(2011 ஆகஸ்ட் மாதம்- இலங்கைத் தீவின் பல பகுதிகளில் உடலில் கிறீஸூம், விரல் நகங்களில் ஆணியும் பதித்தவாறு பெண்களை மாத்திரம் சித்திரவதை செய்து அவர்களின் இரத்தம் ரசிக்கும் மர்ம மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்த அந்தப் பொழுதினில் எழுந்த கவிதையிது)
மனிதம்..............!
மரணத்தை உரசும் !
பெண்மையோ.............
நச்சுத் திராவகத்தில்
வியர்த்துச் சாகும்!
விரலிடுக்கில் ஆணி பூட்டி
விழியோரம் வன்மை காட்டும்
கிறீஸ் நிழற் படுக்கையில்
இம்சை பூத்துக் கிடக்கும்!
முகமூடிகளின் மூச்சிரைப்பில்
பெண் தசை பிளந்து.............
வெட்ட வெளியை
குருதி எட்டிப் பார்க்கும்!
அட்டகாசச் சிறகுகளை
அறுத்தெறியாக் கரங்களோ.............
பூதங்களின் சுவாசிப்பால்
ஆதங்கக் குழிக்குள் சமாதியாகும்!
அரசியல் உமிழ்நீரால்
அழுக்காகுமிந்த - ஒளிப்
பௌர்ணமிகள்
விண்ணப்பிக்காமலே
மடி தரக் காத்துக் கிடக்கும்
மயானங்கள்!
தாய்மையின் தரணிச்சோலை
தரிசாகும்.........
நிதமிந்த அரக்கர்களின்
அராஜகத்தால்!
முட்வேலிப் படுக்கைக்குள்
குருதிப்பூச் சிந்தி - எங்கள்
வண்ணத்துப்பூச்சிகளை
வனப்பழிக்க
வட்டமிடுமிந்த வல்லுறுக்கள்!
அஹிம்சை தொலைந்து
இம்சை நிரப்பும் - இந்த
குண்டூசிக் கரங்களுக்கு- மலர்ச்
செண்டு தரக் காத்திருக்கும்
ஆயுதங்கள்!
புல்லரித்துப் போகும் - எம்
ஷெல்களின் நகங்களில்........
விசம் தடவும் நாகங்களை
தலை தடவும் இனவாதம்!
அதர்மப் படையெடுப்பில்
பெண்ணுரிமை மௌனிக்க..........
ஈரம் தொலைத்த பிசாசுகள்
ரணங்களில் ஆட்சியமைக்கும்!
தளிர் விட்ட மௌபியாக்களின்
தலையறுக்க ஆளின்றி............
வெந்நீர்க் குளியலாய் - பெண்
செந்நீர் வழிந்தோடும்!
கலியுக பூகம்பத்தில்
பலியாகும் மன நிம்மதி- எம்
கிலியூன்றலில்
வலியே வாழ்வாகும்!
சித்திரவதை வெம்மைக்குள்
நசுங்கிப் போகும் எம் விடியலில்
ஆதவன் அனுமதியின்றி
இருளே ஆட்சியமைக்கும் !
வேலியே பயிரை மேய
வேவு பார்க்கும் சாலைகள்..........
வெட்கித் தலை குனியும்
தன் வெற்று மேனியில் பதிந்த
அக்கிரமச் சுவடு கண்டு!
ஓர் நாள்...............
குருதியுறிஞ்சு மிந்த
மர அட்டைகளை நசுக்க..............
வலிய கரங்கள் தானாய் வரும் - எம்
வலியும் தொலைந்து போகும் !
ஜன்ஸி கபூர்