About Me

2012/08/26

கௌரவிப்பு விழா

   
  எனது தந்தைக்கு 
வழங்கப்பட்ட நினைவுச்சின்னம்

வாழ்க்கையில் நமக்கென ஓர் லட்சியம் வகுத்து, எதிர்காலத்தை நமது ஆளுகைக்குள் உட்படுத்திக் கொள்ள ஓர் தொழில் அவசியம். அரச ஊழியனாயின் அத் தொழிலுக்கு, சேவைக்கு ஒரு குறித்த வயதில் அல்லது சேவைக்காலத்தில் ஓய்வு வழங்கப்படுவது கட்டாயமாகும்.

அநுராதபுர மாவட்டத்தில் பல துறைகளைச் சார்ந்து சேவையாற்றிய 87, அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர்   சீரீசி குழுமத்தினரால் நினைவுச்சின்னங்கள் வழங்கி (25.08.2012) கௌரவிக்கப்பட்டார்கள்.
அதுமாத்திரமின்றி அவர்களின் சேவையை நினைவுபடுத்தி
மலரொன்றும் (" அநுராதபுரத்தின் முதுசொம் " ) வெளியிடப்பட்டது.

சகலரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து கௌரவப்படுத்தலென்பது  இலேசான முயற்சியல்ல. காலத்தால் என்றும் நிலைத்திருக்கக்கூடிய முன்மாதிரியான செயலாகும்.

எனினும் "வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும்...வாழ்த்த வேண்டும் '' எனும் சிறப்பான எண்ணத்தை வகுத்து, அதனை செயற்படுத்தி வந்த , வருகின்ற  கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் பங்களிப்பும் இவ்விழாவிற்கு அச்சாணியாக அமைந்துள்ளது. இவரை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விழாமலராகிய "அநுராதபுரத்தின் முதுசொம் " எனும் மலரை வடிவமைக்கவும், விழா நிகழ்விற்கும், விருதுகளுக்குமாக  இலட்சங்களை அள்ளி வழங்கிய சீரீசி மண்டப உரிமையாளரும், சமுகசேவையாளருமான அல்ஹாஜ் H.S.A. முத்தலிப் ஹாஜியார் அவர்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் விழாவை நடத்திய குழுவினரும் மீண்டும் மீண்டும் நன்றிக்குட்படுத்தவேண்டிய முகங்களாவார்கள்..

அநுராதபுரம் சீரீசி மண்டபம் கற்றவர்களாலும், அவர்கள் உறவுகளாலும் நேற்றைய தினம் நிரம்பி வழிய , யாஸீரின் கிறாத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அல்ஹாஜ் H.S.A. முத்தலிப் ஹாஜியார் அவர்களின் தலைமையுரையும் , கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் மலராசிரியர் உரையும் , பிரதம அதிதி உரையாக வைத்திய கலாநிதி முஸ்தபா ரையீஸ் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

டாக்டர் ரையீஸ் அவர்கள் இவ்வுலகில் நடைபயிலும் பல அற்புதங்களையும்,  அவற்றை விளக்கும் விஞ்ஞானத்தையும் புனித அல் குர்ஆனின் ஆதாரத்துடன்  மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டினார்...

கற்றவர்கள், தம் கல்வியறிவுடன், மத அறிவையும் பூரணமாக வெளிப்படுத்தும் போதே அறிவாளிகளாகின்றார்கள் எனும் அவரின் ஆணித்தரமான உரை பல உண்மைகளை விளக்கியது.

அவரைப் போலவே அவரது மகன் பிலால் ரயீஸ் எனும் 13 வயதுச் சகோதரர், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை  ஆங்கிலத்தில் அழகாக உரையாற்றி சபையினரின் மனதைக் கவர்ந்தார்..

மேற்கூறிய  உரைகளுக்கு முடிவுரையாக , விழாக்குழு செயலாளர் எம். ஏ.எம். டில்ஷான் அவர்களின் நன்றியுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து, பிரதம அதிதி ரயீஸ் அவர்களால் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் எனும் நினைவுச்சின்னங்கள் , ஓய்வு பெற்றவர்கள் ஆற்றிய சேவையை ஞாபகப்படுத்தும் அழகிய, மிகப்பெறுமதியான ஆவணமாகும்.

இவ்வாறாக ஓய்வுபெற்றவர்களுக்காக நடைபெற்ற இச் சிறப்பு விழாவானது இலங்கை வரலாற்றில் ஓர் முன்னோடி விழாவென்றே சொல்ல வேண்டும். நான் நினைக்கிறேன் இலங்கை வரலாற்றில் ஓய்வுபெற்றவர்களின் கௌரவிப்புக்காக சிந்தப்பட்டிருக்கும் முதல் துளி இந்த விழாவாகத்தான் இருக்க வேண்டும்.

இவ்விழாவில் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரை ஆசிரியராகக் கொண்டு ,ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் விழா மலராக " அநுராதபுரத்தின் முதுசொம்" எனும் சிறப்பான, பெறுமதியான மலரொன்றும் வெளியிடப்பட்டது. இந்த வரலாற்றுப் பதிவு நூல்  என்றும் பேணிப்பாதுகாக்க வேண்டிய சேமிப்பு ஆவணமாகும்.

இத்தருணத்தில் இந்த விழாத் தடத்தின் இயக்கத்திற்காக வியர்வைத்துளிகள் சிந்திய சகலரின். செயலாற்றுகையை  நன்றியுடன் நான் நினைவுகூறுகின்றேன்!.......

என் தந்தையைப் பற்றிய சில நினைவு வரிகள்

என் தந்தையாகிய ஒசன் சாய்பு முஹம்மது அப்துல் கபூர் அவர்கள், (O.S.M.A), யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம் , வண்ணை தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று , முதல் நியமனமாக அரச பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் நியமனம் பெற்றுச் சேவையாற்றினார்.  சில காலங்களின் பின்னர் பொலீஸ் சேவையிலிருந்து விலகி, ஆங்கில உதவியாசிரியராக ஆசிரியவுலகில் இணைந்தார்.

அட்டாளைச்சேனை  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்  பயிற்றப்பட்ட  தமிழ்மொழி ஆசிரியராக பயிற்சி பெற்றாலும் கூட , தெரிவுப்பரீட்சைக்கு தோற்றி , சித்தியடைந்ததன் மூலம் ஆங்கிலப் பயிற்சி தராதரப் பத்திர ஆசிரியராக நியமனம் பெற்றார். ஆசிரியர் சேவையில் சிறப்பாக சேவையாற்றிய பின் , அதிபர் சேவைக்குள்ளீர்க்கப்பட்டு  , ஓய்வுபெறும் போது முதலாம் தர அதிபராக பதவி வகித்தார். 

பாடசாலையில் சேவைக்காக இணைந்திருந்த காலத்தில் யாழ்ப்பாண கல்வித்திணைக்களத்திலும், இடம்பெயர்ந்த பின்னர் வடமத்திய மாகாணக் கல்வித்திணைக்களத்திலும்  இணைப்புச் செய்யப்பட்டிருந்தார்.

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆங்கில உதவி ஆசிரியராக தொடரப்பட்ட இவரின் முதற்சேவை , பின்னர் யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் கலவன் பாடசாலை , யாழ்ப்பாணம் ஒஸ்மானிக்கல்லூரி. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம்,  என ஆசிரியத்துவப் பணிக்காக விஸ்தரிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் மஸ்றஉத்தீன் பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடமொன்று தோற்றம் பெற என் தந்தையாற்றிய பங்களிப்பும் மறக்கமுடியாதது.

மண்கும்பான் முஸ்லிம் பாடசாலை, யாழ்ப்பாணம் அல்ஹம்ரா முஸ்லிம் பாடசாலை, வவுனியா சூடுவெந்தபுலவு  மு.வி , முல்லைத்தீவு மு.வி என்பன தந்தை அதிபராகக் கடமையாற்றிய சில பாடசாலைகளாகும்..

தந்தை சிறந்த இலக்கியவாதி...ஆனால் அவர் நூல் பதிப்பில், தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் பெரிதும் அக்கறை காட்டவில்லை.  இதற்கு அன்றைய யுத்தச்சூழலும் காரணமாக இருந்திருக்கலாம். அவர் எழுத்துக்களே என்னையும் சிறிய வயதில் எழுதத் தூண்டின.

நல்ல மேடை நாடக நடிகர். படிக்கும் காலத்தில் பல மேடை நாடகங்களில் அவர் திறமைகள் வெளிப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்ணை ஏ.எஸ். மணி அவர்களின் நட்டுவாங்கத்தில் பல மேடை நாடகங்களை நடித்துள்ளார். அவற்றுள் சில "உயிர்காத்த உத்தமன்" , " தோட்டக்கார மகள்" "கற்சிலை" ,போன்றவையாகும். இவற்றுள் கற்சிலை என்பது தந்தையால் எழுதி இயக்கப்பட்ட நாடகமாகும். அன்றைய நாட்களில் ஏ.எஸ் . மணி அவர்களின் மேடை நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் சிறப்புற்று, மக்கள் அபிமானத்தை வென்றவையாக இருந்தன. 

அட்டாளைச்சேனையில் ஆசிரியராகப் பயிற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் , அங்கு நடைபெற்ற கலைவிழாவில் இடம்பெற்ற சித்திரப்போட்டி, விஞ்ஞானப் போட்டி, நடிகர் போட்டி போன்ற  3 கலைவெளிப்பாடுகளிலும் முதலாமிடத்தைப் பெற்று பரிசில்களை வென்றுள்ளார்.

முதலுதவிப் பிரிவு ஆசிரியராகவும், சாரண இயக்க ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். 

சிறந்த பாடகர்...கற்கும் காலங்களில் பாடசாலை மன்றங்களில் தந்தையின் பாடல் இடம்பெறாத நாட்களே  இல்லையென்றே சொல்லலாம்.

சிறந்த ஓவியர்........அவரின் ஓவியங்கள் பல வரையப்பட்டிருந்த ஆல்பம் என் பிஞ்சு வயதின் ரசிப்பை பல தடவைகள்  வென்றிருக்கின்றன. ...இத்தனை வருட கால உதிர்விலும் கூட, என் மனக் கண்ணில் அவை வந்து வந்து போகின்றன. அவர் வெள்ளைச்சங்குகளின் மேற்பரப்பில் செதுக்கிய  பல அரபு எழுத்தணி வடிவங்கள் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும் விடயங்கள்!.

கைவைத்தியம் உட்பட தன் சுயமுயற்சியால் பல துறைகளைத் தானாகவே கற்றுத்தேர்ந்தவர்..... வானொலி திருத்தம், தொலைக்காட்சிப் பெட்டித் திருத்தம், கணனி போன்ற உபகரணங்கள் திருத்தம், வீட்டு மின்னிணைப்பு வேலைகள், அன்ரனா தயாரிப்பு , பிளாஸ்டர் தயாரிப்பு போன்ற பல துறைகள் அவர் கைதேர்ந்த துறைகளாகும்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் முன் முகப்புத் தோற்றம் அவரின் ஓவியத்திறனால் உயிர் பெற்றதொன்றாகும். இதனை "யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு" நூலில் அதனாசிரியர் ரஹீம் ஆசிரியரவர்கள் இத்தகவலைக் குறிப்பிடுகின்றார்கள்.

அவ்வாறே யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் தோற்றத்தையும் தந்தையே வரைந்து , அத்தோற்றத்திலேயே பள்ளிவாசலைக் கட்டிமுடிக்க பெரும் பங்களிப்பாற்றியதை அன்றைய யாழ் முஸ்லிம் சமூகம் மறந்திருக்க மாட்டார்கள். வரையப்பட்டிருந்த பள்ளிவாசலின் தோற்றம், அன்றைய காலங்களில் சித்திரமாக பள்ளிவாசலின் வெளிப்புறச் சுவரில் வைக்கப்பட்டிருந்ததை நானே பல  தடவைகள் அவதானித்துள்ளேன்..

அவ்வாறே வி.எம்.முஹீதின் தம்பி அவர்களின் தலைமையில் இயங்கிய யாழ்ப்பாணம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் கட்டிடக் குழுவின் செயலாளராக இருந்த காலத்தில் , யாழ் முஸ்லிம் சமுகத்திற்கு பெரும் சேவையாற்றினார்,. அவரது நிர்வாகக் காலத்திலேயே யாழ்ப்பாண முஸ்லிம் மையவாடி , பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. வக்பு சபைக்கான பணத்தையும் அவர் முன்னின்றே அனுப்பி வைத்தார்.

"ஒன்றே ஜூம்ஆ' சமூக எழுச்சியிலும் போராட்டத்திலும் தந்தையின் பங்களிப்பு அன்றைய கால கட்டத்தில் முக்கியமானதொன்றாக விளங்கியது.

வெள்ளிப் பேழையாலான தீப்பெட்டி அளவினாலான  திருக்குர்ஆன்  உள்ளிட்ட  பல பரிசில்களும் சான்றிதழ்களும் ,  குர்ஆன் மனனம் , பேச்சுப் போட்டி உள்ளிட்ட  பல  போட்டிகளில் பங்குபற்றி பெற்றுள்ளார்.

அன்றைய நாட்களில் இந்திய அமைதி காக்கும் படையினர் , யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தில், எமது பிரதேச மக்களுக்காக என் தந்தை சேவையாற்றியதை அம் மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

பல வருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  ஈழநாடு பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அவ்வாறே பல வருடங்களாக நல்லூரில் இயங்கி வந்த யாழ்ப்பாண பல நோக்கு  கூட்டுறவுச்சங்க நிர்வாகக் குழுவிலும் முகாமைத்துவ அங்கத்தவராகப் பணியாற்றினார்..

மொழித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களப் பரீட்சையின் மூலமாக இரண்டாம் மொழி ஆசிரியராகவும் தெரிவு செய்யப்பட்டார். மூன்று மொழிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கியமையால்  அவரது அறிவுத்துறைப் பயணம் தடையின்றித் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் , ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் சிறந்த ஆங்கிலப் புலமை என்னை பல தடவை வியக்க வைத்துள்ளது. 

துறைமுக அமைச்சு நடத்திய "மொழி பெயர்ப்பிற்கான ஆட்சேர்ப்புப் பரீட்சையில்" சித்திபெற்று ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட, சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அப் பதவியினையேற்கவில்லை. எனினும் வடமத்திய மாகாண சபையினால் வழங்கப்பட்ட ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.

புனித அல்குர்ஆன் , ஹதீஸ்கள், நபி வரலாறுகள் உள்ளிட்ட  மத சார்பான நூல்களும் ,  மருத்துவம் , இலக்கியம் , ஓவியம் , சரித்திரம் , அரசியல், தமிழ் இலக்கியங்கள், குடிசைக்கைத்தொழில்கள்  உள்ளிட்ட பல வகையான நூல்களும்   எங்கள் வீட்டிலுள்ள தந்தையின் நூலகத்தில் நிரப்பப்பட்டிருந்த நூல்களாகும்.

தனது தீர்மானத்தை, எண்ணத்தை உறுதிப்படுத்த, நிறைவேற்ற அதிக சிரத்தை எடுத்து தந்தை செயலாற்றும் பாங்கு எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று.அவரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் முன்னாயத்தம்...எதனையும் திட்டமிட்டே நேர காலத்துடன் செய்ய முயற்சிப்பார்.

தந்தையின் வழிப்படுத்தலில் நான் சிறிய வயதிலேயே அகில இலங்கை ரீதியிலான ஹிஜ்ரா கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று, அன்றைய ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜயவர்த்தன  அவர்களிடம் பரிசில் பெற்றேன். அவ்வாறே அன்றைய  போக்குவரத்து அமைச்சர் ஜனாப் முகம்மது அவர்களின் கரங்களால் பேச்சுப் போட்டியிற்கான பரிசில்களைப் பெற்றதும் மறக்கமுடியாத அனுபவமாகும். 

அவ்வாறே ஸாஹிரா வெள்ளி விழா மலரில் இடம்பெற்ற  "யாமறிந்த மொழியிலே" எனும் எனது கட்டுரையும் அவர் வழிகாட்டலில் நானிட்ட பதிவாகும்.

அவர் அன்று பெற்ற விருதுகள், வரைந்த அழகான ஒவியங்கள் , கையெழுத்துக்களில் பொறித்திருந்த பல இலக்கியப் பதிவுகள், தந்தையின் சாதனைகளைச் சுமந்து நின்ற பத்திரிகைச் செய்திகள், அவரெழுதிய நாடகப்பிரதிகள் , அவரது சேவையை நினைவு கூறும் புகைப்படங்கள் போன்ற பல ஆவணங்களை , யாழ்ப்பாணத்திலிருந்தான எம் இடப்பெயர்வும், யுத்தமும் விழுங்கிவிட்டன.

இவ்வாறாக தன்னுள் பல சாதனைகளை வைத்துக் கொண்டு, அவற்றை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தல் மூலம் எத்தி வைக்காது, சுருங்கிய தன்னுலகமான தன்குடும்பத்திற்குள்ளும், தன்னுறவுகளுக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும், யாழ் பிரதேச எல்லைகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தியவாறு வாழ்ந்த என் தகப்பனாரின் சாதனைகளை, அவரை நன்கறிந்தவர்கள் மறுக்கப் போவதில்லை. அவை ஏடுகளில் பொறிக்கப்படாவிட்டாலும் , மனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி, வாழ்த்தப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் தந்தையின் சாதனை கலந்த நினைவுப்பாதையை நானும் தரிசிப்பது, எனது வாழ்த்தாக இருக்கும் என்பதாலேயே இப் பதிவை இடுகின்றேன்.

நல்ல மனங்களின் வாழ்த்துக்கள் பூத்தூவ, அவர் ஆரோக்கியம் சிறப்பு நிலை பேண, வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் !

நடைபெற்ற விழா தொடர்பான சில புகைப்படங்கள்


 அன்பு ஜவஹர்ஷா உரையாற்றுகின்றார்



2012/08/22

பபா அம்புலி


வான் இருளை சற்றுக் கலைக்கும் வண்ணம் வானில் கால்வாசி மாத்திரம் நிரப்பப்பட்ட வண்ண நிலாவொன்றும், தம் மழகையும் ரசிக்கும்படி கண் ஜாடை செய்யும் பல நட்சத்திரங்களும், தம் ஒளியை வானில் அள்ளி வீசி இருளை சற்று அகற்றிக் கொண்டிருந்த அந்த நேரம் எங்கள் வீட்டுச் செல்லம் அஸ்கா, என் கைகளைப் பற்றி யிழுத்தவாறே வீட்டின் முற்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினாள்....

" என்ன குஞ்சு காட்டப் போறீங்க எனக்கு " 

நான் அவள் கன்னத்தை செல்லமாக வருடியவாறே கேட்டேன்.

"பபா அம்புலி வந்திருக்கு......அதைப் பார்க்கணும் "

என்றாள் அந்த மூன்று வயதும் நிரம்பாத மழலை!

பபா அம்புலி..........!

பாதி உடைந்திருக்கும் அந்த நிலாவுக்கு அவளிட்ட அந்தப் பெயர் கூட அழகாகத்தான் இருக்கின்றது. நானும் ரசித்தேன் அந் நிலவின் எழில் கசியுமந்த அழகை அவளுடன் சேர்ந்து நெடுநேரமாய்!

அஸ்கா............

வழமையாக அம்புலிக்குப் பயம்...அவளுக்கு தினமும் உணவூட்டுவதென்பது எங்கள் வீட்டில் பெரும் போராட்டம் தான். குழந்தை சாப்பிடுவதில் அக்கறை காட்டமாட்டாள். இரவில் உணவுண்ண அடம் பிடித்தால் இந்த நிலாவைக் காட்டித்தான் உணவூட்டல் நடைபெறும். அம்புலி மீதான பயத்திலும், தனதுணவை அம்புலிக்கு கொடுத்து விடுவார்களோ எனும் ஆதங்கத்திலும் உண்ணச் சம்மதிப்பாள். இப்படியாவது ஏதோ சிறு உணவுக் கவளங்கள் அவள் சமிபாட்டுத் தடத்தில் இறங்கி விடுகின்றதே எனும் திருப்தி எமக்கு!

அம்புலிக்குப் பயப்படும் பிள்ளை என்னை இழுத்து வந்து வானத்தைக் காட்டும்படி இன்று கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்......

"அஸ்கா பபா........நீங்க அம்புலிக்குப் பயமில்லையா"

நான் அப்பாவி போல் பிள்ளையிடம் கேட்க, அவள் பயம் என தலையாட்டினாள்

"நான் உம்மா அம்புலிக்குத்தான் பயம் , ஏன் நம்ம வீட்டுக்கு வருது" 

பிள்ளை தொடுத்த வினாக்களை ரசித்தேன் மெல்லிய புன்னகையை என்னுள் பரப்பியபடி !

ஏனோ சின்னப் பிள்ளைகள் தொலைவில் எட்டிப் பார்க்கும் நிலா மீது ஆசையை வைத்தாலும் கூட, பயத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்..நிலா பற்றிய பிரக்ஞ குழந்தைகளுக்கு வெறும் கற்பனையுருவாகவே அமைந்து விடுகின்றது..கொஞ்சம் வெளியுலகைப் பார்க்கும், பிரித்தறியும் பக்குவம் வரும் போது நிலாவைத் தோழியாக்கி ரசிக்கின்றது பிள்ளை மனம்!

"ஓ..........உம்மா அம்புலி (பூரண நிலா) இன்னும் கொஞ்ச நாள்ல வந்திடுவா..அதுவரைக்கும் இந்த பபா அம்புலிதான் நம்மட வீட்டுக்கு வரும் " 

நானும் குழந்தையுலகில் பயணித்து அவளுக்கு சில விடயங்களைப் புரிய வைக்கத் தொடங்கினேன்.

"பபா அம்புலி எங்க போயிருந்தது " 

குழந்தை வினவ, நானும் சளைக்காமல் அவளுக்கேற்ப பதில் சொன்னேன்..

"பபா அம்புலி காலைல ஸ்கூல் பொயிட்டு, நைற்தான் அச்சா பபாவ பார்க்க வந்திருக்கு.......அந்த பபா அம்புலியோட விளையாடுவோமா நாம ரெண்டுபேரும்"

நான் இயல்பாகக் கேட்க, குழந்தை அபிநயத்து தான் அதற்குப் பயமென்பதை கூறி அவசரமாக மறுத்தாள்.

குழந்தையின் ஆர்வம் திடீரென நட்சத்திரங்கள் மீதும் பரவியது.

"இது என்ன"  வினவினாள் ஆவலுடன்...........

"இது தான் நட்சத்திரம்....ஸ்டார் .........."   

ஒற்றை நட்சத்திரமொன்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன். பிள்ளையும் கஷ்டப்பட்டு தன் மழலை மொழியில் நான் கூறிய அந்த வார்த்தைகளை மீள எனக்கு சொன்ன போது, அந்த மழலைத் தமிழை சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.

"அப்ப ஸ்டார் என்ன செய்யுது  ஏன் அங்கு வந்துது"  

பிள்ளையின் அடுத்த வினாத் தேடல் களத்தில் இறங்கியது.

"பபா நிலாட விளையாட்டுச் சாமான்கள் தான் நட்சத்திரம்.........பபா நிலா குழப்படி அதுதான் தன் விளையாட்டுச் சாமான்கள வானத்தில வீசியிருக்கு.... அஸ்கா பபா அச்சாவா கூடாதா, இப்படி விளையாட்டுச் சாமான்கள வீசியெறிவீங்களா"

நான் கேட்க, குழந்தை தன் கைகளை விரித்துக் காட்டியபடி  "அச்சா பபா" என்றாள். அவளை வாரியணைத்து கன்னத்தில் என் அன்பைப் பதித்து அவள் தலையை மெதுவாக வருட ஆரம்பித்தேன். 

இரவில் மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் கூதல் நிரம்பிய காற்றின் வருடலில் அவள் மழலை சுகம் மனதுக்குள் மானசீகமாக இறங்கிக் கொண்டிருந்தது.

இந்த வயதில்தான் பிள்ளை தன் சூழல் அனுபவங்களால் உலகையறிய முயற்சிக்கின்றது.  குழந்தையின் புத்திக்கூர்மையும் மெதுவாகப் பட்டை தீட்ட ஆரம்பிக்கப்படுகின்றது.  எனவே எதற்கெடுத்தாலும் வினாக்களே சிந்தனைத் தூண்டலாக மாற்றப்படுகின்றது. ஏன்.............எப்படி......எங்கு......இவ்வாறான வினவல்கள் தான் அவள் வார்த்தைகளுடன் இணைந்து தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை மனதுக்குள் படமாக்க வுதவுகின்றது. நான் குழந்தை உளவியல் பற்றி அறிந்திருப்பதால் அவளின் வினாக்களுக்குப் பொறுமையுடன் உண்மையான விவரங்களை அவள் புத்திக்கேற்ப அவள் பாணியில் கூறுவேன்.......இது எனக்கும் பிள்ளைக்குமிடையிலான தின நிகழ்வு..பிள்ளை விரும்பும் உலகத்திற்கு நான் அழைத்துச் செல்லத் தயங்குவதில்லை....

"யூ டியூப்பில்" குழந்தை விரும்பும் ரயில் கார்ட்டூன்களும், வானத்து நிலாவும் தினமும் இரவில் பிள்ளை ரசிக்கும் உலகங்களாக கவிழ்ந்திருக்கின்றன!

நாளையும் நிலா வரும்...........பிள்ளை கேட்கும் இதே கேள்விகளுக்கு , எனது விடைகள் மாத்திரம் வேறுபடும்.........

இயற்கையின் ரசிப்புடன் கூடிய மழலை சுகம், என் இரவுத்துளிகளை பனித்துளிகளாக்கி என்னுள் உலாவவிடத் தொடங்கின வாஞ்சையுடன் ! 

அகம் மெய்மறந்து அந்த வுலகில் வேரூன்றத் தொடங்கினேன் யதார்த்த வுலகின் இம்சைகளைக் கலைந்தபடி!

ஆசிரியர் கீதம்


தேசியரீதியில் தமிழ்மொழியில் இசைக்கப்படும் ஆசிரியர் கீதம்!
ஆ ஆ ஆ......ஆ ஆ ஆ..........

முத்து முத்தான சித்திரங்கள்
இலங்கை முற்றத்தில் சிந்திய ரத்தினங்கள்  (முத்து)
பற்றும் பாசமும் வைத்தவற்றை
நல்ல பாதையில் சேர்க்கும் பணி எமதே!    (2)

                                                                                           (முத்து)
அன்னை மடியில் அரவணைத்த பிள்ளை
பள்ளி வரும் பிஞ்சு பாலகனாய்  (அன்னை)
அவன் தன்னம் தனிமையைப் போக்கிடவே
உள்ளத்தில் நம்பிக்கை அன்பை ஊற்றிடுவோம் (அவன்)
                                                                                            (முத்து)

எண்ணும் எழுத்தும் உணர்ந்திடுவோம்
உள்ள தேவைகள் அறிந்து பூர்த்தி செய்வோம்   (எண்ணும்)
அவன் ஒழுங்குடன் ஒழுக்கமும் பேணி நல்ல
சிந்தை ஆற்றலை தூண்டிடுவோம்                         (அவன்)
    
                                                                                            (முத்து)

கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே
நல்ல கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில்        (கற்பித்தல்)
தினம் பெற்ற கடமையை பேணி ஏற்றே
ஞாலம் போற்றும் சமூகத்தை நாம் படைப்போம்   (தினம்)

                                                                                             (முத்து)

முன்மாதிரி



தான் பருகிய நீரை இளநீராக்கித் தரும் தென்னையைப் போல், தான் கற்ற , அறிந்த விடயங்கள் மூலம் சேவையை மூச்சாக்கி சமுகத்தினருக்கு வழங்கக் காத்திருப்பவரே அரச ஊழியர்கள்....

"கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு"

இது தொன்மைக் காலம் தொடக்கம் நம் வரலாற்றில் பதிவாக்கப்பட்டு வருகின்ற குரல்........குறள் !

"அரச உத்தியோகம் புருஷ லட்சணம்"  என்பார் நம்மவர்கள் !

உண்மையில் சிறிதளவு கற்றவர்கள் பெறும் மாத ஊதியத்தை விட அதிகம். கற்றவர்கள் பெறும் மாத ஊதியம் குறைவாக இருந்தாலும் கூட, சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கிடைக்கும் ஓய்வூதியமும், அதனால் கிடைக்கும் சுயமரியாதையும், நற்சமுகம் எப்பொழுதும் தருகின்ற மதிப்பும், கௌரவமும் எமக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள்!

ஒரு அரச ஊழியரிடமிருந்து உச்ச பலனை எதிர்பார்த்து, அதன் மூலம் திருப்தியான சேவையைச் சமூகத்திற்கு நுகர்ந்தளிப்பதே அரசின் நோக்கம்..

எனவே ஓய்வுபெறுவதற்கென ஒருவர் தனது உடலாலும், உள்ளத்தாலும் ஒத்துழைக்கக்கூடிய இறுதி வயது  தீர்மானிக்கப்பட்டு , அவரது சேவைப் பயணம் கட்டாயப்படுத்தப்பட்டு நிறுத்தப்படுகின்றது.  இதற்கென இறுதி வயதினைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசின் கரங்களில் உள்ளது.

ஓய்வுபெற்ற ஒருவர் கௌரவமாக, தன் காலில் நிற்கும் உழைப்பவர் போல் மாத வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவராக மாற்றப்படுவதன் மூலம் அவர் தனது வயதான காலத்தில் பிறரைச் சார்ந்திராது, முன்பு உழைத்த அதே மனநிலைக்குள் தக்கவைக்கப்படுகின்றார். இதன் மூலம் அவர் உளநிலையும் மேம்படுத்தப்படுகின்றது.

ஒருவர் தனது சேவையிலிருந்து ஓய்வுபெறும் போது, மனஅழுத்தத்திற்கு சிறிதளவாவது உள்ளாக  நேரிடும். ஏனெனில் அதுவரை கடமைகளுடன் தன்னைப் பழக்கப்படுத்தியவர், வீட்டில் எவ்வித வேலைகளுமற்று தனிமைப்படுத்தப்படும் போது அவரின் மன அழுத்தமும் அவரை லேசாக தொட்டுச் சொல்கின்றது. ......கொல்கின்றது..

உத்தியோக வாழ்வின் இரண்டாம் நிலையே ஓய்வு நிலை. அதுவரை அடிக்கடி அவரது நிறுவனங்களில் முதன்மைப்படுத்தப்பட்டவர், ஓய்வுபெற்றதும் வெறுமைப்படுத்தப்படுகின்றார். குடும்பம், உறவுகள் என அவரின் முழுக் கவனத்தையும் மானசீகமாகத் திசை திருப்புகின்றார். இது சாதாரணமான நிகழ்வாகின்றது.

ஓய்வு என்பது கடினமான உடலுழைப்புக்கே அன்றி நம்மிலெழும் மன  மகிழ்ச்சிக்கல்ல...அவர்களும் சிறு குழந்தைகள் போலவும்,, ஆலோசனை வழிப்படுத்தலை வழங்கும்  முதியோர் போலவும், அநுபவசாலிகள் போலவும் நம் கருத்தினை நிறைத்திருப்பார்...

ஓய்வூதியம் பெறும் வயதினை அண்மிக்கும் போது ஆரோக்கியமும் மெதுவாக அகல ஆரம்பித்து, நோய்ப்படுக்கையில் தேகம் விழ ஆரம்பிக்கின்றது..மருத்துவமே அவர்களின் வார்த்தைகளாகின்றன,

இத்தகைய மனப்பண்புகளால்  இலட்சியப்படுத்தப்பட்ட , சேவை மூலம் தன் சமூகத்தினருக்கு நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொடுத்த அரச ஊழியர்களைக் கௌரவிக்கும் நற்பண்பை முதன் முதலில் அநுராதபுரம் சீடீசீ குழுமம் வெளிப்படுத்தியுள்ளது .

அநுராதபுரம் மண்ணில் பிறந்து சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களும், வெளி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து சேவை செய்து ஓய்வுபெற்றவர்களும் கெளரவிக்கப்படவுள்ளார்கள். இக் கௌரவிப்பு எதிர்வரும் சனி (25.08.2012) மாலை 3.30 ற்கு நடைபெறவுள்ளது. சின்னம் வழங்குதல் , மலர் வெளியீடு என காலம் மறக்காத நினைவுத்தடங்களுள் இவர்களது சேவை பதிக்கப்படவுள்ளது

"வாழும் போதே வாழ்த்தப்படல் வேண்டும் " எனும் கொள்கை முனைப்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் பலர் கௌரவிக்கப்படவுள்ளார்கள். அதில் எனது தந்தை ஜனாப் ஓ.எஸ.எம். ஏ கபூர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.. அதிபர் சேவைத்தரம் 1)அவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் எனும் செய்தி மகிழ்வு தருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வாறான ஓர் நிகழ்வுகூடலுக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றும் அன்பு ஜவஹர்ஜா சேர் அவர்களும், டில்ஷானும், அவரது செயற்பாட்டுக்கு பக்க பலமாக நிற்கும் விழாக் குழுவினரும் நன்றியுடன் எம்மால் நினைவுகூறப்படுகின்றனர்.

இம் முன்மாதிரியும், முயற்சியும், வழிநடத்தப்படலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு , காலத்தின் ஞாபகக் கரங்களுள் தன்னை எப்பொழுதும் முழுமைப்படுத்தப்படல் வேண்டுமென்பதே எமது அவவாகும் !

அல்லாஹ் வழித்துணையுடன் இவர்களின் இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!