About Me

2014/08/16

ஒருபோதும் மறவாத


என் இமைக்குள்ளும் பல கனவுகள்தான். 
ஒருநாள் இமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் 
என் கனவுகள் உன்னையும் லேசாக உரசிச் சென்றது. திடுக்கிட்டு விழித்தாய் புன்முறுவலுடன்!

விரல் நீட்டினேன். 
பற்றிக் கொண்டன நம் ரேகைகள். 
உரிமையுடன் கைகளை உரசி அன்புணர்த்தினாய் .
இதழ்கள் படபடத்தபோது அடக்கினாய் சில துளிகள் முத்தங்களையிட்டு!

மனசு காற்றிலே பறந்தபோது ஆரத்தழுவினாய்.
நானோ விழிகள் உடைந்து முதன் முதலாய் உன் அன்பில் நெகிழ்ந்து அழுதபோது உன் கண்களும் உப்பேற்றின. 

புரியாமல் விழித்தோம். 
அன்பு வார்த்தைகளாய் கசிந்தன.

அன்று 

வெட்கம் வெடிக்க இருவரும் நம்மைப் பார்வைக்குள் ஔித்துத் திரிந்தோம் சந்திக்காமலே! 

நாட்கள் பறந்தன 
உருவங்கள் பருவங்கள் திறந்தன. 

நிறையப் பேசினோம். 
ஒருவரையொருவர் புரிந்து கொள்வோமென்ற நப்பாசையில்!

ஒருநாள்...... 
நம் உதடுகள் மூடிக் கொண்டன ஊமையாய். 
திறந்த போது வெடித்தன சண்டைகளாய். 

முதன்முதலாய் 
புரிதலுடன் பிரிதலும் தலைகாட்ட, 
ஒன்றோடொன்று உறைந்த நம் நிழல்கள் திசை பிரிந்தன.
யதார்த்தக் கதவுகளில் நம் காதல் தொலைந்து போனதா!

ஏனோ ........

இப்போதெல்லாம் நமக்குள் நாமே முள்வேலிகளிட்டு 
அன்பை மறைத்துக் கொண்டிருக்கின்றோம்!

இருந்தும் 

சில துளிகள் வற்றாத அன்பினால் நம் கனவுகளிலும் இரகஸிய ஈரலிப்புக்கள்!

2014/08/08

பணத்தின் அருமை


Anuradhapura Bank town

அன்பியா ஜூவலர்ஸ் முன்னாலுள்ள வீதி மஞ்சள் கோட்டுக்கருகில்!

இன்று மாலை ஒரு தேவையின் பொருட்டு கடைக்குச் சென்றிருந்தேன். எனது வேலை முடிவடைந்த பின்னர் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எனது மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்த போது..................

எனக்கருகே மோட்டார் சைக்கிளொன்று உரசி நின்றது..

திரும்பிப் பார்த்தேன்...

"ஸ்கூட்டி பைக்"

நடுத்தர நவநாகரிக சிங்களப் பெண்மணி அவசரமாக உந்துருளியிலிருந்து இறங்கினார்.

அவரைச் சுற்றி என் கண்கள் மொய்த்தன.........

எனக்கு மிக அருகில்  காற்றில் படபடத்துக் கொண்டிருந்த நூறு ரூபாய் நோட்டினை  தனது சைக்கிள் சில்லினால் மறைத்தவறே நின்றிருந்தார். அருகில் நான் நிற்பது அவர் அவசரத்திற்குப் புரியவில்லை.

மின்னல் வேகத்தில் கீழே குனிந்து அந்தப் பணத்தை தன் கைகளுக்குள் பொத்தியவாறே பறந்தார்.

அவர் முகத்தில் சந்தோஷக் களை...ஆனால் பணத்தைத் தொலைத்தவர் மனதில்!

சனநடமாட்டம் உள்ள இடத்தில்கூட அடுத்தவர் பற்றிய எண்ணமில்லாது பாய்ந்திறங்கி பணத்தை எடுத்த அப்பெண்மணியைக் கண்டதும்....

என் மனதில் பணத்தின் அருமை புரிந்தது.

நானோ  ....

மனம் தேவையொன்றைத் தீர்மானித்ததும் கவலையின்றி பணத்தைக் கரைக்கும் தவறு  உறைத்தது...

சாதாரணமாக கவலையின்றி நான் செலவளிக்கும் அந்தப் பணத்தை, அப்பெண்மணி எடுத்துக் கொள்ள பதினைந்து நிமிடங்கள் செலவளித்திருக்கின்றார். அடுத்தவர் பணத்தை எடுப்பது தவறு என்றாலும்கூட, அச்சிறு பணத்தின் பெறுமதி அம்மணிக்கு நன்கு புரிந்திருக்கின்றது!

என் நலனில் அக்கறை கொண்டோர், பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமிக்கப் பழகிக் கொள் என்று அடிக்கடி கூறும் வார்த்தைகள் அப்பொழுது எனக்குள் சுழல, மனதில் ஒரு தௌிவும் படர்ந்தது...

இன்ஷா அல்லாஹ்......

இனி பணத்தை வீண்செலவு செய்யக்கூடாதெனத் தீர்மானித்துக் கொண்டேன்!

அஹமட்



அஹமட்.....

ஆறு வயது!

என் சகோதரி மகன்.. விடுமுறைக்காக கட்டார் தோகாவிலிருந்து அவன் குடும்பத்துடன் வந்துள்ளான்.  நன்றாக ஆங்கிலத்தில் விளாசுவான் பெரியோரே வியந்து நிற்கும்படி!

இன்று மாலையில் நானும் அவனும் சகோதரியும் பொடி நடையாக Foodcity டவுனுக்குப் போனோம். சல்ஹாது பாண் வெதுப்பகம் முன்னால் ஒரு சைனாக்காரன் நின்று கொண்டிருந்தான். அவன் பார்வையோ இவன்மீதுதான்!

"அஹமட்......உன் இங்கிலிசில பேசு"

சொன்னேன்.

நாங்கள் அவனைக் கடக்கும்போது அவன் அஹமட்டைப் பார்த்து "ஆய்போவன்"  சொன்னதும், இவனும் அவன் முன்னால் நின்று விட்டான்.

"ஆஹா...அஹமட் பொடியன் ஏதோ பேசப் போறன் போல"

என் மனம் நினைக்க, நானும் அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றேன்
.
அஹமட் சைனாக்காரனைப் பார்த்துக் கொண்டே நின்றவன், திடீரென அவனுக்குப் பதில் சொல்லாமல் விருட்டென என் பக்கத்தில் வந்தான்.

"ஏன்டா பேசல" இது நான்...

"அவன் நோட்டி" இது அவன்..

"வை டா" புரியாமல் அவனைக் கேட்டேன்..

அவன் சரியில்ல..சிகரெட் குடிக்கிறான். அவன்கூட பேச மாட்டேன்"

அவன் தன் பிஞ்சுக்குரலில் சொன்னபோதுதான் சைனாக்காரனை  நோட்டம் விட்டேன். சைனாக்காரன் கையிலிருந்து புகை வளையங்கள்
வௌியேறின!

சிறு வயதில் பிள்ளையின் மனதில் நல்ல அனுபவங்களைப் பதிப்பது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்...

காலங்கள்



நம் அன்பானவர்கள்
கடந்த காலத்தை மறந்து விடச் சொல்லுவார்கள்

நிகழ்காலத்தில் நம்முடன் இணைந்து
இன்ப துன்பங்களில் பங்கு கொள்வார்கள்

எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவார்கள்

நீ கொண்ட அன்புக்கு சாட்சியமாய்
என் காலங்கள் உன் வசமாய்!



- Jancy Caffoor -