About Me

2012/07/30

கவி தந்து போனவனுக்காய்


பல கவி என்னுள் தந்த
உனக்கான கவித் தூதிது!

எல்லாம் எனக்கே தந்து நின்றாய்
ஏனடா !
என்னை மட்டும் எடுத்துச் சென்றாய்!

உன் எண்ணங்கள் எனக்குள்
ஆவணங்களாகும் பொழுதொன்றில் 
ஓசையின்றி நகர்ந்தாய் - மன
அசைவின் உயிர்ப்பைக் கரைத்த படி!

நெஞ்சுக்குள் உன் ஏக்கங்கள்
இம்சைகள் செய்ய 
ஊனமாகிக் கிடக்கின்றேன்
யாருமற்ற தனிவெளியில்!

உன் தெருக்களில் விழும் - என்
காலடித் தடங்களை உனக்காக
விட்டு வருவேன் 
என் நேசத்தின் நினைவாகச்
சேகரித்துக் கொள்!

அம்சமான உன் முகமும்
அழகானவுன் புன்னகையும்
தொட்டுச் செல்லும் - என்
ஞாபக வேலியை என்றும்
நெசமாய் கட்டியாளும்!

உன் உணர்வுச் சோலையில்
எனைக் கிடத்தி
நீ நெய்த பஞ்சனைக்குள் நானே
தீ வார்த்தேன்
அன்புத் தீவிரவாதியாகி!

பிரிவில் தான்டா புரிதலும் !
முட்களாய் நானுன்னைக் கிழித்து
வழிந்த செந்நீரை 
கண்ணீராய்த் துடைத்தேனோ !

வலி மட்டும் மிஞ்ச
வழி பார்த்து நிற்கின்றேன் - உன்
மீள வரவிற்காய்!


ஜன்ஸி கபூர் 





கண்ணீர்ச்சிலை

ஓ  

வாழ்க்கைத் தேசம் !!
அழகான வாழ்க்கைத் தேசம் ..!!!
தோற்றுப் போனதில்
கண்ணீர்வார்ப்புக்கள்
தாரை தாரையாய்
தரையை ஆக்கிரமிக்கும்!

கனவுகளின்
தழும்புகளில் விசிறப்பட்ட
ஏக்கங்கள் 
முத்திரையாய்
முகங் காட்டும்!

இருட்டடிப்புச் செய்யப்பட்ட
சந்தோஷங்களைத் தேடி தேடி
அனல்வெளியில் 
யாகங்கள் தொடரும்!

முட்வேலிக்குள் 
நாட்டப்பட்ட இதயமோ
மண்டியிட்டுக் காத்துக் கிடக்கும்
மரணத்தின் சைகைக்காய் !

விழியோர நீரினால் 
விம்பம் காட்டும் கண்ணாடி கூட
ஈரமாகும்
இரசத்தையும் விரட்டி மிரட்டி!

ஒவ்வொரு நொடிகளும்
ஒவ்வொரு யுகங்களாய்
மிரளுகையில் 
வாலிபமும்
தாலியறுந்து போகும்!

விதியின் நகர்வலத்தில்
நசுங்கும் 
சுதந்திர இறக்கைகள் - தன்
உயிர்ப்பை மறந்து
வெந்து போகும்!

அண்டம் விறைக்கும்
உஷ்ணம் வார்த்தைகளாகி
மனதை உருக்கும் 
சோகங்களின் அட்டகாசத்தில்
சகாராக்களும்
சகபாடிகளாகும்!

விடிவின் தொடுகைக்காய்
காத்திருக்கும்
காத்திருப்புக்கள் மட்டும் 
நீளமாகும் - என்
நிதர்சன வெளியில்!


ஜன்ஸி கபூர் 




பெண் அவலம்


(2011 ஆகஸ்ட் மாதம்- இலங்கைத் தீவின் பல பகுதிகளில் உடலில் கிறீஸூம், விரல் நகங்களில் ஆணியும் பதித்தவாறு பெண்களை மாத்திரம் சித்திரவதை செய்து அவர்களின் இரத்தம் ரசிக்கும் மர்ம மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்த அந்தப் பொழுதினில் எழுந்த கவிதையிது)

மனிதம்..............!
மரணத்தை உரசும் !
பெண்மையோ.............
நச்சுத் திராவகத்தில்
வியர்த்துச் சாகும்!

விரலிடுக்கில் ஆணி பூட்டி
விழியோரம் வன்மை காட்டும்
கிறீஸ் நிழற் படுக்கையில்
இம்சை பூத்துக் கிடக்கும்!

முகமூடிகளின் மூச்சிரைப்பில்
பெண் தசை பிளந்து.............
வெட்ட வெளியை
குருதி எட்டிப் பார்க்கும்!

அட்டகாசச் சிறகுகளை
அறுத்தெறியாக் கரங்களோ.............
பூதங்களின் சுவாசிப்பால்
ஆதங்கக் குழிக்குள் சமாதியாகும்!

அரசியல் உமிழ்நீரால்
அழுக்காகுமிந்த - ஒளிப்
பௌர்ணமிகள்
விண்ணப்பிக்காமலே
மடி தரக் காத்துக் கிடக்கும்
மயானங்கள்!

தாய்மையின் தரணிச்சோலை
தரிசாகும்.........
நிதமிந்த அரக்கர்களின்
அராஜகத்தால்!

முட்வேலிப் படுக்கைக்குள்
குருதிப்பூச் சிந்தி - எங்கள்
வண்ணத்துப்பூச்சிகளை
வனப்பழிக்க
வட்டமிடுமிந்த வல்லுறுக்கள்!

அஹிம்சை தொலைந்து
இம்சை நிரப்பும் - இந்த
குண்டூசிக் கரங்களுக்கு- மலர்ச்
செண்டு தரக் காத்திருக்கும்
ஆயுதங்கள்!

புல்லரித்துப் போகும் - எம்
ஷெல்களின் நகங்களில்........
விசம் தடவும் நாகங்களை
தலை தடவும் இனவாதம்!

அதர்மப் படையெடுப்பில்
பெண்ணுரிமை மௌனிக்க..........
ஈரம் தொலைத்த பிசாசுகள்
ரணங்களில் ஆட்சியமைக்கும்!

தளிர் விட்ட மௌபியாக்களின்
தலையறுக்க ஆளின்றி............
வெந்நீர்க் குளியலாய் - பெண்
செந்நீர் வழிந்தோடும்!

கலியுக பூகம்பத்தில்
பலியாகும் மன நிம்மதி- எம்
கிலியூன்றலில்
வலியே வாழ்வாகும்!

சித்திரவதை வெம்மைக்குள்
நசுங்கிப் போகும் எம் விடியலில்
ஆதவன் அனுமதியின்றி
இருளே ஆட்சியமைக்கும் !

வேலியே பயிரை மேய
வேவு பார்க்கும் சாலைகள்..........
வெட்கித் தலை குனியும்
தன் வெற்று மேனியில் பதிந்த
அக்கிரமச் சுவடு கண்டு!

ஓர் நாள்...............
குருதியுறிஞ்சு மிந்த
மர அட்டைகளை நசுக்க..............
வலிய கரங்கள் தானாய் வரும் - எம்
வலியும் தொலைந்து போகும் !


ஜன்ஸி கபூர் 











அன்னை


உதிரத்தில் கரு தந்து
உணர்வினில் மருதாணி வாசம் பூசி
விழிகளில் எனை முடிச்சிடும்
முக்காடிட்ட வெண்ணிலா!

சந்தனக் காகிதத்தில்
நிதமென் பெயரெழுதி
உச்சரித்து...............
மடியணைக்கும் உயிரோவியம்
என் தாயவர் !

வேதனையில்...............
என்னிதயம் வழுக்குகையில் - தன்
நெஞ்சக்கூட்டில் நேயம் நிரப்பி
தஞ்சமாய் என்னுள் உறைந்திடும்
தங்கத் தாயவர்!

என் உள்ளத் தொட்டிலில்
உவகைப் பண்ணிசைத்து..........
புன்னகைப் பூக்களால்
என்னுள் வசந்தம் நிரப்பி
வாழ்வை நகர்த்திடும்
வசந்தத் தேரவர்!

தன்னாத்மாவில் நிதம்
எனை நிறைத்து...........
அணு தினமும் என் கனவில்
கலந்து.................
காலத் தேய்விலும் பொலிவிழக்கா
பொற்சுடரவர்!

நோய் படுக்கையிலென்
தேகம் குளிர்கையில்................
வலி பொறுக்கியெடுக்க........
வழி தேடும்
மாணிக்கச் சுடர்
மாதா என்னன்னை!

தீ நாக்கின்
மேனி தொடுகையில்,,,,,,,,,,,,,
தன் முந்தானைத் திரையாலே
வெம்மை விரட்டிடும்
குளிர் நிலவவர்!

ஆணாதிக்கக் கரங்களால்.........
பெண்ணவள் எரிகையில்..........
தன் மூச்சில் அமிலம் நிரப்பி
துடித்திடும்
மென் தாயவர்!

அவர்...........
என்னன்புத் தேடலில்
நான் கண்டெடுத்த உயிர்ச்சுவடு!
என்............
ஞாபகத் தெருக்களின்
நீண்ட தூண்!

அன்னையின் அருகாமை
கற்றுத் தந்த நேயங்கள் யாவும்...........
பத்திரப்படுத்தப்பட்டுள்ளன - என்
உறவுச் சேமிப்பகங்களில்!

தன்னிழற் பரப்பில்
என் சிறகு பொருத்தி..........
தன் விழிக்குள்
என் பார்வை பொருத்தும்............
அன்னையின் அன்புக்கு
அணையுண்டோ - இக்
கிரகமதில்!

ஜன்ஸி கபூர்