About Me

2012/09/08

உலக எழுத்தறிவு தினம்


செப்ரம்பர் 8ம் திகதியன்று உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகின்றது. 

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வளர்ந்தோர்க்கு எழுத்தறிவைப் போதிக்கும் இலக்கினடிப்படையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1965 ம் ஆண்டு தெஹ்ரான் நகரில் இடம்பெற்ற கல்வியமைச்சர்களின் மாநாட்டில் தீர்மானம்பெறப்பட்ட து. இதனடிப்படையில் 1965 நவம்பர் 17 ல் கூடிய யுனெஸ்கோ செப்ரெம்பர் 8 ஐ இத்தினமாக கொண்டாட வேண்டுமென தீர்மானித்தது. அத்தீர்மானமே, உருப்பெற்று, உயிர்பெற்று  1966 ம் ஆண்டிலிருந்து  எழுத்தறிவு தினமாக நம்முன்னால் பார்வை தந்துள்ளது.

"ஓதுவீராக" என்பது அல்குர்ஆன் அருளிய முதல் வசனமிதுதான்.

மனித வாழ்வின் அடிப்படையானது  கல்வியறிவின் மீதே உறுதியாகக் கட்டியெழுப்பப்படுகின்றது.  நம்மை, நம்மைச் சார்ந்தோரை, நம் சூழலைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தீர்மானங்களைப் பெறவும், நமக்குப் பொருத்தமான வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளவும், வாழ்வை செப்பனிடவும் , சிறப்பாக வாழவும் கல்வியறிவு மிகஅவசியம்....

கல்விக்கான வழிப்படுத்தலில் மொழி அத்தியாவசியமானதொன்றாகின்றது. எழுத்து, வாசிப்பு, கிரகித்தல், பேச்சு போன்ற திறன்கள் மொழியால் போஷிக்கப்பட்டு வந்தாலும் கூட, இவற்றுக்கெல்லாம் கிரீடம் வைத்ததைப் போன்ற தேர்ச்சி எழுத்தறிவிலேயே அதிகமாக தங்கியுள்ளது. ஏனெனில் தான் கேட்ட, வாசித்த, கிரகித்த விடயங்களை உள்வாங்கியதால் பெறப்பட்ட எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்றும்போதே, அம் மொழித்திறன் முதன்மையடைகின்றது.

ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்முக நாடுகளில் வாழும் மக்களின் எழுத்தறிவு வீதம் அதிகமாகவிருப்பதாலேயே, அக்கற்றலறிவின் பயனால் , தமக்கும், நாட்டுக்குமேற்ற பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த அம்மக்களால் முடிகின்றது...

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் அதிகளவிலுள்ளது. தெற்காசியாவிலேயே இலங்கையின் எழுத்தறிவே முதல் நிலையிலிருப்பது இலங்கையர்க்கு சிறப்பான செய்தியே!

எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியின் வரப்பிரசாதமேயிது. 6 வயது தொடக்கம் 14 வரை இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டாயக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி எனும் நடைமுறையானது, மக்களின் எழுத்தறிவின் உயர்விற்குக் காரணமாகியுள்ளது. இலங்கை நகரப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95% ஆகவும், கிராமப் புறங்களில் 93% ஆகவும் உள்ளது. எனினும் இத்தொகையை விட குறைவான படித்தவர்களே மலையகப் பெருந்தோட்டத்துறைகளில் காணப்படுகின்றனர். மலையக மக்களின் வறுமைப்பட்ட நிலையின் தாக்கமாகக் கூட இது காணப்படலாம். தமது வறுமை காரணமாக, தமது பிள்ளைகளுக்கு முறைப்படியான அடிப்படைக் கல்வியை வழங்காது, சட்டத்திற்கு மறைவாக வீட்டுத் தொழிலாளிகளாக உருவாக்குவதில் இம் மக்களிற்பலர் முனைப்புடன் செயற்படுவதால் மலையக மக்களின் எழுத்தறிவு வீதம் 76% ஆகக் காணப்படுகின்றது.  இம் மலையக மக்களின் பின்னடைவான நிலையினால் இலங்கையின் எழுத்தறிவு வீதம் ஏறக்குறைய 90.6% ஆகக் காணப்படுகின்றது.

கிராமம் என்பது ஓர் நாட்டின்  இதயம்..கிராமத்தின் விழுதுகளில் கல்வியறிவு ஊன்றிப்பற்றிப்பிடிக்கப்படுமானால், மக்களின் வாழ்விலும் அபிவிருத்தி உயர்மட்டத்தில் பேணப்படும்.

எம் மொழியாயினும் இலகுவாக வசனங்களை எழுதவோ, வாசிக்கவோ முடியாத நிலையையே எழுத்தறிவின்மையென ஐ.நா சாசனம் வரையறுக்கின்றது. சிறப்பாகத் தொடர்பாடலைப் பேணும் ஓர் சமுகத்தில் எழுத்தறிவும் சிறப்பாகக் காணப்படுகின்றது.

இன்றைய கல்விமுறையானது தேர்ச்சிக்கல்விமுறையாகும். தேர்ச்சியென்பது ஒரு பிள்ளை தான் பெற்றுக்கொள்ளுமறிவை ஆற்றலாக மாற்றி தன் வாழ்நாள் முழுவதும் பிரயோகிக்கும் திறனாகும். எனவே பாடசாலைகளில் பல்வேறு நுட்ப முறைகளினூடாக போதனையும் வழிகாட்டலும் இடம்பெறுவதால் மாணவர்களிடம் இத்தகைய மொழித் தேர்ச்சி கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. எனினும் ஆசிரியர் செயற்பாடு மாத்திரமல்ல, பிள்ளையினதும், அவர்கள் வீட்டுச்சூழலினதும் முயற்சியிலும், பயிற்சியிலுமே இவ்எழுத்தறிவின் உயர்தர வெற்றி தங்கியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் " என்பது ஆன்றோர் வாக்கு.

இன்றைய நவீனத்துவத்தின் பல சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கி, அவற்றிலிருந்து சிறப்பான பயன்களைப் பெறவேண்டுமானால் நமக்கு இவையிரண்டும்  அடிப்படையாகின்றது. கணனிப்பயன்பாட்டின் உச்சளவு கூட இக்கல்வியறிவுடன் வரையறைக்கப்பட்டுள்ளது. எழுத்தினைக் கற்றவன் தன்னம்பிக்கையை வளர்க்கின்றான். அந்நம்பிக்கையின் விளைவாக இவ்வுலகின் சவால்களை எதிர்கொள்ளுமாற்றலையும் தனக்குள் திறமையாக வளர்க்கின்றான். இன்று பல துறைகளில் நிகழும் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் மொழி வளர்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளது என்பதனால் உலகமயமாதலிலும் இம் மொழி தாக்கம் செலுத்துகின்றது.

தனியாளொருவர் தனது இலக்கை அடைவதற்காக பல்வேறு திறன்களை வளர்க்கவேண்டியவராக இருக்கின்றார். தனது அறிவை அவர் உள்வாங்கி, தன்னுள் ஆழப்பதிப்பதன் மூலம் அதனை ஆற்றலாக மாற்றி. அவ்வாற்றலை தனக்கும் சமுகத்திற்கும் ஏற்றவிதத்தில் பொருத்தமுடையதாக மாற்றும்போதே, அந்நபரை சமுகம் தனது ஆரோக்கிய அங்கத்தவனாக ஏற்றுக்கொள்கின்றது. தனிமனிதனொருவனின்  ஆரோக்கியத்தின் அடியொற்றலிலிருந்தே கலை, கலாசார, பண்பாடும் தனது முகத்தைக் காட்டத் தொடங்குகின்றது.  

எனவே கற்காத ஒருவன் சமுக நிகழ்வுகளிலிருந்து தானாகவே விலகிக்கொள்கின்றான். அல்லது விலக்கப்படுகின்றான்.  இதுவே  இன்றைய யதார்த்தமாகின்றது . இவ்வடிப்படையில் நோக்கும் போது, எழுத்தறிவுப் பிரச்சினையானது ஓர் சமுகப்பிரச்சினையாகவே நோக்கப்படுகின்றது. நோக்கப்படல் வேண்டும்.

கல்வியை இடைவிட்டவர்கள், கற்றலில் நாட்டமில்லாதோர் போன்ற மக்களே இவ்வாறாக எழுத்தறிவில்லாமல் காணப்படுகின்றனர். இவ்வாறாக உலகில் 776 மில்லியன்  வயதுவந்த மக்கள் எழுத்தறிவில்லாமல் இருக்கின்றார்கள். 103 மில்லியன் சிறுவர்களும் தமது கல்வியை பாதியில் நிறுத்தியவர்களாக உள்ளனர். உலகம் ஓர்பக்கம் உலகமயமாதலால் நவீனத்துவத்துள் சுருங்கிக் கிடக்க, மறுபுறம் இவ்வாறான பின்னடைவுகளால் மனித அபிவிருத்தியை பாதக வீழ்ச்சியை நோக்கி தள்ளிவிடுகின்றது..

இம் மக்களுக்குரிய பரிகாரக்கல்வியை வழங்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு நாட்டரசுக்குண்டு. இவர்கள் கவனிக்கப்படவேண்டியவர்கள். எனவே இவர்களுக்காக, மேம்படுத்தப்பட்ட முதியோர் கல்வியும், அனைவருக்குமான கல்வியும், பரிகாரக்கல்வியும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புக்கள் ஒவ்வொரு நாட்டு அரசாலும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதும் நாம்  சிந்திக்க வேண்டிய வினாவாகும். 

இன்றைய போட்டிமிகு உலகில் அரசியல், கலை, சமுக, பொருளாதார எழுச்சிகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுக்கும் இவ்வரசுக்கள் இவ்விடயம் தொடர்பாக தமது மானசீகப்பார்வையைச் செலுத்தி, அதற்கான செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்வார்களா என்பதும், அவ்வாறாக வடிவமைக்கப்படும் செயற்றிட்டங்களில் பாமர, படிப்பறிவற்ற இம்மக்கள் ஆர்வங்காட்டுவார்களா என்பதும் சிந்திக்க வேண்டியதொன்று!இப்பின்னடைவால் நாடுகளின் எதிர்காலம் வெட்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

அரசியல், போஷாக்கின்மை, வறுமை, சமூகநிலை, கலாசாரம், இனப் போராட்டங்கள். அடிமைப்படுத்தப்படல் போன்ற பல கூறுகளின் அழுத்தங்களே, இவ் எழுத்தறிவின்மையின் பின்னணியாகக் காணப்படுகின்றன. 

மனிதவுரிமை, சிறுவர் உரிமை சாசனத்தில் கல்வி பெறுதலும் ஓர் உரிமையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வுரிமையை அனுபவிப்பதும், அனுபவிக்கச் செய்வதும் நமது கடமையாகின்றது.

ஆசியாவில் மிகக்குறைவான படிக்காதோரே உள்ளனர். ஏனெனில் இங்கு கல்வியின் முக்கியத்துவம் பெருமளவு பெற்றோரால் உணரப்பட்டு, பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் காணப்படும் பல கிராமங்களில் படித்த பெண்கள் தொகை மிகக் குறைவாகவேயுள்ளது. இந்தியாவின் சனத்தெகை அதிகமாக இருப்பதால் அவர்களின் எழுத்தறிவு வீதம் பின்தள்ள காரணமாகின்றது.

மனித அபிவிருத்தி உள்ளடக்க அறிக்கையின் பிரகாரம் ஜோர்ஜியா மக்கள் 100% எழுத்தறிவைப் பெற்று முதலாமிடத்திலும், இலங்கை 90.8% ஐ பெற்று 99 வது இடத்திலும், இந்தியா 65.2% பெற்று 159 வது இடத்திலும் உள்ளது.

இவற்றை நோக்கும் போது மனிதன் பெறும் கல்வியானது, அவனது ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது உறுதியாகின்றது.. ஒருவர் தனது எண்ணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தி, தனக்கேயுரிய வாழ்வை வகுத்துக் கொள்ள இன்றியமையாத இவ் எழுத்தறிவினை, கல்லாதோருக்கும் குறிப்பாக வீட்டிலுள்ள முதியோருக்கும் பெற்றுக் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது.

ஆசிரியன் மாத்திரமே இப்பணியைச் செய்ய வேண்டுமென்ற மனப்பாங்கையகற்றி, எழுத்தறிவின்மையைப் போக்கி, பிறர் வாழ்வில் ஒளியேற்றுவது இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல் !

"கற்பிப்பவனாக இரு அன்றேல்
கற்பவனாக இரு "

இவ்வெழுத்தறிவின்மைப் பிரச்சினையைக் களைவதற்காக கல்வி, கலை, பண்பாட்டுடன் தொடர்பு பேணி அதற்காக செயற்பட்டு வரும் யுனெஸ்கோ தனது அபிவிருத்தி திட்டங்களிலும் எழுத்தறிவித்தலுக்கு முக்கிய கவனம் செலுத்தி, தனது செயற்றிட்டங்களில் பல நாடுகளை இணைத்தும், மேற்பார்வை செய்தும் , திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது என்பது சற்று நிம்மதியான விடயமாகின்றது..!


2012/09/07

ninaithu ninaithu (f)




நினைத்து நினைத்துப் பார்த்............ஆண் குரல் பாடல் கேட்க இவ் விணைப்பை அழுத்துக

ஒவ்வொரு பூக்களுமே பாடலைக் கேட்க இவ்விணைப்பை அழுத்துக

Ninaithu Ninaithu



உண்மைக்காதலின் உடைவும், பிரிவும் தாங்க முடியாத வலி....
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் நம் மனசுக்குள் ஆழ ஊடுறுவி, நாம் அனுபவித்ததைப் போன்ற வலியை ஏற்படுத்துகின்றது...

நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்......உன் ஞாபகங்கள் என்னுள் ஒவ்வொரு கணங்களிலும் உயிரூட்டப்படுகின்றனவே!
நீயே என்தன் நிஜமாகி, மனசுக்குள் மகிழ்வுகளைத் தூவும் நேரம் காலனின் அழைப்பு உனக்கேனோ.......அன்பே!

நம் கனவுகள் கூட இன்னும் முதிர்ச்சியடையுமுன்னர், தீயிட்ட காகிதமாய் நீயும் என்னை விட்டு கருகியதேனோ.......

ஒவ்வொரு பொழுதிலும் மின்னலாய்த் தோன்றும் நீ, என் அருகாமையில் வீழ்ந்து, உன் விரல்களால் நெருடி என்னை உஷ்ணப்படுத்தும் அந்தக் கணங்கள் என் கண்ணுள் வீழுமோடி என்னுயிரே!

நாமர்ந்த மர நிழல்கள் கூட உன்னிருப்பைக் கேட்டுத் துடிக்குமே......உன் கொலுசொலிகளின் சப்தத்தில் விழித்துக் கொள்ளும் என் இருப்பிடம் கூட உன்னைக் கேட்டு என்னைக் கொல்லுமே.....நான் என்ன சொல்வேன் உயிரே!

நீ பேசிய வார்த்தைகள் என்னுள் ஆழமாகப் பதிந்திருக்க, உயிரோடு ஒன்றிணைந்த உன்னை மறப்பது சாத்தியமோ......அன்பே , அழக்கூட எனக்குள் சக்தியில்லையடீ!

இனிமையான காதல் பகிர்ந்து சென்ற இந்தப் பிரிவும்,  நாயகன் நெஞ்சில் வடியும் சோகங்களும் என் கண்களையும் நீராட்ட, இப்பாடலில் மெய்மறந்து துடிக்கின்றேன்...........

அவள் மரணித்தாலும் கூட, மீண்டும் தன்னைத் தேடி வருவாளென்ற அவன் நம்பிக்கையிலெழும் அந்தக் காதலின் ஆழம் மெய்சிலிர்க்க வைக்கின்றது..

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, மனதைத் தொட்டுச் செல்லும் பாடலிது!


நினைத்து நினைத்து பெண்குரல் ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

Orumurai Piranthaen



வாழ்க்கையென்பது பூவனமாகவும் இருக்கலாம் பாலைவனமாகவும் மாறலாம். நாம் ஒவ்வொருவரும் அந்த வாழ்வை வாழும் தன்மையிலேயே அதன் போக்கும் நம்மைச் சுரண்டுகின்றது.

ஒருமுறை மட்டுமே வாழ வாய்ப்பளிக்கப்பட்ட அந்த வாழ்வின் இன்பங்களை மட்டுமே உறிஞ்சிக் கொள்ளவே போராடுகின்றோம். திருமணம், உறவுகள், காதல் , தொழில் எனும் நம் ஒவ்வொரு வாழ்வின் படிநிலையிலும் ரசிப்பு, மகிழ்வு , வெற்றி என்பவற்றையே மனம் விரும்புகின்றது.

ஒருமுறை நமக்காக கரந்தொடும் அந்த வாழ்வில் காதலித்தவரே கரம் பிடித்தால் மின்னல் பல நெஞ்சுக்குள் வெளிச்சம் அடிக்கும். அந்த வெற்றிகரமான மணவாழ்வின் இணைவுக்கு காதல் வெற்றி பெறவேண்டும்.

இந்தப் பாடலும் இரு உள்ளங்களும் தம் களிப்பை வெளிப்படுத்தும் விதமாக வரிகளை அமைத்துள்ளது. உனக்காகவே பிறந்தேன் உனக்காக வாழப் போகின்றேன்.அந்த வாழ்வில் நீயே என்னை முழுமையாக நிறைத்துக் கொள் எனும் நாயகனின் ஆதங்கம் அழகானது.....



Munbe Va எனும் பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக