காத்திருந்தேன்
உறக்கம் எங்கோ தொலைந்து
அலைந்து கொண்டிருந்தது!
விழி மின்மினிகள் பறந்து கொண்டிருந்தன
ஒளிக் குமிழ்கள் சிந்தும்
பார்வைகளில் தரித்தவாறே
நிசப்தத்தின் மூட்டுக்களை உடைக்கும்
வண்டுகளின் இரைச்சல்கள்
செவியைப் பிளந்து கொண்டிருந்தன!
எங்கோ
நாயின் ஊளை!
நாரியுடைத்து பீதி நிரப்பிக் கொண்டிருந்தது!
களைப்பில்
தேக திசுக்கள் போராடிக் கொண்டிருந்தன
கொட்டாவிக் கோஷமிட்டு!
விட்டுச் சென்ற கனவுகளையாவது
தொட்டுக் கொள்ள .....கண்களை
மெல்ல இறுக்குகின்றேன்
இன்றாவது
வீதியோரத்து படலை
ஆக்ரோசமாய் உடைந்து திறபடுகின்றது!
அடங்கிக் கிடந்த ஹிருதயம்
மீண்டும்
அச்சத்தில் வியர்க்க
போர்வை கிழித்து விழி சுழற்றி
அயர்ச்சியைத் துடைத்து
பதை பதைத் தெழுகின்றேன்
அற்ககோலுக்காய் தன்னுயிரை
அற்பமாக்கத் துணிந்தவென் கணவன்
சொற் குழம்பித் தடுமாறி
உதைக்கிறான் என்னை!
"என்னடி தூக்கம்"
வார்த்தைகளில் செந்தணல் பிசைந்து
எனக்கூட்டும் அவனை
கடிகாரம்
பனிரெண்டடித்து கடிந்தது!
பழகிப் போன வாழ்வில்
இடறி வீழும் பாசங்கள்
மோசமாய் வெறி பிடிக்க
இரவின் பனித்துளிகளையும் ஆவியாக்கும்
வெப்பத் துகள்களாய் என் மூச்சு!
எத்தனை இரவுகள்
விடியாத மாயைகள்!
உறங்க மறுக்கும் விழிகளுடன் மனசும்
கிறங்கிக் கொண்டிருந்தது
வலியை உறிஞ்சியவாறு!
- Jancy Caffoor-
09.04.2013
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!