About Me

2013/04/16

உன்னால்


ஒளி தேடி மதியிழந்து சிறகறுக்கும்
விட்டிலாய்
வீழ்ந்து போகின்றது என் வாழ்க்கை
உன்னால்!

மனப் பஞ்சுக் குவியலுக்குள்
மடிந்து கிடக்கும் கனவுகளை உரச
உன் வார்த்தையெனும்
சிறு குச்சி போதும்!

வாலிபத்தில் வில்லொடித்து
கடி மணம் புரிந்த உனக்கு
கலிகால சூழ்ச்சிகளைக் கற்றுத் தர
கால அவகாசம் தேவையில்லை!

சிதைக்கப்பட்ட என்னிலிருந்து
சீழும் இரத்தமாய் ஏதோ வடிகிறது
யார் யாரோ தடம் பதித்து நாடியளக்கின்றனர்
நான் அழவேயில்லை
உன்னிலிருந்து விடுதலை தந்தவன்
நீதானே!

உணர்வறுந்த கனவோரம்
மயானவெளியில் நாட்டப்படுகையில்
அயர்ந்த கண்கள் விரிகின்றன
விழித் துவாரத்திலிருந்து வீச்சோடு கண்ணீர்
சிறுதுளியாய்!
இது ஆனந்தக் கண்ணீரோ!

எத்தனை தடவைகள்
உன்னால் நான் புதைக்கப்பட்டாலும்
எழுவேன் விதைகளாய்
அழிவு எனக்கில்லை!

- Jancy Caffoor-
     16.04.2013

2013/04/15

பப்பி


இரவின் நொடிப் பொழுதுகள்
இவன் மேனியில் பனி தூவிக் கிடக்கும்!

விழி திறந்து செவி தொடுப்பான்
பிறர் பேச்சொலி தன்னுள் ஏந்த!

நன்றிக்கும் இலக்கணமாய்
அன்புக்கும் வரைவிலக்கணமாய்

வந்துதித்தான் - எம்
வாயிற் படலை காக்கும் சின்னப் பப்பி!

கூலியேதும் கேட்பதில்லை - வீட்டு
வேலியோரம் பிறர் நிழல் தீண்ட விடுவதில்லை!

கடமை காக்கும் நன் வீரன் - தன்
உடமையாய் நன்றியையும் பிணைந்தே வாழ்ந்தான்!

பஞ்சு மேனியில் பாசம் நனைத்து
கொஞ்சி தன் வாலால் கால் நனைக்கையில்

அஞ்சிடாத வீரன் தானென்றே
பறை சாட்டிக் கிடந்திடும் பப்பியிவன்!


- Jancy Caffoor-
     15.04.2013







அழகான அவஸ்தை


காதலித்துப்பார்.........

பட்டாம் பூச்சிகளின் தேசமாய்
நம் ஹிருதயம் பிரகடனமாகும்!

வாழ்க்கைக்குள் கனவு மாறி......
கனவுக்குள் வாழ்க்கை விழ்ந்து போகும்!

நிலவின் மடி மீதில் நினைவுகள் கவிழ்ந்து நிசர்சனமாய் உலா வரும்
காதல் வாசம்!

நம்மை ரசித்து ரசித்தே கண்ணாடி தேயும்
விம்பமாய் காதல் நெஞ்சம்
இரசத்தில் ஒட்டிக் கிடக்கும்!

வானவில் இறங்கி தலை வருடும்
தென்றல் சுவாசமாகி
உடலோரம் வேலி போடும்!

நினைவுகளில் ஒரு முகமே சுழன்றடிக்கும்
முத்தங்களின் தீப்பொறிகள்
குளிராய் உருகி உணர்ச்சி தொடும்!

காதலித்துப்பார்.....
கானல் நீரெல்லாம் பனித்துளியாய் உருகும்
கானகம் கூட பூங்காவனமாய் மாறும்!

மார்ப்புத் தசைக்குள் மயக்கங்கள் நிறையும்
வியர்வைத் துளிகளில் நாணம் கரைந்து
பக்கம் வர தேகம் துடிக்கும்!

ஈருயிர்கள் ஓருயிராகி  ....
விரல் தொடும் ஸ்பரிசித்து.....
ஆருயிர் குரல்த்தொனியில் ஆவி துடித்தெழும்!

காதலித்துப்பார்....
கவனம் எல்லாம் திசைமாறும்
பசி கூட மறந்து போதும்

காதலித்துப்பார்...
காதல் அவஸ்தையல்லா.....
அழகான அன்பு!
ஒத்துக் கொள்ளுவாய்
ஓரவிழி பார்த்துக் கொண்டே!

காதலித்துப்பார்..........
தனிமை பறக்கும் - இதயங்களோ
இரம்மியத்தில் துடித்தெழும்!

காதலித்துப் பார்..........

உனக்குள் நானாய்
எனக்குள் நீயாய்
புதுவுலகில் கிறங்கிக் கிடக்க
காதலித்துப்பார்!

மீளாத் துயரில் பர்மா

மியாண்மார் ரோஹிங்கியா!

ஒவ்வொரு பகலையும் இரத்தக் கறைகளால்
பூசி மெழுகும்
அக்கிரமக்காரர்களின் வாசற்தலம்!

ஒரு கோடி முஸ்லிம்களின்
நாடித்துடிப்படக்க
பஞ்சபூதங்களை தம் பூதங்களாக்கும்
மதவாதிகளின் கொலைத் தளமிது!

ஹராங்களின் போஷிப்புக்களினால்
கோஷமிடும் மரணங்களால்
மியண்மார் எரிந்து கொண்டிருக்கின்றது
பௌத்த தீவிரவாதத்தால்!

இனவாதம் அனல் கக்கும் இப்
பௌத்த வேள்வியில்
நரகங்களின் ஆட்சி பீட ங்களாக
மேடையேற்றப்படுகின்றனர்  பிக்குகள்!

புத்தரின் அஹிம்சையில் கூட
சத்தமின்றி புழுக்களைக் கரைக்கும் இம்மாக்கள்
சரித்திரத்தில் பதிக்கின்றனரிங்கு
இன்னுமொரு பர்மாவை!

இனவெறியின் உச்சக் கட்டமாய்
அர்ச்சிக்கப்படும் கந்தகப் பூக்கள்
கருக்கி உதிர்க்கின்றன முஸ்லிம் உம்மாக்களை
மயானங்களில் புதைப்பதற்காய்!

மண்டையோடுகளும்
மரண ஓலங்களும்
பாளியின் வார்த்தைகளாய்
காவிகளால் மனனமிடப்படுகின்றன வெறியோடு!

கொல்லாமை பற்றி இடிமுழக்கங்களுக்குள்
மனித புதைகுழிகள்
மறைத்து வைக்கப்படுகின்றன
தினசரி வேதமோதும் ஹாமதுருக்களால்!

கல்பில் தீனேந்தி அண்ணல் நபி வழி நடக்கும்
முஹ்மீன்களின் தியானச் சுவடுகளில்
ரத்தக் கறை நிரப்பும் காட்டேறிகளாய்
பௌத்தமோதும் காவிகள்!

மனிதங்களில் புனிதம் தொலைக்கும்
பௌத்தம்
அராஜகத்தின் ஆயுதங்களாய் தம்மை
தடம்பதித்துக் கொண்டிருக்கின்றதிங்கே!

காவிகளின் கல்லடியில் ரத்தம் சிதைக்கும்
மியாண்மர்
பாவிகளின் சொப்பன  சிம்மாசனத்திற்காய்
கரைத்துக் கொண்டிருக்கின்றது உயிர்களை!


- Jancy Caffoor-
     15.04.2013