நீ
உன்னைப் பிரித்து வைக்கலாம்
என்னிடமிருந்து.!
காலமோ - உன்
நினைவுகளைப் பறிக்க முடியாது
உன்னைப் பிரித்து!
காதல் வாழும் காலம்
நீயும் என்னுள்
பதியமிடுவாய் உன்னை
சிதறிக் கொட்டும் ஞாபகங்களினூடே!
"I Miss U da"
- Jancy Caffoor-
09.04.2013
2013/04/10
கனவுகள் கலைந்த போது
காத்திருந்தேன்
உறக்கம் எங்கோ தொலைந்து
அலைந்து கொண்டிருந்தது!
விழி மின்மினிகள் பறந்து கொண்டிருந்தன
ஒளிக் குமிழ்கள் சிந்தும்
பார்வைகளில் தரித்தவாறே
நிசப்தத்தின் மூட்டுக்களை உடைக்கும்
வண்டுகளின் இரைச்சல்கள்
செவியைப் பிளந்து கொண்டிருந்தன!
எங்கோ
நாயின் ஊளை!
நாரியுடைத்து பீதி நிரப்பிக் கொண்டிருந்தது!
களைப்பில்
தேக திசுக்கள் போராடிக் கொண்டிருந்தன
கொட்டாவிக் கோஷமிட்டு!
விட்டுச் சென்ற கனவுகளையாவது
தொட்டுக் கொள்ள .....கண்களை
மெல்ல இறுக்குகின்றேன்
இன்றாவது
வீதியோரத்து படலை
ஆக்ரோசமாய் உடைந்து திறபடுகின்றது!
அடங்கிக் கிடந்த ஹிருதயம்
மீண்டும்
அச்சத்தில் வியர்க்க
போர்வை கிழித்து விழி சுழற்றி
அயர்ச்சியைத் துடைத்து
பதை பதைத் தெழுகின்றேன்
அற்ககோலுக்காய் தன்னுயிரை
அற்பமாக்கத் துணிந்தவென் கணவன்
சொற் குழம்பித் தடுமாறி
உதைக்கிறான் என்னை!
"என்னடி தூக்கம்"
வார்த்தைகளில் செந்தணல் பிசைந்து
எனக்கூட்டும் அவனை
கடிகாரம்
பனிரெண்டடித்து கடிந்தது!
பழகிப் போன வாழ்வில்
இடறி வீழும் பாசங்கள்
மோசமாய் வெறி பிடிக்க
இரவின் பனித்துளிகளையும் ஆவியாக்கும்
வெப்பத் துகள்களாய் என் மூச்சு!
எத்தனை இரவுகள்
விடியாத மாயைகள்!
உறங்க மறுக்கும் விழிகளுடன் மனசும்
கிறங்கிக் கொண்டிருந்தது
வலியை உறிஞ்சியவாறு!
- Jancy Caffoor-
09.04.2013
முகநோக்கா காதல்
போட்டோ கேட்டு அலைந்தது!
சட் தந்த காதல்
சடாரென உடைந்தும் போனது!
ஸ்கைப் கண்ட காதல்
ஸ்மெல் தந்து மறைந்தது
போன் அழைத்த காதல்
மிஸ்ட் காலுடன் காணாமல் போனது
பள்ளிக் கூடக் காதல்
பருவம் வந்ததும் தொலைந்து போனது!
பக்கத்து வீட்டு காதல்
பகை வந்ததும் நகையிழந்து போனது!
திருமணம் தந்த காதல்
இருமனங் கலந்து வாழ்ந்தது!
அட...அட........!
நீங்கள் எந்த ரகம்!
- Jancy Caffoor-
09.04.2013
நீ மட்டும்
என் விரல்களில்
உணர்ச்சிகள் செருகி
எழுதக் கற்றுக் கொடுத்தவன் நீதான்!
விழிகளில் உனை நிரப்பி
எனக்குள் உன்னைக் கருவாக்கி
எழுதக் கற்றுக் கொடுத்தவனும் நீதான்!
இன்று
உனக்காக எழுதியதில்
உலகெங்கும் ரசிகர் கூட்டங்கள்
உன்னைத் தவிர!
- Jancy Caffoor-
09.04.2013
Subscribe to:
Posts (Atom)