சிறைப்படுத்த
துடிக்கின்றாய்!

ஓ!
கண்ணீரில் காணாமற் போன
சொப்பனம் தேடி
கன தூரம் நடக்கின்றேன்
தனிமையில் !
நீயோ
வேற்று மனிதனாய்
நெருஞ்சியில் விழி நெய்து
பழிக்கின்றாய் என் விதி மீது!

- Jancy Caffoor-
    29.07.2012








ஆதவன்


பகல் நேர வான் முட்டையின்
மஞ்சட்கரு!

நீலப் பட்டாடையில்
பதிக்கப்பட்ட  தங்கக் கற்கள்!

பால் வீதியைக் காவல் காக்கும்
ஒளி வீரன்!

வானில் தவறிவிடப்பட்ட
தங்க நாணயம்!

ஒளித் தூரிகையால்
வரையப்பட்ட  ஓவியம்

தன் முகம் பார்ப்போரைச்
சுட்டெரிக்கும் தீப்பந்தம்!

அகில உற்பத்திக்கு
படைத்தவனிட்ட கரு!

இருளானின் நெற்றியில்
யாரிட்டார்  இச் சந்தனம்!


-Jancy Caffoor -




இதயம் கிழிந்து


என் கனவு முகங்களைக்
கிறுக்கிய கிறுக்கனே!
உன்னால்
உருகிக் கொண்டிருக்கின்றது
என்னிதயம் அடிக்கடி!

இலையுதிர் கால சருகாய்
விதிக் காற்றில் விளையாடும்
கண்ணாமூச்சிக்காரா
நம்
ஞாபகங்களை ஈரப்படுத்துகின்றேன்
அடிக்கடியென்
கருவிழிக் கண்ணீரில்!

நீ வெறுப்புமிழ்ந்த
அந்தக் கணங்களெல்லாம்
உன் வார்த்தைத் துண்டங்களின்
நெருப்புத்தளிர்கள் - என்
மன விருட்சத்தின்
ஒளித்தொகுப்பாய்
சோகத்தைக் கற்றுக் கொள்கின்றது
இப்போது!

சந்தர்ப்பவாத சூரியனின்
சகபாடி நீயானதால்
புதைகுழிக்குள்ளமிழ்ந்த
என் வாழ்வும்
சதை கிழிந்து
கதை முடிந்து போனது!

உன் மனசென்னவோ வெள்ளைதான்
இருந்தும்
காலத்தின் கட்டாயத்தில்
கறைப் படிவுகளைச் சுமந்தே
நீயும் அந்நியமாகி - என்
அழகான அந்திப் பொழுதுகளை
அழுகைக்குள் அழுகச் செய்கின்றாய்!

உன்னிரும்புக் கரங்கள்
என் குரல்வளை வளிச்சேமிப்பை
நசுக்குவதால்
என் ஆத்மாவும்
விழி பிதுங்குகின்றது
மரண ஓலத்துடன் !

நம் இளமைப் பயணமேட்டில்
முட்களின் முகங்கள்
வழிகாட்டியாய் எட்டிப் பார்க்கின்றது
நீயோ
அறுத்தெறியத் தெம்பின்றி
அடுத்தவர்க்காய்
என் மூச்சின் வேரை
வெட்டியெறிகின்றாய்
கெட்டித்தனமாய்!

அன்றுன்
காதல் சுயம்வரத்தில்
தெரிந்தெடுத்த என்னை
இன்றோ
இயக்கம் பறிக்கும் விஷமாய்
தயக்கமின்றி
என்னுடலின் உயிரணுக்களை
பிடுங்கியெறிகின்றாய்!

யோசி!
 வாசிக்கப்படாதவுன் நேசத்தினால்
போஷிக்கப்படாத என் சந்தோஷங்கள்
இம்சிக்கப்பட்டே
இதயம் கிழிந்து ஆவியாகின்றது
அசுரத்தனமாய்!


- Jancy Caffoor-




முரண்பாடு



கானல் நீருக்குள் நாம்
காகித ஓடமிட்டோம்
மணல் மேட்டில்
சிற்பங்கள் வார்த்தோம்!

ஆலமர நிழலில்
ஆசையாய் தீ வார்த்தோம் !
மூங்கில் தடி நாட்டி
புவியைத் தாங்கிக் கொண்டோம்!

கடலலை சேமித்தே
இருதயத் துடிப்பில் வேலி கோர்த்தோம்
தென்றலை உறிஞ்சியெடுத்து
சுரங்கத்தில் தாழிட்டோம்!

சூரிய கால்களில்
சூனியம் கட்டி விட்டோம் !
கடிகார நகர்வினையும்
கடிந்தே நிறுத்தி வைத்தோம்!

குயிலின் குரலுடைத்து
வெயிலிலுக்குள் உலா்த்தி விட்டோம்
வானவில்லை வளைத்தெடுத்தே
கானகத்துள் வில்லொடித்தோம்!

தீ சுருட்டியெடுத்து
நம் வார்த்தைக்குள் கோர்த்தெடுத்தோம் 
அழகை அழ வைத்து
அவலத்துள் விரட்டி விட்டோம்!

முரண்பாட்டை முன்னுரையாய்
தலைப்பிட்டோம் நம்முறவுக்குள்!
உரமிட்டோம் பிரிவை நம்முள்
இனி எதிர்வாதங்களே நம்முறவாய்!