இந்த இரவு
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றது - சுற்றம்
யாருமற்ற
ஒற்றை நிலாவின் வெறுமையை!
தொலைசாலையொன்றின்
ஓர் புள்ளியில்
ஓயாமல் ஊளையிடும் நாயோ..
நிசப்தத்தைக் கிழித்தவாறே
மனப் பைக்குள்
பீதியை நிரப்பிக் கொண்டிருக்கின்றது!
காற்றின் கிசுகிசுப்புக்களால் - கிடுகு
முந்தானையவிழ்க்கும்
ஓலைக்குடிசையின் மேனி கண்ட
மின்மினிகள்
கண்ணடித்துச் சிரிக்கின்றன
கனநேரமாய்!
ஒட்டியுலர்ந்த குப்பி லாம்பின்
மூச்சிரைப்பில்
ஒளி கூட ஒளிந்து போனதில்
இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன
விம்பங்கள்!
உதரத்தின் உதிரம் நிதம்
தரிசானதில்
சோமாலியாக்களின் தேசமாய்
சோர்ந்து போகின்றன - என்
வனப்பு மேனி!
இலைச்சருகின்
மூலை முடுக்குகளில் - தசைப்
பிணம் தேடும் அட்டைகளாய்
ஒட்டிக் கொண்ட அவலங்களும்
உடைந்த பாத்திரங்களும்
உதிர்ந்த புன்னகையும்- எம்
வறுமைத் தேசத்தின்
குடியிருப்புக்களாகின்றது!
ஆடைக் கிழிசல்களினூடு
நழுவும்
இளமை ரகஸியங்களால்
கற்பும் காயம் பட்டு
வெட்கமிழந்து போகின்றது!
வெம்மை மறந்த அடுப்புக்களோ
அக்கினி விரல்
ஸ்பரிசிப்பிற்காய்
தவித்துக் காத்திருக்கின்றன
பல நாட் பொழுதுகளாய்!
தரை விரிப்புக்களில்
பரவும்
கண்ணீர்க்கசிவுகளில்
அவிந்து போன கனாக்கள்
கதறி சிதைந்து போகின்றன!
இத்தனைக்கும் மத்தியில்
இடுப்பின் மடிப்புக்குள் நசுங்கும்
சின்ன ரோசாவின்
உயிர்ப்போசை மட்டும்
மௌனித்த மனதின்
சலங்கையாகின்றது!
கனவுக்குள் முகம் வரைந்து
காத்திருக்கும்
தாய்மைக் காத்திருப்பால்
ஏழ்மை காலாவதியாகின்றது
எந்தன் வளர்பிறைக்காய்!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!