About Me

2013/04/10

இறந்தாலும் மரிக்காத


கருவறை கற்றுத் தந்த அன்பு
மனவறையை தனதாக்கிக் கொண்டது!

கனவறையும் காதலாகிக் கசிந்ததில்
மணவறையையும் நல்லறமாகி நின்றது!

நிலாவரை தொட்டு நின்ற காதல்
கல்லறைக்குள் துயிலாமல் வந்தது!

காலவரை யேதிங்கே.!
கள்ளமில்லா உண்மைக் காதலுக்கே!

இறந்தாலும்
புதிதாய்ப் பிறக்கும் உண்மைக் காதலிது!


- Jancy Caffoor-
    09.04.2013







வலியின் வழியாய்




வலிக்கிறது ..........
உன் வார்த்தைகளல்ல ........செயல்கள்!

என்னை நீ கடந்து செல்லும் போதெல்லாம்
சாதாரணமானவனாய் போ!
எதற்காக வில்லனாய் முறைக்கின்றாய்!

நீ .............
என்னைத் தோற்கடிப்பதாய் நினைக்கும்
ஒவ்வொரு கணப்பொழுதும்..................
தோற்றுப் போவது நீதான்!

எதற்கு பகைமை வேஷம் உன்னுள்........
அது.......................
உன்னைக் கட்டுப்படுத்துவதற்கான முகமூடி!

காலம்......................!

அன்பைச் சாகடித்தாய் சரித்திரமில்லை.....
எழுதிக் கொள் உன்னில்!
நீ என்னுள் பதியமிட்டஒவ்வொரு நினைவுகளும்
விசாரணை செய்யும் உன்னிடம்!

புரிகிறது......
உன் ஒவ்வொரு சினத்தின் சிந்தலும்
ஏமாற்றத்தின் சுவடுகள்!
பார்க்கலாம்.....................
தோற்றுப் போவது நானல்ல
நீதான்!

இது அன்பின் வேள்வி.............
என்னை நானெரிக்கும் தீச் சுவாலையில்
நீ குளிர் காயும் போதெல்லாம்..............
கல்லறைக்குள் வீழ்வது என் காதலல்ல
உன் அறியாமை!

பார்க்கலாம்..............!
காலத்தின் தீர்ப்பில் நம் பரிமாற்றத்ததை
நீ சிதைக்கின்றாயாவென்று!

நீ சுயநலக்காரனாகவே இரு!
என்னுள் இருக்கும் உன்னை அழிக்கும்
கொலைகாரனாய் வேண்டாம்!

உன் பஞ்சனை வேண்டாம்
நீ நடை பயிலும் பாதையோரம் போதும்
எனக்கு!







அறிவியலில் நாம்


அண்டவெளியின் அணுப் பிழம்புகளில்
அதிசயமாய் உலா வரும் முகிற்கூட்டங்களில்
ஒட்டிக் கிடக்கின்றதுன் மென்மனசு !

காற்றின் தள்ளுகையில் சுரம் கோர்த்து
மனசோரம் இசை நெய்து
மானசீகமாய் உன்னுள் வீழ்த்தும் சங்கீதமாய்
சரித்திரமாகின்றது நம் நட்பு!

உன் கண் பந்துகள் உருட்டும்
நேச விசைகளின் ஈர்ப்பில் கட்டுண்டு
உன்னைப் பற்றிச் சுற்றும் பம்பரமாய்
எனை அருட்டுகின்றதுன் அன்பு!

உன்னில் கரைந்து கிடக்கும்
பாசத் துகள்களால் - என்
வெந்நீர் மனமும் கூட வெருண்டெழாது
சந்திரக் கீற்றுக்களை முகத்திலேந்தி
சிந்தி நிற்கின்றதுன் நினைவுகளை!

கருமை சூழ்ந்த கொன்றல்களின் நடுவே
விருட்டென்று தரையில் வேர் நாட்டும்
மின்னலாய் அடிக்கடி
என்னுள் கண் சிமிட்டும் நீ

அறிவாயா!

அறிவியலாய் என்னுள் வாழும்
அழகு நட்பு தானென்று !


- Jancy Caffoor-
    09.04.2013








நான் நானாகத்தான்


நான் நானாகத்தான் இருப்பேன்
மாற்றமின்றி

ஆனால்

இரசப் பூச்சில் என் விம்பம் மட்டும்
வாலிப இழப்பை பறைசாட்டிக் கொண்டிருக்கும்

கார் குழலாய் எழில் முடித்த  நீள்கூந்தலில்
குதர்க்கம் செய்து கொண்டிருக்கும்
நரைகள்!

மினுங்கும் வாலிபத்தின் ரேகையாய்
சுருக்கங்கள் கோடுகள்  கிழித்திருக்கும்

மூக்குக் கண்ணாடியின் கைத்தாங்கலில்
கன்னக் குழிகள்
விகாரமாய் சிரித்துக் கொண்டிருக்கும்!

பட்டாம் பூச்சியாய் பறக்கும் விழிகள்
சிறகுடைத்து
கண்ணீர் கூட்டுக்குள்
கதவடைத்துக் கொள்ளும்!

வாலிபம் காலியாகும்  தேகமதில்
வலிகளின் ஆக்கிரமிப்புக்கள்
எல்லைகளாய் வழி மறித்துக் கொண்டிருக்கும்...

பற்றுப் பாசங்களுடன்
சுற்றியிருந்த கூட்டங்களெல்லாம்
காணாமல் போவதால்

தனிமை வரத்தினுள் வாழ்க்கை
அலைந்து கொண்டிருக்கும்!

காலத் தீர்ப்பில் வாலிபம் தொலைந்து
இயலாமை எனதாகும் போது

"கிழம்" என வாலிபங்கள் பரிகசிப்பார்
நாளை தம் வாழ்வறியாமலே!

அப்பொழுதும்

நான் நானாகத்தான்

கண்ணாடி மட்டும்
உருவை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும்!

- Jancy Caffoor-
    09.04.2013